c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

நாட்டியத்தின் குயில்மொழி

தஞ்சை நால்வர் தலைமுறையில் வந்த நடன மேதை மறைந்த கே.பி.கிட்டப்பா பிள்ளையின் நேரடி மாணவியான கலைமாமணி நர்த்தகி நடராஜ் உலகளவில் தன் நாட்டிய முத்திரையைப் பதித்து வருகிறார். தான் கற்ற கலையை அடுத்தத் தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பது தம் கடமை என்கிற நோக்கத்தில் தனது தோழி சக்தியுடன் இணைந்து ‘வெள்ளியம்பலம்’ என்கிற நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார். ஏராளமான மாணவர்கள் இதில் பயின்று வெளியேறி மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அந்த வரிசையில் நாடறிந்த வழக்கறிஞரும் சமூகச் சிந்தனையாளருமான அருள்மொழியின் புதல்வி குயில்மொழி மிக முக்கியமான மாணவர் ஆவார். ஆறு ஆண்டுகள் நர்த்தகியிடம் நாட்டியம் கற்று முடித்த அவரின் நாட்டிய அரங்கேற்றம், ஜூலை 17 ஆம் தேதி சென்னை மைலாப்பூரிலுள்ள பாரதிய வித்யா பவனில் சிறப்பாக நடந்து முடிந்தது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை ஏற்க, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலை வகிக்க, ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் திருமதி பிரபா ஸ்ரீதேவன், மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், தமிழறிஞர் ஔவை நடராசன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழக கலைப் பண்பாட்டுத்துறை  மண்டல உதவி இயக்குனர் ப.ஹேமநாதன், கலைமாமணி சாரதா நம்பி, திரு. குரு,  கவிஞர் அறிவுமதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க நாட்டிய நிகழ்வு எழிலுடன் நடந்தது.

திருக்குறள் வாழ்த்தில் தொடங்கிய குயில்மொழியின் நாட்டிய அற்புதங்கள் சொல்லுக்கட்டு, விருத்தம் (அகநானூறு - கபிலரின் குறிஞ்சி மலை வர்ணனை), சதுஸ்ர அலாரிப்பு (திருப்புகழ்- உனைத் தினம்), வர்ணம் (அருள்மொழி எழுதிய பெண்ணெனும் பேராற்றல்), ஜாவளி ( பாரதிதாசனின் ‘பாண்டியன் என் சொல்லை’), பதம் (பாரதியின் ‘திக்குகள் எட்டும் சிதறி’), குறவஞ்சி நடனம்  ( கூடை முறம் கட்டுவோம், குறி சொல்லுவோம்), தில்லானா என ஏழு நிலைகளாக விரிந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிறைவு பெற்றது.

நாட்டிய தாரகை நர்த்தகியின் நடன அமைப்பிற்கும் நட்டுவாங்கத்திற்கும் குரலிசை, முழவிசை, நரம்பிசை, குழலிசை, யாழிசை, சிறப்பு ஒலி, ஒப்பனை உள்ளிட்ட அனைத்து பக்கக் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது.

நெய்வேலி புத்தகக் காட்சியில் தன் முதல் மேடை நிகழ்வைத் தொடங்கிய குயில்மொழி, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், கபாலீஸ்வரர் கோயில், பாரதிய வித்யா பவன், திருப்பதி தேவஸ்தானம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் கலைப்பண்பாட்டுத் துறை நிகழ்வுகள் என பல மேடைகளில் குரு நர்த்தகியின் வழிகாட்டுதலின் பேரில் ஆடியிருக்கிறார். மேலும் தன் குருவான நர்த்தகியின் நடன நிகழ்வுகளுக்கு நட்டுவாங்கமும் செய்திருக்கிறார்.

அழகான தமிழில் திருமதி ஜெயஸ்ரீசுந்தர் நிகழ்வைத் தொகுத்து வழங்க, வழக்கறிஞர் அருள்மொழி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வை கச்சிதமாக ஒருணைத்திருந்தார் திருநங்கை சக்தி பாஸ்கர்.

- அறிவு

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions