c நாமிருக்கும் நாடு-31
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-31

மண்ணின்  பாட்டாளர் பட்டுக்கோட்டையார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதி பரம்பரைக் கவி. பாரதியார், அவருக்கு முன் இருந்த புலமைத் தமிழை மக்கள் தமிழாக மாற்றி அமைத்தார். மக்கள் பேசும் எளிய தமிழில் அழகு பார்த்த கவி அவர். எளிமையும் இனிமையும் இணைந்த மொழியில் பாரதிக்கு பின்வந்த பல கவிஞர்கள், தமிழை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமான கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த, செங்கல்படுத்தான்காடு என்கிற மிகச்சிறிய கிராமமே, கவிஞர் பிறந்த பூமி. வயல், உழவு, நெல் என்று விவசாயம் சார்ந்த மக்கள். எளிய குடும்பங்கள் வாழும் இடம். அதில் ஒரு குடும்பத்தில், அருணாச்சலம் _ விசாலாட்சி தம்பதியரின் இளைய மகனே கல்யாணசுந்தரம். திண்ணைப் பள்ளிப் படிப்பும், அண்ணனிடம் இருந்து வந்த இரண்டாம் வகுப்புக் கல்வியும் மட்டுமே கற்று, ஓதாமலே உணர்ந்த படிப்பே அவருக்கு வாய்த்தது.
இலக்கியம் படித்து கவிதைத்துறைக்கு வந்தவர் இல்லை அவர். தந்தை பாடிய கும்மிப்பாட்டு போன்ற பாட்டுகளும், மக்கள் பாடிய தொழில்சார்ந்த பாடல்களுமே, அவர் அடிப்படை. நாட்டுப்புற இலக்கியத்தால் நிரம்பப்பட்டு மக்கள் இலக்கியவாதியாக மாறியவர். 1946ஆம் ஆண்டு, 15 ஆம் வயதில், அவர் முதன் முதல் கவி புனைந்த சூழ்நிலையை ஒரு பத்திரிகையில் இப்படிப் பதிவு செய்தார்.
‘ஊரிலிருந்து வயல் பார்க்கச் சென்று திரும்பினேன். வழியில் வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்தேன். நல்ல நிழல். குளிர்ந்த தென்றல். ஏரியைப் பார்த்தேன். தண்ணீர் அலைகள் நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் ‘எம்மைப் பார், எம் அழகைப் பார்’ என்று குலுங்க, ஒரு இளம் கெண்டை மீன் துள்ளித் தாமரை இலையில் குதித்தது. அதுவரை மௌனமாக இருந்த நான் என்னையும் அறியாமல் பாடினேன்.’
“ஒடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே
கரை ஓரத்தில் போகாதே கெண்டைக் குஞ்சே
கரை தூண்டில்காரன் வரும் நேரமாச்சு
ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே”

இவ்வாறு பாடிக்கொண்டே வீடு திரும்பிய கவிஞர், காலம் கனியச் சென்னைக்கு ரயில் ஏறினார்.
சென்னை, கவியை உடனடியாக வரவேற்று மகுடம் சூட்டவில்லை. இயல்பிலேயே போர்க்குணம் கொண்ட கல்யாணசுந்தரம், ஒரு விவசாயி. அப்போது தஞ்சை மாவட்டம், பண்ணையார், பண்ணைக்கு எதிரான கம்யூனிஸ்டுகள் என்று இரு பெரும் பிரிவாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. சிவராமன், இரணியன் ஆகிய தியாகத் தலைவர்களுடன் இணைந்து விவசாய இயக்கத்தைக் கட்டமைத்தார்.
இந்த அனுபவத்தோடுதான் அவர் சென்னை வந்தார். ராயப்பேட்டையில் பத்து ரூபாய் வாடகையில் ஒரு அறை எடுத்துத் தங்கிக்கொண்டார். உடன் அவர் நண்பர் ஓவியர் ராமச்சந்திரன், நடிகர் பூ.ஏ.கே. தேவர் ஆகியோரும் அறையைப்  பங்கு கொண்டனர்.
தொடக்க காலம், இருள் மயம்தான். அப்படித்தானே இருக்க முடியும்.
1955ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ என்ற படத்துக்கு எழுதிய பிறகு, பேனாவைக் கீழே வைக்கவும் அவருக்கு நேரம் இல்லை.
கல்யாணசுந்தரம், நிறைய இழந்தும் இருக்கிறார். பல பட முதலாளிகள் அவர் பாட்டை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க மறந்து போயிருக்கிறார்கள். ஒரு பட முதலாளி, அவரை ‘இன்று போய் நாளை வா’ என்றாராம். கவிஞர் கொதித்துப் போய் ஒரு பாடலை எழுதி மேசைமேல் வைத்துவிட்டுத் திரும்பி இருக்கிறார். அந்தப் பேப்பரில் இருந்த வரிகள் இதுதான்.
“தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன்
நாயே! நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை நில் என்று சொல்ல”
பணம் பறந்து வந்து சேர்ந்தது.
அப்போது கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்தார். அழகிய தமிழ் மணம் சார்ந்த, இலக்கிய மணம் சார்ந்த பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார். பட்டுக்கோட்டையார் பிரவேசம் ஒரு புயல் போல நிகழ்ந்தது. அக்காலத்தில் பட்டுக்கோட்டையாரை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்ல தெருவடைத்துக் கொண்டு கார்கள் காத்துக் கிடந்தன.
கல்யாணசுந்தரத்தின் பாடல்களில் வயல் மணம் கமழ்ந்தது. ஏர், உழவு, உழைப்பு என்று பாட்டாளிகள் குறிப்பாக உழவர்கள் சிறப்பை, படும் துன்பத்தை அடர்த்தியான குரலில் சொன்னவர் அவர்.
எம்.ஜி.ஆர் தன் படங்களில் கவிஞரை மிக அதிகமாகவும் சரியாகவும் பயன்படுத்திக் கொண்டார். நாடோடி மன்னனில் ஒரு பாடல்...
‘‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பாப் பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர்விட்டு
நெல்லு வௌஞ்சிருக்கு - வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு - அட
காடு வௌஞ்சென்ன மச்சான் - நமக்கு
கையும் காலும்தானே மிச்சம்’’

என்று உழத்திப் பெண் கேட்கிறாள். அதற்கு உழவன் பதில் சொல்கிறான்.
“காடு வெளையட்டும் பெண்ணே - நமக்கு
காலம் இருக்குது பின்னே”
இந்தப் பாடலே கவிஞரின் சரியான முகவரி என்றார் எம்.ஜி.ஆர்.
‘‘உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது - மனம்
கீழும் மேலும் புரளாது
கதிரடிக்கணும் குதிரு பொங்கணும்
காவிரி அன்னையைக் கும்பிடவும்
கஞ்சிப்பானை கவலை தீரக்
கலப்பைத் தொழிலை நம்பிடவும்
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி - கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி’’

தமிழ் சினிமா, அதற்கு முன் காணாத உழைப்பின் முழக்கத்தை, மண்ணின் சிறப்பை முதன் முதலாகக் கேட்டு வியந்தது.
எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்காகப் பாடுகிறார்.
‘‘சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா - நான்
சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா - நீ
எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதான்டா வளர்ச்சி
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பிவிடாதே
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம் போடுதான் பின்னிவளரணும்
தன்மான உணர்ச்சி’’
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எண்ணம் போல பாட்டுக்களை எழுதி வரும்போதே, காலம் அவரை அழைத்துக் கொள்ள விரும்பியது. நான்கு ஆண்டுகளே அவர் திரையில் பாட்டுக்கள் எழுதினார். 189 படங்களில் அவர் பாட்டுக்கள் வந்தன.
29ஆம் வயதில் அவர் மறைந்து போனார்.
வியர்வையின் ஈரத்தைக் கவிதைக்குள், பாட்டுக்குள் கொண்டு வந்த கவிஞர், 1959 செப்டம்பரில் காலமானார். தமிழ்ப் பாடல்களில் அவர் என்றும் வாழ்கிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம், இன்னும் யாராலும் நிரப்பப்படவில்லை.

- போராட்டம் தொடரும்
சா.வைத்தியநாதன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions