c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்

திரைப்படங்களில் இளைஞர்கள் சித்திரிப்பு!

காடு போன்ற தலைமுடியுடனும் பரதேசி மாதிரியான தாடி மீசையுடனும், படிக்காதவனாக, லுங்கியுடன் தண்ணியடித்து விட்டு தத்துவம் பேசும் ஊர்சுற்றியாக, அதிகபட்சம் காதலுக்கு உதவி செய்பவனாக, நட்புக்காக போகிறபோக்கில் உயிரைத் தருபவனாக, மிக மேம்போக்காக வாழ்வை அணுகுபவனாக வரும் இளைஞர்களைத்தான் சமீபத்திய பல ஆண்டுக்கால தமிழ் சினிமாவில் பார்த்து வருகிறோம். அல்லது டவுசர் தெரிய கட்டிய வேட்டியுடன் அரிவாளுடன் சுற்றும் ஜம்பவான்களாக வருகிறார்கள். இல்லாவிட்டால் இலக்குகள் ஏதுமற்ற காமடியர்களாக சிரித்துக் கிடக்கிறார்கள். இந்த மாதிரி ஆளுகளையே தேடிப்பிடித்தோ அல்லது துரத்தியோ காதல் வயப்படுபவர்களாக நமது இளைஞிகள் வருகிறார்கள். இலக்கியம், தத்துவம், சமூகப் புரிதல் கொண்ட இளைஞர்களைப் பிடிக்காதவர்களாக அல்லது கண்டுகொள்ளாதவர்களாக வருகிறார்கள். அக்கறையும் அறிவுரையும் அவர்களுக்கு வேலைக்காகாதவை ஆகிவிட்டன.

எல்லாவற்றையும் நாம் பொத்தாம் பொதுவாகவும் சொல்லவில்லை. ராஜ்கிரன்  போட்ட   டவுசருக்கும் , ஓங்கிய கைக்கும், ஈ பட ஜீவாவுக்கும் கொடுக்கிற இடத்தை மேற்கண்டவர்களுக்குக் கொடுக்கமுடியுமா?

நம்முடைய கேள்வி, என்னதான் சினிமா ஒரு கற்பனையாக இருந்தாலும் அது வெகு மக்களை சென்றடைகிறது. மனம் மற்றும் சிந்தனை ரீதியாக கனிசமான பாதிப்பைச் செலுத்துகிறது. அப்படியிருக்கையில் இதை திரைத்துறைப் படைப்பாளர்கள் எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். இக்கால இளைஞர்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள்? எப்படிப் புரிந்துகொள்கிறார்கள்? என்பதையறிய இந்த இதழுக்கான இளைஞர்களைச் சந்தித்தோம்.  கண்டனத்துக்குரியவைதான்
இரா. தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவன ஊழியர்
நிச்சயமாக திரைப்படங்களில் காட்டப்படும் நாயகக் கதாப்பாத்திரங்களில் பெரும்பாலானவை கண்டனத்துக்குரியவை தான். திரைப்படங்களில் தங்களது ஆதர்ச நாயகனின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நிஜ வாழ்க்கையில் அப்படியே பின்பற்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆகவேதான் இன்றைக்கு நாயகர்கள் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுகின்றன. ஒரு பெண் வேண்டாம் என்றாலும் விடாமல் துரத்தி துரத்தி டார்ச்சர் செய்து காதலியாக்கிக் கொள்ளவேண்டும் என்பது என்ன மாதிரியான மன நிலையை உருவாக்கும்? காதலிப்பதையே முழு நேரமாக வைத்துக்கொள்ள முடியுமா என்ன? இதைப் பார்க்கும் பெண்களுக்கேகூட தன்னையும் ஒருவன் இப்படியாகக் காதலிக்க வேண்டும் என்கிற எண்ணம் உளவியல் ரீதியாக ஏற்படலாம். காதல் முதல் திருமணம் வரையிலான பயணத்தை மட்டுமே பெரும்பாலான திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை ‘அலைபாயுதே’ போன்ற வெகு சில படங்கள்தான் காட்டியிருக்கின்றன. திரைப்பட பாணியில் காதலிப்பவர்களும் காதலிக்கப்படுபவர்களும் இன்னமும் இருக்கிறார்கள். ‘கலகலப்பு’ படத்தில் ‘இப்பவெல்லாம் பொண்ணுகளுக்கு பொய் சொல்றவனையும், பொறுக்கிகளையும்தான் பிடிக்குது ’ என்று ஒரு வசனம். பொறுக்கித்தனம் செய்பவனைக் காதலித்து திருமணம் புரிந்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை எந்த கதிக்கு ஆளாகும்?

கதாநாயகிகள் நிலையோ பரிதாபம்!
சூர்யபிரபா, கிராஃபிக் டிசைனர்
பெரியதாக இதுபற்றிய விவாதங்கள் இல்லையெனிலும் இவை சலிப்புக்குரியக் கதாபாத்திரங்களே. தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்டமே இந்த ஜீவிதத்தின் அடிநாதமாக இருக்கிறது. ‘மூடர்கூடம்‘ படத்தில் ‘சாப்பாட்டுக்கே வழி இல்லைங்கிறப்போ, காதலெல்லாம் ஒரு பிரச்சனையா’ என ஒரு வசனம்

வரும். அதுதான் உண்மை. இன்றைக்கு வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். படிப்புக்கென வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களும் லட்சம் பேர். திரைப்படங்கள் காதல் மட்டும்தான் இளைஞர்களின் தலையாய பிரச்சனை என்று காண்பிக்கின்றன.  இன்றைய ரசிகர்களின் பார்வை முற்றிலுமாக மாறிவிட்டது. எல்லாவிதமான  கதாபாத்திரங்களும் கவனிக்கப்படுகின்றன. நல்ல பாத்திரங்கள் சமூகஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன, பாராட்டப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்களைச் சித்தரிக்கும் அவசியம் தவிர்த்து பரட்டைத்தலை இளைஞர்கள் கதாபாத்திரங்களை கதாசிரியர்கள் தவிர்த்துவிடுவது நலம்.

இலட்சியவாதத்தோடு இன்றைக்குப் பல இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் நமது சினிமா கட்டமைக்கும் பிம்பம் போலியானது.

கதாநாயகர்கள் கூட பரவாயில்லை கதாநாயகிகள் நிலையோ அந்தோ பரிதாபம். ஊறுகாய் போல் டூயட்டுக்கும் குத்துப் பாடலுக்கும் மட்டுமே வந்து போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலாவது பாலச்சந்தர் படங்களின் பாத்திரங்களைப் போல் பாத்திரப்படைப்புகள் இருக்கவேண்டும்.

சமூகப் போராளி நாயகனாக இல்லையே!
பார்வைதாசன், கவிஞர்
அதிகம் படிப்பவர்களை திரைப்படங்கள் கேலி செய்கின்றன. மாதச்சம்பளம் வாங்கும் பொறுப்பு மிகுந்த கதாப்பாத்திரங்களை அசடுபோலத்தான் காட்டுகிறார்கள். பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்க முடியாதவர்களே இங்கு நாயகர்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். சமூகப் பிரச்சனைகளுக்காகப் போராடிச் சிறைக்குச் செல்லும் கொள்கைமிக்க இளைஞன் ஒருவனையாவது தங்களது நாயகனாக சித்தரித்திருக்கிறார்களா? இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஈழப் போராட்டம் வரை எத்தனையோ இளைஞர்கள் போராடியிருக்கின்றனர், வீரமரணம் அடைந்திருக்கின்றனர். அப்படிப் பட்டவர்களைத்தான் நாம் நாயகர்களாகக் கொண்டாட வேண்டும். இன்றைக்கு உலக இளைஞர்களின் முன் மாதிரியாக இருப்பவர் சேகுவேரா. தென்அமெரிக்க நாடுகளில் அவர் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் அவரை புரட்சியின் பக்கம் திருப்பியது.

இதுபோன்ற இலட்சியவாத இளைஞனைத்தான் கதாநாயகனாகக் காண்பிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். வௌங்காதவன், உருப்படாதவன், திருத்தவே முடியாத ஜென்மம்  என்று திட்டு வாங்குபவர்கள்தான் நாயகர்கள் என்றால் நீங்கள் கீழ்த்தரமான சிந்தனைகளில் ஊறியுள்ளீர்கள் என்று அர்த்தம்.


இந்தப் போக்கு மாறவேண்டும்!
பிரதீப், கட்டிடப் பொறியாளர்
இலக்கியம் தத்துவம் சமூகப் புரிதல் கொண்டவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட படத்தை நாம் கொண்டாடும்போது நம் சக நண்பர்களால் நாம் சைக்கோ என்கிற முத்திரை குத்தப்படுகிறோம். டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவனுக்கும் காதலும் மற்றவையும் சினிமா என்கிற வெளியின் மூலமாகவே புரிகிறது. அப்போது அவன் பார்க்கும் கதாநாயக பிம்பத்தை ஒருத்தி காதலிக்கும்போது இவனுக்கும் தான் காதலிக்கப்பட வேண்டுமென்றால் அப்படிப்பட்ட ஒரு மோசமான முன்னுதாரனமாக அந்த கதாநாயகனைப் போலவே இருக்க விரும்புகிறான். இந்தப் போக்கு மாறவேண்டும். அனைத்து விதமான சமூகப் புரிதல்களோடு மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் ஒருவனைத்தான் நாம் முன்னிறுத்த வேண்டும் உதாரணமாக ‘கற்றது தமிழ்’ பிரபாகர் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தலாம். காடு போன்ற முடியுடனும், தாடியுடனும் திரிந்தாலும் உலகமயமாக்கலையும் ஏற்றத்தாழ்வுகளையும் கூறிய “கற்றது தமிழ்” பிரபாகரைத்தான் எனக்கு பிடித்திருக்கிறது.

முன்னுதாரணமாக இருக்கவேண்டும்!
அனு, பல்கலைக்கழக மாணவி
அன்றாடம் பேசும்போதுகூட ஏதேனும் சினிமா வசனத்தைப் பயன்படுத்தாமல் இருக்கமாட்டோம். அப்படியாக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது சினிமா. ஆனால் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு பொழுதுபோக்கு வேறு, யதார்த்த வாழ்க்கை வேறு என்கிற புரிதல் இல்லாமல்தான் இருக்கிறது. ஏதேனும் ஒரு கொலை சம்பவத்துக்குப் பின்னால் ஒரு சினிமா பாணி ஒளிந்திருக்கிறது. சினிமா இவற்றைத்தான் இச்சமூகத்துக்குக் கற்றுக்கொடுக்கிறதா? பெரும் பாலும் நாயகர்கள் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடித்துவிட்டால் அவளைக் காதலிப்பதையே முழு நேர வேலையாகச் செய்வார்கள். அப்பெண்ணும் அவனைக் காதலிப்பாள். யதார்த்த வாழ்க்கையில் வேலை இல்லாத பொறுப்பற்ற ஒருவனை ஒரு பெண் காதலித்து மணமுடித்துக்கொண்டால் அவள் வாழ்க்கை என்னவாகும்? ஆக சினிமா என்பது வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். கல்விமுறை மற்றும் பெற்றோர்களின் மனநிலை மீது கேள்வியெழுப்பிய படம் ‘ சாட்டை’. இப்படம் மூலமாக நிறைய பெற்றோர்களுக்கு நல்லதொரு புரிதல் ஏற்பட்டது. இப்படியான படங்கள் மற்றும் நாயக கதாப்பாத்திரங்களே நம் சமூகத்துக்கு அவசியத் தேவையாக இருக்கின்றன.

வாழ்க்கையிலிருந்து சினிமா உருவாகவேண்டும்!
கல்பனா, எம்.பி.ஏ பட்டதாரி
சினிமா யதார்த்த வாழ்வை பிரதிபலிப்பதே இல்லை. வாழ்க்கையிலிருந்து திரைப்படங்கள் உருவாகவேண்டும். இங்கோ திரைப்படங்களில் வருவது போல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவிலேயே ஒரு காலகட்ட சமூக அநீதிகளுக்கெதிராக குரல் கொடுப்பவர்கள் நாயகர்களாக இருந்தார்கள். இந்தியன் பட கமல் போன்ற கதாப்பாத்திரத்தை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கோ சில  படங்கள் திருடுவதை ஒரு ஃபேண்டஸியாகக் காட்டுகின்றன. திருடுவதற்கான வழிமுறை களைப் பாடமெடுக்கின்றன. சினிமாவில் காண்பதைத்தான் நாம் நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறோம். ‘எனவே முன்மாதிரியான பாத்திரங்களைக் கொண்டே சினிமாவை எடுக்கவேண்டும்’ என்று அவசியமில்லை. உங்களது பாத்திரங்கள் தவறான முன்னுதாரணங்கள் ஆகிவிடக்கூடாது.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions