c தமிழ் எழுத்தாளர்களை மலையாளிகள் அறிவார்களா?
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களை மலையாளிகள் அறிவார்களா?

குளச்சல் மு. யூசுப்
குளச்சல் மு. யூசுப், குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் என்னும் ஊரில் பிறந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழிக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். மிக முக்கியமாக வைக்கம் முகம்மது பஷீரைத் தமிழில் தந்தது மிகுந்த பாராட்டுக்குரியது.  மீஸான் கற்கள்,  மஹ்ஷர் பெருவெளி, அழியாமுத்திரை,  அடூர் கோபால கிருஷ்ணன்,  மேலும் சில ரத்தக் குறிப்புகள், சப்தங்கள், பாத்துமாவின் ஆடு ஆகிய நாவல்களையும், தற்கால மலையாளச் சிறுகதைகள், நளினி ஜமீலா (தன்வரலாறு) உட்பட பல சிறுகதைகள், தன்வரலாற்று நூல்களையும் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.  நமது  நாலடியார் நூலை மலையாளத்திற்கும் கொண்டு சேர்த்துள்ளார். திருவள்ளுவர் திருச்சபையின் தமிழ்த் தொண்டர் விருது, தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப் பரிசு, தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது, சமூக - நல அமைதி அறக்கட்டளை விருது, குடியரசுதின விருது,  உள்ளூர் பரமேஸ்வர அய்யர் விருது (கேரளா), இஸ்லாமிய தமிழியல் ஆய்வக விருது, வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். பல்சுவை காவியத்திற்காக அவரைச் சந்தித்தோம்.

கேரள எல்லைப் பகுதியான தங்களது கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ், மலையாளம் மொழிச் சூழல் எப்படியிருக்கிறது? உங்களது சொந்த ஊரான குளச்சல் பகுதியை வைத்துச் சொல்லுங்கள்?
வரலாறு, மொழி, பண்பாடு, நிலப்பகுதி, அரசியல், குடும்பம் என்று விரிவாக பதில் சொல்லவேண்டிய கேள்வி இது. சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழக்கொழிந்துபோன பல்வேறு சொற்கள் கேரளத்திலும், முன்பு அதன் ஒரு பகுதியாக இருந்த குமரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்றும் வழக்கத்தில் உள்ளன. உதாரணமாக, நல்ல அழகாக இருக்கிறாய் என்பதை எங்கள் பகுதியில் ‘நல்ல சேலா இருக்கியா’ என்பார்கள். இப்படிப் பேசுகிறவர்கள் இப்போது அருகிப் போய்விட்டார்கள் என்பது வேறு விஷயம். திருவள்ளுவர் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை நிறுவுவதற்கான ஆதாரங்களில் ஒன்றான, ‘மடி’ என்ற சொல்லை அதே பொருளில் (சோம்பல், சோர்வு) இங்கே பரவலாகப் பயன்படுத்துகிறோம். தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை அதிகமாகப் பயன்படுத்துகிறவர்கள் மலையாளிகளும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களும்தான். முஸ்லிம்கள்கூட இங்கே வேட்டிதான் உடுத்துவார்கள், பிற பகுதிகள்போல் கைலி அல்ல. கேரளாவைப் போலவே நெய்தல் நிலமும் குறிஞ்சி நிலமும் அதிகமாக உள்ள பகுதி இது.
குளச்சல், நாவலாசிரியர் தோப்பில் முகமது மீரானின் ஊரான தேங்காப்பட்டணம் போன்ற பகுதிகளில் வாழும் பிற பிரிவு மக்களை விடவும் இங்குள்ள முஸ்லிம்களின் மலையாளத் தொடர்பு அதிகமாக இருக்கும். திருமண உறவுகளில் தமிழ், மலையாளம் என்னும் பாகுபாடு சிறிதளவுகூட கிடையாது. இங்கே மலையாளம் என்று குறிப்பிடுவது தமிழிலிருந்து உருத்திரிந்ததும் மக்களின் பயன்பாட்டில் உள்ளதுமான பச்சை மலையாளம். கணவனும் மனைவியும் மலையாளத்தில் சம்சாரிப்பதும், தமிழில் பேசுவதும் எங்கள் பகுதிகளில் புரிதல் சார்ந்து பிரச்சனையை உருவாக்குகிற ஒரு விஷயமே அல்ல.
பேருந்து வசதிகள் இல்லாத காலத்தில் கேரளாவுக்கும், குமரி மாவட்டத்தின் இப்பகுதிகளுக்கும் இடையே இருந்த நீர்வழிச் சாலை, இன்றைய கேரளப் பகுதிகளான பூவார், விழிஞ்ஞம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளினூடே செல்லும். இதே  நீர்வழிச் சாலையில் நானும் பயணம் செய்திருக்கிறேன். இவ்வழித் தடம் குமரி மாவட்டத்தில் இன்று ரியல் எஸ்டேட்காரர்களின் பிடியில் இருக்கிறது. இந்த கேரளப் பகுதிகளில் வாழ்பவர்களின் வழக்கு மொழி பெரும்பாலும் தமிழ்தான். குமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளிலுள்ள மக்களின் இரு மொழிக் கலப்புப் பண்பாடு இந்த அடிப்படையில் உருவானதாகவும் இருக்கலாம்.

நீங்கள் மலையாளம் கற்றுக்கொள்வதற்கான சூழல் இயல்பிலேயே இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?இல்லை தன்னார்வத்துடன் கற்றுக்கொண்டீர்களா?

ஏற்கனவே சொன்னது குறிப்பிட்ட பகுதியிலுள்ள தமிழ், மலையாள மொழிச் சூழலின் பொதுவான அம்சங்களை மட்டும்தான். நான் சிறு வயதிலேயே குடும்பத்துடன் நாகர்கோயிலுக்கு வந்துவிட்டேன். ஆகவே, மலையாள மொழியுடனான எனது தொடர்பு, முன்னோர்களின் குடும்ப உறவுகள் சார்ந்ததுதானே தவிர, மொழி சார்ந்தது அல்ல. குளச்சலில் நாங்கள் குடியிருந்த வீட்டின் அருகில் இந்து இளைஞர் வாசிப்பு சாலை என்ற ஒரு நூலகம் இருந்தது. தினத்தந்தி பத்திரிகை மட்டும்தான் அங்கு வரும். ஏழு வயதில், இங்கிருந்து தொடங்கியது எனது வாசிப்புப் பழக்கம். கன்னித் தீவு, பாபு என்ற பெயரில் மூன்றாவது பக்கத்தில் வெளிவரும் ஒரு படக்கதை, பிறகு, தொடர்கதை என்று வாசிப்புப் பழக்கம் தொடர்ந்தது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, ஒருநாள்கூட விடாமல் தினத்தந்தி வாசித்துக் கொண்டிருக்கிறேன். நாகர்கோயிலுக்கு வந்த பிறகு, மாவட்ட மைய நூலகம் கை கொடுத்தது. இந்த வாசிப்புப் பழக்கத்தின் பின்னணியில் மலையாளப் பத்திரிகை தலைப்புகளையும் திரைப்பட சுவரொட்டிகளையும் வாசித்துப் புரிந்துகொண்டேன். பிறகு,  மலையாள மனோரமா, மங்களம் போன்ற வார இதழ்கள், திரைப்படங்கள், வைக்கம் முகம்மது பஷீர், தகழி, கேசவதேவ், கேரளத்தின் புரட்சிகர இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் குறித்த நூல்கள் என எனது வாசிப்பு விரிவடைந்தது.

மலையாள இலக்கியத்தில் உங்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு எது? தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டியது எது?
தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்ற என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியதும், என்னுள் தாக்கங்களை உருவாக்கியதும் ஏற்கனவே சொன்ன பஷீர், தகழி, கேசவதேவ் போன்றோரின் படைப்புகள், புரட்சிகர இயக்கங்கள் முன்நின்று நடத்திய  (புன்னப்புர, வயலார், தலச்சேரி, புல்பள்ளி போன்ற பகுதிகளில் நடந்த) கிளர்ச்சிகள், தமிழ்நாட்டின் பிற பகுதியினருக்கு அந்நியமான, திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த குமரி மாவட்டம் தொடர்பான வரலாறுகள் ஆகியவைதான். எழுத்தாளர் ஜெயமோகனிடம் இது குறித்துப் பேசியபோது அவர், “உங்களால் சொந்தமாக எழுத முடியும் என்று தோன்றுகிறது. எழுத முயற்சி செய்யலாமே” என்றார். எனக்கு என்னவோ மொழிபெயர்ப்பதில்தான் ஆர்வம் இருந்தது. சொல்லப்போனால், மொழிபெயர்ப்பதை வெளியிடும் ஆர்வம்கூட இருக்கவில்லை. இதற்கான வாய்ப்புகளைத் தேடிப் பிடிக்க விருப்பமில்லை என்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கான களத்தை உருவாக்கி, முறைப்படுத்த உதவியது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்டக் கிளைதான். இதற்கு அடிப்படையாக இருந்தவர் அதாவது, அறிமுகமான ஒரு மணி நேரத்தில், “எழுத வேண்டிய நீங்கள் வேறு ஏதேதோ செய்கிறீர்கள் போலிருக்கிறது” என்று சொல்லி என்னை எழுத்துலகுக்கு இழுத்து வந்தவர் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்.  

தமிழ் இலக்கியச் சூழலோடு ஒப்பிடுகையில் மலையாள இலக்கியச் சூழலின் தன்மை எப்படி இருக்கிறது?
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக நான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்த நாலடியார் நூலைப் பிழை திருத்தித் தருவதாகக் கடிதம் மூலம் கேட்டு வாங்கி, அதை நூலாக வெளியிடும் அளவுக்கு மலையாள இலக்கியச் சூழல், இலாபகரமானதாகவும், வளமுடனும், சிறப்பாகவும் இருக்கிறது.
முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்து, ஸ்திரீ தனம் என்னும் வரதட்சணை வழக்கம் தடை செய்யப்பட்டது. மாறாக, மஹர் பணம் என்னும் புருஷ தனம் நடைமுறையில் இருக்கிறது. மணமேடையில் வைத்து, “இவ்வளவு சவரன் நகையை அல்லது பணத்தை நான் மணமகளுக்கு மஹராக வழங்குகிறேன்” என்பார் மணமகன். “எனக்கு இவ்வளவு தொகை வேண்டும்” என்று பெண், கேட்டும் வாங்கலாம்.
கேரளாவில் மிக அண்மையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு மணவிழாவின்போது மணப்பெண், “மஹராக எனக்கு ஐம்பது புத்தகங்கள் வேண்டும்” என்று கேட்டு வாங்கினார். அதாவது தங்கத்துக்குப் பதிலாகப் புத்தகங்கள்.
புதிதாகக் கட்டப்படும் சிறு வீடுகளில்கூட புத்தகங்கள் வைப்பதற்கென தனியாக ஒரு இடம் இருப்பது போல் அங்கே வடிவமைக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற சில எழுத்தாளர்களின் நூல்கள், ஆங்கிலத்தில் வெளிவரும் அதே நேரத்தில் மலையாளத்திலும் வெளிவருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவுக்கு வெளியே நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் மலையாளப் பதிப்பகங்கள் தொடர்ந்து பங்கு பெற்று வருகின்றன. இதை முயற்சி செய்து பார்க்கக்கூட தமிழ்ப் பதிப்பகங்கள் தயாராக இல்லை. ஃப்ராங்க்பர்ட்டில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு மட்டும் கலந்துகொள்கிறது.
கேரள மண்ணில் இலக்கியம் சார்ந்து மிகப்பெரிய வாசகப் பரப்பை உருவாக்கியதில் பொதுவுடைமை இயக்கங்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், மலையாளத்தின் தற்போதைய நாவல் இலக்கியத்தை, பிரம்மாண்டங்களுக்குள் புதையும் நுட்பமாகவே கருத வேண்டியதிருக்கிறது. வாசகப் பரப்பும் வணிக நோக்கமும் தற்கால மலையாள நாவல் இலக்கியத்தின் தரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று கருதுகிறேன். மொழி சார்ந்ததும் வடிவம் சார்ந்ததுமான முயற்சிகள் அங்கே ஏராளமாக நடந்து வருகின்றன. ஆனால், உள்ளடக்கம்தான் சாரமற்றதாக மாறிவிட்டது.
தமிழில், ஒரு நாவலை முழுமையாக வாசித்து மதிப்புரை எழுதக்கூட ஆளில்லை. இந்த நாவலை வாசித்து ஒரு மதிப்புரை எழுதுங்கள் என்று எந்தப் பத்திரிகைகளும் கேட்பதாகவும் தெரியவில்லை. இந்நிலையில் ஒருவர் தனது காலத்தையும் பொருள் விரயத்தையும் ஏற்றுக்கொண்டு, மன அவஸ்தையின் வெளிப்பாடாக நாவல் எழுத முன்வரும்போது அது ஓரளவாவது தரமானதாகவே இருக்கிறது. அண்மையில் தமிழில் வெளிவந்த பல்வேறு நாவல்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
கவிதைகளைப் பொறுத்தவரை, பலருடைய கவிதைகளை அவர்கள் வாசிப்பதில்லை. பாடுகிறார்கள். பாடமுடியாத கவிஞர்களும் முக்கிய கவிஞர்களாகத்தான் இருக்கிறார்கள்.
சிறுகதைகளை எடுத்துக்கொண்டால், தமிழ்ச் சிறுகதைகளை விடவும் மலையாளச் சிறுகதைகள் சிறப்பாக அமைகின்றன. வாசிப்புப் பழக்கம் பரவலாகிவிட்ட நிலையில், இலக்கியப் பத்திரிகைகளுக்கும், வணிகப் பத்திரிகைகளுக்குமான இடைவெளி அங்கே பெரிய அளவில் இல்லை. சிறுகதைகளை இதுபோன்ற பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இந்தப் பத்திரிகைகளின் வணிக நோக்கத்தை ஈடு செய்வது இந்தச் சிறுகதைகளும் அல்ல. மலையாளச் சிறுகதைகள் சிறப்பாக அமைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.   

தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பேசும் படைப்புகள் மிகவும் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை, தமிழ்நாட்டில் கலை இலக்கியம் மட்டுமல்ல, வணிகம், அரசுப் பணிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு என்பது அவர்களது விழுக்காட்டின்படி ஏறக்குறைய சரியான விகிதத்தில்தான் இருந்தன. இலக்கியம் சார்ந்து நாவல், சிறுகதை போன்ற வடிவங்களில் ஒருவேளை இந்த சமநிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். நான் சொல்வது, மரபுக் கவிதைகள், நிகழ்த்துக் கலைகள், நாடகங்கள் போன்றவற்றை. இதற்கான மிக முக்கியக் காரணம், திராவிட இயக்கங்களுடனும் பொதுவுடமை இயக்கங்களுடனும் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு. பிறகு, அனைத்து சமூகங்களினுள்ளும் மேனிலையாக்க சிந்தனை வளர்ந்து வலுப் பெற்றது. இதில், முஸ்லிம் சமூகமும் உட்படும். வழிபாட்டுத் தலங்களில் மதவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் பொது உளவியலான மேனிலையாக்க சிந்தனைக்கு வளம் சேர்ப்பதாக அமைந்தது, அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்ததும் அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதுமான வாழ்வியல் சிக்கல்கள். இவற்றை எதிர்கொள்ள அமைப்பு ரீதியாக அவர்கள் ஒன்று திரண்டனர். இவ்வமைப்புகள், மரபு சார்ந்த இஸ்லாத்தைத் தவிர்த்து தூய்மைவாத இஸ்லாத்தை முன்வைத்தன. இவ்வமைப்புகளுக்கான சமூகத் தேவைகளையும் மறுப்பதற்கில்லை. இஸ்லாமிய தூய்மை வாதத்தின் மிக முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டது, இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைநிலையாளர்கள் தேவையில்லை என்பதைத்தான். இந்தத் தூய்மை வாதம், வழிபாட்டு முறைகளினுள் கலை, இலக்கியம் போன்ற பங்களிப்பையும் மறுக்கிறது. இவற்றை எல்லாம் கடந்து தற்போதைய சூழலிலும் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் ஏராளமான படைப்புகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. கலை மனம் என்னும் மனித இயல்பு, மதச் சங்கிலிகளுக்குள் ஒரு போதும் அடைபட்டுக் கிடக்காது. விகிதாச்சாரம் சார்ந்து  இதில் சிறு ஏற்றத்தாழ்வுகள் இருப்பது பொதுவானதும் கவனிக்கப்பட வேண்டியதுமான அம்சங்கள்தான். வடஇந்தியாவைப் பொறுத்தவரை திரைப்படத்துறையில் முஸ்லிம்களின் ஆதிக்கம் கவனிக்கப்படுவதுபோல்.

மலையாள இஸ்லாமியப் படைப்புகள், இஸ்லாமிய மதக் கோட்பாடுகள் மீதான விமர்சனங்களை முன் வைக்கிறதா?
குறிப்பிட்ட மதம் என்றில்லை. எல்லா மதங்களின் மீதான விமர்சனங்களுக்கும் அங்கே இடமிருக்கிறது. கலைப் படைப்புகளை அவர்கள் மதக் கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. தமிழ்நாட்டில் திரையிட அனுமதி மறுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் முதலில் அங்குதான் வெளியானது. கடவுளுக்கான இடத்தை கடவுளுக்கும், சீஸருக்கான இடத்தை சீஸருக்கும் மக்களே வழங்கியுள்ளனர். ஒன்றின்மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்துவதை ஒட்டு மொத்த மலையாள சமூகமும் விரும்புவதில்லை.
சொர்க்கம் - நரகம் என்னும் கருத்தியலை முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை சார்ந்து, ஒரு இடத்தில் மிக அழகாகக் கேலி செய்து எழுதிய வைக்கம் முகம்மது பஷீர், ‘பகவத் கீதையும் சில முலைகளும்’ என்ற பெயரில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். திருச்சூர் கோயிலின் மூலவரான வடக்கும் நாதன் தனது கனவில் வந்து, நல்ல பாக்குக் கிடைக்காமல் வாய் என்னவோ போலிருக்கிறது என்றதாகவும், மனம் பிறழ்வுபட்ட நிலையில் கொஞ்சம் பாக்குகளை வாங்கி வந்து, வடக்கும் நாதனுக்குக் கொடுப்பதற்காகக்  கோயிலுக்குள் எறிந்ததாகவும் எழுதியிருக்கிறார்.
இந்திய அளவில் அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்கள், பொதுசமூகத்துக்கு நிகராக அல்லது அதிகமாக வளர்ச்சி பெற்றிருக்கும் மாநிலம் கேரளா. இதன் அடிப்படையிலும் அங்குள்ள படைப்புச் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆரோக்கியமான இந்தச் சூழலை விட்டு கேரளா சற்று நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்பதான ஒரு தோற்றமும் தற்போது தென்படுகிறது.

மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் யாவும் தமிழில் மொழிபெயர்க்கப் படுவதுபோல் தமிழ் இலக்கியங்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றனவா?
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நூல்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவான தமிழ் நூல்கள்தான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் மலையாள இலக்கியங்கள் பேசப்படும் அளவுக்குத் தற்கால தமிழிலக்கியங்கள் அங்கே பேசப்படுவதில்லை. நம்முடைய வணிகமயப் படுத்தப்பட்ட திரைப் படங்கள், அரசியல் போன்றவற்றை பின்னணியாகக்கொண்டு உருவான தமிழர்கள் மீதான ஒருவித கேலி மனோபாவத்துடன் தற்கால தமிழிலக்கியங்களையும் அவர்கள் அணுகுகிறார்களோ என்ற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டதுண்டு.   
நளினி ஜமீலா, ஆமென், திருடன் மணியன் பிள்ளை போன்ற தன்வரலாறுகளை மொழி பெயர்த்திருக்கிறீர்கள். அதேபோல் தமிழில் உள்ள தன்வரலாறுகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் எண்ணம் இருக்கிறதா? இதுவரை 28 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறீர்கள். இதில் நாலடியாரை மட்டும்தான் மலையாளத்தில் மொழி பெயர்த் திருக்கிறீர்கள். இதை, தாய் மொழியிலிருந்து பிறமொழிக்கு மொழியாக்கம் செய்வது கடினம் எனக் கொள்ளலாமா?
எனக்கு நன்றாகத் தெரிந்தது இரண்டே மொழிகள்தான். தமிழும் மலையாளமும். பிற மொழிகள் பற்றித் தெரியாது. என்னுடைய தாய்மொழி தமிழ் என்பதால், மலையாளப் படைப்பை தமிழில் மொழியாக்கம் செய்யும் அளவுக்குத் தமிழிலிருந்து மலையாளத்தில் சுலபமாக மொழியாக்கம் செய்ய இயலாது. மீறிச் செய்தால், தமிழில் கிடைத்த பெயரை மலையாளத்தில் இழந்துவிட நேரும். நாலடியாரைப் பொறுத்தவரை அது அறநூல். உலகம் முழுமைக்குமான அறம். இதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யும்போது தற்காலக் கலாச்சாரங்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ளத் தேவையில்லை. மிக முக்கியமாக, மலையாளத்தில் இன்று பயன்படுத்தப்பட்டு வரும் சமஸ்கிருதம் கலந்த மொழிநடையைத் தவிர்த்துவிட்டு, சாதாரண மக்களும் புரிந்துகொள்வதுபோல் பச்சை மலையாளத்தில் மொழியாக்கம் செய்துவிட முடியும்.
உதாரணமாக, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கார் நாற்பதின் முதல் பாடலை எடுத்துக்கொள்வோம் :
பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ
வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து.
என்னும் பாடலை, அதன் பொருளும் கவித்துவமும் குன்றாமல் தமிழின் அதே சுவையுடன் எளிமையாகப் புரியும்படி மலையாளத்தில் இப்படிச் சொல்லி விடலாம்.
பொருகடல் வர்ணன்டெ மாரணி மாலபோல்
இந்த்ரவில் விலங்ஙெனயூந்நி யின்மழ தாழாதிரிக்கெ
வருமெந்நு மொழிஞ்ஞ மாரன் வராதிரிக்குமோ வானம்
கருவிருந்நொலிக்காதிருந்நும்.

திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்பதை மலையாளிகள் ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழ்மொழி மீதான அவர்களின் மதிப்பீடு எவ்வாறானதாக இருக்கிறது?
சகோதர மொழி என்ற அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழைத் தாயாக ஏற்றுக்கொண்டால் செம்மொழித் தகுதி மலையாளத்துக்குக் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. தங்களது சமஸ்கிருதக் கலப்புக்கு அவர்கள், மலையாள மொழி தனித்தன்மை பெற்று விளங்கவேண்டும் என்பதைக் காரணமாகச் சொல்கிறார்கள். தன்னுடைய அருகாமையிலுள்ள மாநில மொழியும், உயிர்ப்புடன் விளங்குவதுமான தமிழைச் சார்ந்திருப்பது இந்தத் தனித்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உணர்வு புரிதலுக்கு அப்பாற்பட்டதல்ல.  
தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோர் மலையாள இலக்கியத்தின் மும்மூர்த்திகளாக தமிழ்

இலக்கியச் சூழலில் கொண்டாடப்படுகிறார்கள். அதுபோல தமிழ் எழுத்தாளர்களை மலையாள வாசகர்கள் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறார்கள்?
சுந்தரராமசாமியை ஓரளவு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார். தோப்பில் முகம்மது மீரானும் கவனிக்கப்பட்டவர்தான். அடிப்படையில் இவர்கள் ஏதேனும் ஒரு வகையில் மலையாளத்துடன் தொடர்புள்ளவர்கள். சாரு நிவேதிதாவைக் கொண்டாடியதற்கான காரணங்கள் வேறு. புதுமைப்பித்தன் போன்ற முக்கியப் படைப்பாளிகள் குறித்து அவர்கள் பேசியோ எழுதியோ நான் பார்த்ததில்லை. மாதொருபாகன் பிரச்சனைக்கு முன்பே, பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions