c சிறுகதை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறுகதை

கஜிகஜி புடவை

உமாமோகன்

“ஐயோ... ஒரு தடவ நனச்சாலே  இப்பிடி ஆயிட்டா” பளபளவென்ற இளம் சந்தன நிறத்தில் பச்சைப் பூக்கள் இறைந்த அந்தப் புடவை எப்படி ஊரையே கொள்ளையடித்தது. இன்று தண்ணீரில் போட்டதும் பச்சை கலங்கி இளம் சந்தனத்தில் இறைந்து... அதன் அழகும் கவர்ச்சியும் இவ்வளவுதானா.
இரண்டு மூன்று வருடங்களாக இழுபறியில் கிடந்த தனலட்சுமியின் மாமனார் ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்திருந்தார். பழைய பகையை மாற்ற யாருக்கும் மனமில்லை. மூத்த சம்பந்தி வீட்டுக்கு ஆள் விடவே இல்லை. மாங்கு மாங்கென்று செய்யவேண்டிய வேலைகளுக்கு நடுவில் விட்டுப்போகும் தாய் வீட்டுப் பாசம் பற்றிக் கவலைப்படக் கூட தனத்துக்கு நேரம் கிடையாது.
ஆனாலும் மற்ற இரண்டு மருமகள்கள் வீட்டி லிருந்தும் ஆட்கள் வந்தார்கள். சம்பந்திக்கு வாய்க்கரிசி, கொட்டு, தப்போடு வந்து மாலை போட்டார்கள்.
வருபவர்களிடம் துக்கம் கொடுப்பதும், காப்பி, டீ என்று உபசாரம் செய்வதுமாகப் பரபரப்பாக இயங்குவதன் மூலம் தன் மனக்குறையை மறைத்துக்கொண்டிருந்த தனத்துக்கும், மாமியார் வீட்டு உறவுமுறைகளுக்கும் ஆச்சர்யம் தரும்படி மீண்டும் தப்பு சத்தம் கேட்டது.
தனத்தின் தாய்மாமன் மகளும், தன் அக்கா மகளுமான ரஞ்சியைக் கட்டியிருந்த மூர்த்தி சித்தப்பாதான் வாய்க்கரிசி மாலைகளோடு வந்து கொண்டிருந்தார்.
இழுபறியாகக் கிடந்து ஒரு வழியாகப் போன மாமனாருக்கு மூத்த மருமகள் திடீரென இவ்வளவு பெரிய ஒப்பாரி வைப்பதை ஊர்சனம் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இழவு வீட்டில் தலை காட்டிவிட்டு குளித்து முழுகி சமையலில் இறங்கிவிட் டிருந்த தெருப்பெண்கள் கூட எட்டி நின்று, தனம் தன் சார்பில் எடுத்துவரப்பட்ட வாய்க்கரிசியை எதிர்கொண்டு மாரடிப்பதை வேடிக்கைப் பார்க்கலாயினர்.
பிணம் தூக்கியதும் ஊருக்கும் உறவுக்கும் சமைத்துப்போட சம்பந்திகள் செலவில் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. கோட்டு அடுப்பு அருகே மேற் பார்வையில் இருந்தவர்களிடம் போனார் மூர்த்தி சித்தப்பா. மூத்த மருமகள் சார்பில் தானும் பங்கு தருவதாக இணைந்துகொண்டார்.
தன் மாமனார் வீட்டுக்குச் சொல்லியனுப்ப தாய் ஒப்பமாட்டாள். சொன்னாலும் மோடுமுட்டி மச்சினன்கள் அசிங்கப்படுத்திவிட்டால் என்ன செய்வது என்று தம்பிகள் முன் பம்மிப் பதுங்கிக் கொண்டிருந்த தனத்தின் கணவர் ராசவேலு திடீர் கம்பீரத்துடன் மூத்தமகன் ஸ்தானம் அப்போதுதான் தனக்குக் கிடைத்ததுபோல ஏதேதோ பேசிக்கொண்டு திரிந்தான்.
மறுநாள் பால் தெளித்து வந்ததும் காரியம், எட்டுப்படையல் பற்றிப் பேசிவிட்டு எல்லோரும் புறப்படலாம் எனத் தீர்மானமாயிற்று.
“சம்பந்தி பலகாரம் தனித்தனியா பண்ண வேணாம். ஒண்ணா சேந்து செஞ்சு, வர்ற கூட்டத்துக்குத் தக்கன பிரிச்சுக் குடுத்துடலாம்.”
தன் தந்தை முன்மொழிந்த பெருமிதத்தில் இரண்டாவது ஓர்ப்படி ரத்னா, “ஆளு வேணும்னா இஞ்சையே வெச்சி செஞ்சிடலாம்பா. எங்கியாச்சும் செஞ்சி தூக்கிட்டு அலைய வேணாம். எப்பிடியும் கருமாதி சமையலுக்கு கோட்டடுப்பு போட்டாவணும். அதுக்கு வர்ற சமையக்காரன் கிட்டயே கூட பேசிக்கலாம்” என்றபடியே துணி உலர்த்தலானாள். இதில் தான் சொல்ல என்ன இருக்கிறது என்பதுபோல் துணியைப் பிழிந்துகொண்டே இருந்தாள் தனம்.
“ரத்னா சொல்றமாதிரி இங்கியே ஏற்பாடு பண்ணி செலவப் பிரிச்சுக்கலாம். நீங்கள் லாமாவது இங்ஙனக்குள்ள சாலியமங்கலம், பரவக்கோட்டைன்னு இருக்கீங்க. நா இருக்க ஊருல இருந்து கள்ளக்குறிச்சி வந்து சேரவே போறும் போறும்னு ஆயிடும். அப்புறம் ஒவ்வொரு பஸ்ஸா ஏத்தி எறக்கணும். அதான் போவுதுன்னா, யாரு செஞ்சத யாருக்குக் குடுத்தாங்க, யாருக்குக் குடுக்கலன்னு பிரச்சன வேற வரும், தனித்தனியா செஞ்சா” மூர்த்தி சித்தப்பா பேசிக்கொண்டே இருந்தார்.
தன் தந்தையினதும், தனதுமான யோசனைகளை அப்படியே ஏற்ற மூர்த்தி சித்தப்பாவின் மேல் ரத்னாவுக்கு திடீர்ப்பாசமே பெருகிவிட, “நல்லா சொன்னீங்க” என்று ஒரு ஆமோதிப்பைப் போட்டாள்.
வழியனுப்ப வந்தபோது கிடைத்த தனிமையில், “ஏன் ரஞ்சி, ஒரு தரம் இஞ்ச நீடாமங்கலம் வந்துபோறதே உனக்கு கஷ்டம். இப்ப மத்த செலவு வேற செஞ்சிருக்கீங்க. கருமாதிக்கு வேற சம்மந்தி மொற எல்லாம் இழுத்து வுட்டுக்கணுமா” கேட்காமலிருக்கக் கூடாதே என்ற தொனியில் இழுத்தாள் தனம்.
கல்யாணம் ஆனதிலிருந்தே மாமனார் வீட்டுக் கௌரவம் என எதையும் பெறாமலிருந்தவனுக்கு இன்றைய நடப்பு என்னவோ பெருமையாய் இருந்தாலும் ஒப்புக்கு “அதானே” என இழுத்தான் ராசவேலு.
“இருக்கட்டும் அத்தாச்சி. பெறத்தியாருக்கா செய்யிறேன். நீ அத்த மவ. நா மாமன் மவ. மாமாவும் ஒனக்கு சித்தப்பா மொறதானே. நீ எதுக்கு நாலுபேரு மின்னாடி நாதியத்தவளாட்டம் நிக்கணும்.”
“ஆமா தனம். மாப்ள நீங்க எதுவும் யோசிக்காதீங்க. இதுக்கெல்லாங்கூட இல்லாம அப்புறம் என்ன ஒட்டு ஒறவு” சித்தப்பா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே டவுன் பஸ் நெருங்க ஓடிப்போய் நிறுத்தினான் ராசவேலு. “வாங்க வாங்க, இதவுட்டா ஒரு மணி நேரம் ஆவும் அடுத்த வண்டிக்கு.”
மாமியார்க் கிழவிதான் மெல்ல ஆரம்பித்தாள். ஆறாம் நாள் அந்தி அழுகை முடிந்தபின் விளக்கில் எண்ணெய் விட்டபடியே,  “பலவாரம் செய்யிறதப் பத்திதான ஒங்க சித்தப்பாரு சொன்னது. துணிமணியும் எடுக்குறேன்னு ஏதாச்சும் சொன்னாவொளா.”
“துணிமணியா, யாருக்கு”
“யாருக்கா. நல்லாருக்குடி நாயம். ஒனக்கு, ஒம்புருசன், புள்ளகுட்டிக்கி எடுக்க வேணாமா. என்னமோ ஊரு ஒலகத்துல எதையும் பாக்காதவ மாதிரி கேக்குற.”
கவனித்தபடியே கவனிக்காததுபோல் மாவு இடிக் கவும் சலிக்கவுமாக உட்கார்ந்திருந்த ஓர்ப்படிகளைக் கடந்து ஏதோ வேலையிலிருப்பதுபோல் நகர்ந்தாள் தனம்.
நடந்துகொண்டிருப்பதே சித்தப்பாவுக்கு பெரிய செலவு. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் வேலை. அவருடைய சொந்த அக்கா தங்கச்சி நாலுபேர், அண்ணன் வீடு என்று பலபேருக்கு நல்லது கெட்டது செய்யும் கடமை. வசதியில்லாத மூத்த அக்காள் மகளான ரஞ்சியை மணந்துகொண்டு அந்தக் குடும்பப் பொறுப்பே இவர் தலையில். ஒன்றுவிட்ட அண்ணன் மகளுக்கு இவ்வளவு செய்வதே பெரிய விஷயம். இதில் துணிமணி வேறு எடுக்கிறாயா என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது. எப்போதோ திருமணம் ஆன புதிதில் கவைக்கு உதவாத சண்டையைப் போட்டு, இதுதான் சாக்கு என விலகிக்கொண்டுவிட்ட அண்ணன்கள் இருவரும் இதோ கும்பகோணத்தில்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். எதுவுமே தெரியாமலா இருக்கு.
மறுநாள் மீண்டும் கிழவியே தொடங்கினாள் யாருமற்றபோது சற்றே தணிவாக.
“அவ்வோ எடுக்காட்டி. நீ ராசுகிட்ட சொல்லியாச்சும் எடுத்தாந்து வெச்சிரு. எல்லாரும் சபைல வெச்சி, புதுசு மாத்திகிட்டு வர்றப்ப நீயும் புள்ளவோளும் பிக்காரிங்க மாறி நிக்க வேணாம்.”
ராசுவின் கருத்தோ வேறு மாதிரி இருந்தது. பொதுவில் காரிய வரவு செலவு நடக்கும்போது, தன் மனைவி மக்களுக்கு மட்டும் போய் எடுத்து வந்தால் சரியாயிருக்காது என்றான். பேசாதிருந்த தனத்தை சமாதானப்படுத்தும் படியாக, “மூர்த்தி மாமா வரட்டும் பாப்போம். எடுத்துட்டு வந்தா சரி. இல்லன்னா பட்டுன்னு ந்தாருக்கு நீடாமங்கலம். போயி வாய்ண்ட்டு வந்துறலாம். இப்ப நாமளும் எடுத்து வெச்சி, அவ்வொளும் வாய்ண்ட்டு வந்தா ஒட்டிக்கு ரெட்டியா தான போவும்”.
ரஞ்சி வந்து இறங்கி, பையைப் பிரித்தபோது, சூழலே மாறிவிட்டது.
“கள்ளக்குறிச்சில கூட சரிவராதுன்னு மாமா கடலூருக்குப் போயி வாய்ண்ட்டு வந்துச்சி அத்தாச்சி.”
மகிழ்வோடு அவள் பரப்பிய ஆடைகள் நவநாகரீகமாக மின்னின.“கஜிகஜின்னு பேரு சொன்னாவொளாம். நல்லாருக்கா பாரு அத்தாச்சி”.
இளம் சந்தன நிறத்தில் அழுத்தமான பச்சைநிறப் பூக்களும், தாழம்பூ பார்டருமாகக் கண்ணைப் பறித்தது புடவை. மற்ற மருமகள்களின் சீரில் இருந்த புடவைகள், மன்னார்குடியும் பட்டுக்கோட்டையுமாக பெரும்பூக்களும், அழுத்தமான வண்ணங்களுமாக நைலக்ஸ் ரகங்கள். பெயர் எதுவும் பிரத்யோகமாக சூட்டப்படாதவை. வாயில் நுழையாத பெயருடன் மின்னும் தனத்தின் சேலையை, பலகார வேலையை மேற்பார்வைசெய்து கொண்டிருந்த ஒவ்வொருத்தியும் மாற்றி மாற்றி வந்து வியந்து ரசித்துப் போனார்கள்.
உறவும், ஊர்ச்சனமும் வரவர, முறைவிட்டுப் போகாமல் செய்ய வந்திருக்கும் ரஞ்சி புகழையும் பாடி, புதுரக சேலையையும் எடுத்துக்காட்டி பெருமையடித்துக் கொண்டதில் அந்தியழுகை நேரத்தையே சற்று தவறவிட்டுவிட்டாள் கிழவி.
எல்லாம் முடிந்து, மோட்ச தீபத்துக்காக கோயிலுக்குப் போய்க் கற்பூரம் ஏற்றித் திரும்பிய நாளன்று குங்குமம் பட்டுக் கறை போலிருக்க நனைத்து எடுத்தால்,“அட சாயம் போவுதுடியோவ்” முற்றத்தில் உட்கார்ந்திருந்த மாமியார்தான் பிழியும்போது சொட்டிய நிறம் பார்த்துக் கூவினாள்.
மாமனார் செத்துபோவதைவிட அதிகம் பேர் துக்கம் விசாரிப்பதாகத் தோன்றியது தனத்துக்கு.
ரத்னாதான் அந்த அபூர்வ யோசனையை வெளியிட்டவள்.
“இதே நம்ம கொரடாச்சேரி கடையா இருந்தா சும்மா வுடுவமா. அட மன்னார்குடி, கும்மோணமாவே இருக்கட்டுமே. அவங்கிட்ட கொண்டே போய்ட்டு ஒருவழி பண்ணிற மாட்டோம்? நம்மூட்டு காசு என்ன எறஞ்சா கெடக்குது?”
அவ்வளவுதான். மாமியாரின் ஆலோசனை கொடி பிடிக்க ஆரம்பித்தது.
“ஒங்க சித்தப்பாருக்கு மட்டும் என்ன கொட்டியா கெடக்கு. பள்ளியோடத்துல தொண்டத்தண்ணி வத்த வத்த கத்தி வர்ற காசு. கரைச்சு வுட்டுற முடியுமா. ஏன் வுடணுங்கறேன். தீவாளிக்கு வருவாவோள்ள, குடுத்து வுடு. அந்த கடக்காரன் மோரையிலையே வுட்டேரிஞ்சு, வுண்டு இல்லன்னு ஆஞ்சு புடுவா ரஞ்சி. கெட்டிக்காரி. அவ போவாம ஒங்க சித்தப்பா மட்டும் போயிதான் ஏமாந்துட்டாரு. என்னமோ ஒரு வாயில நொழயாத பேற வெச்சி கசிகுசின்னு தலையில் கட்டிட்டானுவோ. கூட அம்பது நூறு போடடிருந்தா அம்மையப்பன்ல சொல்லி பட்டுப் பொடவையே வாங்கியிருக்கலாம்.”
சித்தப்பா மேல் உண்மையில் பரிதாபமா, ரஞ்சிமேல் உண்மையில் பெருமையா, தன் புதுப்புடவைமேல் உண்மையில் அக்கறையா. இல்லை வந்த வரவு நஷ்டப்பட்டுவிட்ட எரிச்சலா. புரியவில்லை. ஆனால் இது நிற்காது. எங்கே ஆரம்பித்தாலும் இனிமேல் இங்கேதான் முடியும்.
அதேதான் நடந்துகொண்டிருந்தது. அய்யோ சித்தப்பா ஆசையாய் செய்தும் இப்படித் தேவை யில்லாமல் அரைபடுகிறாயே. சும்மா இருந்திருந்தால் கூட தாய் வீட்டோடு உறவு இல்லாததால் ஒன்றும் நடக்கவில்லை என்ற சாடைப் பேச்சுகளோடு போயிருக்குமே என்றெல்லாம் தனம் புழுங்கிக் கொண்டிருந்தாள்.
சொன்னமாதிரியே தீபாவளி துக்கத்துக்கு வந்த ரஞ்சியிடம் மடித்து வைத்திருந்த புடவையை முதல் வேலையாக எடுத்துவரச் சொல்லி நீட்டிவிட்டாள் மாமியார். இவ்வளவு களோபரத்திலும் அந்தக் கடையின் பை ஒன்றை பத்திரமாக எடுத்து வைத்திருந்து ரத்னா நீட்டினாள்.
“எப்பயோ வாங்குனத. எப்பிடி ரஞ்சி மாத்துறது. இவ்வோ பேச்செல்லாம் காதுல போட்டுக்காத நீ. ரெண்டு நாளு சொல்லியிட்டுருப்பாவோ. அப்புறம் சரியாய்ரும்”.
“இல்ல அத்தாச்சி. பெரியம்மா சொல்றதும் சரிதான். மொறை செய்யாம வுட்டுருந்தா கூட பரவால்ல. பொறந்த வூடுன்னு ஊர் மெச்சுறதுக்காவ சபைல வெச்சிட்டு, இப்ப எப்பிடியோ போன்னு இருக்க முடியுமா? மாமாவ போயி கேக்க சொல்லுறேன். மாத்திக்கலாம் அத்தாச்சி”.
அடுத்து பொங்கல் துக்கம். ரஞ்சிக்கு உடல்நிலை சரியில்லையென்று. சித்தப்பா மட்டும்தான் வந்தி ருந்தார். வந்து சற்று நேரத்தில் மெல்ல மாமியார் ஆரம்பித்துவிட்டாள். எப்படியோ கோர்த்து வாங்கி, விஷயத்தை கருமாதிப் புடவையில் கொண்டுவந்து சேர்க்க. சித்தப்பா ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.
“அடடே. மாத்திட்டேன் அக்கா. அந்தப்பை அக்கா வூட்லயே மறந்துட்டு வந்துட்டேன். ரஞ்சி தம்பி தாஸ் பய ஓயாம நீடாமங்கலத்துக்கு வருவான். கொண்ணாந்து தரச் சொல்லிடறேன்”.
வெளியில் கிளம்பி நிற்கும்போது தனத்திடமும் அதையே சொல்லிப் போனார். சொல்லிய விதம் நிஜம் மாதிரியும் இருந்தது. இல்லாத மாதிரியும் தோன்றியது.
நான்கு நாளிலேயே தாஸ் ஒரு பையைக் கொண்டுவந்து கொடுத்தான். கடலூர்க்கடையின் பெயர் போட்ட ஒரு மஞ்சப்பையில் அழுத்தமான காப்பிப் பொடி நிறத்தில் பெரிய பூக்களுடன் புல்வாயில் சேலை பளிச்சென்று சிரித்தது. ஏதோ தானே கட்டிக் கொள்ளப்போவதுபோல சந்தோஷப்பட்டுக் கொண்டாள் கிழவி.
அடுத்து வந்த உறவுக் கல்யாணத்தில் பார்த்தபோது மூர்த்தி சித்தப்பாவைப் பாராட்டித் தள்ளினான் ராசவேலு. “எப்பிடி மாமா. அத்தினி மாசங்கழிச்சி போயி மாத்துனீய. கடக்காரன் நம்புனானா. சண்ட போடடியளா”.
வழக்கம்போல சிரித்துக்கொண்டே “ஒண்ணும் பெரச்சினயில்ல மாப்ள. மனுஷன் தராதரம் தெரியாதா, யாவாரியா இருந்தாலும்” என்று முடித்தார் சித்தப்பா.
தன்னால் மேலும் நஷ்டமோ கஷ்டமோ அடையவில்லை என்ற எண்ணத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டாள் தனம்.
அடுத்த ஓரிரு மாதங்கள் அந்தப் பெருமூச்சு நீடித்தது. மன்னார்குடியில் மாமா ஒருவர் போய்ச்சேர எப்படியும் விடிந்துதானே எடுப்பார்கள் என வேலைகளை முடித்துக்கொண்டு பின்னரவில் போய் இறங்க அழுது முடித்து மூக்கைத் துடைத்து திரும்பியபோது இளஞ்சந்தன நிறத்தில் பச்சை இறங்கிய தாழம்பூ கரைபோட்ட கஜிகஜி சேலையில் ஒருத்தி சுவரோரம் ஒருக்களித்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“யாரு சின்னம்மா அது”
“ஏ என்னா இப்புடி கேக்குற. உம்ம மாமன் மவ ரஞ்சிதான். மாறி மாறி பஸ்சு புடிச்சி வந்தது முடியலன்னு இப்பதான் செத்த சாஞ்சா.”
தண்ணீர் குடித்து அழுகையை ஓய விட்டபின் தனம் ஏன் இப்படிப் பெரிதாக அழுகிறாள் என விழித்தாள் சின்னம்மா.


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions