c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

பெண் & சமூகத்தின் தோழமை
காலைப் பத்திரிகைகளைப் புரட்டினால் காகிதங் களில் அங்கங்கே இரத்தம் சொட்டுகிறது. காட்சி ஊடகச் செய்திகளில் கொலைகள், கொலை முயற்சிகள், நான்காம் வகுப்பு படிக்கிற பெண் குழந்தைகள்மீது செலுத்துகிற பாலியல் வன்முறைகள், பெண்கள் தெருவில் நடந்து செல்லும்போது ஏவப்படும் இழிவான பேச்சுகள் என்று இரத்தத்தைக் கொந்தளிக்க வைக்கிற செய்திகள் ஆதாரப்பூர்வமாக காண்பிக்கப்பட்டும், பேசப்பட்டும் விவரிக்கப்படுகின்றன.

நம் காதுகளையும் கவனத்தையும் எவ்வளவு  தான் திருப்பிக் கொண்டாலும், உண்மைகள் நம் கவனத்துக்கு வந்தே தீர்கின்றன. மேலும், இவற்றை நாம் தவிர்ப்பதால் இவை இல்லை என்றும் ஆகிவிடாது.

ஆக, இதுபோன்ற வன்முறைச் செய்திகளுக்கு முகம் கொடுத்து, அவை மேலும் மேலும் துளிர்த்து, செடியாகவும், மரமாகவும் வளராதபடி சமூக மனிதர் என்ற முறையில் சிந்திக்கவும், செயலாற்றவும் வேண்டியது நம் கடமையாகிறது.

குழந்தைகள் மீதும், பெண்கள் மீதும் ஆண்கள் செலுத்துகிற வன்முறைகள் திடுமென ‘அந்தச்’ சந்தர்ப்பத்தில் ஏற்படுவதில்லை. காலம் காலமாக மனித மனத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனோபாவங்களின் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட தருணத்தில் விழித்தெழும் மன விகாரத்தின் செயல்பாடுகளே இந்தக் கொடும் நிகழ்வுகள்.

இந்த 2016லும்கூட, பெண்கள் மிக உயர்நிலைக்கு வந்திருந்தாலும், இந்தியாவையே ஆண்டிருந்தாலும் பிறந்த குழந்தையை  ‘பெண் குழந்தையா’ என்று ஏமாற்றத்துடன் கேட்கும் மனோபாவம் மாறிவிடவில்லை அல்லவா?

இன்றும் கூடக் கிராமங்களில், பெண் குழந்தைகளை எட்டு, பத்து வகுப்புகளுக்கு மேல் படிக்க வைக்காத பெற்றோர்கள் அதிகம் காணப்படுகிறார்கள்.

பெண் நிறைய படித்தால், அதற்கேற்ப படித்த மாப்பிள்ளை தேடவேண்டுமே என்று கவலைகொள்ளும் பெற்றோர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆக வரதட்சணை என்கிற இழிவு இன்னும் சமுதாயத்தை விட்டுச் செல்லவில்லை என்பதே உண்மை.

ஒரு வங்கி, அண்மையில் இப்படி விளம்பரம் செய்தது: “உங்கள் அருமை மகள் வளர்ந்துகொண்டே இருக்கிறாள். அவளுக்காக இன்றே சேமிக்கத் தொடங்குங்கள்”.

பல்வேறு இயக்கங்கள் கொடுத்த எதிர்வினை காரணத்தால், அந்த விளம்பரம் திருப்பி எடுக்கப்பட்டது.

பெண்ணைப் படிக்க வைக்க, உயர்நிலைக்குக் கொண்டுவர இன்றே சேமியுங்கள் என்று சொல்ல அந்த வங்கியாளர்களுக்கு மனம் வரவில்லை.

விளையாட்டில்கூட பெண் விளையாட்டு, ஆண் விளையாட்டு என்று பிரித்துப் பார்க்கிற விநோதம் இங்கு மட்டுமே காணப்படும் விந்தை.

படிக்கும் கல்வி நிலையங்களில் ஆண், பெண் கல்லூரிகள் இன்னும் நீடிக்கின்றன. சமூகவியலாளர்கள் இதைத் தவறு என்றே கூறுகிறார்கள். ஒருகாலத்தில், ‘வயசுக்கு’ வந்த பெண்களை வெளியே அனுப்பாத சூழல் இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. அந்தக் காலத்துக்குப் பெண் பள்ளி, பெண் கல்லூரி தேவைப்பட்டது. இப்போது எதற்கு அந்த அநாவசியப் பிரிவினை.

ஆண்கள் டாக்டர் என்றால், பெண்கள் நர்சுகள் என்று இருந்த காலம் மலையேறிவிட்டது. இன்று பெண் ஸ்கூட்டர் ஓட்டுகிறாள். கார் ஓட்டுகிறாள். காலம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதற்கேற்ப, கருத்துகள், கண்ணோட்டங்கள் மாறவேண்டாமா? வேண்டும்.

மக்களிடம் சென்று சேர்ந்த சினிமாக்கள், வெற்றி   பெற்ற சினிமாக்கள் பலவற்றிலும் கதாநாயகன், கைலியை மடித்து மேலே ஏற்றிக் கட்டிக்கொண்டு பெண்ணைக் கேலி செய்து பாடுகிறான். ஆட்டமும் போடுகிறான். சாதாரண ஆட்டம் அல்ல. குத்தாட்டமே போடுகிறான். எந்தப் பெண்ணை அவன் கேலி செய்து,  தன் நண்பர்களுடன், ஆட்டம் போட்டானோ, அந்த ரௌடியையே அல்லது ஹீரோவையே அந்தப் பெண் காதலிக்கிறாள்.

இதுதான் விசித்திரம்.

சாராயக் கடையிலிருந்து வெளிவந்து நடனம் ஆடும் ஒரு பையனை, அவன் கல்வித் தகுதி, தனித் திறமைகள், வேலைவாய்ப்பு, பொருளாதார அந்தஸ்து எதுவும் அறியாமல் ஒரு பெண் காதலிப்பது எப்படி?

இதுதான் மிக முக்கியமான கேள்வி.

காதலிப்பதில் இன்னும் ஆண் முடிவே முடிவாக இருக்கிறது. பெண் அந்த முடிவை ஏற்றுச் செயல்படுத்தும் இரண்டாம் நிலைக்காரியே என்கிறது நம் சினிமா. இந்த மனோபாவமே, ‘என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்’ என்று கேட்டு ஒரு கொடூரனை ஆசிட் வீச வைக்கிறது. ஒரு கொலைகாரன் அரிவாளை எடுக்கிறான். மக்கள் கூடும் பொது இடங்களில் கொலை செய்யும் அளவுக்கு, வெறித்தனம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

நம் தொலைக்காட்சி ஊடகத் தொடர்களின் மாமி யார்கள், மருமகள்களின் தாலியைப் பறிப்பதிலேயே வாரத்தைக் கடத்துகிறார்கள். வக்கிரமான பேச்சு, வக்கிரமான செயல்பாடுகள் நிறைந்தவை இந்தத் தொடர்கள்.பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்கள், நாகரிகம் அற்றவையே. பெண்களை, பெண்களைக்கொண்டே இழிவுபடுத்துகின்றன, பெண்கள் பார்க்கும் இத்தொடர்கள்.

வீட்டின் வரவேற்பறையிலிருந்து தெருவில், பணி இடங்களில், கல்வி நிலையங்களில், திரைப்பட அரங்கில், தொலைக்காட்சிகளில் பெண்கள் இரண்டாம் தர, மூன்றாம் தர நிலைகளிலேயே வைக்கப் பட்டிருக்கிறார்கள். பெண்களைக் கீழானவர்களாகக் கருதும் ஆண் மனங்களில், வன்முறை செலுத்த அதுவே தூண்டுகோலாகவும் அமைந்துவிடுகிறது.

நள்ளிரவில் ஒரு பேருந்தில், ஒரு இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்றதும், எத்தனை ஆயிரம் தவறான விமர்சனங்கள் எழுகின்றன?

1. அந்த இரவு நேரத்தில், அவள் ஏன் வெளியே போனாள்?

2. அவள் எதற்கு பனியன், பேண்ட் அணிந்துகொண்டு போனாள்?

3. அவள் ஏன் ஆண் நண்பனுடன் சென்றாள்?

எத்தனை எத்தனை ‘அறிவார்ந்த’ கேள்விகள்? எந்த அளவுக்கு நாம் கெட்டுப் போயிருக்கிறோம் என்பதைச் சொல்லும் கேள்விகள் இவை.

பள்ளிக்கூடச் சீருடை அணிந்த நான்காம் வகுப்புச் சிறுமியைச் சீரழிக்கிற ஒரு கொடூரன், பனியன், பேண்ட், இரவு என்ற ‘கவர்ச்சிக்கு’ சௌர்கயம் காரணமாகவா வன்முறையில் இறங்கினான்?

இல்லை.

அவன் மனதுக்குள் இருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால அழுகிய, முடமான, நாற்றம் எடுத்த பிற்போக்கான கருத்துகளின் பிரதிநிதியாகவே அவன் அவ்வாறு கீழ்மையில் இறங்கினான்.

பொறுப்பற்ற முறையில் பிள்ளை பெறுவதைக் காட்டிலும் தீமையானது, பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்வதும், எழுதுவதும், கலை என்ற பெயரில் அரங்கேற்றுவதும் ஆகும்.

பால்கள் மூன்று. ஒன்று பெண். ஒன்று ஆண். ஒன்று திருநங்கை அல்லது திருநம்பி.

இவர்கள் சமமான மனித உயிரிகள். இவர்களுள் ஏற்றத் தாழ்வு இல்லை. ஒருபோதும் இல்லை. ஏனெனில் இவர்கள் மனிதர்கள். மனிதர்கள் நேசிக்கவும், நேசிக்கப்படவும் பிறந்தவர்கள். வன்முறைக் கலாச்சாரம் மறைந்து அன்புருவாகும் சமுதாயமே நேசிக்கத் தக்க சமூகமாகும்.

அந்த அழகிய சமுதாயமே, நம் குறிக்கோள்.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions