c புதுக்கவிதை வேரும் விழுதும் : 18
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை வேரும் விழுதும் : 18

முழு நிலவான இளம்பிறை கவிஞர் சிற்பி
கவிதைக்கு அகம் மட்டுமே உண்டு என்று கருதும் கவிஞர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் கவிஞர் இளம்பிறை.
“அகம் மற்றும் அதன் புறச் செயல்களால் உறுதிப்படும் அல்லது சிதையும் ஆளுமையைப் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாகவும், நல்ல பசியில் உள்ளன்போடு சோறு போட்டுத் தரும் தாயாகவும், தவித்துவரும் பொழுதுகளில் உட்கார்ந்துகொள்ளும் நிழலாகவும், அன்பையும் புரிதலையும் சொல்லித்தரும் ஆசானாகவும், என்றும் உடனிருப்பவையாகவும் கவிதைகளை உணர்கிறேன்’’
என்பது இளம்பிறையின் வாக்குமூலம்.
தமிழ்ப் புதுக்கவிதைக் களத்தில், இந்திய நாட்டின் வேறு எந்த மொழியிலும் காணமுடியாத அளவுக்குப் பெண் கவிஞர்களின் ஆழமும், கனமும் நிரம்பிய குரல்கள் ஒலித்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் உருவாகி இந்த நூற்றாண்டில் ‘பொம்’மென்று இரைந்து வரும் தேனீக்களாக இவர்களின் அலை விம்மி எழுந்து தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிமுகம் அமைந்திருப்பதும் ஒரு சிறப்புதான்.
மற்ற பெண் கவிஞர்களுக்கு இல்லாத தனிமைக் கூறுகள் இளம்பிறையிடம் நிரம்பி இருக்கின்றன. எளிய, உழைக்கும் மக்களைச் சித்தரிக்கும் நேர்மை, அச்சு அசலான கிராமியத்துவம், அழகிய மொழிநடை, சுய அனுபவங்களின் மணக்கும் பசுமை, ஆரவாரமில்லாத வெளிப்பாடு ஆகியவற்றின் பிரமிக்க வைக்கும் அழகால் இளம்பிறை தனித்து ஒளிர்கிறார்.
நகரத்தில் அதுவும் மாநகரத்தில் வாழ விதிக்கப்பட்டது வாழ்க்கையென்றாலும் தன் குக்கிராமப் பதிவுகளை இளம்பிறை மறக்கவே இல்லை. படிப்பறிவில்லாத அப்பாவும் அம்மாவும் இத்தனை ஈர்ப்போடு  வேறு யார் கவிதையிலும் இடம்பெறவில்லை. ‘அப்பாவின் கையெழுத்து’ என்ற கவிதையில் பள்ளிச் சிறுமியாக மதிப்பெண் படிவத்தில் அப்பா கையெழுத்தை வாங்கப் பட்டபாடு சிறுமியின் கண்ணீரிலும், அப்பாவின் பாசாங்குகள் அற்ற பெருமிதத்திலும் இயற்கை வர்ணங்களைப் பூசிக்கொள்கிறது.
கையெழுத்து அப்பா போட நேரமாகுமென்று ரேகை வைக்கச் சொல்லிப் பரபரக்கிறாள் சிறுமி.
“யாம் யாம் நான் என்னா
கையெழுத்துப் போடத் தெரியாதவனா
கையெழுத்துப் போட்டுத்தான்
ஓட்டுக் கூடப் போட்டேன்’’
என்று பிடிவாதம் பிடித்துப் பேனா பிடிக்கிற அப்பா, கலப்பையைப் பிடிப்பதுபோல் பிடிக்கிறார். அட்டை கிழிந்து அடி வாங்குவோமோ என்று துடிக்கிறது அவள் மனசு. எழுத எழுதக் கட்டத்துக்குள் பெயர் முடியவில்லை.
“அடுத்த கோட்டுல
மடிச்சு எழுத வா என்பார்
அழுகை வந்துவிடும் எனக்கு”
அட்டையை அரைகுறையாய்ப் பறித்துக்கொண்டு ஓடும் சிறுமியோடு நம் மனதும் சேர்ந்து பதைபதைப்புடன் ஓடும்.
முதல் கவிதைத் தொகுப்பு இந்த அப்பாவி அப்பாவுக்குச் சமர்ப்பணம் ஆனதில் என்ன ஆச்சரியம்?
வாழ்வது ‘சாணி மெழுகிய சிறு தரை, வளைத்துக் கவிழ்ந்து கிடக்கும்’ கூரைக் குடிசையில்.
“பனைமட்டை அடைத்த
முன் தாழ்வாரத்தில் ஒண்டி நிற்கும்
குஞ்சுத் தாய் கோழி
‘பக், பக்’ எனக் கத்தும் போதெல்லாம்
பாம்பு புகுந்திருக்குமோ என்ற
பயம்”
ஊரெல்லாம் பாத்திரம் பண்டம் திருடு போகும்போது நம் வீட்டில் குலதெய்வம் அய்யனார் அருளால் திருட்டுப் போகவில்லை என்று அப்பாவிடம் அம்மா பெருமைப்பட்டுக்கொள்ளும் முன்னிரவில் தங்கை கேட்கிறாள்.
“எப்படி வருவான் திருடன்?
வெல்லமும் சுண்ணாம்பும் குழைத்து
ஓட்டையடைத்து
உலை கொதிக்கும் சோற்றுப் பானை
விளிம்பு நெளிந்த
வெடித்த தட்டுகள்
எதை எடுப்பான் இங்கு வந்து?”
இந்த வறுமையின் சித்திரத்தில் எல்லாரும் சிரிக்க, குடிசைக்கு வெளியே போய் ஆலமரத்தடியில் அழுது கொண்டிருந்தாள் அம்மா.
“அவளின் கண்ணீர்த் துளிகள்
எண்ண முடியாத நட்சத்திரங்களாக
மின்னிக் கொண்டிருந்தன”
என்று கவிதை முடிகிறபோது நம் கண்களிலும் நட்சத்திரங்கள்!
அந்த அம்மா வறுமை இருளுக்கும், தன் கல்வி வெளிச்சத்துக்கும் இடையே பட்ட அவதி பல் சக்கரங்களில் சிக்கிய கரும்புபோல் கசங்கிப் போனதைச் சொல்கிறார் இளம்பிறை.
“பரீட்சைக்குக் கட்டவேணும்
பணங் குடும்மா யின்னு கேட்டா
‘படிக்க வச்சி எப்பேர்ப்பட்ட
பாவத்த நான் செஞ்சுபுட்டேன்’ என
அழுதழுது ஒரு
அஞ்சு ரூபா தந்தவளே
காலுக்குச் செருப்பில்லாம - நான்
கஷ்டப்பட்டு நடக்குறேன்னு
மொட்டக் காலோட நீ
முள்ளு வெட்டி வித்துப்புட்டு
மட்ட விலையில் ஜோடி
செருப்பு வாங்கித் தந்தவளே”
என்று அம்மாவின் வேதனைகளை அடுக்கடுக்காகச் சொன்ன ஒரு மகளாக இளம்பிறையைப் பெண் கவிஞர்களிடையே நடப்பியலை வார்த்த பெருமிதக் கவியாகப் பாராட்ட வேண்டும்.
அன்பே வடிவமாக இருந்த ‘ஆட்டுக் குட்டியைச் சுமந்தவர், கைம்பெண்ணை மணந்தவர், அணிலொன்றைப் பாசமுடன் வருடியவர்’ என ஆன்மிக அவதாரப் பெரியவர்களை ஒரு கவிதையில் பேசும் இளம்பிறை, எளிய மனிதர்களிடையேயும் ஈரமாய்க் கசிந்து அன்பைக் கவிதைப் படுத்துகிறார் -- வாழ்க்கையை வகிர்ந்து கவிதைப் படுத்துகிறார்.
“ஆட்டுக் குட்டியை
மடியில் போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்
பசுவிற்கு
உண்ணி பிடுங்கி நிற்கும்
அப்பாவும்
படித்ததில்லை
உயிர்களிடத்தில்
அன்பு வேணும்”
எழுத எழுத விரிந்துகொண்டே போகிறது, இளம்பிறையின் வருத்தங்களும், ஆதங்கங்களும் சூழ்ந்த எதார்த்த உலகம். ஒரு தரம் அந்த வயற்காட்டு மனிதர்களை, வயிற்றுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடும் ஜனத்திரளை நீங்கள் சந்தித்து விட்டு வந்தால்தான் இளம்பிறையின் பார்வைகளில் கரைந்து உங்களால் லயிக்க முடியும்.
மாநகரத்து வாழ்க்கைக்கு மடை மாற்றம் செய்துவிட்டது காலம். ஆயினும் பரிவின் கலசம் நகரத்துச் சாமானியர்களுக்காகவும் கசிந்து உருகுவதைக் காணமுடிகிறது.
தார்ச் சாலையில் மீன் விற்கும் பெண்ணை ‘எகத்தாளப் புன்னகை’ கவிதையில் அறிமுகம் செய்கிறார்.
“வலுவிழந்து உதிரும்
உச்சி மயிர்கள்
சும்மாடு மீறி அழுத்தும்
மீன் கூடைப் பாரத்தால்

‘சரட் சரட்டென’
தார்ச்சாலை தேய்க்கும்
காற்றைக் கிழித்துக்
கைகளை வீசும்
பாய்ச்சலான நடையில்
அறுந்தறுந்து தைத்த செருப்புகள்”
விற்காத மீனைச் சாலையோரம் அவள் கடைபரப்பும் போது மூக்கைச் சுளித்து நடப்போரைப் பார்த்து அவள் புரியும் எகத்தாளப் புன்னகை வைர மின்னல்களாய் ஜொலிக்கின்றன என்கிறார். அழுக்கு, வறுமை, சிக்குப் பிடித்த கூந்தல், இகழ்ச்சிப் பார்வை இத்தனைக்கும் அப்பால் மின்னுகிறது ஏழையின் துணிந்த புன்னகை.
ஓங்கித் தாக்கும் வறுமையின் சம்மட்டி அடியில், புறக்கணிப்பின் இழிவில், சாதியத்தின் மௌன விலக்கலில் வதைபடும் மக்களைப் பற்றிப் பேசுகிற இளம்பிறையின் எழுத்துக்களில் புரட்சி என்ற மாய்மாலங்கள் இல்லை. வசைச் சொற்களின் தாண்டவம் இல்லை. சுரீலென்று தாக்கும் சொல்லம்புகளின் கூர்மையை விடவும் அடிமனதில் நுண்ணியதாய்ச் செருகும் ஆதங்கங்கள் வலிமையாக வெளிப்படுகின்றன.
“சோறு பொங்கி, குலவை போட்டு
கும்மியடித்து ஒன்றுகூடி
உண்டு மகிழந்தனர்
காணும் பொங்கலில்
குடியானப் பெண்களும்
சேரிப் பெண்களும்
அவரவர் தெருக்களில்”
கடைசி வரியின் முத்தாய்ப்புக்குள் குடியிருக்கின்றன அவலமும் அடங்கிய ஆத்திரமும், யோசித்துப் பார் என்று பாடம் சொல்லும் ஆதங்கமும்.
இளவேனில் பாடல்கள், மௌனக் கூடு, நிசப்தம், முதல் மனுசி, பிறகொரு நாள், நீ எழுத மறுக்கும் எனதழகு, இறகுகள் உதிர்ந்து கிடக்கும் ஏரி முதலிய பல கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கும் இளம்பிறையின் கவிதைகளில் அடிநாதம் மனிதம் மட்டுமே.
பரபரப்புக்காகவும், அவசரப் புகழுக்காகவும், அதிர்ச்சிப்படுத்தலுக்காகவும் ஒருபோதும் தன் எழுத்தைக் கொச்சைப் படுத்திக்கொள்ளாத இளம்பிறை தன்னம்பிக்கையோடு வாழ்வையும் எழுத்தையும் அணுகுகின்றார். இயல்பான எழுத்து, அரிதாரங்களில் புகையாத எழுத்து, முன்னீடாகத் தான் அறிந்த வாழ்வையே படைக்கின்ற எழுத்து இளம்பிறையின் எழுத்து.
அவர் தன்னைப் பற்றிச் சரியான மதிப்பீடுகள் கொண்டவர். ‘பறத்தல்’ என்ற கவிதை நம்மிடம் சொல்கிறது.
“நான் உழைத்த காசுகள் தான்
என் தட்டிலுள்ள பருக்கைகள்
எழுதுகோலை வீசிவிட்டு
எவர் முன்பும் மண்டியிடாத்
துணிவு எனது தோழமை
நானே என் அடையாளம்
கவிதை விளைகின்ற
காற்று வெளியெல்லாம்
என் சொத்தும் சுகமும்
பொந்தொன்றில் போட்டடைத்துப்
பாதுகாத்து நின்றாலும்
என் பறத்தலை யாராலும்
நிறுத்தி விட முடியாது”
இக்பால் சொன்னது போல, ‘இளம்பிறைக்குள் ஒரு பூரணச் சந்திரன்’ பொலிவுடன் இருக்கவே செய்கிறான்.

-அடுத்த இதழில் நிறையும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions