c சிறுகதை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறுகதை

மதிய இடைவேளையும் மூன்று பெண்களும் தமயந்தி

சரியா ஒரு மணி ஆனோன்ன வயிற்றுக்குள் ஒரு அலாரம் அடித்து விடுது. சவிதா டிபன் பாக்சைத் திறந்தப்ப உள்ளே இருந்த இட்லியும் சட்னியும் புராதன வாசனையைப் பறை சாற்றினபடி இருந்துச்சு. எதிரே உட்கார்ந்த வாணி ‘இட்லியாக்கா?’னு கேட்டது கூட கிண்டலாகக் கேட்ட மாதிரி இருந்துச்சு.
“க்கும்... இதுவாச்சும் கொண்டு வர முடியுதேனு நானே திருப்திப் பட்டுக்கிறேன், நீ வேற’’
“நான் சங்கர, பிரியாணி வாங்கிட்டு வரச் சொன்னேன்’‘
“ஏன், சமைக்கல?’’
“இல்லக்கா. இன்னிக்கு முடில. மூணாவது நாளா ப்ளீடிங் நிக்கல. அதான், அவரு ஒண்ணும் பண்ணவேணாம்னு சொல்லிட்டாரு’’
சவிதா எதுவுமே சொல்லாம விழுந்து விழுந்து சிரிக்க ‘என்ன நடக்குது இங்க?’ன்னு கேட்டபடி லஞ்ச் பாக்சை மேஜை மேல வைத்தாள் மேபல். “கர்த்தாவே, என்னா சிரிப்பு இது?’’
“எங்கஷ்டத்த சொன்னா சவிதாக்காவுக்கு சிரிப்பு தான் வருது. என்னத்த சொல்ல போ’’என்றபடி பிரியாணி பொட்டலத்தைப் பிரித்தாள். சவிதாவுக்கு புரையேறிற்று. ‘ஏங்கா, ஏங்கா’ என்றபடி அவள் தலையில் தட்டினாள் மேபல்.
“தலையுமில்லாம வாலுமில்லாம பேசுறா. என்னத்த சொல்ல. ’’
“சும்மாருங்கக்கா, நானே டென்ஷன்ல இருக்கேன். ஒங்களுக்கு கிண்டல் வேற’’
“அதான். இட்லியோ சட்னியோ கல்யாணம் பண்ணிக்காம என்ன மாரி இருக்கணும், வாணி’’
சொன்னாளே தவிர மனசுக்குள்ள தனியா ஈ.பி பில் கட்டுற கொடுமைலருந்து தனியா மூணு இட்லி ஊத்துற வெறுமை வரைக்கும் மனசுல வந்துதான் போச்சுது. ஆனா எல்லோர் முன்னாலயும் அத சத்தமா ஒத்துக்க முடில. சவிதா தலையை பட்டுனு குனிஞ்சிக்கிட்டா.
மேபல் ஒண்ணுஞ் சொல்லாது அமைதியா சாப்பிட ஆரம்பிச்சா. பின் மெல்ல, “என்னத்த கல்யாணம் செஞ்சிக்கிட்டு. வெளிய சொல்ல முடிதா? என் வாழ்க்கைய எடுத்துக்க. விவாகரத்து வாங்கி அடுத்த கல்யாணம்னு தான் பேரு. அதுல எத்தினி பிரச்னை பாரு. மோர் குழம்பு வச்சி ஒரு நாள்ல தான் சாப்பிடணும். கல்யாணம்னா அது ஒரு தடவதான் செய்யணும்.’’
“ஏன் மேபல்?’’ பரிவா கேட்டா வாணி.
“அவருக்குப் பிஸ்னஸ் டல்லுக்கா. ஆனா அவர் குடும்பம் அவரப் பிடுங்கித் தின்னுது. அத சொன்னா பிரச்ன, சண்ட தான். பாருக்கா, மூணு நாளா வீட்ல சாப்பிடல. கோவமாம். வைராக்கியமாம். பாத்தேன். பார்றா மவனேனு அந்தாளுக்குப் பிடிச்ச வஞ்சிரத்த இஞ்சிப்பூண்டு அரைச்சு எலுமிச்சை பிழிஞ்சு வறுத்து எடுத்தாந்துட்டேன். என்னவிட வஞ்சிரம்னா உசிரு மனுஷனுக்கு. ஆனா முகத்துல காட்டணுமே. ம்ம்ம்’’ மேபல் வஞ்சிரம் மீனை வன்மத்தோட கடித்தாள்.
“என்ன மேபல். இப்படி சொல்ற. அப்படின்னா ஆபிஸ்ல ஸ்டெனோவ வச்சிருக்கிற என் புருஷனுக்கு என்ன செய்யச் சொல்ற?’’ வாணி கண் கலங்குவதை மறைக்கப் பிரியாணிக்குள்ள லெக் பீசைத் தேடினா.
“எல்லாரும் காலம் பூரா லவ் பண்ணிட்டே அலைய முடியுமா என்ன? நீ வேற. எல்லாம் இருக்கும் வாணி, ஒரு உறவுன்னா. நம்ம மனச யாரும் எட்டிப் பாக்கலையா என்ன? சொல்லுங்க சவிதாக்கா. ஒங்களுக்கு கல்யாணம் ஆகல. ஆனா நீங்க யாரையாச்சும் பாத்து அச்சோன்னு நின்னதில்ல?’’
சவிதா இட்லியைச் சாப்பிட்டு முடித்து டிபன் பாக்சை மூடி வைத்தாள். “அட இது என்ன பேச்சு? அரவிந்தசாமியக் கூட எனக்குப் பிடிக்கும். ஒனக்கு ரஜினி பிடிக்கும்’’.
“போக்கா. எல்லாம் பழைய ஆளா சொல்லு”
ப்யூன் சங்கர் எட்டிப் பாத்து “மேடம், பிரியாணி நூத்தி இருவது ரூவா ஆயிடுச்சு’’என்றான்.
“அப்புறமா வாப்பா. கோழி தொண்டைக்குள்ள இறங்கட்டும். இன்னும் இருபதுதான தரணும்.’’
அவன் லேசான அதிருப்தியோடு அங்கிருந்து கிளம்ப, மேபல் ‘அத உடன கொடுத்துத் தொலைச்சாதான் என்ன?’ன்னு கேட்டா.
“ஆமா. இன்னும் பத்து நிமிஷத்துல கொடுத்தா வாங்க மாட்டானா என்ன? இதக் கேளுக்கா. நேத்து கவுன்சலர்கிட்ட போனோம். அவரு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாரு. அவ கூட ஆந்திரா வரைக்கும் போனாராம். எப்படிக்கா இதெல்லாம் ஜீரணிக்க முடியும்?’’
“அதெல்லாம் சகஜம்டி வாணி. வருத்தப்படுறார் இல்லே?’’
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. தெம்பா சொல்றார்’’
“சொல்லாம கூட இருக்கலாம் இல்லே?’’
“அவ கூட போகாம இருந்திருக்கலாம் இல்லே’’
“கல்யாணம்ங்கிறதே உண்மைல கிழிஞ்ச துணிய தைக்கிற மாதிரிதான். அத முதல்ல ஒத்துக்க. இல்லன்னா சவத்த வேணாம்னு வெட்டித் தள்ளிட்டு தனியா வாழு’’.
“அதெப்படிக்கா முடியும்?’’
“ஏன் அக்கா இல்லை?’’
சவிதா வேறெங்கோ பார்க்கிற மாதிரி முகத்தத் திருப்பிக் கொண்டாள். உள்ளுக்குள் அம்மா போன வாரம் அனுப்பிய வரன் முகம் ஞாபகம் வந்தது.
“ரெண்டாம் தாரம்தான். மூத்த தாரம் கேன்சர்ல போயிட்டாளாம். அவள நல்லா பாத்திருக்கார். இப்ப கூட அவ போட்டோவ ஹால்ல மாட்டி வச்சிருக்கார். பாத்தியா. இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டா கூட அவ ஃபோட்டோ இங்க தான் இருக்கும்னு அப்பாட்ட சொல்லிருக்கார். அப்பாக்கு ரொம்ப திருப்திடி. ஒன்னயும் அவள மாரியே நல்லா பாத்துப்பார்டி’’
“என் ஃபோட்டோவ எங்க மாட்டுவாராம்?”
“துக்கிரி துக்கிரி. நீ ஏண்டி சாகணும்”.
“எனக்கு அரவிந்தசாமி புடிக்கும்மா. அவர் படத்த நானும் மாட்டிக்கிறேன்”.
“நீ என்ன அரவிந்தசாமிய கட்டிக்கிட்டியா? அவன் ஒன்ன வுட்டுட்டுப் போயிட்டானா? பேத்தாத. நீ கல்யாணமே கட்டிக்க வேணாம் போ. ஒன்ன நெனச்சே அப்பாவும் நானும் செத்துப் போறோம். எங்க ஃபோட்டோவ மாட்டிக்கிட்டு நீ இரு’’.
அம்மா அதுக்கப்புறம் ஒரு வாரம் ஆகியும் ஒரு வார்த்தை கூட பேசல. காலைல எழுந்து ஒரு கப் பால் காய்ச்சி காப்பி போட்டு மீதிப் பாலை உறை ஊத்தி, மூணு இட்லி ஊத்தித் தனியா டிவி பாத்து... இந்த வாழ்க்கைக்குப் பயந்து வாழ்க்கைல கல்யாணம் பண்ணிக்க முடியுமா? பண்ணிக்கிட்டு மேபல் மாதிரியும் வாணி மாதிரியும் புலம்பத்தான் முடியுமா?
வாணி பாதி பிரியாணிய மூடி வச்சா. ‘சாப்பிடு’ன்னு அதட்டினா மேபல். அவள் அப்படியே மேஜை மேல சரிஞ்சு அழுதா.
“எல்லாம் போச்சுக்கா. நம்பிக்கை இல்லாம எந்த புருஷனோட வாழ முடியும்? பொம்பளப் புள்ளய பெத்து வச்சிருக்கேன். வேறென்ன செய்ய? இல்லன்னா நீ ஸ்டெனோவோட போறியா? நான் மேனேஜரோட போறேன்னு போலாம். த்தூ, இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?’’
வஞ்சிரம் நடு எலும்பை கடிச்சி டிபன் பாக்சின் ஒரு ஓரம் கடித்துத் துப்பிய மேபல்,“அழுது என்ன ஆகப் போகுது? இல்ல, நம்ம மேனேஜர் தான் அவ்ளோ அழகா இருக்காரா?’’
“என்ன பேசுற? நானே மனசு தாங்காம சொல்றேன்? நீ மட்டும் மீன் தின்னு. வயிறு வலிதான் வரணும் ஒனக்கு?’’
“அதானே. சொல்லு சொல்லு. அப்புறமா அக்கவுண்ட்ஸ் செக்ஷன் பூரா புருஷனுக்கு மேபல் சோறு போட மாட்டாள்னு பேசு’’.
விஷயம் வேற திசை மாறுதுன்னு சவிதா உணர்ந்து எழும்ப, மேபல், “என்ன, பிரச்னை ஆகுதுன்னு எந்திருக்கீங்களா? இதுக்கு நீங்க கல்யாணமே கட்டியிருக்கலாம் போங்க’’ என்று எரிச்சலுடன் டிபன் பாக்சை மூடினாள். வஞ்சிரம் சாப்பிடாத கணவனை டப்பாவினுள் அடைத்துவிட்ட பெருநிம்மதி தெரிந்தது அவளுக்கு.
“எப்ப சொன்னேன் மேபல் ஒன்ன பத்தி’’ என்று தேம்பி அழலானாள் வாணி.
“அட வுடு. ஏதோ கோவத்துல சொல்லிட்டேன். ஒன்ன விட்டா எனக்காரு சொல்லு. இல்லே சவிதாக்கா’’.
சவிதா ஆமா என்பது போல் தலையசைக்க வாணி, “எனக்கு குத்த உணர்வா இருக்குக்கா. நேத்து கவுன்சலிங் போயிட்டு வந்ததுலருந்து மனசுல இந்த ஆள பழி வாங்க நானும் எவங்கூடயாச்சும் போகணும்னு தோணுது. அதுவே என்ன கொல்லுது. ஆனா கூச்சமில்லாம என்ன தொட வர்றான். பீரியட்ஸ்னு பொய் சொல்லிட்டுப் படுத்துக்கிட்டேன்’’.
கட்டற்ற அருவில மலைப்பாம்பு மடிஞ்சி அடிச்சிட்டுப் போற மாதிரி வாணி அழுதா.
‘இந்த உறவெல்லாம் வெறும் ஐடியலிசம் தான் வாணி. புனிதம் அது இதுனு நாமளா அதப் பேசிக்கிறோம். ஆனா எல்லாமே பலூன்தான். சின்ன குண்டூசி டப்புனு வெடிக்க வச்சிடும். அப்படியே எதிர்கொள்’னு சவிதா சொன்னதும் அவ தோள்ல சாஞ்சி அழுதா.
சவிதா எந்திரிக்க “ரொமான்ஸ் கூட ஐடியல்தான். இளையராஜான்னா எனக்கு உசிரு. ஆனா அவர் பாட்டுல வர்ற ரொமான்ஸ் வாழ்க்கைல இருக்கா என்ன?’’ன்னு சொல்லிட்டு கடந்து போனா.
அவ வாணியைத் தட்டிக் கொடுத்துட்டாவது போயிருக்கலாம்னு மேபலுக்கு தோணிருக்கணும். ‘‘இவல்லாம்...’’னு பல்ல கடிச்சிட்டே சொன்னா.
அடுத்த நாள் சவிதா பிரியாணி வாங்கி வரச் சொல்ல, மேபல் இட்லி சட்னி சாப்பிட, வாணி வஞ்சிரம் மீன் எடுத்து வந்திருந்தா.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions