c நீங்கள் கேட்டவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கேட்டவை

தண்ணீர் லாரிகளில் எமன் வருகிறான்!

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு ஒரு பாடகருக்கு வழங்கப்பட்டுள்ளதே?
-ஆ.பூங்கொடி, பெரம்பலூர்

இருக்கட்டுமே. பரிசு பெற்ற பாப்டிலன், அடிப்படையில் ஒரு கவிஞர். அமெரிக்கப் பாடல்களை, அதற்குமுன் இருந்த வடிவத்திலிருந்து, புதிய பாதைக்குக் கொண்டு சென்றவர் அவர். தனித்துவம் கொண்ட பல பாடல்களுக்குச் சொந்தக்காரர். ராக் இசையிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும் பெரிய சாதனையாளர். போருக்கு எதிராக, மனித உரிமைகள் சார்பாக பெரிய கிளர்ச்சிகளை ஊட்டும் பாடல்களுக்கும், இசைக்கும் சொந்தக்காரர். ஆகவே நோபல் பரிசுக்கு மிகவும் பொருத்தமானவர். ‘மாறும் காலம்’ முதலான அவர் பாடல்கள் மக்கள் மனதில் இன்றும் நிற்கின்றன. என்றும் நிற்கும்.

இந்த ஆண்டாவது ஞானபீடம் தமிழுக்குக் கிடைக்குமா? யாருக்குக் கொடுக்கலாம்?
-வா.சேப்பெருமாள்,
விருதுநகர்
கிடைக்க வேண்டும். அகிலன் முதல் ஞானபீடம் ஏறினார். அதன்பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயகாந்தன். மேலும் பல ஆண்டுகள் சென்றன. நோபல் பரிசு பெற்ற பலரையும் பின் தள்ளிவிடும் ஆற்றல் பெற்ற பல எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். உலகம் அதைப் புரிந்துகொள்கிறது. ஞானபீடம் ஏனோ அதைப் புரிந்துகொள்ளவில்லை.

ஞானபீடம் பெற்று அடுத்து பத்து இருபது ஆண்டுகள் எழுதும் வல்லமை பெற்ற, ஆரோக்கியம் உள்ள எழுத்தாளர்கள் அதை அடையலாம், அடையவேண்டும்.

தலைவர்களுக்காக, தீக்குளிக்கிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-ஸ்வேதா,
கூடுவாஞ்சேரி
தீக்குளிப்பு மகத்தான தியாகம். ஒரு இலட்சியத்தை முன் நிறுத்தித் தன்னை எரித்துக்கொள்வது மாபெரும் செயல். உலகம் முழுதும் இப்போது தீ குளித்தல் என்பது மறுபரிசீலனைக்கு உள்ளாகி இருக்கிறது. உயிரைக் கொடுத்துச் செய்யப்போவது ஒன்றும் இல்லை. மாறாக உயிரோடு இருந்து, தம் லட்சியத்துக்காகவும், கட்சிக்காகவும் தொண்டாற்றுவது தலைமைக்கும், தத்துவத்துக்கும் மேலும் பலம் சேர்க்கும்.

அம்மா...?
-கு.ஞானவேல் குமரன், நாகர்கோயில்
விரைவில் குணம் அடைந்து, பணியைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

தண்ணீர் லாரி மோதி காயத்ரி, சித்ரா, ஆஷா சுருதி ஆகிய மூன்று மாணவிகள் இறந்துள்ளார்களே என்னதான் பிரச்சனை?

-தா.சு.வேதநாயகம், நங்கநல்லூர்
அரசு இலாகாக்களின் ஆமை வேக நடையே காரணம்.
தண்ணீர் லாரிகள் ‘தண்ணீர்’ குடித்தது போல மரண வேகத்தில் போவதும் வருவதுமாக மக்களைக் கிலி பிடிக்கச் செய்வதைப் பலமுறை பலரும் எழுதி இருக்கிறார்கள்.

அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.
கிண்டி செல்லம்மாள் கல்லூரி வாயிலில் ஒரு நிரந்தரமான பேருந்து நிலையம், எல்லா பேருந்துகளும் வந்து நிற்கும் ஏற்பாடு கொண்ட ஒரு பேருந்து நிலையம் வேண்டும் என்று அக்கல்லூரியினர் பல ஆண்டுகளாகவே  போராடுகிறார்கள்.

பேருந்து நிலையம் கேட்கப் போராட வேண்டி இருக்கிறது என்றால் என்ன நிர்வாகம் நடக்கிறது?
2500 மாணவிகள் பயிலும் கல்லூரி அது. தாம்பரத்திலிருந்தும், நகரின் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்து சேரும் மாணவிகள் உயிரோடு திரும்ப, அனைத்துப் பேருந்துகளும் நிற்கும் ஒரு பேருந்து நிலையம் கேட்டுப் பல ஆண்டுகள் கல்லூரி நிர்வாகத்துடன் மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.

கல்வி இலாகா, போக்குவரத்துத்துறை, இறந்த மாணவிகளின் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions