c யாவரும் கேளிர் - 4
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யாவரும் கேளிர் - 4

சிவசங்கரி

அறிதலும் அறிந்து கொள்ளப்படுவதுமே வாழ்க்கை. அதுதான் நட்பிற்கும். வாருங்கள், என்னோடு சற்று நடக்கலாம். என் நண்பர்களும் காத்திருக்கிறார்கள், உங்களைச் சந்திக்க.
நடந்து செல், சுவடுகள் பின்னால் வரும்
எனக்குத் தமிழ் எழுத்தாளர்கள் மீது ஒரு மனக்குறை உண்டு.
மகாஸ்வேதா தேவி புகழ் பெற்ற வங்க மொழி எழுத்தாளர். சாகித்ய அகாதெமி, ஞானபீடம். மகசேசே, பத்மபூஷன் எனப் பல இந்திய, சர்வதேச விருதுகளைப் பெற்றவர். ஆனால் அவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. வங்கம், மத்திய பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகக் களம் இறங்கிப் போராடியவர். இடதுசாரிச் சிந்தனைகள் கொண்டவர் (அதன் காரணமாக அவரது வேலையை இழந்தவர்) என்று அறியப்பட்ட மகாஸ்வேதா தேவி நந்திகிராம், சிங்கூர் போராட்டங்களின் போது மார்க்சிஸ்ட் அரசை எதிர்த்துக் களமிறங்கினார். அதே மகாஸ்வேதா, மம்தா ஆட்சி, நக்சலைட்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தபோது அந்த ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பினார். சுருக்கமாகச் சொன்னால் அவர்  வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல, ஓர் வங்கப் புலி.
கன்னடத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் சிவராம் காரந்த். ஞானபீட விருது பெற்றவர். நவீன இந்தியாவின் தாகூர் என்று அவரை விதந்தோதுகிறார் ராமச்சந்திர குகா. அவர் வடக்குக் கர்நாடகத்தில் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்துப் போராடியவர். அதற்காகத் தேர்தலிலும் குதித்தார்.
சுகித குமாரியை அறியாத மலையாள வாசகர்கள் இருக்கமாட்டார்கள். பெண்களுக்காகக் குரல் எழுப்பும் நுட்பமான கவிஞர். பெண்களுக்காக மட்டுமல்ல, சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவும் கூட. புனல் மின் திட்டம் ஒன்றின் காரணமாகக் கேரளத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு நீரில் மூழ்கடிக்கப்படும் நிலை எழுந்தபோது அதைக் காக்க அகில இந்திய அளவில் போராட்டம் நடத்திய பெண்மணி. மன நலம் குன்றிய பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குள்ளாவதைக் கண்ட அவர், அந்தப் பெண்களுக்காக ‘அபய’ என்ற இல்லமொன்றை நடத்தி வருகிறார்.
சமூக அக்கறையின் காரணமாக இப்படிப் போராளிகளாகவும் இயங்குகிற தமிழ் எழுத்தாளர்கள் எவரேனும் உண்டா?
தலையைச் சொறிந்துகொண்டு யோசித்தால், இலக்கியச் சிற்றேடுகளில் இயங்கிய சிலரது பெயர்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அவர்களும் கூட ஏதேனும் ஓர் அரசியல் கட்சியோடு தன்னைப் பிணைத்துக்கொண்டு அதன் கட்டளைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் துணை போகிறவர்களாக இருப்பார்கள். சுய உந்துதலில் சமூகப் பிரச்சினைகளில் செயல்பாட்டாளர்களாக இயங்கிய, அகில இந்திய அளவில் விருதுகள் வென்ற, அயல் மொழி எழுத்தாளர்களால் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் யார் இருக்கிறார்கள்?
என் நினைவுக்கு வருகிற ஒரு பெயர், ஒரே பெயர் - சிவசங்கரி.
அவர் மகாஸ்வேதா தேவியைப் போலவோ, சுகிதகுமாரியைப் போலவோ, வீதியில் இறங்கி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துபவர் அல்லதான். ஆனால் அவர் போதை மருந்துப் பழக்கம் என்னும் புதைசேற்றில் சிக்கிக் கொண்டவர்கள், மது அடிமைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், பெண் சிசுக்கள் போன்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக உடலாலும், மனதாலும் பொருளாலும் பல பணிகளை ஓசையில்லாமல், ஊளையிடாமல் களமிறங்கிச் செய்தவர்.
வேறு எவரையும்விட என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில் நானும் அவருடன் இந்தப் பணிகள் சிலவற்றில் பக்கத்தில் நின்று பணியாற்றியிருக்கிறேன்.
நாங்கள் இருவரும் ‘அக்னி’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கியபோது எழுத்துலகம், எங்களை சந்தேகத்தோடும், ஆச்சரியத்தோடும் பார்த்தது. சந்தேகத்திற்குக் காரணம் இருவரும் வெவ்வேறு விதமான- ஒன்றுக்கொன்று முரணான எனப் பிழையாகக் கருதப்பட்ட இலக்கியச் சாலைகளில் பயணித்துப் பொதுவெளிக்கு வந்தவர்கள். அவர் வெகுஜன இதழ்களில் எழுதிப் பிரபலமானவர். நான் இலக்கியச் சிற்றேடுகளில் அறிமுகமானவன். நான் வெளிப்படையாக அரசியல் விமர்சனங்கள் செய்திருந்தேன். அவர் பொது அரங்கில் அரசியல் பேசியவர் இல்லை.  இருவரில் யார் யாரைப் பயன்படுத்திக்கொண்டு என்ன இலக்கை அடையப் போகிறார்களோ என்ற சந்தேகம் பலருக்கு. அரசியல்வாதியும் பத்திரிகையாசிரியருமாக இருந்த ஒருவர், ‘அவர் உங்கள் தோளில் ஏறிப் பழம் பறிக்க முயல்கிறார்’ என்று எச்சரித்தபோது நான் பெருங்குரல் எடுத்து அதிர்வேட்டுச் சிரிப்புச் சிரித்தேன். சிரித்த பின் சொன்னேன்: ‘அவரது உயரம் எனக்குத் தெரியும். என்னைவிட மிக உயர்ந்தவர்’.
முதலில் அவர் முகம் சுருங்கியது. பின் எனக்கென்ன போச்சு என்ற ஏளனம் அங்கு படர்ந்தது.
அவரது உயரம் எனக்குத் தெரியும் என்று நான் புகழ்ச்சியாகச் சொல்லவில்லை. உணர்ந்தேதான் சொன்னேன். ஒருவர் எழுத வருவதற்கான உந்தலாக சில காரணங்கள் இருக்கும். கவனம் பெற வேண்டும் என்ற ஆவல், அல்லது சமூகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடவேண்டும் என்ற ஆத்திரம், அல்லது மனித சுபாவங்களைப் பதிந்து விட்டுப் போகிற ஆர்வம், அல்லது நான் உங்களுக்கு வழிகாட்ட வந்திருக்கும் வானவன் என்ற அகங்காரம், அல்லது சமூகமோ, சகாக்களோ தன்னைக் கண்டுகொள்ளாத ஆதங்கம், அல்லது இலக்கிய வாசிப்புகள் தந்த மன எழுட்சி. சிலருக்கு பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையோ, நிர்பந்தமோ கூட இருக்கும். வேறு வழியில்லாமல் வந்து மாட்டிக்கொண்டவர்களும் உண்டு.
சிவசங்கரி எழுத வந்ததற்கு இவை ஏதும் காரணமில்லை. அவரது தந்தை சென்னையின் புகழ் பெற்ற ஆடிட்டர்களில் ஒருவர். அன்று சென்னையில் இருந்த பிரபலங்களில் பலர் அவர் வீடு தேடி வந்து பார்க்கும் அளவு தன் தொழிலில் பெயர் சம்பாதித்தவர். எனவே பலரை நேரிடையாகவே இளம் பருவத்திலேயே சிவசங்கரி அறிந்திருந்தார். எழுத வரும் முன்னரே, அவர் இசை, நடனம் என்ற நிகழ்கலைகளில் திறமானவர்களிடம் பயிற்சி பெற்றிருந்தார். சமூக அவலங்கள் குறித்த ஆதங்கம் உண்டே தவிர ஆத்திரம் இருந்ததில்லை. இதழ்கள் வாசிப்பும் இலக்கிய வாசிப்பும் உண்டு. ஆனால் நான் இன்னொரு பாரதியாக, கல்கியாக, ஆகவேண்டும் என்ற தவிப்பு இருந்ததில்லை.
அக்னி அமைப்பை ஆரம்பித்த அந்த 80களின் நடுப்பகுதியில், இந்தியா இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் சவால்களுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் எழுந்து நிற்கத் தொடங்கியிருந்தது. அது வெறுமனே நிற்பதோடு அல்ல, வேகம் கொண்ட பாய்ச்சலை நிகழ்த்தவேண்டும் என்ற வேட்கை, எங்கள் இருவருக்குமே இருந்தது. அதற்கான மன எழுட்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு மன எழுட்சியை ஏற்படுத்துவதில் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு சமூகக் கடமை இருக்கிறது என்று நினைத்தோம்.
அதன் முதலடி தேசம் குறித்த பெருமித உணர்வை எழுப்புவதே என்று எண்ணினோம். ‘இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்’ என்பதுதான் எங்கள் முழக்கமே. சுற்றிலும் பரவிக் கிடந்த அவநம்பிக்கை என்ற காளானைக் கிள்ளி எறிந்துவிட்டு ஆக்கபூர்வமான எண்ணங்களை (பாசிட்டிவ் திங்கிங்) விதைப்பதே எங்கள் விருப்பம். குவிந்து கிடந்த சாம்பலை ஊதி ஒதுக்கிவிட்டு கனலை மீண்டும் எழுப்பவேண்டும் என்ற கனவை நாங்கள் கருத்தரித்திருந்தோம்.  
எழுத்தாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. இலக்கியச் சர்ச்சைகளில் அவர்களுக்கு இருந்த பிரியம் எதிர்காலத் தலைமுறையின்மீது இல்லை என்றே தோன்றியது. எனக்குள் இருந்த இலக்கியவாதிகளின் பிம்பங்கள் நொறுங்கியது இந்தக் காலகட்டத்தில்தான் என்று இப்போது தோன்றுகிறது.
ஆனாலும் நாங்கள் சளைக்கவில்லை. பிருந்தா, பவானி, லலிதா என்ற எங்கள் தோழிகள் (உண்மையில் அவர்கள் முதலில் சிவசங்கரியின் தோழிகளாகத்தான் அறிமுகமானார்கள். இன்று என்  குடும்பத்தின் நீட்சியாக ஆகிவிட்டார்கள்) இந்தக் குடும்பம் துணை நிற்க, மதம் பரப்ப வந்த பாதிரிகள் போல ஊர் ஊராகப் போனோம். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களோடு உரையாடினோம். உரையாற்றினோம். நெருக்கமாகப் போய்ப் பார்த்தபோது  சில பிரச்சினைகள் எங்களுக்குப் புலனாயின. போதைப் பொருள் பழக்கத்தில் புதைந்து போக ஓர் தலைமுறை தயாராகிக்கொண்டிருந்தது.
சிவசங்கரி பதைபதைத்துப் போனார். அவரும் நானும் எங்கள் அக்னி குடும்பமும் அமர்ந்து பல நாள்கள் பேசினோம். விழிப்புணர்வு, சட்டத்தைக் கடுமையாக்கல், விற்பனையைத் தடுத்தல்  (Education, Legislation, Prevention) என்ற மும்முனை கொண்ட சூலாயுதத்தை ஏந்தினோம். போதைப் பொருள் கடத்துவோருக்கு தூக்கு தண்டனை வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டினார் சிவசங்கரி. அந்த கோரிக்கையை அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டு வந்தார். மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு போட்டிகள், ஓவியக் கண்காட்சிகள், உரையாடல்கள் இவற்றில் நான் பங்களித்தேன்.
இன்று திரும்பிப் பார்க்கும்போது எங்கள் முயற்சி விழலுக்கு இறைத்த நீராகிவிடவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு தலைமுறை போதை மருந்து என்ற பெரும் பாதாளத்தைப் பத்திரமாய்த் தாவிக் கடந்திருக்கிறது என்றே நான் நம்புகிறேன். அதற்கு நாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போட்டிருக்கிறோம் என்று நிறைவு கொள்கிறேன். கடலில் தத்தளிக்கிறவர்களுக்குத் துரும்பும் ஒரு தூண்.
சில வருடங்களுக்கு முன் கன்னடத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றும் இளைஞர் ஒருவரை பெங்களூரில் சந்தித்தேன். ‘சார் என்னை நினைவிருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டு எதிர் நின்றான் அவன். விழித்தேன். அவன் தன் பெயரையும் படித்த கல்லூரியையும் சொல்லி “நாம் போதைக்கு எதிராக இணைந்து வேலை செய்திருக்கிறோம் சார்!’’ என்று நினைவுகளைக் கிளறி அந்த வேலையில்  விளைந்த வெற்றிக் கதைகளை விவரித்து மகிழ்ந்தான். விடைபெறும் வேளையில், “ஆன்டி எப்படி இருக்காங்க? பார்த்தால் நினைவுபடுத்துங்கள்” என்றான். சிவசங்கரி பெற்றெடுத்த பிள்ளைகள் என்று யாருமில்லை. ஆனால் இப்படி வளர்த்தெடுத்த பிள்ளைகள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.
அடையாறு வி.எச்.எஸ். மருத்துவமனைக்குள் ராஜாஜி பெயரைத் தாங்கி ஒரு மது அடிமைகள் மீட்பு மையம் இருக்கிறது. அது சிவசங்கரியின் முனைப்பாலும் பணத்தாலும் உருவானது.
சில வாரங்களுக்கு முன்னால் கவிஞர் ஈரோடு தமிழன்பனைப் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தேன். பெண் சிசுக் கொலைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக சிவசங்கரியும் நானும் சேர்ந்து ஓர் பாடல் தொகுப்பை ஒலிநாடாவாக வெளியிட்டோம். அது நடந்து முப்பது ஆண்டாவது இருக்கும். அந்தத் தொகுப்பிற்கு தமிழன்பனும் பாடல் எழுதியிருந்தார். அதை நினைவு கூர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். ‘நடந்து செல், சுவடுகள் பின்னால் வரும்’ என்று ஒரு வரி என் மனதைக் கடந்து போனது. சிவசங்கரி பதித்திருக்கிற சுவடுகள் பல.  
அவை இந்தியா முழுமையும் பதிந்து கிடக்கின்றன. இலக்கியம் என்பது பல்வேறு மொழிகளில் எழுதப்படுவதுதான். ஆனால் அதன் இலட்சியம் மொழிகளைக் கடப்பது. இந்தப் புரிதல் உள்ள எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அடுத்த மொழியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம்கூட இல்லாத குண்டுச் சட்டிக் குதிரை வீரர்கள் நம் எழுத்துலக பிரம்மாக்கள். ஆனால் சிவசங்கரி தனி ஒரு பெண்ணாக இந்தியாவின் நான்கு திசைகளுக்கும் பயணித்து, இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் எழுதும் எழுத்தாளர்களைச் சந்தித்து, அந்த மொழி இலக்கியத்தையும், வாழ்வையும், சூழலையும் வெள்ளிப் பேழையில் வைத்த முத்துச்சரமாக கோர்த்து நான்கு தொகுதிகளாக ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற நூலாகத் தந்திருக்கிறார். அந்தப் பயணங்கள் திட்டமிடச் சிரமமானவை. சென்று வரப் பெரும் செலவு பிடிப்பவை. போய் வந்த பின் எழுதுவதோ இடுப்பொடிக்கும் வேலை. என்றாலும் அவர் செய்தார். இந்த தேசத்தின் மீதுள்ள நேசத்தின் காரணமாக. இலக்கியம் என்பதன் உண்மையான நோக்கம் என்பதை உணர்ந்ததன் காரணமாக. அந்தப் பிரம்மாண்டப் பணிக்கான அங்கீகாரம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது போன்ற ஒரு பெரும் பணியைச் செய்ய அவரால் மாத்திரமே முடியும். அதுபோன்ற பிரம்மாண்டங்களைத் தரிசிக்கக் கூடத் திராணியற்றுக் கிடக்கத் தமிழ்ச் சமூகத்திற்கு மாத்திரமே முடியும்.
அவரது இன்னொரு முக்கியமான பங்களிப்பு, அவர் தனது மணிவிழாவின் போது வானதிப் பதிப்பகம் மூலம் வெளியிட்ட 60 எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் கதைகள் கொண்ட முக்கியமான தொகுப்பு அது. அந்த மணிவிழாவை, எல்லோரையும் போல, அவர் தன்னைப் பாராட்டிக்கொள்ளும் விதமாக நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் தனக்கு அடையாளம் தந்த தமிழிலக்கியத்தைப் பாராட்ட நினைத்தார் பாருங்கள், அதுதான் சிவசங்கரி!

- நண்பர்கள் சந்திப்பு தொடரும்
மாலன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions