c திருடனாய் பார்த்து
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

திருடனாய் பார்த்து

தமிழில் : சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
(உலகப் புகழ்பெற்ற இத்தாலிய எழுத்தாளர் இட்டாலியா கால்வினோ (1923 -1985),  பிரஞ்சு சிறுகதை மன்னன் கி.தெ.மொப்பசானின் தீவிர வாசகர். கால்வினோவின் புனைவுகளில் மொப்பசானின் தாக்கம் உணரப்படும். இவரது சிறுகதைகளும் புதினங்களும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன)

இதுவே வழக்கமாகிப் போனதால், எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். யாருக்கும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. ஒருவன் அடுத்த வீட்டில் திருட, அந்த வீட்டுக்காரன் அதற்கடுத்த வீட்டில் கைவைக்க என சங்கிலித் தொடர்போல் பார்த்தால், கடைசி நபர் முதல் நபரின் வீட்டில் திருடிக்கொண்டிருப்பான்.
அந்த நாட்டில், தொழில் என்றால் ஏமாற்றுதல் என்று அர்த்தம். வாங்கினாலும் சரி, விற்றாலும் சரி, அதே அர்த்தம்தான். திருடுவதையே குறிக்கோளாகக் கொண்டு அமைப்பு ரீதியாக குற்றம் செய்யும் ஒரு நிறுவனமாக அரசு இருக்க, அந்த அரசை எப்படி ஏமாற்றலாம் என்பதிலேயே தங்கள் முழு நேரத்தையும் மக்கள் செலவிட்டு வந்தனர்.
இப்படியாக, எவ்விதத் தொந்தரவுமில்லாமல் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. அந்த நாட்டின் குடிமக்கள், பணக்காரர் என்றும் சொல்லமுடியாமல், ஏழை என்றும் சொல்லமுடியாமல் சமமாக வாழ்ந்து வந்தார்கள்.
திடீரென ஒரு நாள், அது எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ஒரு நேர்மையானவன் அங்கு தோன்றினான். எல்லோரையும் போல் இரவு வந்ததும் லாந்தர் விளக்குடன்  வெளியேறித் திருடப் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தான். சிகரெட் புகைத்துக்கொண்டிருப்பான் அல்லது நாவல் ஏதாவது படித்துக்கொண்டிருப்பான். அவனது வீட்டைக் குறிவைத்து வரும் திருடர்கள், விளக்கு எரிந்துகொண்டிருக்கவே விலகிப் போவார்கள்.
இது அதிக நாள் நீடிக்கவில்லை. இப்படி எளிமையாக வாழ்க்கையை ஓட்டுவது அவனுடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால், மற்றவர் தொழிலைச் செய்யவிடாமல் தடுக்க அவனுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று அவனிடம் தெரிவிக்கப்பட்டது. பிறரைப்போல் வெளியே

செல்லாமல் வீட்டிலேயே அவன் கழிக்கும்  ஒவ்வொரு இரவும், யாரோ ஒருவருடைய உணவைப் பறிக்கும் செயலில் அவன் ஈடுபடுவதாகச் சுட்டிக் காட்டினார்கள். இந்த வாதத்தை மறுக்க நேர்மையான மனிதனிடம் எதுவும் இல்லை. எனவே, அவனும் வீட்டில் தங்காமல், விடியும்வரை வெளியே சென்று இரவைக் கழித்தான். ஆனால், அவன் எதையும் திருடவில்லை. அவன்தான் நேர்மையானவனாக இருக்கிறானே! இரவு நேரத்தைக் கழிக்க அருகில் உள்ள பாலத்துக்குப் போவான். அதன் அடியில் ஓடும் நீரின் அழகை ரசித்துக்கொண்டிருப்பான். வீடு திரும்பியதும், அவனது பொருட்கள் களவு போயிருக்கும்.
இப்படி ஒரு வாரம் நகர்வதற்குள், நேர்மையானவனிடம் இருந்த பணம் காலியானது. சாப்பிட எதுவும் இல்லை. வீட்டில் இருந்த எல்லாவற்றையும் துடைத்து எடுத்துச் சென்றிருந்தார்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால், இதற்கெல்லாம் அவன்தான் காரணம். பிரச்சனையே அவனது நேர்மைதான். ஒட்டுமொத்த சமூக அமைப்பையே அது சீரழித்திருந்தது. தன்னுடைய வீட்டை திருடக் கொடுத்த அவன், பதிலுக்கு யாருடைய வீட்டிலும் திருடாமல் இருந்துவிட்டான். இதன் காரணமாக, யாரோ ஒருவன் திருடிவிட்டு வீடு திரும்பும்போது அவனது வீட்டில் மட்டும் வைத்தது வைத்த இடத்தில் இருந்தது. அதாவது, நேர்மையானவன் திருடியிருக்கவேண்டிய வீடு அது.
விரைவிலேயே, இப்படித் திருடப்படாமல் விட்டவர்கள் மற்றவர்களைவிட அதிக பணம் படைத்தவர்களாகி விட்டதை உணர்ந்தார்கள். எனவே, இனி திருடப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
மற்றொருபுறம், நேர்மையானவன் வீட்டுக்குத் திருட வந்தவர்கள் வெறுங்கையோடு திரும்பினார்கள். அப்படி ஏமாந்தவர்கள் வசதி குறைந்தவர்களானார்கள்.
இதனிடையே, வசதி அதிகமானவர்கள், அந்த நேர்மையானவனுடன் போய் சேர்ந்துகொண்டு, அவர்களும் பாலத்தின் மீது நின்று, அடியில் ஓடும் நீரைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதனால், குழப்பம்தான் மிஞ்சியது. பலர் பணக்காரர் ஆனாலும், பலர் ஏழைகளாகிவிட்டார்கள்.
இந்தக் கட்டத்தில், இப்படி இரவு நேரத்தில் பாலத்தின்மீது நின்றுகொண்டிருந்தால், சீக்கிரத்தில் அவர்களும் ஏழைகளாகிவிட நேரும் என்பதை பணக்காரர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. சில ஏழைகளிடம் பணம் கொடுத்து, நமக்காகத் திருட ஏற்பாடு செய்தால் என்ன என்பதுதான் அந்த யோசனை. உடனே, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  ஊதியம், பகிர்ந்துகொள்ள வேண்டிய சதவிகிதங்கள் என எல்லா அம்சங்களும் பேசிமுடிக்கப்பட்டன. இதிலும், இரண்டு பக்கமும் ஏகப்பட்ட உள்குத்துகள். மக்கள் இன்னமும் திருடர்களாகவே இருந்தனர். முடிவில், பணக்காரர்கள் மேலும் வசதி படைத்தவர்கள் ஆனார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளானார்கள்.
பணக்காரர்களிடையே மிகவும் வசதி படைத்தவர்களாக சிலர் மாறி இருந்தனர். இனிமேல் அவர்களே போய் திருடவேண்டிய அவசியமோ, ஆள் வைத்துத் திருட வேண்டுமென்ற தேவையோ இல்லாத அளவுக்கு அவர்களிடம் பணம் இருந்தது. ஆனால், திருடுவதை நிறுத்திவிட்டால், விரைவில் ஏழைகளாகிவிடுவார்கள்.
உண்மையான ஏழைகள் அவர்களைக் கவனித்துக்கொள்வார்கள். ஆகவே, மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களாய் பார்த்து, அவர்களிடம் கூலி கொடுத்து மற்றவர் திருடாமல் தங்கள் உடமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதற்காக, போலீஸ் படை ஒன்று அமைக்கப்பட்டது. சிறைகளும் கட்டப்பட்டன.
இப்படியே நடந்துகொண்டிருந்ததால், அந்த நேர்மையானவன் அங்கு வந்து சேர்ந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, யாரும் திருடுவதைப் பற்றியோ, திருடுபோனதைப் பற்றியோ பேசுவது இல்லை. எந்த அளவு வசதி அதிகம்  அல்லது குறைவு என்பதைத்தான் விவாதித்தார்கள். எனினும், இன்னமும் சில திருடர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.
இறுதிவரை நேர்மையாகவே இருந்த அவன் மட்டும் பட்டினியால் வாடி இறந்துபோனான்.

இட்டாலியா கால்வினோ

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions