நமது நூலகம்
கவிஞர் எழுதிய அழகிய வசனம்
தமிழ்க் கவிதை உலகில் மிகவும் குறிப்பிடத்தக்க, மூத்த கவிஞர் விக்ரமாதித்யன். குறிப்பாக, இளம் கவிஞர்கள் பற்றிச் சிலாகித்தும் ஊக்கமூட்டியும் இவர் எழுதியிருக்கும் கவிதை விமர்சனக் கட்டுரைகள், அன்பு சுரக்கும் எழுத்துக்கள்.
விக்ரமாதித்யன் கவிதைகள், எளிய சொற்பிரயோகம் கொண்டவை. குழப்பும், தடுமாற வைக்கும் சொற்கள் இவரிடம் இல்லை. தன் அனுபவத்துக்கு உண்மையாக, தன் ஆத்மாவுக்கு நேர்மையாகக் கவிதை செய்பவர் இவர். தமிழ் மொழிக்குள்ளும், தமிழர் வாழ்வுக்குள்ளும் மறைபொருளாக உயிர்ப்போடு இருக்கும் தமிழரின் பண்பாட்டு மேன்மையைச் சிலாகிப்பவை இவரது கவிதைகள். மேடைமேல் விளம்பப்படும் பண்பாட்டுப் பெருமைகளை அல்ல, இவர் கவிதைகள் பேசுவது. மாறாக, தமிழர்கள் தங்கள் வாழ்வு மூலம் பெற்ற விழுமியங்கள் சார்ந்த கவிதைகள் இவருடையவை.
தீராநதி இதழில் இவர் தொடர்ந்து எழுதிய, தன் வாழ்க்கை சார்ந்த நினைவுகளை (தன் வரலாறு) நக்கீரன் பத்திரிகை இப்போது, ‘காடாறு மாதம் நாடாறு மாதம்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளது. அழகிய பதிப்பு.
விக்ரமாதித்யன் தன் வாழ்வில் தான் சந்தித்த மனிதர்கள், தரிசித்த இடங்கள், பெற்ற அனுபவங்கள் என்று பல விஷயங்களைத் தொட்டு எழுதியிருக்கிறார்.
தலைவன்கோட்டை ஜமீந்தார் அறிமுகம், ஜமீந்தாருக்குத் தன்னுடைய ஆறாவது தொகுதியைக் கொடுத்து ஆசி பெற்றது, டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘வள்ளித் திருமணம்’ பார்த்த நாடக அனுபவம், இந்துமதியின் ‘அஸ்வினி’ பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம், கைகூடாத குறும்பட முயற்சி, மங்களாதேவி கண்ணகி கோட்டத்துக்குப் போய் உடைந்த கண்ணகி சிலையைக் கண்டு மனம் நொந்தது, உறவினரான இசையரசு எம்.எம்.தண்ட பாணி தேசிகர் பற்றி.... என்று தன் வாழ்வு அனுபவங்களை மனம் தொடும் விதமாக எழுதி இருக்கிறார்.
நல்ல வசன நடையுடன் கூடிய, உரைநடை இந்தப் புத்தகம். தன் வரலாற்று நூல்கள் பலதில் வெளிப்படும் தன் அகங்காரம், தற்புகழ்ச்சி, சாதித்தேன் என்ற பெருமை உணர்வு எதுவும் இல்லாமல் நண்பனோடு உரையாடும் குரலில் மிக இயல்பாக எழுதியிருக்கிறார் விக்ரமாதித்யன்.
ஒரு குழந்தையின் பார்வையில் புதியதைப் பார்க்கும் பிரமிப்பு, அதை ஆச்சரியமாக விவரிக்கும் விந்தை உணர்வு வெளிப்படுகிற நல்ல புத்தகம்.
பிரமன்
நூல் : காடாறு மாதம் நாடாறு மாதம்
ஆசிரியர் : விக்ரமாதித்யன்
வெளியீடு : நக்கீரன்
முகவரி : 105, ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை-14
பக்கம்: 144 விலை ரூ : 90/-