c நமது நூலகம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நமது நூலகம்

வாழக் கற்றுக் கொடுக்காத கல்வி

பேராசிரியர் நா.முத்துநிலவன், தன் ஆசிரியப் பணி மூலம் பெற்ற நேர் அனுபவங்கள் மற்றும் தம் கல்விச் சிந்தனைகளைக் கொண்டு அடைந்த கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தொடர்ந்து மேடைகளில் பேசிக்கொண்டும், இதழ்களில் எழுதிக்கொண்டும் இருப்பவர். சமூக முன்னேற்றம் கருதி உழைத்துக்கொண்டிருக்கும், சிந்தனையாளர் என்பதை அறிவுலகம் அறியும்.
நா.முத்துநிலவன் அவர்களின் அண்மை வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே’ எனப் பெயரிய கட்டுரைத் தொகுப்பு, மிகப் புதிய, மிகவும் கவனிக்கத்தக்க அனுபவக் கருத்துக்கள் கொண்டு வெளிவந்துள்ளது.
2009இல் சமச்சீர் கல்வி அறிவிப்பு வந்து, பாடத்திட்டம் தயாரிக்கும் காலத்தில் அதில் பாடம் எழுதும் பொறுப்பில் முத்துநிலவன் சேர்க்கப்பட்டார். தமிழ் 6ஆம் வகுப்பில் முதல் பாடமாக இருந்த உ.வே.சா.  பற்றிப் பாடம் வைக்கப்படவும் இவர் காரணமாக இருந்தார். அந்தச் சூழலில் இடம் பெற்ற ஒரு விவாதம் பற்றி இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
பாரதிதாசனின் ‘மழையே மழையே வா வா, நல்ல வானத் தமுதே வா வா’ என்ற பாடலை வைக்கலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார் முத்துநிலவன். ஆனால் குழுவின் தலைவர், அப்பாடல் மெட்ரிக் பள்ளிக்கும் பிரச்சனை இல்லாத பாடலாக இருக்கவேண்டும் என்றார். பிரச்சனை என்னவென்றால்,  ‘Rain Rain go away’என்கிற ஆங்கிலப் பள்ளியில் இம் மழைப்பாடல் முரண்படும் என்பதே தலைவரின் கவலை. முத்துநிலவன் பல நியாயங்கள் சொல்லி, மழைப் பாடலைச் சேர்த்து இருக்கிறார்.
“சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள், ஆசிரியர்கள் வழியாகப் பாதியும், ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாக மீதியும் கற்றுக் கொள்வதுதான் உண்மையான கல்வி அறிவு’’ என்று தெளிவாகச் சொல்லும் ஆசிரியர், அப்பாவும் அம்மாவும் கற்றுத் தர முடியாத பல விஷயங் களைக் கற்றுத் தரும் இடம்தான் பள்ளிக்கூடம் என்றும் கூறுகிறார்.
தொலைக்காட்சி ஊடகங்களில் தம் மேன்மையான அறிவையும் படிப்பையும் வெளிப்படுத்திச் சிறப்பு பெறும் பதின்பருவ மாணவர்களை வியந்து பாராட்டும், ஆசிரியர், வெளியில் உலவி, பிறரோடு பேசிக் கலந்து, கற்று, மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய மாணவர்கள் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று வீட்டுக்குள் உட்கார்ந்து உருப் போடுவதையும் கவலையுடன் பதிவு செய்கிறார்.
“முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும், விளையாட்டு, ஓவியம், இசை முதலான பலப்பல வகுப்புக்களையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதானே? பல பள்ளிகளில் அரசாங்கப் பாடத் திட்டத்தில் இருக்கும் ஓவியம், விளையாட்டு, சுற்றுச்சூழல் வகுப்புகளே நடத்தப்படுவதில்லை. ஒரே புத்தகத்தை இரண்டு வருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளி பிசகாமல் வாந்தி எடுத்து எழுதிக் காட்டுவதும் நடப்பதுதானே? பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத் திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம்’’என்கிற முக்கிய கல்வி இலட்சியத்தை, அதை அடைய முயற்சியே செய்யாத கல்விச் சூழலை, மிகவும் வருத்தமுடன் பதிவு செய்கிறார் ஆசிரியர்.
வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமல் போகக் காரணம், நம் பள்ளிகளும் கல்லூரிகளும் செய்யும் விதத்தை எடுத்துச் சொல்லும் ஆசிரியர், வளரும் சமுதாயத்தின் மீது அக்கறைகொள்ள சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டுகிறார்.
“எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நான் இன்றே நம் சிறுவர்கள் அந்நிய மொழி மூலம் கல்வி கற்பதை நிறுத்தி விடுவேன். தாய்மொழி மூலம் கற்பிக்கக் கட்டளை இடுவேன். இம் மாற்றத்தை எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்’’ என்று சொன்ன காந்தியின் கருத்தை உளப்பூர்வமாக ஏற்று, அதன் பயன் குறித்தும், பல பக்கங்களில் பேசுகிறார் ஆசிரியர்.
அண்மைக்காலத்தில் வெளிவந்த கல்வி குறித்த, சமூக அக்கறை கொண்ட நூல்களில், நா.முத்துநிலவன் அவர்களின் இந்த ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே’ என்ற புத்தகம் மிகவும் சிறந்தது.

நூல் : முதல் மதிப்பெண்
எடுக்க வேண்டாம் மகளே,
ஆசிரியர் : நா. முத்துநிலவன்,
வெளியீடு : அகரம், மனை எண்: 1,
நிர்மலா நகர், தஞ்சாவூர் -613 007
பக்கம் : 160 விலை: ரூ.120/-
பிரமன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions