c நீங்கள் கேட்டவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கேட்டவை

புதிய பகுதி
காதல் கொலையில் முடிவது ஏன்?

கபாலி படம் பார்த்தீர்களா? அது ரஜினி சார் படம் தானே?
- _கே. மோகனா, வண்டிப்பாளையம்

பார்த்தேன் மேடம். அது ரஜினி படம் இல்லை. ரஜினி நடித்த படம். ரஞ்சித் இயக்கிய படம். ரஜினி மிகச் சிறந்த நடிகர். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல் முதலான பல படங்களில் அவர் நடிப்பு முதல்தரம். ஆனால் ‘பாட்ஷா’வின் பழைய சட்டையை அவருக்கு மாட்டிவிட்டு அவரைப் பாட்ஷாவாகவே பார்த்துக் கொண்டிருப்பது, ரஜினிக்கும் உதவாது, சினிமாவுக்கும் உதவாது. கபாலி தன் மனைவியைத் தேடிச் சென்று அடைவது முதலான ஏழெட்டு இடங்களில் அவர் நடிப்பு கண்ணில் நீரை வரவழைக்கிறது. ரஜினியின் வரலாற்றில் அவருக்கு நிரந்தரமான புகழை ரஞ்சித் ஏற்படுத்தி இருக்கிறார்.

அண்மைக் காலத்தில் காதல் ஏன் கொலையில் முடிகிறது?
-வண்ணை செயபால், புதுவண்ணை

காதல், கொலையில் முடியாது. காதலிப்பவர்கள், காதலையும் தப்பாகப் புரிந்துகொண்டு, காதலிப்பவர்களையும் தப்பாகப் புரிந்துகொள்ளும்போதுதான் விபரீதம் நிகழ்கிறது. காதல் என்பது முதலில் நட்பு. அப்புறம் புரிந்துகொள்ளுதல், பலம், பலவீனம் இரண்டையும் அறிந்துகொள்ளுதல், அதன்பின் ஏற்படும் பிணைப்பே காதல்.
உடம்பை முதலில் முன் நிறுத்துகிற மூடத்தனமே இங்கு காதல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மைக் காதல், ஆதிக்கம் செலுத்துவதில்லை. ‘எனக்கே நீ சொந்தம்’ என்கிற ஆக்கிரமிப்பு உணர்ச்சி காதலில் இல்லை. வன்முறையாளர்கள் கூட காதலில் மென்மை அடைந்திருக்கிறார்கள். கத்தியை எடுப்பவர்கள் காதல் பற்றியே தெரியாத மூர்க்கர்கள்.

மறைந்த சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பற்றி?
-கே. பாலாஜி, குடந்தை
நா. முத்துக்குமார், தான் எழுதிய கவிதைகள், பாடல்களைக் காட்டிலும் மேலானவர். நிறைய படிக்கிற பழக்கம், அவர் தந்தையிடமி ருந்து அவர் சுவீகரித்துக் கொண்ட நல்ல பழக்கம். சக திரைக் கவிஞர்களுடன் நல் உறவை எப்போதும் பேணி, முடிந்தவரை பலருக்கும் உதவியவர். நா. முத்துக்குமாரின் இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, கவிதைத்துறைக்கும், திரைத்துறைக்கும் பெரிய நஷ்டம்தான்.
பொருள், புகழ் ஆகியவற்றில் உயர உயரப் பணிவையும் எளிமையையும் தன் இயல்பாகப் பேணியவர். முடிந்தவரை நல்ல பாடல்களைச்  சினிமாவுக்கும், நல்ல கவிதைகளைத் தமிழுக்கும் தந்தவர்.

ஜாக்கிசானுக்கு சினிமா சாதனையாளர் விருது கொடுக்கிறார்களாமே?
-ஜான் சாமுவேல், மதுரை
ஜாக்கிசானை மகிழ்ச்சி செய்திருக்கிறது ஆஸ்கார் கமிட்டி. சானின் எந்தப் படமும் ஆஸ்கர் அருகில் கூடச் சென்றதில்லை. ஆனால் அவர் நடித்த, போலீஸ் ஸ்டோரி, ரஷ் ஹவர் போன்ற படங்கள் பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்தன. விதிகளைத் தளர்த்தி, அவருக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுகிறது.
ஜாக்கிசான் நடிக்கத் தெரியாதவர் இல்லை. நன்றாக அடிக்கவும் தெரிந்தவர்.

மகசேசே விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணாவைக் கேட்டிருக்கிறீர்களா?
-நா.எஃப். கோபால், வத்திராயிருப்பு
நிறைய்ய.
இன்று கர்நாடகச் சங்கீதப் பாடகர்களில் இருவர் முக்கியமானவர். ஒருவர் கிருஷ்ணா, மற்றவர் சஞ்சய் சுப்பிரமணியம்.
கிருஷ்ணாவுக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது இந்தியாவுக்குப் பெருமை.
கர்நாடக சங்கீதம் வானத்தில் இருந்து கீழே வந்ததல்ல என்று குரல் கொடுத்தார் கிருஷ்ணா. மக்களிடம் இருந்துதான் இசையும் தோன்றியது என்பதை ஒப்புக்கொள்ளும் கலைஞர் அவர். அதோடு, ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து சங்கீதம் பறிக்கப்படக் கூடாது என்றும் சொல்லி வருகிறார். ஒரு வகையில் கர்நாடகச் சங்கீதத்தின் புதிய வெளிச்சம் என்று அவரைச் சொல்லலாம். மரபார்ந்த கச்சேரிப் பாட்டு முறையை மாற்றி மனோபாவ சங்கீதத்துக்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார், கிருஷ்ணா.

என்ன திடீர்னு கேள்விக்குப் பதில் சொல்லக் கிளம்பிட்டீங்க சார்?
-கே.எஸ். சுந்தரம், மாயவரம்
ஆரம்பித்து விட்டீர்களா!
மாயவரத்துக்காரர்களுக்கு எப்போதும் அறிவுப் பசி அதிகம் எடுக்கிறதாம். யாரையாவது எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்களாம். அவர்களுக்குப் பதில் சொல்லவே இந்தப் பகுதி.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions