c புதுக்கவிதை வேரும் விழுதும் : 19
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை வேரும் விழுதும் : 19

முடிவில்லாத் திருநடனம்

ஒரு மொழியின் கவிதை வரலாறு என்பது அம்மொழியின் அழகு, வளம், கருத்தாழம், காலப் பதிவு ஆகிய அனைத்தின் ஒட்டுமொத்த வரலாறாகும்.

“நின்றதுபோல் நின்றான்
நெடுந்தூரம் சென்றுவிட்டான்’’


என்று பட்டுக்கோட்டையைக் குறித்துக் கண்ணதாசன் பாடும்போது,

“நில்லென்று சொல்லி
நிறுத்தி வழி போனீரே’’


என்னும் நாட்டுப்புறப் பாடலின் தூரக் காட்சி நம் கண்முன் சில்லென்று பூத்துவிடுகிறது.

இந்த மானசீகமான தொடர்ச்சியில் தமிழ்க்கவிதை காலப் பதிவையும் செய்கிறது. கவிதை வளத்தையும் கொண்டு வருகிறது.

நவீன தமிழ்க் கவிதையின் பரிமாணங்கள் செழுமை பெற்றுக்கொண்டே வருவதையும், அவற்றில் தமிழ் வேர்களை அடையாளம் காணுகிற அதே தருணத்தில் புதிய வானங்களை அளாவும் கிளை விரிப்புகள் கொண்டிருப்பதையும் சென்ற சில இதழ்களில் பார்த்தோம். இன்னும் விரிவாகக் காணவேண்டிய கவிஞர்களின் எண்ணிக்கையும் பெரியது.

மிகப் பெரிய திறனாய்வு வீச்சுக்கும், முற்றிலும் மாறுபட்ட கவிதை வெளிப்பாடுகளுக்கும், பேச்சுமொழிக்கு மிகமிக நெருக்கத்தில் புதிய கவிதையைக் கொண்டு சென்ற நேர்த்திக்கும், வாழ்வின் முரண்களை இளநகையோடு காட்சிக்கு வைத்த அழகுக்கும் உறைவிடமாக இருந்தவர் பாலா என்கிற பாலச்சந்திரன்.

ஒரு காலத்தில் புதுக்கவிதையின் பிதாமகர்கள் கவிதைக்கு அடையாளமெனப் படிமத்தைப் பகர்ந்தார்கள். பின்னொரு காலத்தில் விளக்கச் சொற்களின் அவசியமின்மையே கவிதையை அடையாளம் காட்டுகிறது என்றார்கள். உணர்ச்சிப் பெருக்கை அல்லது தர்க்கத் தந்திரத்தைக் கவிதையென்று காட்ட விழைந்தார்கள். இந்தப் போக்கையெல்லாம் எதிர்கொண்டு எழுதியவர் பாலா.

“தும்பியின் ரீங்கரிப்பில்
வழிகிறது தேன்வாசனை
சொற்களின் சதிரில்
சுழல்கிறது ஒருமனம்
நடக்கிறது ஓர் உயிர்
கரைகிறது ஓர் குரல்
கேட்கிறதா கவிதை?”

என்றார் பாலா. எட்டுத் திசைகளிலும், உன் மேசை மீதும், உன்னைச் சுற்றிலும் கவிதை கொட்டிக் கிடக்கையில் கவிதை குறித்த மாய்மாலங்கள் ஏன் என்று கேட்டவர் பாலா.

“எங்கே என் கவிதைகள்?
இங்கே தானே மேசையின் மீது
இருந்தது இதுவரை?
என்ன பார் எதற்கும்
படுக்கையின் மீது
படிக்கட்டருகில்?
கோட் ஸ்டாண்ட் கொக்கியில்?”

எங்கும் கவிதை காணவில்லை. கவிஞர் அலுத்துப்போய் வெளியே நடக்கிறார்.

“வெளியே பன்னீர் மர நிழலில்
படுக்க வைத்த நாகஸ்வரமாய்
கிடந்த பன்னீர்ப் பூக்களின் அருகில்
மெல்லச் சிரித்து மகரந்த மொழியில்
நலமா வென்றன என்றன் கவிதைகள்”

எளிமைக்குள் அற்புதங்களைச் செறித்து வைக்கிற ஆற்றல் எல்லாருக்கும் கைவருவதில்லை. மொழியைத் திருகல் முருகலாக்கி ஒளிந்து கொண்டிருக்கும் கவிதையைத் தேடிப் பிடியுங்கள் என்ற கண்ணாமூச்சி விளையாட்டுத்தான் கவிதை என்பவர்களுக்கு இத்தகைய கவிதைகளால் பாடம் நடத்தியவர் பாலா. ‘இன்னொரு மனிதர்கள்’, ‘நினைவில் தப்பிய முகம்’ என்ற சின்னஞ்சிறு சுவடிகளில் பக்கத்துக்குப் பக்கம் கவிதைகளின் வர்ணம் தீற்றியவர் பாலா.

தமிழில் ஹைகூ கவிதை பற்றித் தனி இதழ்கள், சிறப்பிதழ்கள், பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் என்று திமிலோகப்படுகிறது. மூத்த கவிஞர்களான அப்துல்ரகுமான் ‘சிந்தர்’ எழுதினார். தமிழன்பன் ‘சூரியப் பிறைகள்’ வரைந்தார். அறிவுமதி, அமுதோன் எனப் பலரும் இந்த வடிவத்தில் கவிதை எழுதினார்கள். மு.முருகேஷ் தன் உழைப்பையெல்லாம் ஹைகூவுக்கென்றே சொல்லிவிட்டார். பகடிகளை ஹைகூ என்று கொண்டாடினார் இரா. மோகன். எனக்கு இந்தத் தமிழுடை பூண்ட ஹைகூவின் மீது பிரமிப்பு இல்லை. மித்ராவிடம் மட்டுமே இதன் உயிர்ப்பை நான் கண்டேன். மித்ராவின் நூலை அழகுபடுத்தி வெளியிட்ட இந்திரன் கூட இந்த வடிவத்தைத் தன் கவிதைகளில் பயன்படுத்தவில்லை.

ஒரு மோன தரிசனம் ஹைகூவின் ஆழ்ந்த குரலென்றால் அதை மித்ராவின் சில ஹைகூ (என்றழைக்கப்படுகிற) கவிதைகளில் காணமுடிகிறது.

“மழை வலுத்த பாதையில்
ஆறுதலாய் இருந்தது
குடையில் கேட்ட பேச்சு”

“கெஞ்சியது தூக்கம்
மன்னிப்புக் கேட்டேன்
மின்மினி நண்பனுடன்”

இயற்கையின் எல்லைகளைக் கரைத்துப் புல்லோடும், வயலோடும், தும்பியோடும், நண்டோடும் ஒன்றிவிடும் அதிசயம் மித்ராவின் கவிதை.

எத்தனை வகைமைகளில் தமிழ்க்கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று பார்த்தால் அதன் கட்டிலடங்கா அழகுகளும், புதியவைகளை நோக்கி இமை திறக்கும் பேரெழிலும் வியப்பூட்டுகின்றன. ‘படுக்கை’ என்றொரு கவிதை, க.பஞ்சாங்கம் நாம் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அதை அறிமுகப்படுத்துகிறார்.

“சொல்லில் அடங்குவதில்லை
வயசாளிகள்
படுக்கையில் படும் பாடு.
கிடத்தப்பட்ட நிலையிலேயே
வரைந்து சாய்ந்த ஓவியமாகத்
தூங்குகிறது குழந்தை”


தூக்கம் வராத வயசாளியான பஞ்சாங்கம், தன் பேரப்பிள்ளையைப் பார்த்து இந்தக் கவிதையை எழுதியிருக்க வேண்டும். முதுமையின் தவிப்பும், பச்சைப் பசுங் குருத்தின் கவலையற்ற உறக்க லயிப்பும் மிகச் சாதாரணமான சொற்களில் கவிதையாய் மினுக்கிச் சிரிக்கின்றன.

வயதாவதை ஆயிரம் கோட்டை கட்டி அதற்குள் தனித்திருந்தாலும் தடுக்க முடியாது. ஒரு இலையின் பழுப்பும் உதிர்வும் போல் அது இயற்கை தந்த சாபம் (வரம்?). ஆயினும் மனிதமனம் அத்தனை இயல்பாய் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. விளிம்புகளில் தயங்காமல் ஆழங்களில் குதிக்கும் சி.மோகன் சொல்கிறார்.

“எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை
வலியுறுத்தும் நடவடிக்கைகளைத்
தயவுசெய்து நிறுத்துங்கள்
நண்பர்களே”

என்பது அவர் ஆதங்கம் கலந்த விண்ணப்பம். நண்பர்களோடுள்ள நெருக்கங்களையெல்லாம் சொல்லி அங்கலாய்த்த பின் முதுமையைச் சொல்லி ஆனந்தப்படும் நண்பர்களிடம் கடைசியாய்க் கூறுகிறார்.

“இதை எழுதும் தூர்ப்பாக்கியத்தை
ஏற்படுத்தியதன் மூலம்
உங்கள் முயற்சியில் வெற்றிபெற்று விட்டதாக
நீங்கள் எக்களிப்பீர்கள் என்பதையும்
வாய்க்குமானால் இதுகுறித்து நீங்கள்
ஒரு கவிதை எழுதுவீர்கள் என்பதையும்
நானறிவேன் நண்பர்களே”

“ஆயினும் எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகளைத் தயவுசெய்து நிறுத்துங்கள்’’ என்று வேண்டுகோள் வைக்கிறார். புறஉலகின் நச்சரிப்புகளிலும் கவிதைத் தன் வேர்களைப் பரவ விடுகிறது.

கவிதைகள் சுயம் பிரகாசமாக இருக்கின்றன. கூடவே பாசாங்குக் கவிதைகள், போலிக் கவிதைகள், நகல் கவிதைகள், உயிர்ப் பறவைகள் குடியிருக்காத வெறுங்கூட்டுக் கவிதைகள் நிறையவே இருக்கின்றன. ஒன்றைக் கவிதையாகவும், மற்றொன்றைக் குப்பையெனக் கூட்டித் தள்ளவும் கவிஞனை விட வாசகன் கையில் தான் மந்திரக்கோல் இருக்கிறது. இவனது ரசனைத் தர அளவே கவிதையின் முக அழகு.

தன் கவிதையின் ஒவ்வொரு சொல்லும் மந்திரம் என்று நினைத்துக் கவிதை படைக்கும் கவிஞனை ஏளனப் பார்வையோடு - ஒரு வாசக மனோ பாவத்தோடு - சித்திரிக்கிறார் தஞ்சாவூர்க் கவிராயர். மந்திரச் சொல்லால் உருவேற்றி ஒரு ஆயுதம் போல் கவிதை வடித்தாராம் ஒரு கவிஞர்.

“திசையெங்கும் ஒளிவீசி
திகைக்கப் பண்ணியது அது
கூர் நுனியில்
தகதகத்தது சூரியன்
கீழ்களின் ஆசாரம் கிழிக்க
கொலை வாளாய்ச் சுழற்றிப்
புறப்பட்டேன் -
‘அதைக் கொடுங்கள் இப்படி’

என்று

கையிலிருந்து பிடுங்கி
தோசையைத் திருப்பிப் போட்டாள்
என் மனைவி”

கொலைவாளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா? போர்க் களத்துக்குப் பதில் தோசை சுடும் உலைக் களத்துக்குப் போய்விட்டது அது!

என்ன எழுதினாலும், என்ன பேசினாலும் சரி உண்மையில் கவிதை சொற்களில் சஞ்சரிக்கும் இரத்தம். இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் அதனுள் நிரம்பி வழிவது அதனால்தான். கவிதையை உணரவும் அனுபவிக்கவும் தெரிந்தவனுக்குச் சொர்க்கம் கூட வெறும் ஜரிகை மினுக்கல் தான். கண நேரம் மயக்கி அழிந்து போகும் வானவில்தான்.

ஆனால் கவிதையை ஓரம் கட்டுகிற, முதுகு காட்ட வைக்கிற ஒரு வனப்புக் களஞ்சியம் உண்டு. அதன் பெயர் குழந்தை. அதன் அங்கம் முழுவதிலும் இணை சொல்ல முடியாத அழகும் இன்பமும் ததும்பி வழிகின்றன. ‘பிள்ளைக் கனியமுது’ என்று சொன்னவன் கவிதைப் பிச்சை கேட்டு நின்ற இடம் கண்ணம்மா என்ற பேசும் பொற்சித்திரத்திடம் தான்.

“கதறியழும்
சாவு வீடுகளுக்குச்
செல்கையிலும்
வாசலில்
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தைகளின் கன்னம் கிள்ளிக்
கொஞ்சிவிட்டுத்தான்
உள்நுழைகிறார்கள் பெண்கள்”

என்று மு.முருகேஷ் சொல்லும் யதார்த்தத்துக்குள் கவிதை குழந்தையாகிக் குதூகலிக்கிறது.

------

தமிழ் வயலில் கவிதைகளின் பச்சை நடனம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு முடிவு ஏது?

நீங்கள் அதைப் பார்த்துப் பரவசம் பூண்டு தன்னை மறந்த லயத்தில் தொடரும்படி விட்டுவிட்டு இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.

இதுகாறும் எழுத வாய்ப்பளித்த பல்சுவை காவியம் ஆசிரியருக்கும் ரசித்து மகிழ்ந்த வாசகர்களுக்கும் நன்றி, நன்றி.

(நிறைந்தது)

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions