c நாமிருக்கும் நாடு-29
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-29

நீரதன் புதல்வர்

-சுதந்திரப் போராட்ட நினைவுகள்

சா.வைத்தியநாதன்

தூக்குக் கயிற்றை முத்தமிட்டுவிட்டுப்  பகத்சிங் சொன்னார், ‘தேசத்தின் விடுதலை தினத்தை நான் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என்றுதான் வருந்துகிறேன். ஆனாலும் என்ன? எதிர்கால இளைஞர்கள் சுதந்திரக் கொடியைப் பார்ப்பார்கள். அவர்கள் கண்வழியாக நானும் சுதந்திர இந்தியாவைப் பார்ப்பேன்.’

‘ஒரு இந்தியன், தன் பெயரையும், தந்தை பெயரையும்கூட மறப்பான். அவன், தன் தேசம் சுதந்திரம் அடைந்த ஆகஸ்டு 15ஆம் தேதியை ஒருபோதும் மறக்க மாட்டான்’ என்று இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின்போது, ஒரு சாதாரணத் தொண்டர் சொல்லக் கேட்டு வியந்தார் ஒரு வங்கக் கவி.

“இந்தியாவின் தேசியக்கொடி, மூன்று நிறங்களில் காணப்படுவதாக எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கென்னமோ, ஒரே நிறத்தில்தான் அது காணப்படுகிறது. அது மனித நிறத்தின் நிறம். இந்தியச் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்திய தியாகிகளின் ரத்தத்தால் நனைந்திருக்கிறது, நம் தேசியக்கொடி’’ என்றார் சுபாஷ் சந்திரபோஸ்.

சுதந்திரத்துக்குப் பிறகு, நாட்டை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நேரு, தன் நண்பர்கள் படேல், மற்றும் வினோபா பாவே ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முன் மகத்தான பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு பிரச்சனைகளையும் பற்றிய பேச்சு, கல்வியின் பக்கம் திரும்பியது.

வினோபா பாவே சொன்னார்.

‘ஜவகர்’ பிரிட்டிஷ்காரர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு நம் தேசியக்கொடியை ஏன் ஏந்துகிறோம். நாம் நம் வாழ்க்கையை நோக்கித் திரும்பிவிட்டோம் என்பதற்காகத்தானே? நம் கல்வி, நம் லட்சியம், நம் தத்துவம், நம் தரிசனம் இவற்றை நோக்கித் திரும்பிவிட்டோம் என்பதற்காகத்தானே? அப்படியென்றால், நம் மாணவர்களுக்கு நாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டியது, நம் சுதந்திரப் போராட்டம் பற்றியும், அதற்காகத் தம் வாழ்க்கை, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து சிறைக்குப் போக, ஏன், தூக்கு மேடைக்கும் போன தியாகிகளின் வாழக்கையைப் பற்றியும் சொல்லிக்கொடுக்க வேண்டும்தானே? நம் பழைய வரலாறுகளைத் தெரிந்துகொள்ளாத நம் புதிய தலைமுறை, எப்படித் தேசத்துக்கு விசுவாகமாக இருக்கும். இல்லையா?’’ என்றார்.

அதற்கு ‘சத்தியமான வார்த்தை, ஜி. நானும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நம் தேசம் சந்தித்த சவால்களைப் பற்றி, பெற்ற வெற்றிகள் பற்றி, அதற்கு நாம் கொடுத்திருக்கும் விலைகள் பற்றித் தெரியாத தலைமுறையால் நமக்கு எந்தப் பயனும் விளையாது’ என்றார் நேரு.

அந்த மகத்தான தலைவர்கள், கொண்ட ஆசை, லட்சியம் நிறைவேறியதா என்றால் இல்லை. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இளம் தலைமுறைகள், நம் தியாக வரலாற்றை அறியாமலேயே வளர்ந்து கொண்டிருப்பதையே பார்க்கிறோம்.

தேசத்தை நேசிக்கும் பண்பு என்பது, நம் தாயை, தந்தையை, நம் முன்னோரை நேசிக்கும் பண்புக்குச் சமானமானது. புகழ்பெற்ற ஒரு வரலாற்றுத் தகவலை நினைவு கொள்வோம்.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரமுகர், ரஷ்யாவுக்கு, ஐம்பதுகளின் (1950) காலத்தில் சென்றிருக்கிறார். அவரை, அவர் கேட்டுக் கொண்டபடி, ஒரு தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் ரஷ்ய அதிகாரிகள்.

அது ஆறாம் வகுப்பு. நடந்து கொண்டி ருந்தது கணக்கு வகுப்பு.

நம் பிரமுகர், ஒரு மாணவரிடம் கேள்வி கேட்டார். “ஒரு மாம்பழம் ஐந்து ரூபிள். (ரூபிள் _ ரூபாய்) 10 மாம்பழம் வாங்கி, ஒரு மாம்பழம் பத்து ரூபாய் விலைக்கு விற்றால், என்ன கிடைக்கும்?’’ என்றார்.

அந்த மாணவன் சொன்னான்.

“ஐந்து ரூபிள் மாம்பழத்தைப் பத்து ரூபாய்க்கு விற்றால், இரண்டாண்டு கடும் காலத் தண்டனை கிடைக்கும் ஐயா. ஒரு பொருளை வாங்குவதும் விற்பதும் அரசின் வேலை. அரசு, மக்களுக்கு நியாயம் மாத்திரமே செய்யும். லாபம் அடையும் நோக்கம் அரசுக்கு இருக்க முடியாது.’’

ஒரு தேசம், தன் இளம் மனிதர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் இல்லையா?

கடந்த 500 ஆண்டுக் காலத்தில் இந்தியாவை நோக்கி, இந்தியச் செல்வ வளம் அறிந்து, பங்கிட்டுக்கொள்ளும் நோக்கத்தோடு, வியாபாரம் செய்யலாம் என்று வந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரஞ்சுக் காரர்கள், டேனிஷ்காரர்கள். எல்லோரும் சென்ற பிறகும் தங்கியவர்கள் ஆங்கியலேயர் களும் பிரஞ்சுக்காரர்களும் ஆவார்கள்.

இந்திய தேசத்தை அடிமைகொண்டு பல காலம் ஆண்டவர்கள் ஆங்கிலேயர்களே. அவர்களே, சுதேச மன்னர்களின் ஆட்சி களில் தலையிட்டார்கள். வியாபாரம் செய்ய வந்தவர்கள், மன்னர்களாக மாறி விட்டார்கள்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து முதல் முழக்கம் மிட்ட பாளையக்காரர் பூலித்தேவரே ஆவார். 1759ஆம் ஆண்டு அவர் இல்லாமல் போனார். அடுத்த பலி பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார். 1799ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார், அந்தத் தன்மானமிக்க வீரர். அடுத்து மருதுபாண்டியர்கள் சுதந்திரதேவிக்குத் தம்மையே காணிக் கையாகச் செலுத்தினார்கள்.

இந்தியா முழுதும் பரவிய சுதந்திர இயக்கம், பல்லாயிரம் வீரர்களைப் பலி கொண்டது. பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்தன. இளைஞர்கள் கல்வியைப் புறக்கணித்தனர். தெருவுக்கு வந்து, போராடத் தொடங்கினார்கள். திலகர் முதல் தலைவராக சுதந்திர அரங்கத்துக்கு வந்தார். அடுத்து மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற மகாத்மா காந்தி, இந்தியர்க்கு உரிய அகிம்சா ஆயுதத்துடன¢அரங்கில் தோன்றினார். ஒரு பக்கம் அகிம்சையில் நம்பிக்கை இல்லாத இளையதலைமுறை ஆயுதம் ஏந்தியது.

ஒரு மாபெரும் யுத்தம் இந்திய மக்களுக்கும் ஆங்கிலேயர்க்கும் இடையே நிகழ்ந்தது.

வ.உ.சிதம்பரம் என்கிற மகத்தான போராளி, ஆங்கிலேயர்க்கு எதிராகக் கப்பல் செலுத்தினார். தன் வாழ்க்கையின் இனிய பகுதிகள் அனைத்தையும் இழந்த அந்தப் பிறவிப் போராளி, தன் வழக்கறிஞர் பட்டத்தையும், இழந்து, பிழைப்புக்காகப் பெரம்பூர் பகுதியில் எளிய வியாபாரம் செய்து, மிக எளிய ஜீவனம் செய்தார்.

வீரவேங்கை வாஞ்சிநாதன் தன்னையே அழித்துக்கொண்டார்.

வீரர் சுப்ரமண்ய சிவா, நோயைப்பரிசாகப் பெற்றார்.

எத்தனை எத்தனைத் தியாகிகள், பாரதம் சுதந்திரம் அடையத் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பசிக்கும் பட்டினிக்கும் உள்ளாக்கினார்கள் என்கிற வரலாறு நம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டவை.

என்ன வகையான நன்றியை நாம் அவர்களுக்குச் செய்யப் போகிறோம்.

முதலில் அவர்களை நாம் மனப்பூர்வமாக நினைவு கொள்வோம்.

அவர்களின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்துவோம்.

அந்த மாபெரும் தலைவர்கள் முன் நிறுத்திய அன்பு, நேர்மை, உண்மை, உழைப்பு முதலான பெரும் குணங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முயல்வோம்.

இந்தியாவில் யாரோ ஒருவன், அவன் அதிகாரியோ, சாதாரணமானவனோ, லஞ்சம் வாங்குகிறான், நியாயத்துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறான் என்றால், அவன் காந்தியை இரண்டாம் முறையாகக் கொல்கிறான் என்றே அர்த்தம்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி இந்தியராகிய நாம் சுதந்திரம் பெற்றோம். அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் பெற்றோம். அடிமைத்தனம் என்பது அந்நிய ஆட்சியிடமிருந்து பெற்றது மட்டும் அல்ல.

பேராசை, தவறான வாழ்க்கை முறை, பெண்கள் இழிவு, சத்தியத்தை வாழ்க்கை யின் சகல அம்சங்களில் இருந்தும் சாமர்த்தியமாக வெளியேற்றிவிட்டு, உத்தமர் வேஷம் போடுதல், போலித்தனத்தை ஆதரித்தல், யோக்கியர்களை அகௌரவித்தல் முதலான வையும் அடிமைத்தனம்தான்.

இவற்றை விட்டும் நாம் சுதந்திரம் பெறவேண்டும் என்பதையே ஆகஸ்டு 15 நமக்கு அறிவுரைக்கிறது. காதுள்ளவர்கள் கேட்கட்டும். மனம் உள்ளவர்கள் அதன்படி நடக்கட்டும்.

- போராட்டம் தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions