c மண்ணும் மக்களும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணும் மக்களும்

அமுது

அன்னதானத்திற்கு இன்னொரு பெயர் அமுது.
குடும்பத்தில் வறுமை ஏற்பட்டு சோற்றுக்கே அல்லாடும் சூழல் ஏற்பட்டவர்கள் முருகப் பெருமானிடம், ‘அப்பனே மொட்டையாண்டி, முருகா, எம் பொழப்ப நல்லா மேடேத்தி, இந்த சோத்துப் பஞ்சத்த தெளிய வச்சிட்டா, எஞ் சமுத்துக்கு ஏற்ப ஒனக்கு அமுது படைக்கிறேன் ஆண்டவனே. எம் மக்கள்லாம் பசியில கெடந்து தவிக்கிது’ என்று வேண்டிக்கொள்வார்கள்.
மூன்று மாதமோ ஆறு மாதமோ காடு நன்றாக விளையலாம். ஆடுமாடுகள் ராசி பிடிக்கலாம். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கலாம். வராத பணம் வரலாம். இல்லை என்றிருந்த சொத்து திரும்ப வரலாம். புதையல் மாதிரி ஏதேனும் அதிர்ஷ்டங்கள் கூட வாய்க்கலாம்.
ஆக, ஏதேனும் ஒரு வழியில் தனவரவு ஏற்பட்டு, வறுமை சீராக, சோற்றுப் பஞ்சம் ஒழியும். ஒழிந்துதானே ஆகணும்.
அப்படியொரு நிலைக்கு வந்ததும் ‘இந்த வருசம் முருகய்யாவுக்கு அமுது போட்டுடணும்’ என மொத்தக் குடும்பமும் தீர்மானம் பண்ணிவிடும். பிறகு அதற்கான பணம், அரிசி, காய்கறி சேகரிப்பு, வண்டிமாடு முதலான ஏற்பாடுகள் திட்டமிடப்படும்.
சிலர் புதிதாக நஞ்சை வயல்காடுகள் வாங்குவார்கள். சிலர் புதிதாக கிணறு வெட்டி, கிணற்றில் ஊற்று நன்றாக இருந்து, வெள்ளாமையும் நன்கு பலுவினால் முதல் வெள்ளாமையில் ‘அமுது போடுறேன்ப்பா, முருகனுக்கு அரோகரா’ என சாமிப் போட்டோவிற்கு முன் நின்று வேண்டிக்கொள்வார்கள்.
இந்தமாதிரி வேண்டுதல்காரர்கள் தனது காட்டிலேயே அமுது போடுவார்கள். முதல் வெள்ளாமை அறுவடை செய்ததும் ‘அமுதுக்கு’ என்று ஒதுக்குவதுதான் முதல் வேலை.
எப்போதடா பங்குனி பிறக்கும், பங்குனி உத்திரம் வரும் என்று இருப்பார்கள்.
பங்குனி உத்திரம் வந்தால் இந்த சுத்துப்பட்டே அமுது பற்றியும், முருகன் திருவிழா பற்றியும் பேசிக் களிக்கும்.
பெரம்பலூர் மாவட்ட சுத்துப்பட்டில் செட்டிக்குளம் முருகப்பெருமானின் பங்குனி உத்திரப் பெருவிழாவே மிகப் பிரசித்தம்.
பங்குனி உத்திரப் பெருவிழாவிற்கான மலைக்கோயில் முருகனுக்கு கொடியேற்றத்தன்று அதிகாலையில் மழை ஒரு பாரலாவது வந்தே தீரும். ‘தீட்டுக் கழிக்க வந்துருச்சி பாரு மழ’ என்பார்கள் ஜனங்கள்.  பிறகு கொடியேற்றம். கொடியேற்ற தினத்திலிருந்து வேண்டுதல் குடும்பங்கள், வயல்காரர்கள் விரதத்தை அனுஷ்டிக்கத் தொடங்கி விடுவார்கள். பத்து நாள் திருவிழா. ஒவ்வொரு நாளும் ஜெகஜோதியாக இருக்கும்.
அங்கே முருகனுக்கு தேர் ஓடும் நாளில் இங்கே ஊர்ப்புறங்களில், கிணற்று மேட்டில், வயல் களத்தில் அமுதுப் படையல் போடுவார்கள்.
ஒரு முருகர் படத்தை மேற்கு நோக்கி வைத்து (செட்டிக்குளம் முருகன், மலையடிவாரத்தில் பள்ளி கொண்டுள்ள தகப்பனார் ஏகாம்பரேஸ்வரர் உடனுறைந்த காமாட்சி தாயாரைப் பார்த்தபடி மேற்குநோக்கி இருக்கிறார்) அதற்கு முன்னால் மூன்று இலைகள் போட்டுவிடுவார்கள். நடு இலையில் பல வகை பொரியல், வடை, பாயாச அப்பள அலங்காரத்துடன் அன்னம் அருட்பெருஞ்ஜோதியாய் பாலிக்கப்பட்டிருக்கும். அதற்கு இருபுறமும் உள்ள இலைகளில் காட்டில் விளைந்த வெள்ளாமை தானியங்கள், காய்கறிகள், கனிகள் இருக்கும். இலைகளுக்கும்  முன்னால் ஒரு வல்லம் நிறைய நெல்லும், ஒரு குடம் நிறைய கிணற்று நீரும் வைக்கப்பட்டிருக்கும். அமுது சமைத்த சோற்றுப் பானைகள் இருபுறம் அணிவகுத்து இருக்கும்.
எல்லாவற்றுக்கும் ஊதுபத்தி காட்டி, சாம்பிராணி புகட்டி, சூடமேற்றி, நீர்விலாவி வேண்டி உருகி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி மேற்கு நோக்கி இரு கைகளையும் ஏந்தி ‘முருகா...’ எனச் சொல்லி, வாயில் அன்னம் போட்டு விரதம் முடிப்பார்கள். பிறகு வந்திருக்கும் ஊர் மக்கள் அனைவருக்கும் விபூதி, குங்குமம் வழங்கப்படும்.
பிறகு பந்தி ஆரம்பிக்கும். அனைவருக்கும் அமுது மிகப் பொறுமையாக, நிதானமாக, மிக வாந்துவமாக, முருகனுக்கே பரிமாறுவதுபோல மிக அடக்கமாகப் பரிமாறுவார்கள்.  ஒருவர் அனைவருக்கும் கை கழுவ நீர் ஊற்றிக்கொண்டிருப்பார். அத்தனை மனம் ஒப்பி அமுது படைக்க வேண்டும். அன்னத்தை அதிரப் பண்ணவும் கூடாது, பதறி உண்ணவும் கூடாது.
காலை பத்துமணிவாக்கில் தொடங்குகிற அமுது விருந்து பொழுது முச்சூடும் நடைபெறும். அமுதுண்டவர்கள் திருவிழாவிற்குப் புறப்பட்டுப் போய் செட்டிக்குளம் எம்பெருமானின் தேர்வடம் பிடிக்க அலைமோதுவார்கள்.
இது காட்டில் நடக்கும் அமுது விருந்து.
குடும்ப வேண்டுதல்காரர்கள் கதை வேறு.
முதல் நாள் இரவே வண்டிமாடு கட்டிக்கொண்டு, அரிசி, பருப்பு, குண்டான், சொம்பு, லொட்டு லொசுக்குகளுடன் செட்டிக்குளம் போய்விடுவார்கள். அப்போவெல்லாம் வண்டிமாட்டுக்கு ரொம்ப கிராக்கி. ஒரு மாதத்திற்கு முன்பே சொல்லிவைக்க வேண்டும். வேண்டுதல்காரர்கள் ஊருக்குப் பத்திருபது பேர் இருப்பதுதான் காரணம்.
சுத்துப்பட்டு வண்டிமாடுகளே அன்று இரவு ரோட்டில் சலக்கு சலக்கு என்று போய்க் கொண்டிருக்கும். ஊடே நடைபாதை யாத்திரைவாசிகள் ‘அரகர அரகரோவ்’ என்றபடியே நடந்துகொண்டிருப்பார்கள். நடுநடுவே திருவிழா பார்க்கப் போகும் ஜனங்கள். தாகத்திற்கு சாலைக்கு இருபுறமும் ஆங்காங்கே நீர்மோர் பந்தல்கள். பானகக் கூடாரங்கள். தலைக்கு மேலே பௌர்ணமி பிரசாதம் பொழிந்துகொண்டிருக்கும்.
அன்று ஒரு நாள் செட்டிக்குளம் வரும் சாலைகள் அனைத்தும் தேவலோகத்து வீதிகளாய் களைகட்டும்.
மலையைச் சுற்றி இந்த மாட்டு வண்டிகள்தான் நிற்கும். மாட்டுவண்டியும், மாடும், சலங்கையும் என மங்கல ஒளி வீசும் எங்கும்.  விடிய விடிய அமுது சமைப்பார்கள்.
ஒருபுறம் நல்லதங்காள், வள்ளி திருமணம், அரிச்சந்திரன் சந்திரமதி, கட்டபொம்மன், அர்ஜூனன் தபசு என இருபதுக்கும் மேற்பட்ட கூத்துப் பந்தல்களில் மஞ்சள் ஒளியும், மத்தள தித்துந்தாக்களும்,  ஐஸ் வண்டிகளின் பீப்பீக்களும், கரும்பு வரிசைகளும், தேர்மிட்டாய் கடை களும் சந்தோச கும்மியடிக்க, இன்னொருபுறம் சர்க்கஸ்காரர்களும், ராட்டின ராக்கெட்டுகளும், சுற்றிச் சுழல்வர்கள். மலைப் பாறைகளில் காதலர்கள் மனம் சுகித்துக் கிடப்பார்கள். விடியற்காலையில் தாயார் காமாட்சியம்பாளும் தந்தை ஏகாம்பரேஸ்வரரும் முன்செல்ல, பரிவார தேவதைகள் புடைசூழ வீதிவீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து செல்வார் முருகப்பெருமான்.
டி.எம்.எஸ்.சும், சீர்காழியும், மதுரை சோமுவும், கே.பி.சுந்தராம்பாளும் ஒலிப்பெருக்கிகளில் முருகனின் திருவிளையாடல்களை மெய்சிலிர்க்க பாடிப் பரவசமூட்டுவார்கள்.
விடியற்காலையில் போய் மொட்டையடிப்பவர்கள் அடித்துவிட்டுத் தீர்த்தக்குளத்து நீரில் குளித்துவிட்டு மலையேறி எம்பெருமானை தரிசித்துவிட்டு ஏழு அல்லது எட்டுக்கெல்லாம் இறங்கிவிடுவார்கள். அமுது படைத்து சாமி கும்பிட்டு அமுதளிக்கத் தொடங்குவார்கள். மாலைவரை யாரும் எங்கும் அமுதுண்ணலாம்.
இரண்டுமுறை மூன்றுமுறை கூட வயிறார உண்ணலாம். சோறு, பொரியல், குழம்பு, ரசம், மோர் என ஏனங்களில் வீட்டிற்கும் எடுத்துச் செல்லலாம். சிலர் மூன்று நான்கு முறைகூட உண்பார்கள். பத்து முறை சாப்பிட்டேன் என்று சொல்பவர்களும் உண்டு. சிலர் நெடுநேரம் குந்தியிருந்து மூச்சுவிட்டு மூச்சுவிட்டு சாப்பிட்டு எழுந்து அமுதளித்தவருக்கு கையெடுத்துவிட்டு வருவார்கள். நல்ல சோறு நல்ல குழம்புக்கான ஏக்கத்தைத் தெளிய வைத்த முருகப்பெருமானின் கருணை அவரது வயிற்றைப் பானை போல ஆக்கியிருக்கும். கேட்கக் கூசிய சிலர் தனக்கு எனக் கேட்டு இலையோடு துண்டில் பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்வார்கள்.
திருவிழாவெங்கும் மலர்வனம் போல அமுதுவாசம் கமகமக்கும்.
‘சாமிசோறு’ என்று இறைக்காமல் சாப்பிடுவார்கள். முதல் கவளத்தை அண்ணாந்து ‘முருகா...’ எனச் சொல்லிப் போட்டுக்கொள்வார்கள்.
‘போய்ட்டு வரேங்’ என்று கையெடுப்பார்கள் அமுதுண்டவர்கள். ‘அரகரஅரகரோவ்’ என உண்டவர்களை கையெடுத்து வணங்கி அனுப்புவார்கள் அமுதளித்தவர்கள். சற்று உள்புறமாக வண்டியை நிறுத்துபவர்களுக்கு உண்பவர்கள் வரத் தாமதமாகும். அல்லது அவ்வளவாக வரமாட்டார்கள். மலையைப் பார்த்து ‘முருகா’ என்பார்கள். யாரெனும் பத்து முருகர்கள் வரவும் செய்வார்கள்.
அமுதுண்டவர்கள் காவடியாட்டங்கள் பார்க்கவும்,  சோடிக்கப்பட்டு கற்பூரப் புகைநடுவே வாடாமல்லி மரம் போல் நிற்கும் தேர் பார்க்கவும் போய்க் கொண்டிருப்பார்கள். எதையும் பார்க்காமல் வயிறார உண்டுவிட்டு ஏதேனுமொரு நிழலில் கவலையற்று தூங்கிக் கிடப்பவர்களும் உண்டு.
பொதுவாக கல்யாணம், காதுகுத்து, கிடாவெட்டு போன்ற நிகழ்வுகளில் பந்தி நடக்கும் பந்தலுக்கு வெளியே ஒதுக்குப்புறமாக ஏனங்களுடன் நிற்பார்கள்  வண்ணார்கள், வெட்டியான்கள். ‘செத்த இரு, எல்லாம் முடியட்டும்’ என்றுகொண்டே இருப்பார்கள். இவர்களும் நின்றுகொண்டே இருப்பார்கள்.
இத்திருவிழாவின் அமுதுக்கூட்டத்தில் ஒரு இடத்தில்கூட அக்காட்சியைப் பார்க்கவே முடியாது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

(முற்றும்)
செங்கான் கார்முகில்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions