c ஞானக்கூத்தன்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஞானக்கூத்தன்

பிறப்பும் இருப்பும்

கவிஞர் ஞானக்கூத்தன் (1938-2016) ஜூலை  மாதத்தின் கடைசிப் பொழுதுகள் ஒன்றில் மறைந்துவிட்டார். தகவல் கிடைத்தபோது திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் காலைக் காஃபிக்காக அமர்ந்திருந்தேன். தமிழ்மணவாளன் புத்தகம் வெளியீட்டு விழாவில், அண்மையில்தான் நானும் அவரும் கலந்துகொண்டோம். நிறைய பேசிக் கொண்டிருந்தோம். பார்த்தசாரதி கோயில் யானையும் அதோடு சேர்த்துக் கட்டமைக்கப்படும் பாரதியின் கதைகளையும் பற்றி அப்போதைய பேச்சு அமைந்திருந்தது. பேராசிரியர் மணிகண்டன் அவ்விஷயம் பற்றிச் சிறப்பாக ஒரு புத்தகம் எழுதியிருப்பதை அவருக்குச் சொன்னேன். அவரும் அதைப் படித்திருந்தார்.
புத்தக வெளியீட்டு விழா முடியும் முன்பாக அவர் புறப்பட்டுவிட்டார். அப்படியெல்லாம் அவரசப்படுபவர் இல்லை அவர். இலக்கியக் கூட்டம் முடிந்த பிறகு, எழுத்தாளர்களின் தனிப்பட்ட பேச்சில்தான் பெரும்பாலும் இலக்கியம் மிளிரும் என்றாலும், களைப்பாக இருக்கிறது, புறப்படுகிறேன் என்றார்.
ஞானக்கூத்தனின் முதல் கவிதைத் தொகுதி வெளிவந்தபோது (1973), பார்வையாளராக அக்கூட்டத்தில் நான் இருந்தேன். ‘அன்று வேறு கிழமை’ என்ற பெயரிய அத்தொகுதி தமிழ்க் கவிதையின் நெடும் பரப்பில் மிகப்பெரும் பாய்ச்சலாக இருந்தது. தமிழின் செய்யுள் இலக்கணத்தின் ஓசையைத் தழுவிக்கொண்டு, உள்ளடக்கத்தில் புதிய நவீன வாழ்க்கையைச் சொல்பவையாக அவர் கவிதைகள் இருந்தன. மரபின் சுமைகளைத் தவிர்த்துவிட்டு, புதிய தளங்களில் அவர் பயணப்பட்டார்.
தமிழ்க் கவிதை மரபில், அதுவும் புதுக்கவிதை மரபில் அங்கதம் எனப்படும் சமூகக் கேலியை அல்லது பகடியைக் கவிதை செய்யும் ஞானக்கூத்தன் சமூக நடப்பின் விமர்சனமாக கவிதைகள் எழுதினார்.
சைக்கிள் கற்றுக்கொள்கிறாள் ஒரு பெண். புதிதாகச் சைக்கிள் கற்றுக்கொள்கிற ஒரு புது சமூக நிகழ்வைத் தன் கவிதைக்குள் கொண்டு வருகிறார். பழைய செய்யுள் தொனிபோல் தோன்றுகிற இக்கவிதைக்குள், பகடியும் நகையும் தோன்றுவதை அவதானிக்க முடியும்.
சைக்கிள் கமலம்
அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்
தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப்படிக்குத் தெருவில் விட்டாள்
கீழ்வெண்மணியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் எரித்துக் கொல்லப்பட்ட துயரத்தைக் குறித்து அவர் எழுதிய ‘கீழ் வெண்மணி’ கவிதை பிரபலமானது.
மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின
புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்
குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்
இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க
ஞானக்கூத்தன் காலத்தில் சத்தான கவிதைகள் எழுதிய பலர் இருந்தார்கள் என்றாலும் கவிதை பற்றியும், எது கவிதை என்பது பற்றியும், கவிதையின் அடிப்படை அலகுகள் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதியவர் அவர் மட்டும்தான் என்பது அவர் சிறப்புகளில் ஒன்று.
அவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று ‘அம்மாவின் பொய்கள்’.
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

- ஒரு இலக்கிய சகா

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions