c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

நோட்டாவும் ஜனநாயகமும்
நடந்து முடிந்த மே 16, 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், நோட்டா வாக்குகள் பற்றிச் சமூக ஆர்வலர்கள் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டிருக்கிறார்கள்.

“எனக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் மீதும் நம்பிக்கை இல்லை. ஆகவே நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை. எனவே, என் வாக்கை நான் யாருக்கும் செலுத்தவில்லை” என்பதே நோட்டாவின் அர்த்தம்.

நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 561244 வாக்குகள் நோட்டாவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. அதாவது, இந்த அரசியலில் அதிருப்தியடைந்தவர்கள் மொத்தம் 561244 என்பது இதன்மூலம் வெளிப்படுகிறது.

தேர்தல் கமிஷன் முதல் அரசு விளம்பரங்கள் வரை, தேர்தலில் கலந்துகொண்டு ஜனநாயகக் கடமை ஆற்ற மக்களை அழைத்திருந்தன. நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள், வாக்குச்சாவடி வரை வந்து, பொறுமையாகத் தம் எதிர்ப்பை ஜனநாயகப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்கள். வாக்கு போட விரும்பாதவர்கள் வீட்டிலிருந்தே அதைத் தவிர்த்து இருக்கலாம். ஆனாலும் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பாராட்டத்தக்கவர்கள்.

ஆனால், விஷயம் அத்தோடு முடிவடையவில்லை.

ஒட்டுமொத்த, வாக்காளர்களான 58259801 பேரில் பதிவான வாக்குகள் 74.62 சதவிகிதம் என்றால், நோட்டா 561244 என்பது புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கை இல்லை. எனக்கு இந்த அரசியலும், கட்சிகளும், வேட்பாளர்களும் பிடிக்கவில்லை என்று தனிமனிதர்கள் பெருகுவது, ஜனநாயகத்துக்கு சார்பான, ஜனநாயகத் தத்துவத்துக்கு எதிரான செயல்பாடாகவே தோன்றுகிறது.

வாக்களிக்கும் வாக்காளர் தன் வாக்கை எதற்காகப் பதிவு செய்கிறார்?

அ) அவர் விரும்பும் அரசியல் கட்சி, முன்னர் மக்களுக்கான பணிகளைச் சிறப்பாக ஆற்றி இருக்கிறது. ஆகவே, அக்கட்சியைத் தனக்குப் பிடிக்கிறது. அக்கட்சியின் பணி தொடரவேண்டும். ஆகவே அக்கட்சிக்குத்தான் வாக்களிக்கிறேன்.

ஆ) ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர், தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவர். ஒழுக்கமான அரசியல்வாதி. அவர் வெற்றிபெற்றால் தொகுதி மேலும் சீரடையும். ஆகவே அவருக்குத்தான் வாக்களிக்கிறேன்.

இ)  தன் தொகுதியில் போட்டியிடும் அந்த நான்கு அல்லது  ஐந்து வேட்பாளர்களில் ‘சிலரே’ பொருத்தமானவர். ஆகவே அவருக்கு வாக்களிக்கிறேன்.

ஈ) எக்கட்சியைச் சாராதவராக இருந்தாலும், இந்தச் சுயேட்சை மிக நல்ல வேட்பாளர். உண்மையான மனிதர். ஆகவே அவருக்கு வாக்களிக்கிறேன்.

உ) முன்னர் ஆட்சியில் இருந்த கட்சி இது. அது, நான் எதிர்பார்த்த பணிகளை ஆற்றி இருக்கிறது. அது தொடர அக்கட்சிக்கு வாக்களிக்கிறேன்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே ஒரு தனிமனிதர் ஒரு கட்சிக்கு அல்லது கட்சி சாராத சுயேச்சைக்கு வாக்களிக்கிறார்.

இதை நோட்டாவுக்கு வாக்களித்த தனிமனிதர்க்குப் பொருத்திப் பார்ப்போம்.

அ) அவர் விரும்பி இருந்த அரசியல் கட்சி சரியாகத் தன் பணியை ஆற்றவில்லை. ஆகவே அதைத் தான் ஆதரிக்கவில்லை.

ஆ) தன் தொகுதியின் அக்குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் சரியான, தகுதியான நபர் இல்லை. ஆகவே, தான் வாக்களிக்கத் தயாரில்லை.

இ) தன் தொகுதியில் நிறுத்தப்பட்ட எந்த வேட்பாளரும் சரி இல்லாதவர். ஆகவே, தன் வாக்கை யாருக்கும் போடத் தான் தயாரில்லை.

ஈ) சுயேச்சைகளால் அரசில் எந்த நிகழ்வுகளையும் தோற்றுவிக்கவும் முடியாது. மக்களுக்கான சேவைகளையும் முழுமையாக ஆற்ற முடியாது. அதோடு, ஆளுங்கட்சிகள், சுயேச்சைகளை அவ்வளவு சுலபமாக அங்கீகரிப்பதில்லை.

உ) முன்னர் ஆட்சியில் இருந்த கட்சி இது. இக்கட்சி தொடர்ந்து ஆட்சி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இவை அல்லாமல், இதற்கும் மேலான சில காரணங்கள் நோட்டாவுக்கு இருக்கக்கூடும்.

இந்தக் கட்சிகளால், இந்த அரசுகளால், இந்த ஆட்சிகளால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆகவே என் வாக்கு யாருக்கும் இல்லை.

நாடு விடுதலை அடைந்த 1947க்குப் பிறகு, எத்தனை தேர்தல்கள்? எத்தனை வாக்குறுதிகள்? எத்தனை தேர்தல் அறிக்கைகள். சமூகப் பொருளாதாரப் படிநிலைகளில் மிகக் கடைசியாக வைக்கப்பட்ட மனிதர்கள் ஏற்றம் பெற்றார்களா என்றால் இல்லை.

இன்னும் இந்த தேசத்தில் ஒரு மாணவர் தான் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து இலவசமாகக் கல்வி கற்று பட்டதாரியாக வெளியே வரும் சூழல் ஏற்படவில்லை.

பட்டதாரியாக வெளிவந்து, தன் குடும்பத்திற்கு, வயதான பெற்றோர்க்கு உதவியாக இருக்க, முறையான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. வேலை இல்லாதவராகவும், வேலை கிடைத்தாலும், உரிய சட்டபூர்வமான சம்பளம் கொடுக்கப்படாமல், இருபதில் ஒரு பங்கு சம்பளம் வாங்கி வாழ நேர்ந்த இளம் இந்தியர் வாழ்க்கை நிலை இன்னும் எத்தனைக் காலம் நீடிக்கும்.

வாக்களிக்காதவர் கோபம் இப்படியாக இருக்கலாம். அல்லது, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றியதாக இருக்கலாம்.

அல்லது விலைவாசி இப்படித் தாறுமாறாக ஏறிக் கிடப்பதைக் கண்டு கோபப்பட்டிருக்கலாம்.

மனிதர்க்குக் கோபப்படக் காரணமா இல்லை?

இருக்கிறது.

என்றாலும், ஒரு வாக்காளர் கோபம் அரசு, அரசாங்கம், அதன் நிறுவனங்கள்மீது இருக்கலாம். ஆனால் அடிப்படையான, அரசுகளையே உருவாக்கும் மக்களுக்கான உரிமைகளைத் தரும் தேர்தல் மீது இருக்கக் கூடாது.

வாக்கைப் பெறும் கட்சி, நபர்கள் மேல் கோபம் இருக்கலாம். ஆனால் தேர்தல் அமைப்பையே குற்றம் சொல்வது சரியா என்பதை யோசிக்கவேண்டும். தேர்தல் அமைப்பு என்று ஒன்று இருப்பதால்தானே, ‘நோட்டாவையே’ ஒருவர் பிரயோகிக்க முடிகிறது?

இன்னொரு அபாயமும் இருக்கிறது.

அந்தக் கோபக்காரர் போடாத வாக்கு, ஒரு மோசமான வேட்பாளருக்குச் சாதகமாக ஆகிவிடவும் கூடும். ஆயிரம் பேர் நோட்டாக்காரர்கள் போட்ட நோட்டா வாக்குகள், ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஒரு நல்ல வேட்பாளரைத் தோல்வியுறச் செய்துவிடக்கூடும்.

ஜனநாயக உணர்வைத் தூண்டி, ஒரு ஆரோக்கியமான அரசை நமக்கு நாம் உருவாக்க வாய்ப்பளிக்கும் தேர்தலை நோட்டாக்களே சீர்குலைத்துவிடக் கூடும்.

அதேசமயம், வாக்குச்சாவடி வரை வந்து நோட்டாவில் போடும் ஒரு மனிதரை நோகடிக்கச் செய்த அரசியல் கட்சிகள் இதுபற்றி யோசிக்க வேண்டும். யோசித்துத் தம்மை மக்களுக்கு நெருக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தைக் காப்பது, வளர்ப்பது மக்கள், அரசியல்வாதிகள் இருவருக்குமான கடமைகள் என்பதை மறக்காமல் இருப்பது தேசத்துக்கு நல்லது.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions