c கவிதைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கவிதைகள்

லாவண்யா சுந்தரராஜன்

(தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்றுகூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்தரராஜனின் கவிதைகள். நட்சத்திரங்களுக்கு இடையேயான இடைவெளிபோல் இவரது கவிதைகள் உற்பவிக்கும் மௌனம் அசலானது. மனித மனங்களை ஊடுருவும் தன்மையுடையது. இவ்விதமே இவர்தம் கவிதைகள் தம் சுயத்தை தாமே கண்டடைகின்றன.)

சுவர் வரைந்த சித்திரம்

அதி நவீன சித்திரங்கள்
அலங்கரித்தன
அரசுச் சுவர்களை
கண்கவர் காட்சியைப்
போகிற வருகிற
புன்னகைகள் ஏறிட்டபடி
கடக்கத் தொடங்கின.
பிறர் மகிழ வரையப்பட்ட
ஓவியங்களால்
தனை இழந்த சுவர்
உள்ளூர அழத் தொடங்கியது.
மெல்ல மெல்ல தெளிவுற்று
தன் மீதிருக்கும் கோடுகளை
ஓவிய நளினத்தோடு
உதிர்க்கத் தொடங்கின சுவர்கள்.
சித்திரங்கள் உதிர்ந்த இடத்தையும்
எஞ்சிய சித்திரத்தையும்
வைத்து
சுவர் தனக்கான
சுவடுகளைத்
தானே தீட்டிக்கொண்டது.
ஓவியமென்றும்
கூறலாம் அதை.


சலனம்

விட்டு விட்டு
சொட்டிக் கொண்டிருந்த குழாயை
இறுக மூடிய பின்னர்
நின்று போயின
நீர்த்துளிகள்
என்னவோ செய்கிறது
சொட்டாத குழாயின் நிசப்தம்.

பிள்ளைகள் வளர்ந்தனர்

சினேகிதியின் பிள்ளை
கல்லூரி சென்றுவிட்டான்
நண்பனின் மகள்
பெரியவளாகிவிட்டாள்
அக்கா மகன்
சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான்
அம்மாவிற்கு
வயதாகிவிட்டது
நான் விளையாடிக் களித்த தெருவில்
இரண்டாம் தலைமுறையினர்
அமளி துமளியாக்கிக் கொண்டிருந்தனர்
விரட்டிப் பிடிக்கவோ
உடைத்ததைப் பொறுக்கவோ
கலைத்ததை அடுக்கவோ
வாய்க்காத
வருத்தத்துடன் நகர்கின்றதென்
வாழ்க்கை.


_‘அறிதலின் தீ ’ தொகுப்பிலிருந்து (பாதரசம் வெளியீடு)

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions