c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

தனிமனித வன்முறையும் சமூக வன்முறையும்

காலையிலும் மாலையிலும் அச்சடிக்கப்பட்டு நமக்கு வரும் செய்திகள், காட்சி ஊடகங்களில் காண்பிக்கப்படும் செய்திகள், சமூகம் குறித்த அக்கறை கொண்டவர்களின் அமைதியைக் குலைப்பவையாக இருக்கின்றன என்பதை எவர் மறுக்க முடியும்?
பத்தும் பனிரெண்டுமான வகுப்பு மாணவர்களின் மது விருந்துக் கொண்டாட்டங்கள் மற்றும் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வரும் மாணவர்களைப் பள்ளிகள் அதிர்ச்சியோடுதான் பார்த்திருக்கும். ‘உன்னைப் பிடிக்கவில்லை’ என்ற பெண்ணின் முகத்தில் திராவகம் வீசுகிறது ஒரு வெறி உள்ளம். பெட்ரோல் ஊற்றி பெண்ணையும் தன்னையும் எரித்துக்கொள்கிறது இன்னும் ஒரு திரிந்த மனம். சில ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்பறைக்குள் ஒரு ஆசிரியையைக் கத்தியைக் கொண்டு தாக்கி இருக்கிறான், பத்தாவதைத் தாண்டாத ஒரு மாணவன். படிக்கும் பல்கலைக்குள், கல்லூரிக்குள் சாதியின் பெயரால் வெறியாட்டங்கள் நடக்கின்றன.
இது ஒரு பக்கம். மறுபக்கமும் உண்டு.
சகல மதிப்பீடுகளும், விழுமியங்களும் காலாவதி யாகிக்   கொண்டிருக்கின்றனவோ என்று எண்ணத்தக்க விதமாக, வளர்ந்தவர்கள் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் செய்யும் பாதகங்கள் பெரும் மனக் கவலைகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் வந்த ஒரு பத்திரிகைச் செய்தி, வீட்டில் தவழும் ஒரு குழந்தையின் வாயில் ‘பீரை’ ஊற்றுகிறார் ஒரு தந்தை. இதைக் கண்டு வீட்டுப் பெண்கள் சிரித்து மகிழ்கிறார்கள். இதேபோன்ற ஒரு வன்கொடுமையைச் சென்ற ஆண்டும் கண்டோம். நான்கு வயது சிறுவனுக்கு மது கொடுத்துக் குடிக்க வைத்த நான்கு இளைஞர்களைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
சிறுவர்கள், சீர்திருத்துகிற பள்ளியிலிருந்து கொத்தாக ஓடிப் போகிறார்கள், ‘நல்வழிப்படுத்த என்று வைக்கப்பட்ட சிறுவர்கள்’ எனப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், மக்கள் பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் பதினைந்து கேள்விகளை எழுப்பித் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார். தலைமை நீதிபதி இதைப் பொதுநல வழக்காக ஏற்று, ‘ஆந்திராவில் பொதுமக்களுக்கான பாதுகாப்புச் சட்டம் 2013’ என்று ஒரு சட்டம் இயற்றிச் சிறப்பாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அதுபோல அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த மத்திய அரசே ஏன் முனைப்புக் காட்டக்கூடாது என்று கேட்டிருக்கிறார்.
மக்கள் மனதில் உள்ள கேள்விகளைத் தம் கேள்விகளாகவும், கவலைகளைத் தம் கவலைகளாகவும் நீதிமன்றம் எடுத்துக்கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது.
இளைய தலைமுறையினர், இளம் சிறார்கள், தாக்குதலில் ஈடுபடவும், தண்டனை அளிப்பதற்கும் தாங்கள் தகுதியானவர்கள் என்று நினைத்துச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். வாழும் மனிதர்கள் எல்லோருமே, அல்லது பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு வகையில், பிறரால் பாதிக்கப்பட்டுக்கொண்டு, சிராய்ப்போடு வாழ்கிறவர்கள்தான் என்பதை சிறார்கள் புரிந்துகொள்வதில்லை. அதற்கான பக்குவம் அவர்களுக்கு இல்லை என்பதே காரணம். பாதிக்கப்படுபவர் அனைவரும் சட்டத்தைக் கையில் ஏந்தி தண்டனை கொடுப்பவர்களாக மாறிவிட்டால், சமூகக் கட்டமைப்பும், சமூகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமும் அர்த்தமற்றதாகிவிடும். வெறும் கலவரம் மட்டுமே மிஞ்சும்.
பாதிக்கப்படும் இளைய சமூகத்தவர், பாதிக்கப்பட்டதற்கான காரணிகளை ஆராய்வதில்லை. அதற்கான வயதும் பக்குவமும் அவர்களிடம் இல்லை. தாங்கள் ஒரு சமூகத்திற்குள் வாழ்கிறோம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அவர்கள், தாம் ஒரு குடும்ப அங்கத்தினர் என்பதையும், குடும்பம் என்கிற அமைப்பு பலப்பல சட்ட, ஒழுக்க, தர்ம நியாயங்கள் அடிப்படையில் கட்டப்பட்டது என்பதையும் மறந்துவிடுகிறார்கள். குடும்பமும், சமூகமும், சட்டங்களுக்கும், நீதிக்கும், நியமங்களுக்கும் கட்டுப்பட்டே இயங்கவேண்டும் என்பதையும் மறந்துவிடுகிறார்கள். எந்தத் தனிமனிதருக்கும் நீதி வழங்கும், தண்டனை வழங்கும் உரிமை தரப்படவில்லை. பாதிப்புக்கு உள்ளானவர்கள், காவல்துறையையும், நீதிமன்றத்தையுமே நாடவேண்டும் என்பதை மறந்தவர்களே, நேராக வன்முறையில் இறங்குகிறார்கள்.
வளர்ந்த தலைமுறை, வளரும் தலைமுறைக்கு முதலில் சொல்லித் தரவேண்டியதே, தனிமனிதர் செய்யத்தக்கது இது, செய்யத் தகாதது இது என்பதே ஆகும். ஒரு தனிமனிதனின் சுதந்திரம் முடிகிற இடம் எது, என்பதை அம்மனிதன் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். சமூகம் என்கிற சமுத்திரத்தில் தனிமனிதன் ஒரு துளிதான் என்பதை அவன் உணரவேண்டும். உணர வைக்கப்பட வேண்டும். தனிமனிதன் செய்யும் எச்செயலும் பிற மனிதர்களையும் பாதிக்கும் என்பதை அவன் உணரச் செய்யவேண்டியது குடும்பத்தின் மற்றும் சமூகத்தின் கடமையாகும்.
ஒரு புகழ்பெற்ற உதாரணம்.
இந்தியத் தலைவர்களில் ஒருவர், தொடக்க காலத்து ரஷ்யாவுக்குச் (1940-50) சென்றிருந்தார். கல்வியில் ஈடுபாடுகொண்ட அந்த தலைவர், ஒரு பள்ளிக்கூடத்தைக் காண விரும்பினார். அதன்படியே அழைத்துச் செல்லப்பட்டார். ஏதோ ஒரு வகுப்பில் நுழைந்தார். என்ன வகுப்பு என்றார். ஐந்தாம் வகுப்பு என்றார்கள். என்ன பாடம் என்றார். கணக்குப் பாடம் என்றார்கள். ஒரு மாணவனிடம், நம் பிரமுகர் எளிய கணக்கு ஒன்றைப் போட்டார்.
ஒரு மாம்பழம் பத்து ரூபிள் (ரூபிள் - ரூபாய்). பத்து மாம்பழம் வாங்கி, பதினைந்து ரூபிளுக்கு விற்றால் என்ன கிடைக்கும் என்று கேட்டார் நம் பிரமுகர். அந்த மாணவன் இப்படிப் பதிலளித்தான்.
‘இரண்டாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும்’
வாங்குவதும் விற்பதும் அரசின் வேலை. அதைத் தனிமனிதன் செய்யக்கூடாது என்பதை அச்சிறுவன் அறிய வைக்கப்பட்டிருந்தான். இதுவே கல்வி. கல்வியின் தொடக்கமே இதுதான். ‘ஒழுங்குக்கு உட்பட்டு சரியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதையே சட்டபூர்வமான வாழ்க்கை என்று உலகம் பாராட்டும்.
ஆக, பாராட்டத்தக்க வாழ்க்கை என்பது சக மனிதரைப் புரிந்துகொள்வதில், அனுசரித்துப் போவதில், அன்பு செலுத்துவதில் இருக்கிறது, வன்முறையில் இல்லை என்பதைச் சிறுவர் மனதில் பதிய வைப்பதில்தான், ஒரு வளர்ந்த சமுதாயத்தின் அமைதி அடங்கி உள்ளது.
‘தாய் தந்தையரால், உதாசீனப்படுத்தப்படும் சிறுவன், சுற்றுப்புறத்தால் அச்சுறுத்தப்படும் சிறுவன், பிரம்படியாலும் உதையாலும் பணியவைக்க முயற்சிக்கும் மூட ஆசிரியர்களிடம் படிக்க நேர்ந்த துரதிஷ்டம் பிடித்த சிறுவன், குற்றச் செயல்களை வாழ்முறையாகக் கொண்ட பெற்றோர்களிடம் வளரும் சிறுவன், வன்முறையாளனாக, குற்றவாளியாகவே வளர்கிறான்’ என்கிறது ஐ.என்.ஓ.வின் உலகச் சிறார் பற்றிய அறிக்கை.
இயற்பியல் தொடங்கி வேதியியல் வரை எத்தனை இயல்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். வாழ்வியலைச் சொல்லிக் கொடுத்தோமா, நம் இளைய தலைமுறைக்கு? முதல் மதிப்பெண் எடுக்கச் சொல்லிக் கொடுக்கிறோம். காலை ஏழு மணி தொடங்கி இரவு பத்து மணிவரை குழந்தைகளைக் கசக்கிப் பிழிகிறோம். ஒரு குழந்தை, ஒரு சிறுவன், ஒரு சிறுமி மேல் நாம் செலுத்தும் வன்முறை பற்றிச் சிந்திக்கிறோமா? இல்லை. குழந்தைகளை மனிதர்களாக மதிக்கும் சமூகம் மட்டுமே உயரும். நாம் அவர்களை மதிக்கிறோமா? அவர்கள் ஆசைக்கு, திறமைக்கு இடம் கொடுக்கிறோமா. இல்லையே. குரோட்டன்ஸ் செடிபோல குழந்தைகளை நாம் வெட்டியே வளர்க்கிறோம்.
எல்லா மனிதர்கள் தலைக்குள்ளும் மூளை என்றொன்று இருக்கிறது. அது, அதை வைத்திருக்கும் சுபாவத்துக்கு ஏற்பவே செயல்படும் என்பதைப் பெற்றோர் அங்கீகரிப்பதில்லை. இதனால் என்ன நேர்கிறது? குழந்தையின் முதல் எதிரியாகப் பெற்றோர்களே ஆகிறார்கள். ஆகவே அந்தக் குழந்தைகள் வன்முறைகளைக் கையில் எடுப்பார்கள். எடுக்கிறார்கள்.
நாம் நம் குழந்தைகளை மதிப்போம். அன்பு செலுத்துவோம். அப்போதுதான் குழந்தைகளும் பிறர்மீது அன்பு செலுத்தும்.
அன்பு தழைக்கும் சமூகத்தில்தான் வன்முறை இருக்காது. குறிப்பாகச் சிறார் வன்முறை இருக்காது.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions