c இப்போதே, ஒரு நாளில்...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்போதே, ஒரு நாளில்...

உலகச் சிறுகதை : லத்தீன் அமெரிக்கா
தமிழில் : ச. ஆறுமுகம்
லத்தீனில் : கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்

(1982இல் மார்க்வெஸின் நாவல்களுக்காகவும் சிறுகதைகளுக்காகவும், அவரது புனைவுலகம், யதார்த்தமும், கற்பனையும் ஒருங்கிணைந்து ஒரு கண்டத்தின் வாழ்க்கையையும், சிக்கல்களையும் பிரதிபலிக்கச் செய்வதாக அறிவித்து, நோபெல் பரிசு வழங்கப்பட்டது. மாய யதார்த்தவாதம் அவரிடமிருந்துதான் பிரபலமானது.)

திங்கள் கிழமை மழை இன்றி வெப்பத்தோடேயே விடிந்தது. அவ்ரேலியா எஸ்கோவர் ஒரு பட்டம் பெறாத பல் வைத்தியர். அதிகாலையில் எழுந்திருக்கும் அவர், காலை ஆறு மணிக்கு அவரது அலுவலகத்தைத் திறந்தார். அப்போதும் அரைவைச் சாந்து வார்ப்புகளின் மேலாகப் பொருத்தப்பட்டிருந்த சில பொய்ப் பற்களைக் கண்ணாடி மாடத்திலிருந்து எடுத்து, அவற்றோடு ஒரு கைப்பிடியளவுக்கான கருவிகளையும், மேஜைமீது அவற்றின் அளவுக்கேற்ப ஒரு ஒழுங்கு முறையோடு காட்சிக்கு வைப்பதுபோலப் பரப்பினார். பட்டை இல்லாத கழுத்துப் பகுதியை தங்கப் பொத்தான் இணைத்திருந்த, பட்டைக் கோடுகளிட்ட சட்டையும், குறுக்கு வார் கால்சட்டையும் அணிந்திருந்தார். எலும்பும் தோலுமாக நிமிர்ந்து நின்ற அவர் அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாமல், மிகமிகக் கொஞ்சமாகப் பொருத்தமளிக்கின்ற வகையில், காது கேட்காதவர்கள் விழிப்பார்களே, அப்படியான ஒரு தோற்றத்திலிருந்தார்.

மேஜைமீது அவருடைய பொருட்களையெல்லாம் தயார்ப்படுத்தி வைத்தபின், துளையிடுங் கருவியை பல் சிகிச்சை நாற்காலியை நோக்கி இழுத்துக்கொண்டு, இருக்கையில் அமர்ந்து பொய்ப் பற்களைத் தேய்த்துப் பளபளப்பாக்கத் தொடங்கினார், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே. ஆனால் தீர்மானமாக, அவருக்குத் தேவைப்படாது என்றாலும் துளையிடுங் கருவியைக் காலால், உதைத்து இயக்கிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

எட்டு மணிக்குப் பின் சாளரம் வழியாக வானத்தைப் பார்ப்பதற்காகச் சிறிது நிறுத்தினார். பக்கத்து வீட்டுக் கூரைக் கம்பத்தில்  கனவுக் கண்களுடன் இரண்டு துருக்கியப் பருந்துகள் வெயில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டார். மதியச் சாப்பாட்டுக்கு முன் மீண்டும் மழை பெய்யப் போகிறதென்ற எண்ணத்தோடேயே அவர் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தார். அவரின் வேலையொன்றிய மனநிலையைப் பதினோரு வயதுள்ள அவரது மகனின் காதைத் துளைக்கும் குரல் இடைமறித்தது.

“அப்பா”

“என்ன?”

“பல் பிடுங்குவீர்களா என மேயர் கேட்கிறார்”

“நான் இங்கே இல்லையென்று சொல்லிவிடு”

அவர் ஒரு தங்கப் பல்லைப் பளபளப்பாக்கிக் கொண்டிருந்தார். கையை நீட்டி, அதைப் பிடித்துக்கொண்டு. அரைக் கண்ணால் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சிறிய காத்திருப்பு அறையிலிருந்து அவரது மகன் மீண்டும் கத்தினான்.

“நீ இங்கே இருப்பதாக அவர் சொல்கிறார். அதிலும் நீ பேசுவதை அவரால் கேட்க முடிகிறது”.

பல் வைத்தியர் தங்கப் பல்லைப் பரிசோதித்துக்கொண்டே இருந்தார். அவருடைய வேலையை முடித்துவிட்டதாக அந்தப் பல்லை மேஜையின் மீது வைத்துவிட்ட பின்னர்தான் அவர் சொன்னார்: “அப்படியா, மிக்க நல்லது”

அவர் துளையிடுங் கருவியை மீண்டும் இயக்கினார். இன்னும் பளபளப்பாக்க வேண்டிய பொருட்களை இட்டு வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு மூக்குத் தண்டின் பாகங்களை எடுத்து மேஜைமீது வைத்தார். மீண்டும் தங்கப் பல்லைப் பளபளப்பாக்கத் தொடங்கினார்.

“அப்பா”

“என்ன?”

“அவர் போகிற மாதிரி இல்லை. நீ, அவர் பல்லைப் பிடுங்காவிட்டால், உன்னைச் சுட்டுவிடுவாராம்.”

எந்த அவசரமும் இல்லாமல், ஒரு அமைதியின் உச்சக்கட்ட அசைவாக அவர் துளையிடுங் கருவியை மிதிப்பதை நிறுத்தி, அதை நாற்காலியிலிருந்தும் தூரத் தள்ளிவிட்டு மேஜையின் இழுப்பறையைத் திறந்து எல்லாவற்றையும் இழுத்து வெளியே போட்டார். உள்ளே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. “சரி, வந்து என்னைச் சுடச் சொல்” என்றார்.

இழுப்பறை ஓரத்திலிருந்து கையை எடுக்காமல், நாற்காலியை வாசலுக்கு நேராக உருட்டி நிறுத்தினார். மேயர் வாசலில் தோன்றினார். முகத்தின் இடது பக்கத்தை மழித்திருந்தார். இன்னொரு பக்கம் வலியில் வீங்கி, ஐந்து நாள் தாடியோடு இருந்தது. அவரது மங்கிய கண்களில் பல நாட்கள் தூங்காத துயரத்தைக் கண்ட பல் வைத்தியர், மேஜை இழுப்பறையை விரல்களால் தள்ளி மூடிவிட்டு, மென்மையாகக் கூறினார்: “உட்காருங்கள்”

“காலை வணக்கம்” என்றார் மேயர்.

“வணக்கம்” என்றார் பல் வைத்தியர்.

கருவிகள் கொதித்துக் கொண்டிருக்கும்போது, மேயர் நாற்காலியின் தலைச்சாய்வில் தலையைச் சாய்த்தார். கொஞ்சம் இதமாகத் தோன்றியது. அவரது சுவாசம் ஐஸ் கட்டியாகக் குளிர்ந்திருந்தது.

அது ஒரு அய்யோ பாவம் அலுவலகம். ஒரு மர நாற்காலி, காலால் இயக்கித் துளையிடுங் கருவி, பீங்கான் புட்டிகள் அடுக்கிய கண்ணாடி மாடம். நாற்காலிக்கு எதிரில் தோள் உயரத் துணித் திரையுடன் ஒரு சன்னல். பல் வைத்தியர் வருவதாகத் தோன்றியதும், மேயர் குதிக்கால்களை இழுத்துச் சேர்த்துக்கொண்டு, வாயைப் பிளந்து காட்டினார்.

அவ்ரேலியா எஸ்கோவர், மேயரின் தலையை வெளிச்சத்தின் பக்கமாகத் திருப்பினார். சொத்தையாகியிருந்த பல்லைப் பரிசோதித்து முடித்து, மேயரின் தாடையை விரல்களில் ஒரு எச்சரிக்கையான அழுத்தத்துடன் மூடினார்.

“மயக்க மருந்து இல்லாமல்தான் செய்ய வேண்டியிருக்கிறது” என்றார்.

“ஏன்?”

“ஏனென்றால், சீழ் கோர்த்திருக்கிறது”

மேயர் அவரை நேருக்கு நேராகக் கண்களில் நோக்கினார். “சரி” என்று கூறிப் புன்னகைக்க முயன்றார். வைத்தியர் பதிலுக்கு முறுவலிக்கவில்லை. அவர் கொதிக்க வைத்த கருவிகளிலிருந்த அகலப் பாத்திரத்தை சிகிச்சை மேஜைக்குக் கொண்டுவந்து குளிர்ந்த ஒரு சாமணத்தால் எந்த அவசரமும் இல்லாமல் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். பின்னர், எச்சில் துப்பும் பாத்திரத்தைக் காலால் தள்ளிக் கொணர்ந்துவிட்டு, கைகளைக் கழுவுவதற்காகக் கை கழுவுமிடத்துக்குச் சென்றார். அவர் இதையெல்லாம் மேயரின் பக்கம் பார்க்காமலேயே செய்துகொண்டிருந்தார். ஆனால் மேயரோ அவர் மீது வைத்த கண்களை அசைக்கவேயில்லை.

அது ஒரு கீழ்வரிசை ஞானப்பல். வைத்தியர் கால்களை அகல வைத்துக்கொண்டு, பல்லைச் சூடான இடுக்கியால் பற்றிப் பிடித்தார். மேயர் நாற்காலியின் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, சக்தியை எல்லாம் ஒன்றாக்கிப் பாதங்களை இழுத்துச் சேர்த்து அமுக்கியவாறிருந்தார். அவரது சிறுநீரகங்களில் ஒரு பனிக்குளிரை உணர்ந்தார். ஆனாலும் அவர் எந்த ஒரு குரலும் எழுப்பவில்லை. வைத்தியர் அவரது மணிக்கட்டை மட்டுமே அசைத்தார். எந்த வெறுப்பையும், சிறு கசப்பையும்கூட வெளிக்காட்டாமல், அவர் சொன்னார்: “இப்போது, எங்களில் இறந்தவர்கள் இருபது பேர்களுக்கான விலையை நீங்கள் தரவேண்டும்.”

மேயர் அவரது தாடையில் எலும்புகள் நொறுங்குவதாக உணர்ந்தார். அவரது கண்கள் நீரால் நிறைந்தன. ஆனால், பல் வெளியே வந்துவிட்டதை உணரும் வரை அவர் மூச்சுகூட விடாமல் இழுத்துப் பிடித்திருந்தார். பின்னர் அதனைக் கண்ணீரின் வழியாகக் கண்டார். அது அவரது வலிக்கும், வேதனைக்கும் அப்பாற்பட்டதாகத் தோன்றியது. முந்தைய ஐந்து இரவுகளின் கொடிய வேதனையின் காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உமிழ்க் குடுவையில் குனிந்தவாறே வியர்த்து, மூச்சு வாங்கி, மேலங்கியின் பொத்தான்களைத் திறந்து கால்சட்டைப் பைக்குள் கைக்குட்டையை எடுக்கக் கையை நுழைத்தார். வைத்தியர் சுத்தமான ஒரு துணியை நீட்டினார்.

“கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மேயர் கண்ணீரைத் துடைத்தார். அவர் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வைத்தியர், கைகளைக் கழுவும்போது பொடிந்து உதிரும் மேற்கூரையை நோக்கினார். அங்கே சிலந்தி முட்டைகளும் இறந்த பூச்சிகளுமாகத் தூசு படிந்த ஒரு சிலந்தி வலையைக் கண்டார்.

வைத்தியர் கைகளைத் துடைத்துக்கொண்டார். “வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்” என்றவர், “உப்புத் தண்ணீரில் கொப்பளியுங்கள்” என்றும் நினைவூட்டினார். மேயர் எழுந்து நின்று, அலுவல் சார்பற்ற ஒரு இராணுவ வணக்கம் செய்து விடைபெற்றார். மேலங்கியைப் பொத்தான் இடாமல் கால்களை எட்டிப் போட்டு, வாயிலை நோக்கி நடந்தார்.

“பில் அனுப்புங்கள்” என்றார், போகிற போக்கில்.

“உங்களுக்கா, அல்லது நகர மன்றத்துக்கா?”

மேயர், வைத்தியரைப் பார்க்கவே இல்லை. அவர் கதவைச் சாத்திவிட்டு, திரை வழியாகச் சொன்னார்: “எல்லாம் ஒரே இழவுதான்”

-கோடையில் ஒரு மழை  

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்), ஆழி பதிப்பகம் 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions