c காலத்தை வென்ற சிறைப்பறவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

காலத்தை வென்ற சிறைப்பறவை

சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் மகிழ்ச்சியடைவது, நெஞ்சு புடைத்து கன்னத்தில் சுடு நீர் உருள விம்மிப் பெருமூச்சு விடுவது  எப்போது  தெரியுமா?
அவன் படைப்பு விருது பெறும் அறிவிப்பைக் கேட்கும் போதுதான். அதுவும் உலகின் தலை சிறந்த விருதான ‘கான் விருது’ கிடைகிறதென்றால் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அந்த அறிவிப்பு ஒரு இயக்குநரின் காதுகளை அடையும்போது ஒருவேளை அப்போது அவர் தன்  குழந்தையுடன் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கலாம். அல்லது மனைவியுடன் அமர்ந்து ஒரு மொக்கையான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம். அல்லது படப்பிடிப்பில் சரியாக நடிக்கத் தெரியாத நடிகனோடு மல்லுக் கட்டலாம். அல்லது ஒரு அழகான நடிகையுடன் விடுதியில் அமர்ந்து பாலஸ்தீன- இஸ்ரேல் பிரச்சனையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்.
ஆனால் விருது அறிவிப்பு வரும்போது சிறையில் இருந்தால்?
நாமாக இருந்தால் என்ன செய்வோம். அதை அங்கிருக்கும் சிலரோடு மகிழ்ச்சியாகவோ வேதனை யாகவோ பகிர்ந்துகொண்டு, அந்தப் பரிசை வாங்க யாரை, எப்படி அனுப்பலாம் என யோசிப்போம். ஆனால் சிறைக் கதவை உடைத்துக்கொண்டு தப்பித்து வெளியேறி,  தனது நாட்டிலிருந்து தப்பித்துப் பிரான்சுக்குச் சென்று அந்த கான் விருதை ஒருவர் பெறுகிறார் என்றால் அது எப்பேர்பட்ட சாகஸம்.
அப்படி ஒரு அசாத்தியாமன காரியத்தைச் செய்தவர்தான் இல்மாஸ்  குணே (1937-1984). உலகின் தலைசிறந்த இயக்குநர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.
சிறைக்குள் இருக்கும் இளம் குற்றவாளிகளைப் பற்றிய ‘யோல்’ (yol)  திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலக சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர்.
துருக்கியின் குர்த் இனத்தைச் சார்ந்த சாதாரண பஞ்சு மில் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர் இல்மாஸ் குணே. அவரது வறுமை சூழ்ந்த வாழ்க்கை பின்னாளில் அவருக்கு உறுதியான படைப்புக் கட்டுமானத்தை உருவாக்கித் தந்து சிறந்த கலைஞனாகப் பரிணமிக்க வகை செய்தது. சட்டமும் பொருளாதாரமும் படித்துப் பட்டம் பெற்றபின் இல்மாஸை சினிமா கவர்ந்திழுத்துக் கொண்டது.
அக்காலத்தில் துருக்கி சினிமா பல இளம் துருக்கியர்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதுவரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட  நாடகீயமான குடும்பக் கதைகளை மட்டுமே பார்த்து வந்த துருக்கி சமூகம், முதல் முறையாக சினிமா எனும் கலையின் முழுமையான அனுபவத்துக்குத் தன்னை தயார் படுத்திக்கொண்டது. குறிப்பிடத்தக்க நல்ல இயக்குநர்கள் கவனம் பெறத் துவங்கிய காலம் அது. அதில் ஒருவர் ஆதிப் இல்மாஸ்.
பல துருக்கிய இளைஞர்களைப் போல அக்காலத்தில் சினிமாவால் ஈர்க்கப்பட்ட இல்மாஸ்,  இயக்குநர் ஆதிப் இல்மாஸிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துகொண்டார்.  பயிற்சிக் காலத்தில் திரைக்கதையில் அவர் காட்டிய செழுமையான பங்களிப்பு அவரை நடிகராக முன்னே கொண்டு வந்தது. ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து துருக்கியின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.
வெறுமனே நடிகராக இருப்பதை மட்டும் விரும்பாத இல்மாஸின் படைப்பு மனம் அவரை இலக்கியத்தின்பாலும்  உந்தித் தள்ளியது. மார்க்சியம் வசீகரித்தது. அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான அவரது முதல் நாவல் ‘கம்யூனிஸ்ட்’ 1961ல் வெளியானது. வெளியான அதே வேகத்தில் போலீஸ் அவரது வீட்டுக்கு வந்து கைதுசெய்து சிறையிலடைத்தது. கிட்டதட்ட 18 மாதங்கள் சிறைவாசம். ‘இனி இல்மாஸ் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காக இருப்பார். இதுவே முதலும் கடைசியுமான சிறை வாசம்‘ என அரசும் மற்றவர்களும் நினைத்தனர். ஆனால் சிறை அவருக்கு  அதிகாரத்தின் மீதான கோபத்தையும், சுதந்திரத்தின் மீதான தாகத்தையும் அதிகப் படுத்தியிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
நடிப்போடு நிற்காமல் தன் கருத்துக்களையும், கற்பனைகளையும் திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தவேண்டும் என முடிவு செய்தார். இயக்குநராக மாறினார். 1966ல் அவரது  முதல் திரைப்படம் ‘அட் அவுராட் சிலா’ (At Aurat Sila) வெளியானது.
1968ல் சொந்தமாக திரைப்படக் கம்பெனி ஒன்றையும் துவக்கிய இல்மாஸ்,  அதற்கு ‘குணே ஃபிலிம் க்ளிக்’ (Guney Filmclick)  எனப் பெயர் வைத்துக் கொண்டார். அக்கம்பெனி மூலம் அடுத்தடுத்து உமத் ஜோபீ (Umutjhope -1970), ஆகித்  எலேஜி (Agit-elegy - 1972), அசி பெயின் (Aci-Pain - 1971), தி ஹோப்லஸ் (The hopless- 1971) ஆகிய திரைப் படங்களைத் தயாரித்தார். இப்படங்கள் அனைத்தும் அதன் தலைப்புகள் நமக்கு உணர்த்துவதைப்போல துருக்கி மக்களின் உள்ளத்தைப் பிரதிபலித்தன.
இளைஞர்கள் பலர் இல்மாஸின் திரைப்படங்களுக்குத் தீவிர ரசிகர்களாகினர். அரசாங்கத்துக்கு எதிரான கொந்தளிப்புகள் அதிகமாவதைத் தொடர்ந்து இல்மாஸ்  மீண்டும் 1972ல் சிறைக்குள் தள்ளப்பட்டார். அதுவரை அடுத்தடுத்த தன் திரைப்படங்களுக்குக் கதை எழுத ஓய்வு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்த இல்மாஸ் குணேவுக்கு அந்த சிறை நாட்கள் பெரும் உதவியாக இருந்தன.  துருக்கி அரசு சிறைக்குக் கொண்டு சென்றபோது தி மிசரபில் (The Miserable)  எனும் திரைப் படத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பாதியில் நின்ற அத்திரைப்படத்தை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் என்பவர் தொடர்ந்து இயக்கிப் படத்தை முடித்து வெளியிட்டார். தொடர்ந்து செரீப், இல்மாஸ் சிறையில் எழுதிய அனைத்து திரைக்கதைகளையும் (ஏறக்குறைய 12 ஆண்டுகள்) இயக்கி வெளியிட்டு தன் ஆசானுக்குப் பெருமை சேர்த்தார்.
1974ல் மனித உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இவ்விவகாரத்தில் தலையிட்ட   காரணத்தால் இல்மாஸ் குணே விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அந்த வருடமே குணே மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒரு நீதிபதியை இரவு நேர மது விடுதியில் சுட்டுக் கொன்றதாக அவர்மேல் சுமத்தப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 19 வருட சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.
இக்காலத்தில் அவர் திட்டமிட்டிருந்த தி ஹெர்ட் (The herd - 1978), தி  எனிமி (The Enemy - 1979) ஆகிய  இரண்டு திரைக்கதைகளையும் அவரது இன்னொரு உதவியாளரான ஷேகி ஆக்டன் (Zeki Oketn)  இயக்கி வெளியிட்டார். இதில் தி எனிமி திரைப்படம் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசைப் பெற்றது.
1980ல் குணே சிறையிலிருக்கும்போது மீண்டும் அவரது திரைக்கதை ஒன்றை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் களத்தில் நின்று இயக்கியிருந்தார். யோல் தி ரோடு (yol - the road) எனும் அப் படம்தான் 1982 பிரான்சில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் பங்கேற்றது.
யோல் (Yol) படத்தின் திரைக்கதை துருக்கி சிறையிலிருந்து வெளியேறும் மூன்று குர்திஷ் இனத்தவரைப் பற்றியது. மூன்றும் வெவ்வேறு கதைகள்.
முதல் கதை,  நாயகன் செயீத் அலி ஊருக்குத் திரும்புகிறபோது அவன் மனைவி செரீப் செஷர் பாலியல் தொழில் செய்பவளாக அவனது குடும்பத்தாரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறாள்.
ஊரும் குடும்பத்தாரும் சேர்ந்து அவளுக்குத் தண்டனையாக அவள் கணவன் கையாலேயே அவளைக் கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
இருவரும் பனிப் பாலைவனத்தில் செல்கிறபோது அவன் மனைவி விபத்தில் சிக்கிக்கொள்ள அவன் அவளைக் காப்பாற்றப் போராடுகிறான். இறுதியில் மனைவி இறந்து போகிறாள். இது ஒருவகையில் குடும்பத்தாரின் நிர்பந்தத்திலிருக்கும் மனைவியை, அவன் கையால் கொன்ற பாவம் கணவனை அண்டாமல் தன் மனைவி தன்னைக் காப்பற்றி விட்டதாக அவன் மகிழ்ந்தாலும் இறுதியில் அவனது மனசாட்சி மீண்டும் அவனைச் சிறைக்குச் செல்லும்படி இம்சிப்பதுடன் கதை முடிகிறது.
இரண்டாவது கதையின் நாயகன் மெஹ்மத் சாலிஹ், மைத்துனரோடு சேர்ந்து  போலீசை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாகிறான்.
அவனது குடும்பத்தார் இச்செயலால் அவனை வெறுக்கின்றனர். ஒருபக்கம் போலீஸ். இன்னொரு பக்கம்  மனைவியின் குடும்பத்தார். இவர்களுக்கிடையில் தடுமாறும் நாயகன் மெஹ்மத் தன் மனைவியிடம் உண்மைகளைச் சொல்லி இருவரும் இந்த ஊரைவிட்டு ஓடிப்போய் வெளியூரில் பிழைக்கத் திட்டமிடுகின்றனர். ரயிலில் தப்பிக்கும் இருவரும் நீண்ட நாட்களாக அழுத்தி வைத்திருந்த காமத்தைத் தீர்த்துக்கொள்ள கழிவறையில் ஒன்றிணைகின்றனர். நீண்ட நேரமாகியும் வெளிவராத காரணத்தால் சக பயணிகள் கோபத்தில் கொந்தளிக்க, சில ரயில் அதிகாரிகள் வந்து அவர்களைக் காப்பாற்றி அடுத்து வரும் ஸ்டேஷனில் இருவரையும் ஒப்படைக்கும் பொருட்டுத் தனியாக அமர வைக்கப் படுகின்றனர். ஆனால் அவனது மனைவியின் குடும்பத்திலிருந்து அவர்களை விரட்டி வரும் இளைஞன் ஒருவன் தன் கையில் மறைத்து வைத்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக் கொலை செய்வதுடன் மெஹ்மத்தின் கதை முடிகிறது.
மூன்றாவது, தன் கிராமத்துக்குத் திரும்பும் ஓமரின் கதை. ஓமரின் கிராமம் எல்லைப் பகுதியில் இருப்பதால் ராணுவத்துக்குத் தெரியாமல் சில கைதிகள் தப்பிச்செல்ல உதவுகிறான். ஓமரின் அண்ணன் கடத்தல் தொழில் செய்து வந்தவன். வேறு வழியில்லாமல் அதே தொழிலையே செய்ய நேரும் ஓமர், தனது அண்ணனின் மறைவிற்குப் பிறகு அவரது மனைவி மற்றும் குடும்பத்தை பரம்பரை வழக்கப்படி தனதாக்கிக் கொள்கிறான்.
கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்துக்கான விருது  முன்கூட்டியே அறிவிக்கப்பட, விழாவில் விருதைப் பெற வேண்டி சிறையிலிருந்த சில அதிகாரிகளின் துணையோடு தப்பித்துப் பிரான்சுக்கு வந்து விழாவில் பங்கேற்று விருதைப் பெற்றுக்கொண்டார் இல்மாஸ் .
அழுக்கு அரசன் என விமர்சகர்களால் செல்லமாகக் கருதப்பட்ட இல்மாஸின் வாழ்க்கை, ஆச்சரியப்படும் வகையில் உலக சினிமாவின் இன்னொரு ஆளுமையான இத்தாலியின் பியரோ பசோலினியோடு பல வகைகளில் ஒத்திருப்பது ஒரு ஆச்சர்யமான பொருத்தப்பாடு.
இருவருமே அதிகாரத்தைப் படைப்புகளின் மூலம் கடுமையாக எதிர்த்தவர்கள். சிறைத் தண்டனைகளுக்கு அஞ்சாதவர்கள். பலமுறை ஆட்சியாளர்களின் கைதுக்கு ஆளாக்கப்பட்டவர்கள். கம்யூனிஸ்டுகள். இருவருமே படைப்பாளர்கள். இலக்கியவாதிகள். திரைப்படங்களுக்கு முன்பாகவே நாவல்கள் எழுதியவர்கள். கவிஞர்கள். கலகக்காரர்கள்.
சிறையிலிருந்து தப்பித்த காரணத்தால் துருக்கி அரசாங்கம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்தது. அதனால் அதன் பிறகு  பிரான்சில் தஞ்சமடைந்த இல்மாஸ் குணே  அடுத்த ஆண்டே பிரெஞ்சு அரசாங்கத்துக்காக தி வால் (The wall -1983) எனும் படத்தை இயக்கியிருந்தார். சிறையிலிருந்து தப்பிக்கும் பிஞ்சுக் குற்றவாளிகளைப் பற்றிய திரைக்கதை இது.
இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த வருடமே புற்றுநோய் காரணமாக பாரீசில் 1984ஆம் ஆண்டு தன் வாழ்க்கை திரைக்கதைக்கு இறுதிக் காட்சியை அவராக எழுதிக்கொண்டார்.

- இல்மாஸ் குணே

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions