c நாமிருக்கும் நாடு-30
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-30

இசைப் பேரரசி

எம்.எஸ்.சா.வைத்தியநாதன்
இது எம்.எஸ் அவர்களின் பிறந்த மாதம் மட்டுமல்ல. இந்த 2016ஆம் ஆண்டு அந்த இசைப் பேரரசியின் நூற்றாண்டும்கூட.
எம்.எஸ் என்பது மதுரை ஷண்முகவடிவு சுப்புலட்சுமி என்ற பெயரின¢ அன்புச் சுருக்கம். இந்த எம்.எஸ். அம்மா, கர்நாடக சங்கீதத்தை உலக அளவில் கொண்டு சென்றதையும், உலகளவில் இந்திய சங்கீதத்துக்கு ரசிகர்களைச் சம்பாதித்து தந்ததையும் அனைவரும் அறிவர். உடன் இன்னுமொன்று. சங்கீதத்தைத் தன் ஆத்ம வளர்ச்சிக்கான சாதனமாக, சங்கீதத்தின் மூலமாக எங்கும் நிறைந்த தெய்வத்தைத் தேடிய உபாசகராகவும் அவர் இருந்தார். நிறைய பணம் அவரைத் தேடி வந்தது. அந்தப் பணத்தைப் (சுமார் ஆறு முதல் ஏழு கோடி வரை) பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்குத் தானம் செய்தவர் அவர்.
மதுரையில் 1916இல் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு முதல் இசை ஆசிரியராக அவர் தாயார் ஷண்முகவடிவே இருந்தார். பிறகு, பலரிடமும் அவர் கற்றுக்கொண்டார். எம்.எஸ்.சின் மேன்மைக்கு முக்கியக் காரணம், அவர் காலமெல்லாம் கற்றுக்கொண்டிருந்தார். செம்மங்குடி சீனிவாசய்யரிடம் கற்றார். எம்.எஸ்.சின் உடல்நிலை ஆரோக்கியமானது என்று சொல்வதற்கில்லை. ஏதேனும் ஒரு பிரச்சனை அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. ஆனாலும் தினமும் சாதகம் செய்யத் தவறுவதே இல்லை அவர். தமிழ்த் தியாகய்யர் எனப்பட்ட பாபநாசம் சிவன், தன் பாடங்களை அவருக்கு நேரில் பயிற்று வித்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தன் பேட்டிகளில் குறிப்பிடுவார் அவர்.
தாயார் ஷண்முகவடிவு, ஓர் இசைத்தட்டு நிறுவனத்துக்கு, பாடல் பதிவுக்கு (கிராமபோன் ரிக்கார்டு) சென்னைக்கு வருகையில் தன் 10 வயது மகள் சுப்புலட்சுமியையும் அழைத்து வந்திருக்கிறார். சுப்புவின் குரல் இனிமை கண்டு அவரையும் பாடச் செய்து, இரண்டு பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். ‘மரகத வடிவும்’ மற்றும் ‘விதிபோலும்’ என்பதே அந்த இரு பாடல்கள். தமிழகம் அப்பாடல்களைக் கேட்டு வரவேற்று மகிழ்ந்தது. அடுத்து எம்.எம்.வி. நிறுவனத்துக்கு அவர் பாடல் பதிவு செய்து கொடுத்தார். அது மிகப் பெரிய வெற்றி பெற்றது. அவர் புகழ் அவரைச் சினிமா உலகத்துக்கு அழைத்துச் சென்றது.
டைரக்டர் கே.சுப்பிரமணியம் இயக்கத்தில், 1938ஆம் ஆண்டு ‘சேவா சதனம்’ திரைப்படத்தில் அறிமுகம் ஆனார் எம்.எஸ். அப்படத்தின் கதை புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் எழுதியதாகும். அடுத்து வந்த படமே ‘சகுந்தலை’. பிரபல இசைக் கலைஞர் ஜி.எஸ்.பாலசுப்பிரமணியம் இசையமைக்க, ஆங்கிலேயரான எல்லீஸ் ஆர்.டங்கன் படத்தை இயக்கினார். படம் பெரும் வெற்றி பெற்றது.
சகுந்தலை திரைப்படத்தில் தொடர்பு கொண்டிருந்த ஆனந்த விகடன் விளம்பர மேனேஜர் டி.சதாசிவத்துக்கும் எம்.எஸ்.சுக்கும் (10.06.1940) திருநீர்மலையில் திருமணம் நிகழ்ந்தேறியது. தேசியப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறைக்குச் சென்ற (கல்கி) கிருஷ்ணமூர்த்தியையும் சதாசிவத்தையும் சிறைச் சாலை நண்பர் ஆக்கியது. சிறையிலிருந்து வெளிவந்த அவர்கள் புதிய பத்திரிகை ஒன்றைத் தொடங்க உத்தேசித்தார்கள். பணம்? இனி நடிப்பதில்லை என்று நினைத்திருந்த எம்.எஸ். ‘சாவித்திரி’ படத்தில் நடித்துப் பெற்ற சம்பளத்தைத் தந்து கல்கி பத்திரிகை தொடங்க உதவினார். எம்.எஸ். கடைசியாக நடித்த படம் ‘மீரா’. மீரா, இந்தியிலும் தயாரானாள். படத்தைப் பார்த்த நேரு, ‘நான் வெறும் பிரதம மந்திரிதான். சுப்புலட்சுமியோ இசைப் பேரரசி’ என்றார்.
எம்.எஸ்.சின் சிறந்த ரசிகர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. எம்.எஸ் பாட்டைக் கேட்டுப் பாராட்டுக் கடிதமே எழுதினார் காந்தி.
எம்.எஸ். பாடிய இசைத் தட்டுகள், சி.டி.க்கள் உலகம் முழுக்கப் பரவின. உலகப் பயணம் மேற்கொண்ட எம்.எஸ். பாடாத நாடுகள் குறைவு. இந்திய கர்நாடக இசைக்கு ‘முகவரி’யாக எம்.எஸ். இருந்தார்.
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என்று தொடர்ந்து ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் ‘ரமோன் மகசேசே’ விருதையும் (1974) பெற்றார். உலகம் பிரமிக்கும் செயல் ஒன்றையும் அவர் நிகழ்த்தினார்.  1966ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி, அமெரிக்க நியூயார்க்கில் இருக்கும் ஐ.நா.சபையில் அவர் பாடினார். இந்த நிகழ்ச்சிக்கென்றே ராஜாஜி எழுதிய பாடலையும், காஞ்சிப் பெரியவர் எழுதிய சமஸ்கிருத சுலோகம் ஒன்றையும் பாடினார். உலகம் முழுதும், இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. கர்நாடக சங்கீதக்காரர், சுலபத்தில் பெறமுடியாத சிகரங்களைச் சுலபமாகத் தொட்டார். அபரிதமாகச் சம்பாதித்தார். அவ்வளவையும் தானம் செய்தார்.
அடிப்படையில் மிக எளிய மனுஷியாக, ஆச்சரியப்படும் விதத்தில் மிகச் சாமான்யராகவே தன்னை அமைத்துக்கொண்டார்.
ஒரு கச்சேரி. கோயில் திருவிழா. அசாத்தியமான கூட்டம். பறை அடித்து விளம்பரம் செய்தார்கள். கிராமம் கிராமமாக மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அரியலூரில் இருந்து கணவன் மனைவி இருவர் 30 மைல் நடந்தே கச்சேரி கேட்க வந்தார்கள். அவர்கள் வந்து சேரும்போது, கச்சேரி முடிந்துவிட்டது. அத்தம்பதியினர்க்கு மாபெரும் துக்கம். நேரிடையாகவே எம்.எஸ்.சையே பணிந்து முறையிட்டார்கள். இரவு பனிரெண்டு மணிக்கு மேல், அந்தக் கணவன் மனைவிக்கென்றே ஒரு கச்சேரியை நிகழ்த்தினார் எம்.எஸ்.
இதுவே எம்.எஸ்.சின் அசல் முகம்.  எம்.எஸ். உச்சத்தில் இருந்த காலத்தில்தான் தமிழிசை இயக்கம் தோன்றியது. ‘தமிழ்நாட்டில், கச்சேரிகளில் அனைத்தும் தெலுங்கிலேயே பாடவேண்டுமா, தமிழுக்கு இடம்  இல்லையா, தமிழில் பாடலே இல்லையா’ என்றெல்லாம் நியாயமான கேள்விகள் எழுந்தன.
ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார், கல்கி, டி.கே.சி. முதலான பலர், அந்த இயக்கத்தைக் கட்டினார்கள். பெரியார் அந்த இயக்கத்தை ஆதரித்தார். எம்.எஸ். அமைதியாகப் பலப்பலத் தமிழ்ப் பாடல்களைத் தன் கச்சேரியில் புகுத்தினார்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தன் 88ஆம் வயதில் அமரர் ஆனார் எம்.எஸ். சுப்புலட்சுமி.

-போராட்டம் தொடரும்..

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions