c மக்கள் கதைஞர்கள்-2 செங்கான் கார்முகில்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மக்கள் கதைஞர்கள்-2 செங்கான் கார்முகில்

சின்னப்புள்ள ஆயா

சின்னப்புள்ள ஆயாதான் பேரு. சின்னப்புள்ள கெழவி என்றும் சொல்வதுண்டு. அம்புட்டு செல்லம் எல்லோருக்கும்.

நரங்கின மாதிரி மெலிந்த ஒடம்பு. நாகப் பழமாய் கருத்த தேகத்தில் சேடல் மாதிரி அனுபவச் சுருக்கங்கள். காவடியாய் வளைந்த, மாராப்பையே ரவிக்கையாய் கொண்ட உடலுக்கு முட்டுக் கொடுக்கும் கைத்தடி. அவள் சொல்லும் கதைகளுக்கு ‘ஊம்... ஊம்’ என அங்கிட்டும் இங்கிட்டும்  ஊஞ்சலாடும் பூச்சுக்கூடு.

பொன்னிக்காட்டு வரகானாலும், சோளமானாலும், கம்மங் கதிரானாலும், கொத்தமல்லியானாலும், கேழ்வரகு, பருத்தி, வெஞ்சாமரை, அவரை, துவரை எதுவானாலும் ஆயாவின் கதை கேட்காமல் வளர்ந்ததில்லை.

களைவெட்டுக் கலங்களில் இவள் இருக்கும் காட்டில் வேலை மலைப்பே இருக்காது.

சின்னாயி (சின்னப்புள்ள ஆயா என்பதன் சுருக்கம்) ஒரு கதை சொல்லேன் என்றுதான் ஆரம்பிக்கும். ‘எங்கடா ஒருத்தியும் இன்னம் வாய உடுலயே அப்புடீன்னு பாத்தன். உட்டுட்டியா’ என இழுக்கும் ஆயா.

‘இருக்குட்டும் ஆயி. வெய்யிலு வேற உச்சிய பொளக்குது. காத்தோட்டம் வேற இல்லாம உக்கரமா இருக்கு. நல்ல கதையா, கெக்குகெக்குன்னு சிரிக்கிறாப்புல ஒரு கதைய எடுத்து உடாயி’ என்று ஒரு குரல் சொல்லும்.

‘ஆமா, ஆமா’ என்கும் இன்னொரு குரல்.

‘சொல்லு ஆயா’ என்கும் விடுமுறையில் களைவெட்ட வந்த ஸ்கூல் வாண்டு.

இவ்வளவு தூரமெல்லாம் ஆயாவிடம் தொங்க வேண்டியதில்லை. ஆயா இப்படி இருக்கிறதென்றால் மனதுக்குள் கதையைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

கதையைத் தேர்வு செய்ய இவ்வளவு நேரமா எனத் தோணலாம். ஆயா கதையைத் தேர்வு செய்யும் மனலயம் வித்தியாசமானது. பொதுவாக காலை எட்டு மணிக்கு குனிந்தால் உச்சிப் பொழுதில் வேலை களையும். கதை கேட்கும் நேரம் பாதி நேரத்தைத் தாண்டியிருந்தால், மிச்ச நேரத்துக்குள் முடிகிறமாதிரி ஒரு கதையைச் சொல்லும். வேலை தொடங்கி சற்று நேரத்தில் கேட்டிருந்தால், சற்று பெரிய கதையைச் சொல்லும். எவ்வளவு பெரிய கதையும் சொல்லும். ஒண்ணுக்கு விடுவதற்குள் முடிகிற மாதிரி தக்குனூண்டு கதையும் சொல்லும். இதெல்லாம் சிறிய காடுகளுக்கு, அதாவது அன்றன்று களைவெட்டு முடியும் காடுகளுக்குப் பொருந்துவது. நான்கு ஏக்கர், ஐந்து ஏக்கர் என பெரிய காடுகளுக்கு களைவெட்டப் போனால் களை ஐந்தாறு நாட்களுக்குத் தொடர்ந்து இருக்கும். அப்படிப்பட்ட நாட்களில் மிக நீண்ட கதையைத் தேர்ந்தெடுக்கும். இன்று களை வெட்டும் நேரம் முடியும் இடத்தில் கதையை ஒரு வாகான இடத்தில் பெரும் சுவாரசியமான எதிர்பார்ப்புடன் நிறுத்தும். ‘ஏட்டி, சுக்காம்பலத்தா கதெய எவுத்த உட்டேன்னு நீதான் நாளக்கி யாவுகப்  படுத்தணும்’ என்று ஆளையும் குறிச்சி சொல்லிடும்.

அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என கதை போய்க்கிட்டே இருக்கும். ஐந்து என்ன ஐந்து பத்து நாள் ஆனாலும் சரி, கடைசி நாள் ஆயாவோட கதையும் முடியும், களையும் முடியும். அவ்வளவு கச்சிதமாகக் கதை சொல்லும்.

கதை சொல்லும் சுவாரசியம் இருக்கு பார். அது படுபாந்தம். உதாரணத்துக்கு, ‘பேரங் காலத்து பொழப்பும் பூட்டங் காலத்து ஒறவும்’ என்று ஒரு கதை சொல்லுதுன்னு வச்சிக்குவோம்.

கதை ஒண்ணுமில்ல. ஆசப்பட்டவனுக்காக எல்லா உறவுகளையும் உதறிட்டுப் போற ஒரு தாயப் பத்தின கதைதான். போறாத காலம் அவனும் போய்ச் சேர்ந்துட்டான். இவளுக்குப் புத்தி பேதலிச்சுப் போய்டுது. இந்த சமயத்துல ஒரு நாள் நடு ராத்திரியில மகனைத் தூக்கிட்டுப் போயிடுறாங்க இவளோட பொறந்தவனுக. காடு சுத்தி, மேடு சுத்தி, ஊரு உலகம் சுத்தி மகனை தேடுறா. நாடி தளர்ந்து, நரை விழுந்தும் கூட காண முடியல. இனிமே முடியாதுன்னு தேடலை நிறுத்திட்டாள்.

வயிறு இருக்கில்லயா. கடைசியா வந்த ஊருல ஒரு செல்வந்தர் இருக்கார். அவர்கிட்டே அடைக்கலமாகி வேலைக்காரி ஆவுறா இவ.

அவர்தான் இவளோட பேரப் பிள்ளைன்னு தெரிய வருது,பின்னாடி. அந்த இடத்தை வர்ணிக்கும் பாரு ஆயா. அடேயப்பா ஒரு அசைப்பு அசைச்சுடும் நம்மளை.

“முன்னால நிக்கிறது, இம்புட்டு நாளா நம்மள வேலைக்கார ஆயா ஆயான்னது, நம்ம புள்ளயோட புள்ளன்னு தெரிஞ்சதும் வந்துச்சி பாரு கண்ணீரு’’ என்று ஆயா பாடும்...

“அவ அழுத கண்ணீரு

ஆணை குளிக்கும்டி

வடிச்ச கண்ணீரு

வாய்க்கா தளம்பும்டி

மறைச்ச கண்ணீரு

மலைய மூடும்டி”

என்று ராகமாய் பாடும்.

‘தம் மனச புடிச்ச மவராசன் மொக சாடைய பாத்தப்பவே மனசு துடிதுடிக்க, கெண்டக்கால் மச்சம் பளிச்சிங்க, காது மருவு நானுங்க, ஆண்டவனே செவனே இவம் எம் வமுசமான்னு ராத்திரி பவுலா யோசிக்கிறா. யோசிச்சி யோசிச்சி, ராத்திரியோட ராத்திரியா ஒரு நாள் வரா. எங்க வரா, மவராசன் செல்வந்தன் தூங்குற கொள்ளப்புறத்துக்கு வரா...’ என்கும் ஆயா. கதை கேட்போர் மவுனித்து இருப்பர். களைவெட்டி வெட்டும் சத்தம் மட்டும் கேட்கும்.

‘அப்ப கண்டாயா ஒரு காச்சி’ என்கிறபோது, களைவெட்டும் பொண்டுவள் மலைப்பை மறந்து கதை சுவாரசியத்தில் வெட்டித் தள்ளுவார்கள். நாலு மெனை வெட்டுகிறவர்கள் ஆறு மெனை வெட்டியிருப்பார்கள்.

இதற்காகவே காட்டுக்காரர்கள், இந்த தள்ளாத காலத்திலும் சின்னப்புள்ள ஆயாவை களைவெட்டும் காலத்தில் வலைவீசி தேடிப்பிடித்து இழுத்து வருவார்கள்.

கதை சொல்லத் தொடங்கும் வரைதான், ஆயா களைவெட்டும். கதையின் ஓட்டம் மும்முரமெடுத்துவிட்டால் ஆயாவின் மெனையை பக்கத்து ஆட்கள் எட்டிப் போட்டு வெட்டி வருவார்கள். தன் மெனையைச் சேர்த்து வெட்டும் பொண்டுவளுக்கு அரிசி, பருப்பு, அவசரத்துக்குப் பத்து, இருவது எனக் கொடுத்து உதவும் ஆயா.

ஆயாவுக்கு ஒரே ஒரு மகன். பிள்ளைன்னாலும் பிள்ளை மிலிட்டரிகாரன் மாதிரி அப்படியிருப்பான். எருமைப் பாலும், தயிரும்,மோருமாய் கொடுத்து வளர்த்தது ஆயா. ஞாயிற்றுக் கிழமையானால் உளுந்தங்கஞ்சி வார்த்துக் கொடுப்பாள். பிள்ளை உடம்பில் பொட்டு அசதி இருக்கப்படாது. உலகத்தையே சுத்தியாவது தினமும் ரெண்டு நாட்டுகோழி முட்டை வாங்கிவந்து அவித்துக் கொடுக்கும்.

ஐந்தாறு பேரோட வேலையை ஒத்த ஆளாகச் செய்வான். பலே பெலக்கரசாலி.

கிரஷருக்குப் போனான். கேணி வெட்டப் போனான். வயக்காட்டுக்குப் போனான். வரப்பு வெட்டப் போனான். உழவோட்டப் போனான். மாடோட்டிப் போனான். சேத்த காசைக்கொண்டு ஒரு வீட்டைக் கட்டினான். கேணி ஒண்ணு வெட்டினான். நஞ்சையும் உழுதான். பாவிப்பய, ஆசைப்பட்டவள் கிடைக்கவில்லைன்னு உசுற மாச்சிக்கிட்டான். ஆனாதையா ஆயிடிச்சி சின்னப்புள்ள ஆயா. எதையும் வெளியில் காட்டிக்காது. உச்சி ராத்திரி வரைக்கும் உட்கார்ந்தே இருக்கும். தூங்காது. எப்பவாச்சும் அழுவும். படுக்கும் போதும், எழும்போதும் ‘தங்கமே’ என்று மகனை அழைக்கும். இப்பவும் சில ராத்திரிகளில் சோறு திங்காமலே தூங்கிடும். பக்கத்து வீட்டுச் சிறுசுகள் வந்தால், கதைகளைக் கொறிச்சிக்கிட்டே நாலுவாய் திண்ணும்.

இதனால் நாளாக நாளாக கதை சொல்றது குறைந்துவிட்டது ஆயாவுக்கு. ஆனால் சுத்தமாக விடவில்லை. எத்தனை ஆயிரம் கதைகள், எத்தனை ஆயிரம் உணர்வுகள். லேசில் விடமுடியுமா?

அவ்வப்போது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் கதை கேட்கும்போது ‘ஏட்டீ செங்கமலை மருவள முந்தா நாளு செட்டியாரு காட்டுல சொன்னனே அரிமீனே, சொரிமீனேன்னு ஒரு கதை. அதை சொல்லு. தடுக்குச்சின்னா நடுவுல நா எடுத்து உடுறேன்’ அப்படீங்கும்.

அவளும் சொல்வாள். கதை தடைபட்டாலும், தடம் மாறினாலும், திருத்தும் ஆயா. இதுபோல ஏகப்பட்ட இளந்தலைமுறை கதைசொல்லிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது ஆயாவின் தலையாய சாதனை.

‘எங்க ஆயி எனக்கு சொன்னிச்சி. யேயப்பா, அது அம்புட்டயும் சொன்னா, எட்டூரு குதுரு (குதிர்) நொம்பிடும். என்னால ஆனமுட்டும் சொன்னேன். இப்பலாம் வாய்க்கல. நீங்க சொல்லுங்க’ என்று சொல்லும் சன்னமாக.

-கதைப்போம்...

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions