c நாமிருக்கும் நாடு-32
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-32

சிரிப்புக் கலைவாணர்
என்.எஸ்.கே.
சா.வைத்தியநாதன்
தமிழ்ச் சினிமாவில் ‘கலைவாணர்’ என்ற புகழ்ப் பெயர் அல்லது பட்டம், என்.எஸ்.கிருஷ்ணன் என்ற கலைஞருக்கே பொருந்தும். தான் நடித்த திரைப்படத்தின் நகைச்சுவைப் பகுதியைத் (டிராக்) தானே  எழுதி, தானே சக நடிகர்களுக்குக் கற்பித்து நகைச்சுவைக்குப் புதிய தடம் வகுத்தவர் கிருஷ்ணன். தமிழ்ச் சினிமாவில் ஒரு அறிவார்ந்த உரையாடல் மற்றும் விமர்சன உரையாடல் அவரிடம் இருந்தே தொடங்கியது. அவர் காலத்துக் கதாநாயகர்களான பாகவதரும், சின்னப்பாவும், தங்கள் படங்களில் என்.எஸ்.கிருஷ்ணன் -- மதுரம் ஜோடியின் நகைச்சுவை இருக்கவேண்டும் என்று விரும்பிக் கேட்டு அமைத்துக்கொண்டார்கள்.

கதாநாயகர்கள், தெய்வத் திருவுருவில் கிருஷ்ணனாக அல்லது பெரிய மன்னனாக படத்தில் தோன்றினாலும், அந்தப் படத்தையே கிண்டல் செய்து தன் நகைச்சுவைப் பகுதியை அமைத்துக்கொண்டார் கிருஷ்ணன். உதாரணத்துக்கு தேவலோகம், மாயமந்திரம் என்று போகும் கதையில், மதுரத்தைக் காதலிக்கும் கிருஷ்ணன் அவர் தந்தையை ஏமாற்றி, தேவலோகத்திலிருந்து இறங்கி வந்ததாக நம்பச் செய்து மதுரத்தைக் கைப்பிடிப்பார். தேவலோகம் மிக ‘சீரியசாக’ ஒரு பக்கம் ஓடினாலும், பக்கத்தில் அதைப் பற்றிய மாற்று உரையாடலை வைத்திருப்பார் கிருஷ்ணன்.

மிகவும் சம்பிரதாயப் பூர்வமான பிராமணராக வருவார் ஒரு படத்தில். உழைப்பாளர்கள் கொடுக்கிற சில்லறைக் காசுகளைச் சொம்பில் இருக்கும் தண்ணீரில் போட்டுக் கழுவிப் பயன்படுத்துவார். யாராவது ரூபாய் நோட்டைக் கொடுத்தால், அதற்குத் தீட்டில்லை என்று இடுப்பில் சொருகிக்கொள்வார்.

அதே சமயம், சமுதாயத்தில் எந்தப் பகுதி மக்களிடம் இருந்தும் அவருக்கு எதிர்ப்பும் வரவில்லை. கருத்து ரீதியாக எதிரிகளாக இருப்பவரையும் சிரிக்கச் செய்து சிந்திக்கவும் செய்தவர் அவர்.

மிகுந்த ஏழ்மைக் குடும்பத்தில், கடலையாண்டிப் பிள்ளை, இசக்கியம்மாள் தம்பதியர்க்கு 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் கிருஷ்ணன். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்து ஒழுகினசேரி எனும் சிறு கிராமத்தில் அவர் பிறப்பு நிகழ்ந்தது. பள்ளிக்குச் செல்லும் சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. நாடகக் கொட்டகைகளில் மாலை நேரங்களில் சோடா, கலர், சுண்டல் விற்றார். நாடகப் பாடல்கள், வசனம், கதை ஆகியவற்றில் அவர் மனம் இயல்பாக ஈடுபட்டது. விளைவாக, நாடகக் கலையில் அவர் மனம் சென்றது. நடிகர் ஆனார்.

எஸ்.எஸ்.வாசன் தன் கதையான சதிலீலாவதியைத் தானே படமாக எடுத்தபோது, அவர் அதில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் இரண்டாவது படம் மேனகா. மேனகாவே முதலில் வெளியான படமாக அமைந்தது.

கிருஷ்ணன் தன் வாழ்நாளில் மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்.

தன் அனுபவம் காரணமாக, சினிமாத் தயாரிப்பும், இயக்கமும் செய்து வெற்றி பெற்றார்.

தேசிய அரசியலில் மகாத்மா காந்தி மீது பெரும் மரியாதை கொண்டவர் கிருஷ்ணன். காந்தி நினைவாகத் தான் பிறந்த ஊரில் மகாத்மாவுக்கு ஒரு நினைவுத் தூணை ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் எழுப்பி இருக்கிறார்.

தமிழக அரசியலில் அவரை, வளர்ந்து கொண்டிருந்த திராவிட இயக்கம் கவர்ந்தது.  அண்ணாவின் மிகச் சிறந்த நண்பராகத் திகழ்ந்தார். 1957ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சட்டமன்றத் தேர்தலில், அண்ணா காஞ்சி புரத்தில் வேட்பாளராக நின்றார். அண்ணாவை எதிர்த்து, ஒரு டாக்டர் போட்டியிட்டார். அண்ணாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்துக்கு வந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். அண்ணாவை எதிர்த்து நின்ற டாக்டர் பற்றி பாராட்டிப் பேசினார். அவருடைய சிறப்புகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்ட டாக்டரை மக்கள் இழக்கலாமா? ஆகவே அவரை ஊரிலேயே வைத்துக்கொண்டு அண்ணாவைச் சென்னைக்குச் சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்’’ என்றார்.

என்.எஸ். கிருஷ்ணனுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி நாகம்மை. இரண்டாம் மனைவி மதுரம். மூன்றாம் மனைவி மதுரத்தின் தங்கை வேம்பு.

கிருஷ்ணனின் இறுதிக் காலம் இன்பமாக இல்லை. சம்பாதித்த பொருளை எல்லாம் வாரி வழங்கினார். கடைசிக் காலத்தில் சிரமப்பட்டார். தம்மிடம் உதவி கேட்டு வந்தவர்க்கு எதுவும் தராமல் திருப்பி அனுப்பியதே இல்லை அவர். ஆனால் அவரைப் புரிந்துகொண்டு உதவ எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றவர்கள் இருந்தார்கள்.

பத்மினியைச் சினிமாவில் (மணமகள் படத்தில்) அறிமுகப்படுத்தினார் கிருஷ்ணன். உடுமலை நாராயணகவிக்குப் புகழ் சேர்த்தவர் கிருஷ்ணன். எண்ணற்ற சிறிய பெரிய நடிகர்களுக்குத் துணைபுரிந்த என்.எஸ். கிருஷ்ணன், 1957ஆம் ஆண்டு ஆகஸ்டு 30ஆம் தேதி மரணம் அடைந்தார். அப்போது அவர் வயது 49.

அரை நூற்றாண்டு வாழ்க்கையில் பல நூற்றாண்டுப் புகழைப் பெற்றுக்கொண்டார் என்.எஸ். கிருஷ்ணன்.

- போராட்டம் தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions