c உலகச் சிறுகதை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உலகச் சிறுகதை

அவநம்பிக்கைவாதத்தின் குற்றம்

ஹங்கேரி: ஜார்ஜ் பேலிண்ட்
தமிழில்: சா. தேவதாஸ்

ஜார்ஜ் பேலிண்ட் (19061943) ஹங்கேரியின் எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர். நாஜி சித்திரவதை முகாமில் இறந்து போனார்.
ஆங்கில மொழியாக்கம்: விட் பர்னெட்.

மாலைநேரம்.

கதவில் சாவி கிறீச்சிட்டது. அவன் பரவசத்தின் தனிக்கொட்டடியில் தனித்திருந்தான்.
அவனுக்கு இறுதி ஆசை ஏதுமில்லை. அத்துடன் சிறைக் கோமாளியின் சேவையினையும் மறுதலித்திருந்தான். தூக்கிலிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவன் காதிலே ஆறுதலாகச் சில தமாஸ்களை எடுத்துரைக்க, தனிக்கொட்டடியின் நிழல்களுக்குள் அவன் வந்திருந்தான். இப்படி அவன் தனிமையில் விடப்பட்டிருந்தான்.
சிறைக் கம்பிகளுக்கு வெளியே சோர்ந்துவிட்ட இலைகளையுடைய கிளைகள் மாலைநேரக் காற்றில் அசைந்ததைப¢ பார்த்தான்.
அந்த விஷயம் அப்படித்தான் நடந்திருந்தது. தன் வீட்டு அறையில் அவன் அழுதிருந்தான். அவன் தெருவுக்கு வந்தபோது கண்கள் இன்னும் சிவந்திருக்க, அழுதுகொண்டிருந்தான். ஒரு வாரமாக அவனைக் கவனித்து வந்திருந்த துப்பறியும் நிபுணர், முன்னே வந்து, அவனைப் பிடித்து போலீஸிடம் இட்டுச் சென்றார். சிறிதுநேரம் விசாரணை, அப்புறம் அவநம்பிக்கைவாதத்தின் பேரில் சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
உயர்நீதிமன்ற விசாரணைக்குப் பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். நீதித்துறையினர் சிறுமணிகளுடன் கூடிய தொப்பிகள் மாட்டிக் கொண்டிருந்தனர். அரசு வழக்குரைஞர் நீண்ட மூக்குடனிருந்த வேடிக்கை முகமூடியைப் போட்டிருந்தார். அவநம்பிக்கை வாதத்திற்கு எதிரான குடிமைச் சட்டத்தின் 897வது பத்தியை நீதிபதி வாசித்து, அதனைக் குற்றவாளி மீறியிருப்பதை குற்றச்சாட்டாக முன்வைத்தார். பல மாதங்களாகவே அந்த நபர் சிரிக்கவில்லை. மேலும், சோகமான முகத்துடன் தலை கவிழ்ந்தபடி மணிக்கணக்கில் தனித்து அமர்ந்திருந்தான். சமீப நாட்களில் அழுதபடி வீதிகளில் திரியவும் செய்துள்ளான். இதன் காரணமாக, சமூக அமைதிக்கும் இணக்கத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில், கவலையை ஏற்படுத்தி கலவரத்தையும் தூண்டிவிட்டிருக்கிறான். அத்துடன் அவன் வசித்த வீட்டில் ஷோபன்ஹோவரின் (ஷோபன் ஹோவர் 1788  1860: ஜெர்மானியத் தத்துவவாதி. இவரது தத்துவம் அவநம்பிக்கைவாதத்தின் தொனி மிக்கது. நீட்ஷே, வாக்னர் போன்ற சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் ஈர்த்தது.) நூலொன்றும் இருந்திருக்கிறது. ஒரு கால் சற்று குட்டையாயிருந்த கட்டில் காலை அது தாங்கி நின்றதால், அந்நூலை அவன் படித்திருந்தானா என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவன் அப்புத்தகத்தின் பக்கங்களைத் திரும்பத் திரும்பப் புரட்டியிருக்க வேண்டும். ஏனெனில் பக்கங்கள் மடிந்தும் தூசு படிந்தும் கிடந்தன.
குற்றத்திற்கு வருந்துகிறாயா என்னும் நீதிபதியின் கேள்விக்கு இல்லையென்றான் அவன். எந்தவித குற்றவியல், புரட்சிகர உத்தேசமுமில்லாமலேயே, அவன் வருத்தமாயும் சிடுசிடுவென்றும் இருந்திருந்தான். ஏனெனில் சந்தோஷமாயிருக்க அவனுக்குக் காரணம் இல்லை என்பதால்.
“இவ்வுலகமே அனைத்து உலகங்களிலும் மிகச் சிறந்தது, மற்றும் கற்பனை செய்யக் கூடிய அனைத்து உலகங்களிலும் மிகச் சிறந்தது’’ என்று கூறிடும் லெய்ப்னிட்ஸின்(லெய்ப்னிட்ஸ் 1646  1716: ஜெர்மானியத் தத்துவாதி. கணிதவியலாளர், கால்குலஸைக் கண்டறிந்தார், நியூட்டனின் துணையின்றி. உலகம் என்னும் படி வரிசையின் உச்சியில், தெய்வீகத் திட்டத்துடன் கடவுள் இருக்கிறார் என்பது இவரது அடிப்படைத் தத்துவம்.) 99வது விதியை நீ படித்திருக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, தன் தொப்பிமணியை அடித்தார். அப்போது பார்வையாளர்கள் பலர் சிரிக்க, குற்றஞ்சாட்டப்பட்டவனோ, கடுமையுடன் காணப்பட்டது, மோசமான மனப்பதிவை ஏற்படுத்திற்று.
“அப்போது எனக்குக் கடும் தலைவலி. அத்துடன் பசியாயிருந்தேன். மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலும் பட்டினி கிடந்ததை ஒத்துக்கொள்ள வேண்டும். அதே நாளன்று எங்கள் சந்திப்பிடத்திற்கு வரவேண்டிய பெண் வரவில்லை. அவள் தானிய வியாபாரியுடன் அவனது காரில் சென்றுவிட்டாள். இப்படித்தான் சிறுசிறு சம்பவங்கள். லெய்ப்னிட்ஸைப் படிக்கலாம் என்று எடுக்கும் போதெல்லாம் குறுக்கிட்டன’’ என்றான் அவன்.
சிறுமணி கிணுங்க, நீதிபதி குறுக்கிட்டார். “போதும், சமூக விரோதமிக்க உனது சுய அகங்காரப் போக்கையே சுட்டிக் காட்டுகிறது இது. உனது தனிப்பட்ட விவகாரங்களை ஏன் இழுக்கிறாய்? குறிப்பிட்ட வேசிகள், கதைகள், மற்ற துக்கடாக்களெல்லாம் உனக்கு உதவாது. உலகில் நீ மட்டுமே தனித்திருப்பதாய் நினைக்கிறாயா?’’
வேதனைமிக்க முகத்துடனும் இரகசியப் பாவியின் இருண்ட குரலுடனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள குற்றஞ்சாட்டப்பட்டவன் முயன்றான்.
“அப்படியானால் உலகில் வேறென்ன இருக்கிறது? யுத்தங்கள், கொலைகள், பயங்கர அநீதிகள், அன்றாடமும் பட்டினிக் கூட்டங்கள், ஒரு பாறைமேலே காக்காய் வலிப்புற்ற பிச்சைக்காரன், பால்வினை நோயுடன் பிறந்துள்ள குழந்தைகள், பட்டினி கிடக்கும் ஆலைத் தொழிலாளர்கள், குடியானவர்கள், பட்டினி கிடக்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள், திறனற்ற லட்சாதிபதி முட்டாள்கள், முட்டாள்தனமுள்ள சாதனையாளர்கள், எங்கும் பரவிக் கிடக்கும் கேடு, வேசமை புரியும் ஆண்கள், பெண்கள், பிஷப்புகள், நடிகர்கள், மற்றும் காசநோய், இருள், பெருவணிகம், கூப்பாடு போடுகின்ற கேள்விகள்’’.
நீதிபதி திரும்பவும் குறுக்கிட்டார். “போதும்! என் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிறுத்திக்கொள்’’
‘கூட்டாளிகள் யாரும் உண்டா? சதி ஏற்படுத்திட மாஸ்கோவிலிருந்து தங்கம் எதுவும் தரப்பட்டதா?’ என்பதை உறுதிப்படுத்திட நீதிபதி முயன்று பார்த்தார். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவன் இவற்றையெல்லாம் தீர்மானகரமாய் நிராகரித்தான்.
அரசின் தலைமை வழக்குரைஞரது தொகுப்புரை சுருக்கமாயும், ஏற்கக்கூடியதாயும் நகைச்சுவை கொண்டிருந்தது. நீதிமன்றமே சிரித்து ஆர்ப்பரித்தது. எதிர்த்தரப்பில் வழக்குரைஞரும் இல்லை, குற்றஞ்சாட்டப்பட்டவனும் வாதிட முயலவில்லை.
நீதிமன்றம் கலைந்து, மீண்டும் கூடியது. நீதிபதி தீர்ப்பினை வாசித்தார். திரும்பத் திரும்ப அவநம்பிக்கைவாதக் குற்றம் புரிந்தது நிரூபணம் ஆகவே, தூக்குதண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
நிலவுகின்ற உலகின் நிலைமைக்கு எதிராக, குற்றஞ் சாட்டப்பட்டவன் திரும்பத் திரும்ப தன் சிரிக்கும் கடமையைப் புறக்கணித்திருந்தான். போல்ஷ்விக் பிரச்சாரத்தில் ஈடுபட்டான். பொதுமக்கள் முன்னர் வருந்தினான். அழுத கண்களுடன் வீதிக்கு வந்தான். நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், விசாரணையின்போது முழுவதும் அவநம்பிக்கை கொண்டிருந்தான். தொகுப்புரையின்போது அழுது விட்டான் என்று தீர்ப்பின் விவரணங்கள் அடுக்கின.
தீர்ப்பு வாசிக்கப்பட்டதும், பயங்கரத் தாக்கத்தைக் கொண்டிருந்தது. பல பெண்களுக்குச் சிரித்து சிரித்துக் குமட்டிவிட்டது.
ஜன்னல் கம்பிகளின் மறுபுறத்தே, பரவசத்தின் தனிக் கொட்டடியில், காலையின் ஆபாசச் சாம்பல் விடியத் தொடங்கிற்று.  கொட்டடி திறக்கப்பட்டது. நடைபாதையில் பஸ்டர் கீட்டன் (பஸ்டர் கீட்டன் : ஹாலிவுட் நகைச்சுவை நடிகர்.) போல முகமூடியணிந்த தூக்கிலிடுபவன், அரசுத் தலைமை வழக்குரைஞர், சிறைக் கோமாளி மற்றும் வார்டன் ஊர்வலம் தொடங்கிற்று.
மைதானத்தில் தூக்குமரங்கள் நின்றன. கிராமபோன் கருவி ஒரு மிருதுவான இசையைச் சுழலவிட்டது. நீதிபதி ஆடியபடி தீர்ப்பை வாசித்தார்.
அப்போது அரசுத் தலைமை வழக்குரைஞர் பேசினார்:
“தூக்கிலிடுவோனே, உன் கடமையைச் செய்!’’
இரு நிமிடங்களில் குற்றவாளி தூக்குமரத்தில் தொங்கினான். அவனது நீலநிற முகம் வலிமைமிக்க சிரிப்புடன் இருக்க, கட்டற்ற சிரிப்பில் தன் நாக்கை நீட்டியிருந்தான். இசையின் மெட்டுக்கு ஏற்றபடி அவனது விரைத்த சடலம் கயிற்றில் ஆடிற்று.

- A Story Anthology / Ed By Whit Burnett and Martha Folay/ Jonathan Cape, London,
1934 தொகுப்பிலிருந்து


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions