c மக்கள் கதைஞர்கள் - செங்கான் கார்முகில்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மக்கள் கதைஞர்கள் - செங்கான் கார்முகில்

குட்டையர்
ஊரில் ஒரு ஒவசாரம். ஒவசாரம் என்றால் தெரியுமா, இழவு.
இழவு விழுந்துவிட்டால் சொந்த பந்தங்களுக்கு ஆள் அனுப்புவது, தகவல் சொல்வது, மேளக்காரர்கள், வண்ணார், பரியாறியார் ஆகியோருக்குச் சொல்வது என வழக்கமாக நடப்பதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்.
போய்ச் சேர்ந்தவன் காலையில் போயிருந்தால் ஒரு பகலில் எல்லாம் முடிந்துவிடும். சாயங்காலத்திலோ, இரவிலோ போயிருந்தால், உறவுமுறைகள் எல்லாம் வந்து, செய்யவேண்டியதை எல்லாம் செய்யமுடியாது இல்லையா. ஆகவே ஒரு ராத்திரி போட்டிருந்துதான் எடுக்கவேண்டும். ஆகவே ராத்திரிக்கான ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்.
ராத்திரி பூராவும் மூத்த கட்டைகள் பிணத்துக்குக் காவல் இருப்பார்கள். சில வாலிபங்களும் இருக்கும்தான். இழவு வீட்டிலும் காதல் பார்வைகள் இருக்கத்தானே செய்கிறது.
சரி, எவ்வளவு நேரம்தான் பிணத்தையே பார்த்துக் கொண்டிருப்பது. ஒரு கதையையோ, ஒரு சலிப்பையோ பேசிக் கொண்டிருக்கலாம். அதையும் எவ்வளவு நேரம்தான் கேட்டுக் கொண்டிருப்பது. ஒருமணி நேரத்திற்கு ஒருவாட்டியோ அல்லது ரெண்டு வாட்டியோ கொடுக்கப்படுகிற சுக்குமல்லிக் கசாயம் எவ்வளவு நேரம்தான் தன்னக்கட்டும். சோர்வாகிவிடும் இல்லையா. தூக்கம் சொக்குமில்லையா.
இதைச் சமாளிக்க கிராமப்புறங்களில் ஒரு உபாயம் கண்டுபிடித்தார்கள். சாவுக்கு ஆடுவதற்கென்றே உள்ள கூத்துக்காரர்களை அழைத்து வருவார்கள். விடியவிடிய கூத்து நடக்கும். அதற்கு வாய்ப்பில்லாதபோது உள்ளுரில் கூத்துப் படித்த சிலர் இருப்பார்கள். முன்பெல்லாம் எல்லா ஊர்களிலுமே கூத்துப் படித்தவர்கள் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு ஏதேனுமொரு கூத்தைக் கட்டுவார்கள். எவ்வித அரிதாரமும், கூத்து உடுப்புகளும் இல்லாமல் அவர்கள் கூத்து நாடகம் போடுவார்கள். அதில் பெண் கதாபாத்திரமாக வருகிறவர் துண்டை மாராப்பாகப் போட்டுக் கொள்வார். இதில் அவ்வப்போது வெளிப்படும் வேட்டி நழுவிவிடுவது, அல்லது யாரேனும் இழுத்துவிடுவது, படார் படார் என்று குசு விடுவது போன்ற சுவாரஸ்யங்கள் ஜனங்களை கலகலப்பூட்டி விழித்திருக்கச் செய்யும்.
சிலர் வெகு தொலைவிலிருந்து நல்ல செட்டான கூத்துக்காரர்களை அழைத்து வந்து விமரிசையாகவே கூத்து வைப்பார்கள். அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்தது அது.
சமீப காலங்களில் ரேடியோசெட் கட்டி மைக்கில் ஒப்பாரி வைப்பார்கள். அப்படி ஒரு பழக்கம் கொஞ்ச நாள் இருந்தது. பிறகு டி.வி, டெக்கு வாடகைக்கு எடுத்து வந்து மூன்று அல்லது நான்கு படங்களைப் போடுவார்கள்.
இதற்கெல்லாம் வசதி வாய்ப்பில்லாதவர்கள் என்ன செய்வார்கள். அப்படிப் பட்டவர்களுக்காக இருப்பவர்தான் குட்டையர்.
குட்டையர் ஒற்றை ஆள்தான். நாலு வாய் வெற்றிலை மென்று, முழு சொம்புத் தண்ணீரையும் கொப்பளித்துத் துப்பி, கடைவாயில் புகையிலை அடக்கியபடி, காதோரம் குஞ்சம் வைத்துத் தலைப்பாய் கட்டிக்கொண்டு, மூன்றடி உயரத்தில் முன்புறம் சற்று கூனிய தன் உடம்பை, சம்பலங்கால் போட்டு சணல் சாக்குமேல் குந்தவைத்து, சட்டையைக் கழட்டிச் சுருட்டி வைத்துவிட்டு உடுக்கையைக் கையில் எடுத்துத் தட்டத் தொடங்கினார் என்றால் எட்டூரு கூட்டம் நின்றாலும் சிமிட்டாமல் கேட்கும். வெங்கலத்தொண்டை மனுசனுக்கு. சரீரமே பேசும்.
‘குட்டையன் உடுக்கு’ என்றே சொல்வார்கள் இதை. ‘நூறூ, ஏரநூறு ஆனாலும் பரவால்ல, குட்டையன் உடுக்கு வச்சிருவமா’ என்பார்கள். பத்து அல்லது பதினோரு மணிவாக்கில் தொடங்கும் ‘உடுக்கு கதை’ விடியற்காலை ஐந்து வரைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சாக்கை விரித்துப் போட்டு, உடுக்கையை அதன்மேல் வைத்துவிட்டு இறந்தவர் முன் நின்று வணங்கிவிட்டு வந்துதான் கதையைத் தொடங்குவார். தன் குலதெய்வம் தொடங்கி காவல்தெய்வம், சிவபெருமான், நாராயணன் வரை தனக்குத் தெரிந்த, அந்த நேரம் நாக்கில் உதயமாகிய தேவாதிகளிடமெல்லாம் இறந்தவரின் ஆத்மா சாந்தமும், நிம்மதியும் பெறவேண்டுமென மனமாற உருகி வேண்டுவார். சாமி கும்பிடுவதுபோல மவுனித்து இருக்கும் கூட்டம். முதல் வேலை இதுதான். பிறகு கதையைத் தொடங்குவார்.
அவர் கதை சொல்லும்முறை அபாரமானது.
‘சலங்கை ராஜன்’ கதையைச் சொல்லத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
‘அந்த சலங்க ராஜன் கதைய நல்லோ’ என்பார். டும்டும்டும்டும்...டும் என்று உடுக்கு ஒலிக்கும். ‘நா சொல்லி வாரன் சாமி மாரே’ என்பார் இரண்டாவது வரியை. டும்டும்டும்டும்...டும் என்கும் உடுக்கு ஒலி. ஒரு வரி ராகம். அடுத்து உடுக்கு ஓசை. பிறகு அடுத்த வரி. பிறகு உடுக்கு ஓசை. இப்படியே கதை மொத்தமும் போகும். கதை உச்சம் பெறும் இடம் கோபம் எனில் உடுக்கை சில நிமிடங்கள் தொடர்ந்து அதிரும். கொண்டாட்டமெனில் உடுக்கை சில நிமிடம் ஜிலுஜிலுக்கும். சோகம் எனில் உடுக்கை பத்திருபது முறை தழுதழுக்கும். சில நேரங்களில் அவரது உடுக்கை அழக்கூடச் செய்யும். சனம் முந்தானையைக் கண்களில் ஒற்றும். முன்பே சொன்னது மாதிரி இழவு வீடுகளில் காதல் பார்வைகளும், சுவாரஸ்யங்களும் இருக்கும். குட்டையர் கதையிலேயே மூழ்விட்டார் என நினைக்க முடியாது. மனுசனுக்கு மண்டையைச் சுற்றிலும் கண்கள்.
“மூணு பெத்து மூணுக்கும்
சம்பந்தம் போட்டுட்டா
கட்டியத் திண்ணி மவுளுக்கு
கள்ளப் புருஷங் கேட்குது
பாக்கறா பாரு பருந்தாட்டம்”
என்று கதை ஓட்டத்தோடு ஓட்டமாக இதையும் சொல்வார். கூட்டம் கொளேர் என்று சிரிக்கும். குற்றவாளிக்கும் சிரிப்பு வரும். சிரித்துதானே ஆகணும்.
‘சிரிச்சிக்கடி சிறுக்கி மவள’ என்று அதையும் சொல்வார். அதற்கும் உடுக்கு கலகலக்கும். இந்தச் சுத்துப்பட்டில் இந்த சமாச்சாரத்தின் வரலாறே நம்ம குட்டையருக்கு அத்துப்படி. தப்பமுடியாது ஒருபயலும்.
ஒரே மூச்சில் இரண்டு மணிநேரம், நான்கு கதை என முடித்துவிட்டு எழுந்து போய் ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போய்விட்டு வந்து தலைப்பாவைக் கழட்டி வழுக்கை மண்டையைத் தடவிவிட்டு ஆசுவாசம் கொள்வார். வெத்திலை பாக்குப் போடுவர்.  ‘ஏ மாமா அந்த தெப்பக்குளத்து ராசா கதைய சொல்லு’, ‘ஏ அப்பா அந்த நாப்பது பெத்தும் நாதியத்தவ கதைய சொல்லுப்பா’ என்பார்கள். ரசிகர்களின் விருப்பமும் நிறைவேறும்.
இரண்டாவது முறை தொடங்கும்போது, மாண்டவனின் வீடு, வாசல், குலப்பெருமை, வசதிவாய்ப்பு எல்லாத்தையும் கோர்த்துக் கதையாகப் பாடுவார். வருகிற வழியில் தகவல்களைச் சேகரித்து வந்திருப்பார். சனம் சத்தமில்லாமல் கமறும். மாண்டவர் சின்னஞ்சிறுசுகளை விட்டுவிட்டுப் போயிருந்தால், வருத்தப்பட்டு அழுவார். அவரது பிள்ளைகளுக்காகப் பிரார்த்தித்து ஒரு பாடலும்  படிப்பார். மாண்டவர் குடி, புகை, மருந்து போன்றவற்றால் போயிருந்தால், சமூக இளசுகளுக்கு நல்ல அறிவுரையும் சொல்வார்.
மீண்டும் ஒரு இடைவேளை விடுவார். இப்போது மணி இரண்டு அல்லது மூன்று கிட்ட இருக்கும். கொட்டாவியும், கண்களில் நீர்தாரையும் வருகிற நேரமென்பதால் சாகசமான, தமாசான கதைகளை எடுத்து விடுவார். கூத்துப்படித்த செட்டு ஆள்களெல்லாம் எழுந்து ஆடத் தொடங்கிவிடுவார்கள்.
குட்டையருக்கு ஒரே மகள். பொஞ்சாதி ரொம்ப காலத்துக்கு முந்தியே போய்ச் சேர்ந்துவிட்டாள். தனியாகவே குட்டையர் காலம் போனது. மருமகன் வேறொருத்தியோடு எங்கேயே போய்விட வாழாமல் வீட்டிற்கே வந்துவிட்டாள் மகள். ஒரே பேரப்பிள்ளை, அதுவும் பெண்தான். இருவரையும் கரையேற்றும் பொறுப்பு குட்டையருக்கு.
மகளோ குட்டையரை சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவள் பிரச்சனை அவளுக்கு. தன் வாழ்வு இப்படிப் போனது குட்டையரின் மாப்பிள்ளை தேர்வால்தான் என்பது அவள் எண்ணம். அந்தக் கோபத்தில் இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும். ஆகவே தனித்து விட்டுவிட்டாள் குட்டையரை. தனியே பொங்கித் திங்கிறார். ஆனாலும் மகள் மேலும் பேரப்பிள்ளை மேலும் பாசம்தான். அவள்தான் இவர்மேல் வெறுப்பாக இருந்தாள். பேத்தியைக் கூட அவரிடம் விடமாட்டாள். நிம்மதியில்லாத வாழ்வுதான்.
இந்தக் கதையையும் சொல்வார். அநேகமாக அவரே உணர்ச்சி வசப்படும் இடங்கள் கொண்ட கதைகள் இவர் வாழ்வோடு தொடர்புடையவையாக இருக்கும். போகிற வழியிலோ, பேருந்திலோ யாரேனும் தன்னிடம் பகிர்ந்து கொண்டவைகளையும் கதையாகச் சொல்வார். தன் மனதைப் பாதித்த சம்பவங்களும் கதைகளாக உடுக்கோடு அழும். சமயத்தில் எதிரே அமர்ந்திருப்பவரின் கதையையும் சொல்வார்.
ஆயிரக்கணக்கான கதைகள். ஒரு இரவு முழுக்க, ஒரு உடுக்குடன், ஒற்றை ஆளாய், சுத்துப்பட்டில் இவரது ஒற்றைக் குரல் ஒலிக்காத ஊரில்லை. எதையும் கதையாகப் பாடுவதில் வல்லவர். ஊருக்கு சேதிக்கு காட்டுப் பாதையில் நடந்து போகும்போதுகூட எதையாவது பாடிக்கொண்டே போவார்.  அப்படி ஒரு கதைக் கிறுக்கு குட்டையருக்கு.
மனிதர் இந்த ‘உடுக்கு கதைக்கு’ பேரம் பேசமாட்டார். சும்மா ஒரு வார்த்தை சொன்னால் போதும், ‘இந்தா வந்துட்டம்ப்பா. புள்ளய நல்லபடியா கொண்டு போய் சேப்போம். வா...’ என கிளம்பி வந்துவிடுவார். ஒரு வெற்றிலையில் நூறு ரூபாயை வைத்துக் கொடுத்தால் செருப்பைக் கழட்டிவிட்டு வாங்கிக்கொண்டு கையெடுப்பார். மாண்டவர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்புவார். சண்டை, சச்சரவு வந்தால் வம்பு இழுப்பவரையும், பதிலுக்கு நிற்பவரையும் பார்த்து அமைதியாகக் கும்பிடுவார். இருவரும் சாந்தமாகிவிடுவார்கள். அவ்வளவு மரியாதை குட்டையருக்கு. ஒரு வம்புதும்புக்கும் போகாத மனுசன்.
யாரும் எதிர்பாராத ஒரு நாளில், அவரது கதையும் முடிந்துதான் போனது. அவரது மகள் யாருக்கும் தகவல் சொல்லவில்லை. ஆனாலும் திரண்டதே கூட்டம். களைவெட்டிய பொம்பளைகள், உழவோட்டிய ஆம்பளைகள் என காடுகரையில் இருந்த வாக்கில் வந்தே சேர்ந்துவிட்டார்கள். சுத்துப்பட்டு ஊர் சனமே வந்து குவிந்துவிட்டது. ‘குட்டயரு போய்ட்டாராமே’, ‘குட்டயன் அப்பா செத்துடுச்சாமே’, ‘குட்டையன் அண்ணே...’ என்று ஒரு வாரம் வந்துகொண்டே இருந்தார்கள்.
அவர் இறந்த இரவு ஒரு காரியம் நடந்தது. கூத்துக்காரர்கள், நாடகம் படித்தவர்கள், வாய்ப்பாட்டுக் கதைஞர்கள், கதைசொல்லிப் பாட்டிகளெல்லாம் கூடி ஆளாளுக்கு கதைக்கட்டி ஆடினார்கள். பாடினார்கள். ‘நம்ப குட்டயருக்கு இல்லாத ஆட்டமா, பாட்டமா’ என்று வெளுத்துக் கட்டினார்கள். குட்டையர் பிணத்தின் முன் ஒரு ‘கதைச் சந்தை’ நடப்பது போலிருந்தது.

- கதைப்போம்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions