c கர்நாடக இசையும் தமிழ் இசையும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கர்நாடக இசையும் தமிழ் இசையும்

வீயெஸ்வி என்ற சீனிவாசன் வெங்கட்ராமண்  இதழாளராகவும் காத்திரமான கட்டுரையாளராகவும் நன்கு அறியப்பட்டவர். தமிழில் இசை குறித்து விமர்சிப்பவர்கள் ஒருசிலர்தான். நிகழ்காலத்தில் அம்மரபு அருகிவரும் சூழலில் இசை குறித்த விமர்சனங்களை தீவிரமாக எழுதி வருகிறார் இவர். அவருடன் ஒரு சந்திப்பு

-வீயெஸ்வி


பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் அறியப்பட்ட தாங்கள் இசை விமர்சகராகப் பரிணமித்தது எப்போது? எப்படி?
அதற்கு எனது பின்புலம்தான் காரணம். நான் இசைக் கலைஞன் இல்லை என்றாலும் இசையைக் கேட்டு வளர்ந்தவன். கேட்டலின் வாயிலாக ஓரளவு சங்கீத அறிவு பெற்றவன். பெரும்பாலான கச்சேரிகளில் பார்வையாளனாகக் கலந்து கொண்டிருக்கிறேன். எனக்கும் சங்கீதத்துக்குமான தொடர்பு இதுதான். 1969ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை விகடனில் பணிபுரிந்தேன். அதில் 1979 வரை அச்சாக்கத்தில் பணிபுரிந்த நான் அதற்கு மேல்தான் ஆசிரியர் குழுவில் இணைந்தேன். எனக்கு விருப்பமான துறை குறித்து எழுதுவதுதான் சிறப்பாக இருக்கும் என்றெண்ணி கர்நாடக இசை குறித்து எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். இசை மட்டுமல்லாமல் நாடகங்களையும் விமர்சனம் செய்து வருகிறேன். நாடகமும், இசையும் நெருக்கமான தொடர்புடைய கலைகள்தான் என்பதால் என்னால் இரண்டு தளங்களையும் புரிந்துகொள்ளவும், அதனைப்பற்றி எழுதவும் முடிகிறது.

கர்நாடக இசை பற்றிய விமர்சனங்கள் மூலம் தாங்கள் எந்தப் புதிய சிந்தனையைக் கட்டமைக்க விரும்புகிறீர்கள்?
விமர்சனங்கள் என்பது அனைத்துக் கலைகளுக்கும் அத்தியாவசியமானது. அந்தக் கலைஞர்களைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்வதில் விமர்சனங்களுக்கும் பங்கிருக்கிறது. சென்னையைத் தாண்டி  இருப்பவர்களுக்கு கர்நாடக இசை மற்றும் டிசம்பர் கச்சேரிகளைக் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன். சாமானிய மக்களுக்கும் கர்நாடக இசை குறித்த புரிதலை ஏற்படுத்தவும், அவர்களை இக்கச்சேரிகளை நோக்கி நகர்த்தவும் முடியும் என்பதே என் நோக்கம். எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதால் கர்நாடக இசை குறித்த நுட்பங்கள் சார்ந்து அதிகம் எழுதாமல் அங்கு நடப்பவை பற்றியும் கலந்து எல்லோருக்கும் புரியும்படியும், ரசிக்கும்படியும் எழுதுகிறேன். பரவலான மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் மொழியை எளிமையாகக் கையாள்வது அவசியம். நான் எனது மொழியை எளிமையாகவே கையாளுகிறேன்.

சபா கச்சேரிகளைத் தாண்டி உங்களின் இசை விமர்சனம் வேறு எந்தெந்த தளங்களில் விரிகிறது?
கச்சேரிகளே சபாக்களில்தான் நடக்கிறது. டிசம்பர் சீசன் கச்சேரிகள் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களில் நடைபெறும் சில கச்சேரிகளுக்கும் விமர்சனக் கட்டுரை எழுதுகிறேன். சமீபத்தில் நவராத்திரியின் போது பாடகிகள் ரஞ்சனி--காயத்ரி சகோதரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வில் கர்நாடக இசைக் கச்சேரியும் நடந்தது. இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து தி இந்து தமிழில் கட்டுரையாக எழுதினேன். கர்நாடக இசை விமர்சனம் என்பதோடு நில்லாமல் இசைக் கலைஞர்களை நேர்காணல் புரிந்திருக்கிறேன். கர்நாடக இசையில் புதுமையான நகர்வுகள் குறித்தும் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பாலக்காடு மணி ஐயர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இசை நாடகமாக அரங்கேற்றினார்கள். அதில் நாடக நடிகர்கள் மட்டுமல்லாமல் இசைக் கலைஞர்களும் அந்தக் கால இசை நடிகர்கள் போல் வேடமிட்டு  நடித்திருந்தார்கள். அந்நாடகம் குறித்து ‘மணியோசை’ எனும் தலைப்பில் கட்டுரையாக விகடன் தீபாவளி மலரில் எழுதினேன்.

கர்நாடக இசை என்பது ஆதித் தமிழிசையின் வளர்ந்த வடிவம் என்கிற கூற்று பற்றிய தங்களின் கருத்து என்ன?
கர்நாடக ராகங்கள் பலவும் நமது பழைய பண் இசையில் இருக்கின்றன. நமது பண் இசையின் பரிணாம வளர்ச்சிதான் கர்நாடக இசை. நாம் இரண்டு இசையையும் உன்னிப்பாகக் கேட்டோமேயானால் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை நம்மால் உணர முடியும். ஆதித் தமிழிசையின் வளர்ந்த வடிவமே கர்நாடக இசை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையும் அதுவே.

கர்நாடக இசை குறிப்பிட்ட சமூகத்தினர் வசம் மட்டுமே இருக்கிறது என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா முன்வைப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
கர்நாடக இசை பிராமண சமூகத்தினர் வசம் இருக்கிறது என்று அவர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். பங்களிப்பளவில் பிராமணர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். மற்றபடி அவர்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆதிக்கம் என்பது மற்ற சமூகத்தை அனுமதிக்காததுதான். ஆனால் பிராமணரல்லாதவர்களும் கர்நாடக இசையில் கோலோச்சியிருக்கிறார்கள்.    ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பிராமணர் அல்லாதவர்கள்தான். பிராமணர் விகிதம் அதிகமாக இருக்கிறது என்பது தற்செயலான நிகழ்வு என்றுதான் சொல்ல முடியும்.

கர்நாடக இசை யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. கச்சேரிகளில் எந்த சமூகத்தினர் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியும். யாருக்கும் இங்கே தடையில்லை. டி.எம்.கிருஷ்ணா ஆள்காட் குப்பத்துக்குச் சென்று அந்த மக்கள் மத்தியில் கச்சேரி நடத்துகிறார். வரவேற்க வேண்டிய ஒன்றுதான். நமது முதன்மையான நோக்கம், கர்நாடக இசையின் வளர்ச்சிதானே தவிர அது யாரால் முன்னெடுக்கப்படுகிறது என்பதல்ல. இருந்தாலும் என்னதான் எடுத்துச் சென்றாலும் அந்த ரசனை உள்ளவர்கள்தானே கேட்பார்கள்.

பெரும்பான்மையான மக்களிடம் சினிமாத் தாக்கம்தான் அதிகமாக இருக்கிறது. அவர்கள் சினிமா பாடல்களைப் பாடும் ஆர்கெஸ்ட்ராவைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வதற்கும், பார்வையளராகப் பங்களிப்பதற்கும் முன் வரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். பிரமாணக் கலைஞர்களில் பலரும் பிராமணர் அல்லாதவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். இதற்குள் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தை நிறுவவேண்டாம்.

கர்நாடக இசையில் இந்திய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு என்று குறிப்பாக எதையெல்லாம் சொல்லலாம்?
வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் என கர்நாடக இசையின் பல துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் முன்னணிக் கலைஞர்களாக இருக்கிறார்கள். கர்நாடக இசையின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டது.முன்பு தென்பகுதியில்தான் அதிகக் கலைஞர்கள் இருந்தார்கள். இப்போது பெரும்பாலான கலைஞர்கள் சென்னையில்தான் வசிக்கிறார்கள். அதிக கச்சேரிகள் சென்னையில்தான் நடக்கின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற வடஇந்திய நகரங்களில் நடைபெறும் கச்சேரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்கள்தான் அதிகளவில் பங்கு கொள்கின்றனர். வட இந்தியக் கலைஞர்கள் தமிழகத்துக்கு வருவதைவிட, தமிழகக் கலைஞர்கள் வடஇந்தியாவுக்குச் செல்வதுதான் அதிகம். தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் பெரும்பாலானோர் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று கச்சேரிகள் நடத்துகின்றனர். கர்நாடக இசையில் தமிழகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

பாலக்காடு மணி அய்யர் போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும், இசையில் பாடகர் அளவுக்கு மற்ற இசை மேதமைகள் புகழ் பெறுவதில்லையே?
பாலக்காடு மணி அய்யர் மட்டுமல்ல, உமையாள்புரம் சிவராமன், திருவாரூர் பக்தவச்சலம், காரைக்குடி மணி, லால்குடி ஜெயராமன், டி.என். கிருஷ்ணன் என பாடகரல்லாத வாத்தியக் கலைஞர்களில் புகழ் பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். ஒரு கச்சேரியின் மையமே பாடகர்தான் எனும்போது எல்லோருடைய பார்வையும் அவரை நோக்கியே குவிகிறது என்பதுதான் உண்மை. பாடகர்களோடு ஒப்பிடுகையில் மற்ற கலைஞர்கள் புகழ்பெறுவதில்லை என்றாலும் இங்கே எல்லோரும் அவரவர்களின் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அடைகின்றனர்.

தமிழிசை, தமிழிசை இயக்கம், அதன் இன்றைய நிலை குறித்த தங்களின் அவதானிப்பு என்ன?
தமிழிசைக்கென தனியான தொரு இயக்கம் தேவையில்லை என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது. இன்றைக்கு கர்நாடக இசைக் கச்சேரிகளிலேயே தமிழ்ப் பாடல்கள் மிகுந்தி ருக்கின்றன. தமிழிசை அல்லாத கச்சேரிகளிலும் தமிழ்ப் பாடல்கள் பாடப்படுகின்றன. சஞ்சய்சுப்ரமணியம் போன்றோர் தமிழ் இலக்கியங்களிலிருந்து சிலவற்றைப் பாடலாகப் பாடுகிறார்கள். தமிழ்ப் பாடல்கள் இல்லாத கச்சேரியே இல்லை என்கிற நிலையில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளே மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை. கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழிசையின் கூறுகள் இரண்டறக் கலந்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

தியாகராஜர் வரலாற்றை அருமையான நாடகமாக வடிவமைத்து அரங்கேற்றினீர்கள். தங்களின் அடுத்த முயற்சி என்ன?
தியாகராஜர் வரலாற்றை முதலில் நூலாகத்தான் எழுதினேன். அதேபோல் பாபநாசம் சிவன், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் வரலாற்றையும் எழுதி நூலாக்கியிருக்கிறேன். தியாகராஜர் வாழ்க்கை வரலாற்று நூலை நாடகமாக அரங்கேற்றினால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் வெளிப்பாடாகத்தான் இந்த நாடகம் உருவானது. பாம்பே ஜெயஸ்ரீயின் இசையமைப்பில் டி.வி.வரதராஜன் குழுவினர் மேடையேற்றிய இந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே இதுவரையில் 50முறைக்கும் மேல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த வெற்றி புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. கூடிய விரைவில் இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல கலைஞர்களின் வாழ்க்கையையும் நாடகமாக அரங்கேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions