c புதுக்கவிதை: வேரும் விழுதும் - 17
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 17

மின்மினிகளும் நட்சத்திரங்களும் - 2

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு வானத்து நட்சத்திரங்கள் போல் ஆயிரம் பதில்கள். ஒன்றுபோல் ஒன்றில்லை.
தேவதேவனைக் கேட்டால் ‘கலையின் உன்னத ரூபமே கவிதை’ என்கிறார். அந்த உன்னத ரூபம் எது என்று கேட்டால் ‘படிமம்’ என்பது அவரது பதில்.
அவர் மேலும் சொல்வார்: “கவிதையின் தாதுதான் கவிதானுபவமே ஒழிய கவிதையின் உன்னதம் கவிதைக்கு ரூபத்தைத் தரும் படிமச் செறிவு, படிம நேர்த்தி என்பவைதாம்.’’
கவிஞன் ஒரு பிரபஞ்ச ஜீவி என்றும், அவனது அகண்ட அனுபவம் விரிந்துள்ள பூ கவிதை என்றும் நம்புகிறார் தேவதேவன்.
தேவதேவனின் பூடகமான கவிதை இலக்கணத்தை நாம் புரிந்து கொள்கிறோமோ இல்லையோ, இந்த மனிதனுக்குள் கவிதை குடியிருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடு இருப்பதற்கில்லை.
1976லிருந்து கவிதை எழுதி வருகிற தேவதேவன் தன் ஆசிரியச் சூழலையும், எளிய வாழ்வியலையும் தன் கூரிய சொற்களால் வெட்டிக் கடந்து கவிஞர்களின் கற்பனைப் பரப்புகளையும் தன் உன்னத மனோநிலையாகிற தீவிரச் சிறகுகள் கொண்டு தாவிக் கடந்து ஒரு ஏகாந்த உலகைத் தன் சிருஷ்டிகளால் படைத்துத் தருகின்றார்.
குளித்துக் கரையேறாத கோபியர்கள், மின்னற்பொழுதே தூரம், மாற்றப்படாத வீடு, பூமியை உதறி எழுந்த  மேகங்கள், நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம், சின்னஞ்சிறிய சோகம், நக்ஷத்ர மீன், அந்தரத்திலே ஓர் இருக்கை, நார்சிசஸ் வனம் எனப் பல கவிதைத் தொகுதிகளைத் தந்தவர். தொடர்ந்து எழுதி வருபவர்.
அவருடைய இலக்கணங்களை வைத்து அவர் கவிதைகளை இனம் காண்பதைவிட, நம் வாசக அனுபவங்களை அவருடைய எழுத்துக்கள் எப்படித் தீண்டுகின்றன, அலைக்கழிக்கின்றன என்பதையே அளவுகோலாக மேற்கொள்வதே சரியாக இருக்கும்.
சொற்களைத் தாண்டி ரூபம் கொள்கிற மனப் படிமம் தேவதேவன் கவிதைகளின் தனிச்சிறப்பு. ‘மின்னற்பொழுதே தூரம்’ என்கிற அவருடைய கவிதைத் தொகுதி ஒன்றின் தலைப்பே இந்த விசித்திர அனுபவத்தைத் தந்துவிடுகிறது. படிமங்களின் உக்கிரம் அது விகசித்து எல்லையொன்றின்மை என்ற அனுபவத்தைத் தருகிறது. இந்த அனுபவம் எப்படியிருக்கும்? ‘தொடுதல்’ என்ற கவிதையில் இதனைத் தொட்டுப் பார்க்க முயல்கிறார் தேவதேவன்.

“பாதம் பதிக்காமல் உலவுவதற்கும்
கைகள் விரிக்காமல் அணைப்பதற்கும்
விரல்கள் இல்லாமல் தொடுவதற்கும்
இதழ் பதிக்காமல் முத்தமிடுவதற்கும்
சொற்களில்லாமல் பேசுவதற்கும்
இல்லாமலே இருப்பதற்குமான”

கலை அது.

மழை பொழிந்து உலகமே தூய்மையாகிவிடுகிறது. ஒரு மரத்தின் கிளை பளீரிடுகிறது. கவிஞர் சொல்கிறார்:

“பளாரென்று நீண்டிருந்தது கிளை
நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்
அப்போது தான் உறையிலிருந்து
வெளிப்பட்ட வாள் போல”

வாள் போல் என்பது வெறும் உவமைதான். அதை ‘நித்யத்துவம்’ தூக்கிச் சுழற்றும் போது வாள் அதிசயமான படிமமாகிவிடுகிறது.
உக்கிரமான படிமங்கள் கவிதையை உயர்த்துகின்றன. ஆனால் படிமங்கள் இல்லாமலும் கவிதை உக்கிரத்தன்மை பெறுதல் கூடும்.
தேவதேவனின் கவிதைகள் படிமங்களால் மட்டுமே அழகு பெறுவன என்ற கருத்து முழுமையானதல்ல. அபூர்வ தருணங்களையும் புல், புழு, மரம், செடி, கொடிகளோடு ஒன்றிவிடுகிற தாய்மையையும் தேவதேவனாக நான் காண்கிறேன்.
ஒரு பெருமரம் புயலில் சாய்ந்து கிடக்கிறது, தேவதேவனுக்குள் இருக்கும் எல்லையற்ற பரிவு, தாய்மை விழித்தெழுகிறது. அதனைப் பலர் உதவியுடன் நிமிர்த்த முயல்கிறார். அடுத்த நாள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் என வெட்டப்பட்டு வீதியோரம் கிடக்கிறது மரம்.
“முழு விருக்ஷத்திலிருந்து முறிந்து விழுந்த கிளையினைப் போல்
நானும் எனது குழந்தையும்’’
என்கிறார் கவிஞர். மரத்தின் உறுப்புகளாகிவிடு கிறது கவிஞரின் மனம்.
இன்னொரு கவிதையில் (இலையசைவு) மழைநீர் சுமந்த இலை அந்தச் சுமையை உதிர்த்து விடுதலையடைகிறது. பின்னர் ஒரு தலையசைப்பைச் செய்வதுபோல் அது அசைகிறது. எப்படி?
“ஒரு நீண்ட கிளையின் சில உறுப்பு
தான் என ஒரு கணமும்
முழுமுதல் என ஒரு கணமும்”
அசையும் கலை தன் தனித்தன்மையையும் உணர்கிறது. தான் ஒரு முழுமுதலின் ஒருங்கிணைவு என்ற பொதுத் தன்மையையும் உணர்கிறது. இந்த நுட்பம்தான் தேவதேவன்!

இயற்கையின் முகத்தில் விழும் எந்தக் கீறலையும் சகித்துக்கொள்ள முடிவதில்லை தேவதேவனால். ஆதங்கமும் ஆத்திரமும் லைபாய்கின்றன அவர் எழுத்துக்களுக்குள். உருக்குலைந்த நதியின் கரைகளில் நடந்து போகிறார்.
“வழிநெடுக
கடவுளின் பிணம் நாறும்  கோயில்களில்
நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி ஜனத்திரள்
நவீனத் தொழில்நுட்ப வசதிகளால்
அலங்கரிக்கப்பட்ட கல்லறை வீடுகள்
உலகப் பொருள்களின் சந்தையான
நகரின் பிரதான சாலையூடே
அஞ்சி ஊளையிட்டுக்
கொண்டோடும் காற்று”
இவற்றிலிருந்தெல்லாம் தப்பித்துப் போகும் கையறு நிலையே தேவதேவனின் கவிதைக் குரல்.
இயந்திர நாகரிகம் சிதைத்துப் போட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க இயலாமையைக் கவிஞன் எப்படிப் பிரதிபலிப்பான்? ஆதி மூதாதை வள்ளுவனுக்கு வந்ததே ஆத்திரம்  பரந்து கெடுக உலகியற்றியான்’ என்று. அந்தப் பரம்பரைச் சினத்தில் கனல்கிறார் தேவதேவன். ‘கடவுளோடு நடந்த சம்பாஷணையிலிருந்து சில வரிகள்’ என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:
“உம்மை
எரித்துக் குவிக்கின்றன
என் கவிதைகள்
அப்போதும் உமது சாம்பலை
எடுத்துப் பூசிக்கொள்ளும்
பக்தனில்லை நான். எனினும்
அதிர வைக்கிறதய்யா
உமது சாம்பல்.
திரும்பத் திரும்ப
நடமாடும் கழிபோல் வந்து
‘நான்’ ‘நான்’ என வந்து
அவதரிக்காதீரும் இனி
கவிதையின் அடித்தல் கோடானது
சிலுவையின் குறுங்கட்டையாகி
உம்மை அறையும்.”
இந்தச் சீற்றத்தில் ஒரு கடவுள் நம்பிக்கையாளனும்கூடப் பங்கெடுத்துக் கொள்ளமுடியும்.
தேவதேவன் தன்னை இயற்கையின் அங்கமாய் உணர்ந்துகொண்ட வித்தியாசமான கவிஞர். புது வீடு கட்டிக்கொள்கிறார். அதில் மொட்டைமாடி உண்டு. அருகில் ஒரு மரம் கிளை பரப்பி நிற்கிறது. மரம் வேறு தான் வேறாய் உணராத கவிதை மனம், அந்த மொட்டை மாடியில் அமர்ந்து அசைகிற மரத்தைப் பார்க்கிறது. அத்துவிதம் ஒரு சித்துபோல் அவரை அசைக்கிறது.
“இரண்டடி இடத்தையே
எடுத்துக்கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி.”
இன்று மானுட இரத்தம் ஒரு கழிவு நதியெனத் தமிழகத்தின் வீதிகளை நனைக்கிறது. வெட்டி வீழ்த்தப்பட்ட உடல்கள் கணநேர வேடிக்கைப் பொருள்கள் மட்டுமே. பரிவின் நிழல் கவியாத பெரும் பாலைகள் ஆகிவிட்டன நம் மாநகரங்கள். பலப்பல ஆண்டுகள் முன்பு தேவதேவன் எழுதிய ஒரு கவிதை ‘படுகொலை மாநகர்.’
“நாற் சந்தியில் பட்டப் பகலில்
கைவேறு கால்வேறு தலைவேறாய்
கொலைப்பட்டுக் கிடக்கும்
மனிதனைக் கண்டு
அதிர்ச்சி அடைவதே இல்லை
இந்நகர மக்கள்”
அவர்கள் நடந்துகொள்ளும் முறையைக் கவிஞர் துல்லியமாகச் சித்திரப்படுத்துகிறார். தேவதேவனின் தீர்க்கதரிசனமோ இது?
“கொலைப்பட்டுக் கிடந்த
கோரத்தை வந்து
சுவாரஸ்யத்துடன் மொய்க்கும்
ஈக்கள் தாம் நம் மக்கள்
வெறும் ஈ விரட்டிகள் தாம்
இந்தக் காவல் துறையினர்”
ஹிரோஷிமாக்களும், நாகசாகிகளும், ஆஸ்விட்சும் மானுட பயங்கரங்கள்தாம். அவை இன்றுவரை மனித மனச்சாட்சியை அலைக்கழிக்கும் அடையாளச் சின்னங்கள். ஆனாலும் நம் நகரங்கள்?
“எத்தனை வெட்டுக்களாலும்
கொல்லவே முடியாத உயிர்
இந்த நகர்”
தேவதேவனின் எழுத்துகள் அருள் வந்தவனின் உச்சாடனம் போல் அதிர்ந்து ஒலிக்கின்றன.
அவலமும் சோகமும் மரணமும் ஆட்டிப் படைக்கும் வாழ்க்கை குறித்த ஈரப் பதிவுகள் தேவதேவனின் கவிதைகள். இந்த வாழ்க்கையில் ‘இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்று சங்கப் புலவனைப்போல் மன்றாடுகிறார் தேவதேவன்.
“உனக்குச் சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்குச் சூரியன்
உதாரணமாக
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு நண்பனின் முகம்
ஒரு டம்ளர் தண்ணீர்
ஒரு கண்ணாடி”
இவற்றில் மகிழ்ச்சியின் கிளர்ச்சியை நீ அடைய முடியாவிட்டால், “நீ இருக்குமிடம் ஒரு சூர்ய மறைவுப் பிரதேசம்’’ என உணர்த்துகிறார் தேவதேவன்.
இன்றைய நவீன கவிதையில் தேவதேவன் ஐயத்துக்கு இடமின்றி ஒரு ‘துருவ நட்சத்திரம்.’
தேவதேவனைப் போல் உயர்ந்திருக்கவேண்டிய சூத்ரதாரி (கோபால கிருஷ்ணன்) ஏனோ கவிதைக் களத்தைப் புறக்கணித்துப் போய்விட்டார். அவருடைய
‘குரல்களின் வேட்டை’ இன்னும் நம்மை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. நாவல் உலகம் கொள்ளை கொண்டுவிட்ட நல்ல கவிஞர்களில் ஒருவர் கோபால கிருஷ்ணன் அரிய அனுபவங்களின் நீள்திரை நிழல்கள் அவர் கவிதைகள்.
பாழடைந்த பழைய சிற்ப மண்டபம் பற்றி ஒரு கவிதை.
“சலங்கைகள் பேசும்
ஆதி மண்டபம் சப்தங்கள் நிறைந்தது
இடது பாதம் உதைத் தெறிந்த
பிரபஞ்சப் பந்து
அந்தரத்தில் மிதக்கிறது இன்னும்
விரிகுழல் அலைந்து
தடக்கரம் நெளிந்து
பிறந்த நதிகள் கரைபுரண்டோட
காதிலாடும் மகர குண்டலங்கள்
காலத்தை விரட்டும்”
இப்போது மௌனமாகக் கிடக்கும் சிதைவுகளின் கிடங்கிலிருந்து ‘உளியின் விசும்பல்’ சன்னமாய்க் கேட்கிறது.
உங்கள் உளியின் விசும்பல் உங்கள் காதில் விழவில்லையா கோபாலகிருஷ்ணன் (சூத்ரதாரி)?

- தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions