c புதுக்கவிதை: வேரும் விழுதும் - 16
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 16

மின்மினிகளும் நட்சத்திரங்களும்

புதுக்கவிதைக்கு எழுத்து, மணிக்கொடி, பாரதி கவிதை என்று எல்லை பிரித்துப் பார்த்தால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு என்ற வரையறைக்குள் வரும். எனினும் சென்ற நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்துதான் அதற்குப் பன்முகங்களும், புத்தியல் பண்புகளும், ஆழமும் அகலும் செழுமையாக  வாய்த்திருப்பதாய்க் கருதலாம்.

இன்று மீள்பார்வையில் புதுக்கவிதைக் களம் மின்மினிகளாலும் நட்சத்திரங்களாலும் அடர்ந்து செறிந்து கிடக்கக் காணலாம். ஏற்கெனவே விரிவாகப் பேசப்பட்டவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் கண்ணுக் கெதிரில் கணத்தில் மின்னிப் போகிற மின்மினிகளும், தொலைவில் இருந்தாலும் தனித்தனி அடையாளங்களோடு மிளிர்கிற நட்சத்திரங்களும் ஏலவே கவனத்தை ஈர்க்கின்றன. சில நட்சத்திரங்களைப் பார்க்கலாம்.

‘எழுத்து’ இதழிலேயே தன் வருகையைப் பதிவு செய்துவிட்டு ஒரு மகத்தான எதிர்பார்ப்பைப் பரவச மூட்டும் படைப்புகளால் உருவாக்கியவர் நா.காம ராசன். அவருடைய பிரவேசம் கண்ணதாசன் இதழ்களூடாகத் தமிழ் வாசகர்களின் கவனத்துக்கு வந்த சில காலத்துக்குள்ளாகவே கறுப்புமலர்களும், சூரியகாந்தியும் உள்ளங்களை அள்ளிக்கொண்டன.

‘சூரியகாந்தி’ மரபு வடிவத்தில் எழுதப்பட்ட நவீன கவிதைகளின் வருகையாக அமைந்தது.

“கிளி மூக்குத் தீநாக்குக் கவிதைகளால்
கிளர்ச்சிகளை வளர்ப்பவன் நான்’’

என்ற அதிரடி அறிமுகத்தால் அதிர்ந்து போன புதுக் கவிதைக்காரர்கள் இது வெறும் வாண வேடிக்கை என்று மதிப்பிடத் தலைப்பட்டார்கள்.

‘சோக சோசலிசக் கவிதைகள்’ என்று தலைப்பிட்டு நா.கா.வின் இரண்டு நூல்களையும் விமர்சித்த ஞானக் கூத்தன் (கசடதபற, ஜூன் 1971) ‘பாரதிதாசனின் நீர்த்துப் போன செய்யுள் அமைப்பு’ என்றும், ‘காமராசன், கவிதைக் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது ஏராளம்’ என்றும் நையப் புடைத்துப் புளகாங்கிதம் பூண்டார்.

இதற்கு செப்டம்பர் 71 இதழில் பதிலளித்த

கோ. ராஜாராம் ‘ஞானக்கூத்தனின் குதிரைப் பட்டைப் பார்வை’ என்று ஏளனம் செய்தார். பாரதிதாசனின் வலுவான கவிதைகள், சாதி சமய எதிர்ப்பின் காலத் தேவை ஆகியவற்றை எடுத்துரைத்ததோடு, நா.கா.வின் கவிதைகளில் புலனாகும் நாட்டுப்புறப் பாடல்களின் சாயலை எடுத்து விளக்கினார். ‘பொறுப்புள்ள கவிஞர், பொறுப்புள்ள ஒரு பத்திரிகையில், பொறுப்பில்லாத ஒரு செயலைச் செய்திருக்கையில் என்னால் பொறுக்க முடியவில்லை’ என்று கடுமையாகவே மறுத்துரைத்தார். மீண்டும் ஞானக்கூத்தன் (நவம்பர் 1971) ‘கவிதை... அதற்கு உருவம், நிர்மாணம், தொனி, தோரணை, நியதி, நிர்வாகம் என ஆயிரம் உண்டு’ என்று புளியம்பழம் சிதறுவது போல் ஏதேதோ பதிலாகச் சொன்னார். அதனால் நா.காமராசனின் கவித்துவத்தை அணுவளவும் தகர்க்க முடியவில்லை. கசடதபறவில் அற்புதமான கவிதைகளைப் படைத்த ஞானக்கூத்தனின் விமர்சனச் சாட்டை சி.மணி, சுந்தரராமசாமி, ந. பிச்சமூர்த்தி ஆகியோர் மீதும் தன் வீச்சை நிகழ்த்தியது.  என் ‘ஒளிப்பறவை’யில் சில கவிதைகள் செய்நேர்த்தி உடையவை என்று அவர் சலுகையோடு சொன்னதையும் நான் மறக்கவில்லை.

பிறந்தபோதே எதிர்ப்புகளைத் தூண்டிய நா.காம ராசனின் எழுத்துக்கள் பூமியை நோக்கி வந்த கந்தர்வ வருகைபோல் கவிதைச் சுவைஞர்களை அரவணைத்துக் கொண்டன. நா.கா.வின் கவிதைகள் தரும் ஈர்ப்பின் மையம் என்ன?

கலீல் ஜிப்ரானும், ஒமார் கய்யாமும் வெவ்வேறு விகிதங்களில் வந்து கலந்த தமிழ், அதுவரை காணாத ஒரு அபூர்வக் கலவையான மொழியை நா.கா. கண்டெடுத்தார். அதற்கு ஒரு மாய வசீகரம் இருந்தது. அதனால்தான் கண்ணதாசன், “உலகின் பிற பாகங்களிலிருந்து கலந்துவிட்ட கவிதை நாகரிகத்தின் எதிரொலிகள் இந்த நூலெங்கும் பரவிக் கிடக்கின்றன’’ என்று கவித் தடத்தை அடையாளம் கண்டார்.

‘வானவில் நாட்கள்’, ‘மோக லயச் சிறுபொழுது’, ‘பூர்ணிமையின் மது’, ‘அடிநாளின் வசந்தங்கள்’, ‘மின்மினி இரவின் பின்பனிக் காற்று’ எனச் சொற்களும் தொடர்களும் புனைவியலில் முக்குளித்துப் பூப் பந்தாட்டம் நிகழ்த்துவது நா.கா.வின் கவிதைகளின் தனிச்சிறப்பு.

மற்றொன்று, மலைப்பூட்டும் புதிய பொருண்மை. ‘அவர்கள் நீதிமன்றத்தை விசாரணை செய்கிறார்கள்’ என்று சமுதாய நீதிக்காகப் போராடும் பிச்சைக்காரி, குடிகாரன் பக்கம் நின்று பேசினார்.

“இரவுகூட விடியலில் மன்னிக்கப்படுகிறது

இன்றும் நாங்கள் மன்னிக்கப்பட வில்லை’’

என்று குரல் கொடுக்கிறாள் பிச்சைக்காரி. ‘மதுவே, ராஜதிரவமே மகாகவிஞனின் தாய்ப்பாலே’ எனத் தன் அமுத பானத்தை வியந்து குடிகாரன் நீதிமன்றத்திடம் நியாயம் கேட்கிறான்:

“நீயொரு உதயரேகை என்றால்

இந்த அஸ்தமனங்கள் யாருடையவை?’’

மூன்றாவதாக, நா.கா. நிகழ்த்திய புதுமை. சமூகம் நிராகரித்த அல்லது ஒதுக்கிவைத்த மக்களை முன்னிலைப்படுத்திக் கவிதை புனைந்த திறன். அனாதைகளை,

“சூனியம் ஏந்திய தீபங்களே
சூரியன் தூங்கிய துருவங்களே
ஊமையன் பாடிய பாடல்களே
உயிர்நிழல் இல்லாக் கோடைகளே’’

என விளித்து ‘உங்கள் பாடகன் பாடுகிறான்’ எனத் தன்னை அவர்களின் குரலாக மாற்றினார்.

முதன் முதலாக திருநங்கையர் பற்றி ‘காகிதப் பூக்கள்’ என்று எழுதிய பெருமை நா.கா.வினுடையது.

“சந்திப் பிழை போன்ற
சந்ததிப் பிழை நாங்கள்”

என்று இலக்கியக் களத்துக்கு அறிமுகம் செய்தார். ‘கறுப்பு மலர்கள்’ என நீக்ரோக்களை முன்னிலைப்படுத்தினார்.

“நாங்கள் நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக”

என விலைமகளின் அவலத்தை முன்வைத்தார். நாடோடிகளான லம்பாடிகளைப் பற்றி நெடுங்கவிதை எழுதினார். ‘நாள்தோறும் ஊர்மாறும் நாடோடிக் கவிதைகளே’ என அவர்களை அழைத்தார்.

தமிழ்க் கவிதையில் நா.கா. தன் கறுப்பு மலர்கள், சூரியகாந்தி, தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும் நூல்களால் என்றும் வாழ்வார். செம்மண் பாதையைக்கூட ‘ரோஜாப் பாதை’ என வருணிக்கும் புனைவியல் கூறு, அவரை நீங்கா நிழல் போல் பற்றிக் கொண்டிருந்தாலும், மலையாள இலக்கியத்தில் ‘சங்ஙம் புழா’வின் இடத்தை எவரும் நிராகரித்துவிட முடியாததுபோல் நா.கா. வின் இடமும் நிரந்தரமானது.

நா. காமராசன் எழுத்தின் சலனங்களை அவருடைய தீவிரப் பயண காலத்தில் சேமித்து எடுத்துக்கொண்டவர்களை இன்குலாப் முதல் வைரமுத்து வரை அடையாளம் காட்ட முடியும். ஆனால் அந்த நீர்த்துளிகளை உதறிப் பறந்த செம்பறவை ‘இன்குலாப்’. அதனால்தான் அவர் எழுதினார்:

“என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்று வரையிலும் அப்படியே தொடர்கிறது. எதிர்ப்புக் குரலின் வெளிப்பாடு அழகியலுக்கு எதிரானதாக எனக்கு இப்பொழுதும் தோன்றவில்லை. அழகிழந்து போய்விட்ட உலகில் எதிர்ப்புக்குரல் என்பதே அழகைத் தான் உனது உட்கிடக்கையாக முன் வைக்கிறது.’’(முன்னுரை, ஒவ்வொரு புல்லையும்)

சொல்லும் நடப்பும் ஒன்றாய் இணைந்து வாக்கும் வாழ்வும் இயல்பாய்க் கரைந்த இன்குலாப் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக் கவி. அவருடைய தொடக்ககாலக் கவிதைகளில் ஒன்று உழவனின் வாக்கு மூலமாய் உலா வந்தபோது அதனைப் படித்துப் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன். ‘வயல்வெளிகளின் கதாநாயகன்’ என்ற தலைப்பில் வந்தது கவிதை.

“ஏர்ப் பேனா பிடித்து வேர்வை மை தொட்டு
நிலத்தின் தாள்களில் நெல்லின் கவிதையை
வடிக்கும் கவிஞன், நான் ஓர் உழவன்
வேர்வையை விதைக்கிறேன்
அறுவடை நாளில்
கண்ணீர்த் துளிகளைக்
கணக்குப் பார்க்கிறேன்”


எனவரும் கவிதை வரிகள் நாடி நரம்புகளில் நெருப்பு நதியை மிதக்கவிட்டன.

மனித மூச்சுக் காற்றில் அக்கினிப் பர்வதங்களின் அனலை ஏற்றிய தமிழ், இன்குலாபின் தமிழ்.

“உன்
சிறகசைத்தால் கிரகங்கள் சிதறும்
இந்தத்
தூசுமேடு உனக்கு ஒரு பாரமா?
எழுக... எழுக”


என்று விம்மியது இன்குலாபின் போர்க்குரல்.

மனித இனத்தின் அவலங்களுக்காகத் தன் கவிதையைத் துப்பாக்கி முனையாக்கினார் இன்குலாப். அவர் ஒருவரே மக்கள் கவி, மானுடத்தின் கவி என அழைக்கப்படும் முழுத் தகுதிக்கும் உரியவரானார்.

‘போராட்டம் என் நியதி, என் வாழ்வியல்’ என்று மந்திர உச்சாடனம் செய்யும் இன்குலாபின் கவிதைகளை ‘உரத்து முழங்கும் பிரச்சாரம்’ என்று ஒதுக்கி நிறுத்துபவர்கள் உண்டு. அவர்கள் அறியாதது தன் தொடக்க காலக் கவிதைகளிலேயே கருணையின் துளிகளாய் அவர் கவிதைகள் அரும்பியது என்பது.

பௌர்ணமி நிலவின் படகுக்காரரை அழைத்து, மெல்ல மெல்லப் படகை இயக்குங்கள், கோரைப் புற்களின் நடுவே நீர்ப் பறவைகளின் முட்டைகள் உடைந்துவிடலாகாது என்று விண்ணப்பிக்கிற கவிதை அவர் களத்தில் இரும்பானாலும் உளத்தில் பனிக்கட்டி என்பதைக் காட்டும்.

‘எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும்’ என்று எழுதும் கவிஞர் மிக அருமையாகச் சொல்வார்.

“ஒவ்வொரு புல்லையும்
பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு
எல்லை கடப்பேன்”


என, ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்ற பாவலனின் இதயத்தோடு சேர்ந்து துடித்தது இன்குலாப் இதயம்.

நம்பிக்கைகளை மானுடத்துக்குச் சொல்வதற்கென்றே எழுத்தும் கவியும் இலக்கியமும் இருக்கின்றன என்று கருதுகிறவர் இன்குலாப். எத்தனை நேர்த்தியாக ஒரு காட்சிப் பிம்பத்தின் வழியே இதனைக் கவிஞர் புலப்படுத்துகிறார் என்பதை அனுபவித்துப் படிக்கும் வாசக இதயம் அறியவே செய்யும்.

“கண்ணெட்டும் தூரம்
கானல்.
வானம் தீக்கோலால்
நிலம் மூட்டும்
சுள்ளி புகையும்
இருந்த கிளையும்
இலையின் தோழமையும்
அருந்த விரிந்த
பூவின் அழகும்
சிறகில் சுமந்தபடி
வற்றிய மேகத்தில்
வகிடு பிளந்து வரும்
ஒற்றைப் பறவை.”


மழையும், நதிகளும், வெள்ளமும் கனவுகளாய் வெறித்துப் போகும் சூழலிலும் சக உறவுகளின், உயிர்களின் பரிவும், பாசமும் வாழ்க்கையின் ஈரம் காக்கும் என்பதைப் பல கவிதைகளில் உணர்த்தியிருக்கிறார் இன்குலாப்.

“வேர்களில் கேட்ட
நுரையின் சிணுங்கலை
இலை உதடுகளால்
கிளிகளுக்குச் சொல்லும்
நதிவராத நாட்களில்
இன்னும் சாயாத
முதுமரங்கள்”


என்பது இதனை உணர்த்தும் இன்னொரு கவிதை.

இத்தனை அழகியலோடு உணர்வுப் பிம்பங்களை நம் மனதில் உறைய வைக்கும் கவிஞரை, கவிதையின் பன்மைத்துவம் மறந்த பரிசுத்த இலக்கியவாதிகள் திரையிட்டு மூடத் திறனாய்வுச் சமுக்காளங்களைத் தூக்கித் திரிகிறார்கள்.

இதற்குக் கவிஞர் இன்குலாப் பதில் சொன்னார்:

“எழுத மாட்டேன்
ஒரு வரிகூட
நீ ஒப்பும்படி
கட்டை விரலை இழந்த
ஏகலைவர்கள்
கண்ணையும் இழந்ததனால்
மௌன வாசிப்புக்காரனே
நான், கண்ணில் எழுதாமல்
காதில் எழுதுகிறேன்”


கவிஞர் இன்குலாப் எக்காளம் மட்டுமல்ல, இனிய கிதாரும் கூட.

- தொடரும்கவிஞர் சிற்பி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions