c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்

தோல்வியை  எப்படி எடுத்துக் கொள்வது?
இன்றுள்ள இளைய தலைமுறை பல துறைகளிலும் அளப்பரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. புதிய, ஆரோக்கியமான லட்சியங்களைக் கொண்டதாகவும், குறிப்பாக தேச நலனில் அக்கறை கொண்டதாகவும் இருக்கிறது. எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. வறுமை, பசி முதலியவற்றை எல்லாம் எளிதில் கடந்து மீள்கிறார்கள். நினைத்தது கிடைக்காதபோதும், இலக்கை அடையமுடியாதபோதும் கூட மிகவும் இயல்பாக அதிலிருந்து கரையேறி வருகிறார்கள். பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவர்களாக மிளிர்கிறார்கள்.

அதேசமயம் காதல் தோல்வி,தேர்வு முடிவுகளில் தோல்வி முதலான சில விசயங்களில் மிகவும் மனம் தடுமாறிப் போகிறார்கள். மன அமைப்பு சுக்கு நூறாக உடைந்து நொறுங்குகிறார்கள். விபரீதமான முடிவுகளில் விழுந்து சீரழிகிறார்கள். அத்தனைப் பெரிய பூதமாக மிரட்டுகிறது தோல்வி எனும் சொல். எல்லாவற்றிலும் தெளிவாக உள்ள இளைஞர்கள் தோல்வியை மட்டும் செரிக்கச் சிரமப்படுகிறார்கள்.   

இது ஏன்? தோல்வியை எப்படி கிரகிப்பது? தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வது? இதற்கான சமூக, உளவியல் காரணங்கள் என்ன? ஆகிய கேள்விகளுடன் இந்த இதழுக்கான இளைஞர் பட்டாளத்தைச் சந்தித்தோம்...

தோல்வி என்பது அவமானமா?
தி.விஜய் புகைப்படக் கலைஞர்
வெற்றி - தோல்வி என்பவைகளுக்கு சமூகம் தரும் மதிப்பீட்டில்தான் பிரச்சனையே இருக்கிறது. வெற்றி பெறுகிறவர்களை உலகம் கொண்டாடித் தீர்க்கிறது. தோல்வியுற்றவர்களை முற்றிலுமாகப் புறந்தள்ளுகிறது. சமூகம் வகுத்து வைத்திருக்கிற பொருளாதார இலக்கை அடையாதவன் தோல்வியுற்றவனாகிறான். வகுத்து வைக்கப்பட்ட பாடங்களைப் படித்து குறிப்பிட்ட மதிப்பெண் எடுக்காதவர்கள் தோல்வியுற்றவர்களாகிறார்கள். தோல்விகள் தவிர்க்கவியலாதவைகள்தான் ஆனால் அதை நேர்மறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தோற்றுப்போன காதல்களே காவியக் காதலாய் நிலை கொண்டிருக்கின்றன. பல தோல்விகளுக்குப் பிறகுதான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆக தோல்வி என்பது அவமானம் அல்ல, படிப்பினை.

பொது மனநிலையே காரணம்!
மிருத்திகா கல்லூரி மாணவி
சமூகத்தின் பொது மனநிலை தோல்வியை அவமானகரமாகப் பார்க்கிறது. இப்படியான புற உலகச் சூழலின் காரணமாகத்தான் பலருக்குள்ளும் தோல்வி என்பது அச்சமூட்டும் ஒன்றாக மாறியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் தோல்வியடைந்தவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடிவதில்லை.  முதலில் இங்கு எதுவுமே நிரந்தரம் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றி - தோல்வி மீதான மதிப்பீடுகள் எவ்வளவு அபத்தமானவை என்பது தெரியும். சமூகத்தின் பொதுக் கருத்தைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தோல்வியை சரியான புரிதலுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

யார் காரணம்?
கார்த்திகேயன் வெங்கட்ராமன் ஊடகவியலாளர்
தேர்வு குறித்த பயம் அல்லது மனப்பான்மை என்பது, பெற்றோர்களால் உருவாக்கப்பட்டு குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தப்படுவது . பள்ளி  இறுதி  அல்லது  மேனிலைத்  தேர்வு முடிவுகள் மட்டுமே எதிர்கால வாழ்க்கையைத்  தீர்மானிக்கப் போகிறது என்பதும்,  அதை விட்டுவிட்டால் வாழ்க்கையின் போக்கே சிதைந்து விடும் என்ற எண்ணமும் குழந்தைகள் மனதில் ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. அப்படி ஊதிப்  பெரிதாக்கப்படும் பலூன்கள் அழுத்தம் தாளாமல் வெடிப்பது இயல்புதான்.  உலகின் நிறைய நாடுகளில் பார்க்க இயலுகின்ற “தொழில் முனைவோர்’’  என்னும், வாழ்க்கையின் ரிஸ்க்குகளோடு பயணிக்க விரும்புகின்ற  வகை  இங்கு  குறைவுதான்.

இரண்டாவது காதல். சிறு வயதிலிருந்தே பெண்ணைச் சுற்றி உருவாக்கப்படும் கருத்துகளும், கட்டமைப்பும் அவளை ஒரு அதிசயப் பொருளாக்குகின்றன. இயல்பான இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் பற்றிய, அவள் உடல் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத பொழுது, மிஞ்சுவதெல்லாம் பெரும்பாலும்  அவளை அடையும் வேட்கை மட்டுமே. அது மறுக்கப்படும் பொழுது உருவாகும் விரக்தியும், வெறுப்பும் மேலும் வாழ்க்கை பற்றிய புரிதல் இன்மையும் சேர்ந்து  தன்னை அழித்துக் கொள்வதிலோ அல்லது  அவளை அழிப்பதிலோ  முடிகிறது. மற்ற எல்லாவற்றையும் விட தேர்வு மற்றும்  காதல் தொடர்பான தற்கொலைகள், கொலைகள் மனதை மிகவும் கனக்கச் செய்பவை.

எது சாதனை?
பிரீடா கல்லூரி மாணவி
தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்குவதற்கு அவர்களின் பெற்றோர்கள் தான் காரணம்.  குழந்தை பிறந்த நாள் முதலே மருத்துவப்படிப்பா? பொறியியல் படிப்பா? என்ற எண்ணங்களுக்குப் பெற்றோர் சென்றுவிடுகின்றனர். கல்வி வணிகமயமாகிவிட்டதன் காரணமாக அதிக மதிப்பெண்களை நோக்கி கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களும் மாணவர்களைத் தள்ளுகின்றனர். நல்ல மதிப்பெண் பெறுகிறவர்களே அறிவாளிகள் என்கிற பொதுப்புத்தி இங்குள்ளது. தேர்வில் தோற்றவர்கள் வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டவர்கள் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றன. முதலில் கல்வி என்பது எதற்கானது என்கிற தெளிவு வேண்டும். சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான கல்வியெல்லாம் நம்மிடம் இல்லை. தொழில் நிறுவனங்களில் பணி புரிவதற்குத் தேவையான வேலையாளாகத்தான் நமது கல்வி முறை நம்மை உருவாக்குகிறது. ஆசிரியர்களால் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள்தான் இன்றைக்கு இமாலய சாதனை புரிந்திருக்கின்றனர்.  

மனப்பக்குவத்தை வளர்க்கவேண்டும்!
ராதாகிருஷ்ணன் தனியார் நிறுவன ஊழியர்
தோல்வி இங்கு பிரச்சனை இல்லை. தோல்வியை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதுதான் பிரச்சனை. எல்லாவற்றிலும் தங்களது குழந்தை முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று பந்தயக்குதிரை போல் குழந்தைகள் நடத்தப்படுகிறார்கள். முதலிடம் பிடிக்க வேண்டும் என்று ஆவல் கொள்வதில் தவறில்லை. அதற்காக அவர்களை நிர்ப்பந்திப்பது தவறானது. பெற்றோர்கள் தங்களது ஆசைகளுக்காக குழந்தைகளின் கனவைச் சிதைக்கிறார்கள். தங்களது பால்யத்தைத் தொலைத்துவிட்டு புத்தகப்பையைச் சுமந்து செல்லும் குழந்தைகளைத்தான் இச்சமூகம் உருவாக்கியிருக்கிறது. தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்று   ஏற்றுக்கொள்ளும்    மனப்பக்குவத்தை      வளர்க்க      வேண்டும்.  

அடிப்படையே தவறு!
அருண் உதவி இயக்குநர்
அடிப்படையே இங்கு பிரச்சனையாக இருக்கிறது. நமது கல்விமுறை மனோபலத்தை வளர்ப்பதாகவோ, சுயாதீனமாக செயல்பட வைப்பதாகவோ அல்லாமல் மதிப்பெண்கள் எனும் வெற்று மதிப்பீட்டை நோக்கியதாக இருக்கிறது. இந்தக் கல்வி முறையில் பயின்று வளர்பவர்கள் சமூகப் பிரக்ஞையே இல்லாமல்தான் இருக்கிறார்கள். நமது கல்வி முறையில் கிடைத்திராத சமூகப் புரிதல் மற்றும் வாழ்வின் தரிசனங்களை நாம் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகள் வாயிலாக அடைய முடியும். அவை தரும் முதிர்ச்சி எப்படிப்பட்ட தோல்வியையும் கடந்து போகிற மனோவலிமையைக் கொடுக்கும். மனோவலிமை கொண்ட இளைஞன் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி போன்ற அற்ப விசயங்களுக்காகவெல்லாம் தன்னை அழித்துக்கொள்ள முற்பட மாட்டான்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions