c காலந்தோறும் கவிதை மாறும்!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

காலந்தோறும் கவிதை மாறும்!

புவியரசு
கவிஞர் புவியரசு, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, நாடகம், பேச்சு என்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மொழிபெயர்ப்புக்காக, மூலப் படைப்புக்காக என இரண்டு முறை சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். வானம்பாடிக் கவிஞர்களில் இன்றுவரை படைப்புலகில் இயங்கி வருபவர்களில் ஒருவர். தமிழ்ச் சூழலில் புறக்கணித்துவிட முடியாத படைப்பாளி. எது கவிதை? எதற்காக எழுதப்படவேண்டும் கவிதை? என்பதில் தெளிந்த ஞானம் கொண்டவர். ஓஷோ, கலீல் ஜிப்ரான், தாகூர் ஆகியோரின் பல படைப்புகளைத் தழிழில் தந்தவர். பல ஜென் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். சமீபத்தில் ‘மிர்தாதின் புத்தகம்’ என்ற உலகப் புகழ் பெற்ற நூலை மொழிபெயர்த்துள்ளார். பல்சுவை காவியத்திற்காக அவரைச் சந்தித்தோம்.

உங்களுக்குள் இருந்த படைப்பாளியை எப்போது அடையாளம் கண்டீர்கள்?
ஒரு பகல்நேரப் பாசஞ்சர் ரயிலில் - காலைநேர இளம் வெயில், ஜன்னலோரத்தில் அமர்ந்து கோவையிலிருந்து உடுமலையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, என் கையில் மகாகவியின் ‘பாஞ்சாலி சபதம்’ இருந்தது. பாஞ்சாலி சபதம் மட்டும், தனியாக விலை 2 அணா.
அந்தக் காலத்தில் பிச்சைக்காரர்கள் படித்தவர்களாக இருந்தார்கள். தாயுமானவர், பட்டினத்தார், இராமலிங்க சுவாமிகள் பாடல்களைப் பாடிக்கொண்டு வீட்டு வாசலில் நிற்பார்கள். கை நீட்டமாட்டார்கள். கொடுப்பது நம் கடமை. ஏற்பது அவர் உரிமை.
பிச்சைக்காரிகள் பெரும்பாலும் குறத்திகள், அல்லது லம்பாடிகள். அதாவது நாடோடிகள். அவர்கள் பாடல் பெரும்பாலும் ‘மாயக்காரனடி கிருஷ்ணன் மகிமைக்காரனடி’  என்பதாகவே இருக்கும். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிப்பாடி, கிருஷ்ணன் எழுந்துபோக முடியாதபடி அவர்கள் நாவிலே நிரந்தரமாகச் சிறைப் பட்டிருப்பான்.
இப்போதும் அந்தப் பல்லவி என் செவிகளில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த நாள் முதல் இந்த நாள்வரை. ‘பாஞ்சாலி சபத’ வரிகளுக்கிடையிலிருந்து அந்த ராகம், தாளம் போட்டுக்கொண்டிருந்தது, பாசஞ்சர் ரயிலின் தாள லயத்திற்கேற்ப. அந்தக் கறுப்புக் குறத்தி தன் இனிய குரலில் பாரதியாரைப் பாடிக்கொண்டிருந்தாள் கரும்புகை சூழ. ஒரு கருப்புக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் போய்க் கொண்டிருந்தேன்.
சூது நடக்கிறது
காய்கள் உருள்கின்றன
குறத்தியின் குரலில் பாரதி பாடுகின்றார்.
மாடிழந்து விட்டான் - தருமன்
மந்தை மந்தையாக
ஆடிழந்து விட்டான் - தருமன்
ஆளிழந்து விட்டான்
பீடிழந்த சகுனி - அங்குப்
பின்னும் செப்புகின்றான்
“நாடிழக்க வில்லை, தருமா,
நாட்டை வைத்திடு”
என்றான்.
பாரதி ‘ஓம் ஓம்’ என முழங்கிக் காவியத்தை முடிக்கும்போது, உடுமலை வந்துவிட்டது.
அப்போதுதான் எனக்குள் அந்த முதற் கவிதை முளைத்தது, அத்தை வீட்டுத் தோட்டத்தை அடைவதற்குள்.
அது அரசியல் கவிதை. நான் அரசியல்வாதி. தருமன், சகுனி, பாஞ்சாலி, பாரதி, குறத்தி, மகிமைக்கார மாயக் கண்ணன், ரயிலின் தாளலயம், கரும்புகை  எல்லாம் சேர்ந்தாலும், கவிதை என்னவோ அரசியல் கவிதைதான். தலைப்பு நினைவிருக்கிறது: கருப்புச் சட்டைக்கு!
‘பெரிய விநாயகர் தோட்டத்து’ பிள்ளையார் கோயில் முன்பக்கத் திட்டின் மேல் அமர்ந்து, கவிதையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வாய்க்காலின் சலசலப்புக்குள்ளிருந்து ஒரு கருத்த குள்ளமான மனிதர் குபுக்கென்று மேலே எழுந்தார். முகத்தில் தண்ணீர் வழிய, ‘என்ன அது?’ என்று என்னைப் பார்த்தார்.
‘கவிதை’ என்றேன், நடுங்கும் குரலில்.
‘ஓஹோ’ என்று முகத்தைத் துடைத்துவிட்டு உடம்பில் நீர் வழிய விரைந்து என்னிடம் வந்து, ‘காட்டு’ என்றார்.
காட்டினேன். பார்த்தார். தமது நனைந்த விரலால், ஒரு சொல்லைச் சுட்டிக் காட்டி, ‘அதை இப்படி மாற்று!’ என்றார், தமது கரகரத்த குரலில். ஆகா, என்ன ஆச்சரியம்! அந்த மாற்றத்தில், ஜொலித்தது கவிதை!
யார் அவர்?
சட்டென எழுந்து நின்றேன். என் கையில் காகிதம் படபடத்தது!
அவர் மாற்று வேட்டியைக் கட்டிக்கொண்டு, ஒரு சிவப்பு ஆடையை எடுத்து தலையில் பெரிய உருமலை கட்டிக்கொண்டு, போக முற்படும்போது, ‘அய்யா!’ என்றேன் பரிதாபமாக.
‘என்ன?’
‘நீங்க?’
‘புதுக் கம்பன் பூமிபாலக தாசன்’ என்று சொல்லி, மணிமகுடம் அணிந்த ஒரு மகாராஜன் போல விரைந்துவிட்டார். ‘உடுமலை மண்  கவிதைப் பயிர் விளையும் மண்’ என்று பின்னால் சொன்னார்கள். இப்படி ஒரு கவியின் ஆசீர்வதிப்போடு என் கவிதை முளைத்தது.

பல கவிஞர்கள் எழுதுகோல் எடுக்க காரணமாகியிருந்த வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியக் கவிஞர்களில் ஒருவர் நீங்கள். அந்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
அந்த முதல் கருப்புக் கவிதையிலிருந்துதான், ‘வானம்பாடி’ தன் சிவப்புச் சிறகுகளை விரித்தது, கால் நூற்றாண்டிற்குப் பிறகு.
என்னதான், வானத்தில் பறந்தாலும், தனது கூர்ந்த பார்வையோடு உலகைப் பார்க்க நேர்ந்தாலும் அது பூமி மண்ணை நோக்கியே திரும்பியது. தனது பூமி மண்ணை நோக்கி. அதனால் மண்ணையும், மண்ணின் மக்களையும் பாடுவதைத் தனது நோக்கமாகக் கொண்டது வானம்பாடி. எல்லோருக்குள்ளும் கவிதை உண்டு. அதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என்று கவிதையை ஜனநாயகப் படுத்தியது வானம்பாடி. ‘வானம்பாடி’ ஓர் இதழல்ல, இயக்கம் என்று வரவேற்றார், கலாநிதி கைலாசபதி. காரணம் இக்கவிஞர்கள் மானுடம் பாடும் பறவைகளாக இருந்ததுதான்.

வானம்பாடிக் கவிதைகளை மாணவர்களெல்லாம் விரும்பிப் படித்ததாக அறியமுடிகிறது. இன்று வரும் கவிதைகளை அப்படிச் சொல்ல இயலாது எனத் தோன்றுகிறது. இது பற்றி ?
‘வானம்பாடி’ இயக்கம், அரசியல் சார்புடைய, இலக்கிய, சமுதாய இயக்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது. கவிதையை அது வானத்திலிருந்து மண்ணுக்கு இறக்கிக்கொண்டு வந்தது. அதன் காரணமாக, கவிதைகள் இறுக்கமாகவும், பூடகமாகவும் இல்லாமல், இளகியதாய், வெளிப்படையாய், வெளிச்சமாய் இருந்தன. எமது நோக்கம், வடிவமல்ல, உள்ளடக்கம். எல்லாரும், எல்லாமும் விமர்சனத்திற்கு உரியனவாக இருந்ததால் கவிதைகளும் அப்படி இருந்தன.

ஏராளமான  மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறீர்கள். உங்களுடைய படைப்புக்கு நேரம் ஒதுக்க முடிகிறதா? இது எப்படிச் சாத்தியப்படுகிறது?
ஆயிரம் புத்தகங்களுக்குமேல் அச்சில் வந்துவிட்டன. எழுதியாக வேண்டியவை ஒரு பத்தாவது இருக்கும். எழுதுவதற்கு என்று எந்த நேரத்தையும் ஒதுக்குவதில்லை. நினைத்தபோது எழுதுவது, அவ்வளவுதான். நிர்பந்தம் எதுவும் இல்லை. எவரும் இப்படி எழுதலாம்.

ஓஷோவின் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்து உள்ளீர்கள். ஓஷோவின் மீதான தம் ஈடுபாடு எதை அடிப்படையாகக் கொண்டது? தமிழ் மரபில் வந்த ஞானிகளுக்கு நிகராக ஓஷோவை நினைப்பதற்கு இடமிருக்கிறதா?
ஓஷோவின் பரம எதிரி நான். மேடைகளில் அவரை நார்நாராகக் கிழித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தடுத்தாட்கொண்டவர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்! ஓஷோ இந்திய மரபில் வந்த மாபெரும் கலகக்காரர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்ற கூட்டத்தைத் தாண்டி மேலே சென்றவர். நவீன உலகைத் துல்லியமாகப் புரிந்துகொண்ட மெய்ஞானி. மகாவீரர். பல்லாயிரத்தாண்டின் கெட்டிதட்டிப் போன நமது பிரமைகளை,  தமது ஞானச் சம்மட்டியால் ஒரே போடாகப் போட்டுச் சுக்கு நூறாக்கியவர் அவரே. எனக்கு பிரபஞ்சக் கதவுகளை அகலத் திறந்து வைத்தவர். அவருக்கு ஈடு எவருமே இல்லை!

உங்களின் நாடக முயற்சிகள் பற்றிச் சொல்ல முடியுமா ?
தொடர்ந்து அதைத் தொடரமுடியாமல் போனது ஏன்?
எனது நாடக முயற்சி ஆழமானது. மிக நீண்டது. சென்னையின் ஆரவாரக் கூச்சலில் அது மங்கிப் போயிற்று. உலகளாவிய நாடகப் போக்குகள், உத்திகள் பற்றி நான் அறிவேன். புதிய வடிவில், அடையாளம் இழந்து, ஈடுபட பலருக்கு மனமில்லை. தமது சட்டைகளைக் களைத்து தெருவில் இறங்கும் துணிச்சல்காரர்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. பல கல்லூரிகளில் பயிற்சியளித்து வருகிறோம். மரபுவழி நாடகங்களுக்கும், புதிய நவீன நாடகங்களுக்கும் நடுவில் இது ஒரு ஊசலாட்ட காலம். ஞாநி, பிரளயன் போன்றவர்களின் முயற்சிகள் வெல்லும்.

சமீபத்தில் ‘மிர்தாதின் புத்தகம்’ நூலை மொழிபெயர்த்து உள்ளீர்கள். அதற்கு ஏதேனும் விசேச காரணம் உள்ளதா?
‘மிர்தாதின் புத்தகம்’ என்ற மிக்கேல் நைமியின் நூல் உலகின் தலைசிறந்த நூல். இதைத் தாண்டி வெளிவந்த ஞான நூல் எதுவும் இல்லை. இது ஞானி ஓஷோவால்தான் இந்தியாவில் பிரபலமாயிற்று. இதை மொழிபெயர்த்ததில் நான் பெருமை கொள்கிறேன். இதை வெளியிட்டதில் சகோதரர் காந்தி கண்ணதாசன் பெருமை கொள்கின்றார்.
இதற்கான சமீபத்திய பாராட்டு கனடா நாட்டிலிருந்து வந்தது. ‘இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசளித்துப் பாராட்டியது. ஆனால், அதை இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. செய்தியே வெளியிடவில்லை. சில இதழ்கள் என் பெயரை மட்டும் நசுக்கிவிட்டன. தமிழ் இலக்கிய இதழ்கள் வாயே திறக்கவில்லை. இதில், ஏதோ ஒரு இரகசியம் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி காட்டுகிறது.

பலமுறை கேட்கப்பட்டதுதான். கவிதையின் வடிவம், உள்ளடக்கம் காலத்திற்கு காலம் மாறி வந்திருக்கிறது. நாளைய கவிதை எப்படி இருக்கும்?
காலந்தோறும் கருத்தும் மாறும், வடிவமும் மாறும். கவிதையும் இதில் தப்ப முடியாது. வானம்பாடிகள் அருணகிரிநாதர் போலச் சந்தக் கவிதையும் எழுத வல்லவர்கள். கால மாற்றத்தை உணர்ந்து மாறியவர்கள். வடிவம் என்னவாக இருந்தாலும், அதில் கருத்தும், கவித்துவமும் இருக்கவேண்டும். ஸ்ரீபதி பத்மநாபா, பாலைநிலவன், இயக்குநர் லிங்குசாமி போன்றோர் கவிதை வீச்சுகளைச் சான்றாகச் சொல்லலாம்.
‘பறவையை நோக்கிச் சுட்டான்.
கீழே விழுந்ததோ துண்டு வானம்’
என்ற பாலை நிலவன் கவிதைகள், ஓரிரு வரிகளில் பிரபஞ்சத்தை உணர்த்தவல்ல கவிதைகள். ‘லிங்கூ’ கவிதைகள் புதிய வடிவத்திற்குச் சான்று.

புதுக் கவிதைக்குப் பிறகு வரப்போவது, வந்துகொண்டிருப்பது, ‘அகவிதை’.
தற்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?
‘இளங்கோவடிகளின்  சிலப்பதிகாரம்’ என்ற திரைக்கதை உரையாடலை எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘ஷேக்ஸ்பியரின் ரோமியோ  ஜூலியட் போல மூல வடிவத்தை மாற்றாமல். அப்புறம் இட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த ஜெய்ஹிந்த் செண்பகராமன்  வரலாற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions