c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

புதிய கல்விக்கொள்கை- கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு நகலை வெளியிட்டுள்ளது. நாடு முழுக்க அதுபற்றிக் கருத்துரைகள், ஆய்வுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறிவும், எதிர்கால இந்திய நலனும் சம்பந்தப்பட்ட கல்விக்கொள்கை பற்றிய கருத்துரைகள், அரசியல் விமர்சனமாக, மொழி பற்றிய அச்சம் கொண்டதாகப் பரவலாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தருவதாக இல்லை.
முதலில் புதிய கல்விக்கொள்கை பற்றிய வரைவு நகலை, மத்திய அரசு 2016 ஜூன் 30 அன்று வெளியிட்டது. ஆங்கிலத்தில் இது வெளியிடப்பட்டது. முறைப்படி மத்திய அரசு, மாநில மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்து தன் கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்போதுதான், ஆங்கிலம் அறியாத இந்தியர்கள் அனைவரும் கருத்துக் கூறவும், அக்கருத்துக்களை அரசு அறியவும் வசதியாக இருந்திருக்கும். ஏனெனில் இது மக்கள் ஆதாரப் பிரச்சனை.
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் வரைவுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஒரு நபரைத் தவிர கல்வியாளர்கள் வேறு யாரும் இல்லை என்று ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது.
அந்தக் குழு தயாரித்து அளித்த 217 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை, முழுமையாக வெளியிடாமல், அதை வெறும் 43 பக்கங்களாகச் சுருக்கி வெளியிட்டுள்ளது. இந்தச் சுருக்கத்தைக் கொண்டே, அறிவாளர்கள், கல்வியாளர்கள் கருத்துரை சொல்ல வேண்டி இருக்கிறது. இது இந்த அறிக்கையைத் தொடக்கத்திலேயே பலவீனப் படுத்திவிட்டது.
கல்வியாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களை, கேள்விகளை, அச்சத்தை முதலில் தொகுத்துக்கொள்வோம்.
1. பல்வேறு மொழிகள், பண்பாடுகள், கலாச்சார நிகழ்வுகள், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், வேதக் கல்வியும், குருகுலக் கல்வியும் கல்வியின் இலட்சியங்கள் என்பதுபோல அறிக்கை முன் நிறுத்துவது எந்த அளவு நியாயம் என்று கல்வியாளர்கள் கேட்கிறார்கள்.
2. நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கும், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் சமஸ்கிருதம் சிறந்த பங்களிப்பு செய்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. ஆகவே பள்ளி, கல்லூரிகளில் சமஸ்கிருதம் ‘மூன்றாம் மொழியாக’ ஏற்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறது அறிக்கை.
மூன்றாம் மொழி என்பது எந்த வகையில்? மற்ற இரண்டு மொழிகள் என்பது என்ன? தாய்மொழி தவிர, இரண்டாம் மொழி ஆங்கிலம் என்றால், மற்ற உலக மொழிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள மாணவர்களுக்கு உரிமை உண்டா? என்றால், அந்த இரண்டாம் மொழி தேர்ந்தெடுப்புக்கு உள்ளாகும். சமஸ்கிருதம் மட்டும் கட்டாயம் என்று அர்த்தம் கொள்ளலாமா?
பண்பாட்டு ஒற்றுமைக்கு சமஸ்கிருதம் உதவும் என்பது, தனியான ஒரு மதத்துக்குச் சார்பானது என்றும் அறிஞர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதை இல்லை எனலாகாது. தவிரவும், சமஸ்கிருத மேலாண்மை, ஒரு வகையான ஒற்றை தேசியவாதத்துக்கே வழிவகுக்கும். ஒரு மொழியை முன் நிறுத்தும் தேசியவாதம், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு எந்த வகையில் உதவும்?
3. யோகாவைக் கட்டாயமாக்குகிறது ஒரு ஷரத்து. யோகா, ஒரு வகை மருத்துவம் என்பதை ஏற்றாலும், அதைக் கட்டாயமாக்கியது சரியா என்று கேட்கிறது அறிவுச் சமுதாயம். யோகா பாடம் நடத்தாத பள்ளிகள், தங்கள் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறது கல்வி அறிக்கை.
4. இப்போதுள்ள இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம் (2009), குழந்தைகள் குடியிருப்பிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது. இப்போது வெளிவந்திருக்கும் கல்வி வரைவு அறிக்கை, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், அந்தப் பள்ளியை மூடி, அடுத்துள்ள பள்ளியோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது. அதோடு, இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தையும் திருத்தவேண்டும் என்கிறது அறிக்கை.
எந்த வகையில் இலவசக் கல்விச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று சொல்லவில்லை அறிக்கை.
5. ஒவ்வொரு மாநிலமும் தனித்த கலாச்சாரப் பண்பாட்டு, நில அமைப்பு கொண்டது. கல்வியும் அம் மாநிலத்தின் பூகோளத்தைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட வேண்டும். 1975வரை, மாநிலத்தின் பட்டியலில் இருந்த கல்வியை, பிரதமர் இந்திரா பொதுப் பட்டியலுக்கு மாற்றினார்.
புதிய அறிக்கை கணிதம், அறிவியல், ஆங்கிலம் இம்மூன்றுக்கும் தேசியப் பாடத் திட்டத்தைக் கொண்டுவர ஆசைப்படுகிறது. மாநிலங்களின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு, கல்வி எப்போதும் மாநில அரசின் அதிகாரத்துக்குள் கொண்டுவரப்படுவதே சரியானது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
கல்வியாளர்கள் முக்கியமாகக் கவலைப்படுவது, பத்தாம் வகுப்பு மாணவர்கள், அவர்கள் பெறுகிற மதிப்பெண்களைக் கொண்டு இரண்டு வகைக் கல்விக்குப் பிரிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றித்தான். ஒரு வகை தொழில் சார்ந்த கல்விக்கும், மற்ற வகை மூளை சார்ந்த கல்விக்கும் பிரிக்கப்படும் என்று அறிக்கை ஆசைப்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
மதிப்பெண், ஒரு மாணவனின் மனநிலை, ஆசை, லட்சியம், எதிர்கால நோக்கம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் முழு அடிப்படையாக எப்போதும் இருக்க முடியாது. தேர்வு வருகிறபோது இருக்கும் மனநிலையே, மதிப்பெண்ணுக்கு ஆதாரம். அதன்பிறகு அவர் (மாணவர்) தம்மைப் பலவகையிலும், மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். 15 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் ஒரு மாணவனை, இவன் தொழில் சார்ந்த கல்வி பயிலவே தகுதி உள்ளவன், அல்லது மூளைசார்ந்த படிப்புக்கே தகுதி உள்ளவன் என்று அரசு வெறும் மதிப்பெண்களைக் கொண்டு பிரிப்பது எந்த நியாயமும் இல்லாத ஒரு வழிமுறை, என்கிறார்கள் அறிஞர்கள்.
உடல் உழைப்பும், உடல் உழைப்பு சார்ந்த வாழ்க்கை முறையும் இரண்டாம் தரமானது என்று மூளையும் மனமும் சரியாக உள்ளவர்கள் கூற முடியாது. அதைத் தீர்மானிக்கும் உரிமை மாணவர்க்கே இருக்க முடியுமே தவிர அரசுக்கு இருக்க முடியாது. இது மனித உரிமை. மனித உரிமைகளைக் காக்க வேண்டியது அரசின் முதல் கடமை.
தகவல் அறிக்கை, சொல்லியதாக அறிஞர்கள் கூறுபவை இவை. இன்னும் பல இருக்கவே செய்கின்றன.
217 பக்கம் கொண்ட அறிக்கை, மேலும் பலவற்றையும் சொல்லி இருக்கக் கூடும். அது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு, மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பரவலாகக் கருத்து அறியப்பட்டு, திருத்தங்களுக்கு உட்பட்டு, அதன்பிறகே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயக நடைமுறை.
கல்வி, மனிதனை உருவாக்குகிற அற்புத ஊடகம். மிகவும் விழிப்போடும், எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டும், தேசத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் செயல்படுத்த வேண்டிய மகத்தான பணி இது.
நிறைய சந்தேகங்கள், தெளிவற்ற கருத்துக்கள், இந்தியா எதை நோக்கிச் செலுத்தப்படப் போகிறது என்பது பற்றிய குழப்பம் இவற்றுடன் கல்வி முதல் அறிக்கை வெளிப்பட்டு இருப்பதாகக் கல்வியாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.
இதைக் கருத்தில் கொள்வது அரசின் கடமை.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions