c லிங்குசாமி கவிதைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

லிங்குசாமி கவிதைகள்

குழந்தைகள் விளையாடும் மரத்தடியில்
பழத்தை நழுவவிடுகிறது
அணில்.

ஒரு மரம் வைக்கும்போது
நீங்கள் ஒரு
புத்தனையும்
வரவேற்கிறீர்கள்.

தற்கொலை செய்துகொள்ள மனமில்லை,
கிணற்றில்
நிலவைப் பார்த்தபிறகு.

முதலில் தண்ணீர் இல்லை என்றார்கள்
இப்போது
ஆறே இல்லை என்கிறார்கள்.

வீட்டில் நிகழ்ந்த மரணம் அறியாமல்
எப்போதும்போல் கூவிக்கொண்டிருக்கிறது
குயில்.

மரத்தடியில்
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்
கற்றுக்கொடுக்கிறது
மரம்

தீயை வலம் வந்ததன்
அர்த்தம் புரிகிறது
அடுப்படியில்.

வீடுகட்டும் எண்ணம் பிறக்கிறது
பறவையின் அலகில்
சுள்ளியைப் பார்க்கும்போது

யார் கண் பட்டதோ
தெருவில்  உடைந்து கிடக்கிறது
திருஷ்டிப் பூசணி

சட்டென எதையாவது
உணர்த்திவிட்டுப் போகிறது
பறவையின் நிழல்

இன்னும் கூவித்தான்
விற்கவேண்டியிருக்கிறது
பூக்களை

நிலவொளியில் மயானம்
அமைதியாய் வெட்டியான்
எங்கோ உதிர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பூ.

பதித்த எல்லாத் தடங்களும்
அடுத்த அலைவரைதான்

என் கவிதைகளைக் கிழித்து
மகள் கப்பல் விட்டுக்கொண்டிருக்கிறாள்
இன்னொரு கவிதை

நீ நீர் இறைக்க வருகிறாய் என்பதை
அறிந்துதான்
விழுந்து கிடக்கிறது நிலா

வெள்ளைக் காகிதம்

ஜன்னல் வழியே வந்து விழுகிறது வெளிச்சம்
இதைவிட வேறென்ன எழுதிவிடப் போகிறேன்

-  செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்-
லிங்கூ 2
(டிஸ்கவரி புக் பேலஸ்)



 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions