c நமது நூலகம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நமது நூலகம்

ஊர் பற்றி ஓர் உணர்வுச் சித்திரம்

ஊர் என்பது வெறும் மண் அல்ல. வீடுகளால் நிறைக்கப்பட்ட கான்கிரீட் வனமல்ல. மாறாக, அது மனிதனை ஈரத்தோடும், சமூகத்தோடும் ஒன்றிணைக்கிற இரண்டாவது கருப்பை. வெளி ஊர்களில் வேலை செய்யப்போகும் மக்கள் தங்கள் சொந்த ஊர் பற்றிய மனக் கிளர்ச்சிகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில், முக்கியமான சிறுகதை, கட்டுரை, எழுத்தாளராக அறியப்படும் அழகியபெரியவன், தன் ஊர் பற்றி எழுதிய கட்டுரைகள் ‘தேநீர் மேசை’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த ரசமான, கருத்து சார்ந்த எழுத்துப் பதிவுகளில், மிக முக்கியமாக ஊர் பதிவாக இந்நூல் இருக்கிறது. இளமையில் அவர் கண்ட ஊர், இப்போது இல்லாமலே போகும் அவலத்தை மனம் கசிய அவர் எழுதி இருக்கிறார். கிராமத்தைச் சுற்றி வந்து, சவ்வு மிட்டாய் விற்ற மீசைத் தாத்தாவை நினைவு கூர்கிறார். கிராமத்து வாழ்க்கையின் அசலான நிழல்களில் தாத்தாவும் ஒருவர். வளையல் விற்க வரும் அண்ணன், பனங்கிழங்கு, பனை வெல்லம் விற்பவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். சந்தை என்று வாரம்தோறும் மக்கள் கூடும் சமூகக் கூடல், இப்போது எங்கே போயிற்று. மாடும் கோழியும் மற்றும் மக்களின் அனைத்துத் தேவைகளும் விற்று வாங்க, மனிதர் கலந்து புழங்க இருந்த ஒரு சமூகவெளி சுத்தமாக இல்லாதுபோனது பற்றி நியாயமான வருத்தங்களோடு எழுதுகிறார் அழகிய பெரியவன்.

நூறாண்டு காலத்து வீடு இடிக்கப்படுவது பற்றிய எந்த வருத்தமும் இல்லாது பாகப் பிரிவினை பற்றிப் பேசும் உரிமையாளர், அக்காலத்தில் பயணம் போகிற மக்களுக்காகத் தங்கி, ஓய்வெடுத்து, உண்டு உறங்கிச் செல்ல என்று தர்மசிந்தனையாளர்களும், அரசர்களும் அதிகாரிகளும் கட்டுவித்த சத்திரங்களை நன்றியோடு நினைக்க இப்போது யாரும் இல்லை.

திண்ணைகள், வெளியூர்க்காரர்களுக்கானது. அவர்கள் தங்குமிடம் அது. இப்போது இந்தத் தலைமுறைக்கே திண்ணை என்றால் என்னவென்றே தெரியாது. எதுக்கு இடத்தை ‘வேஸ்ட்’ பண்ணுகிறீர்கள் என்று கேட்கவும் கூடும். திண்ணை மட்டுமல்ல, இரவு நேரத்தில் பயணம் செய்து ஊரைக் கடக்கும் வெளியூர்க்காரர்கள் பட்டினி இருக்கக்கூடாது என்பதற்காக, பழைய சோறும் வியஞ்சனமும் வைத்துக் குடிக்கப் பாத்திரத்தில் நீரும் வைத்துப் படுக்கப்போகும் சமூகம் நம்முடையது.

“எங்கள் ஊர் மலைகளில் சீத்தா மரங்கள் அதிகம். அதன் பழக்காலம் வந்தால் அறுப்பு முடிந்ததும் மக்கள் அறுத்துக்கொள்ள என்று மிச்சக் காய்ப்பை விட்டுவிடுவார்கள், ஏலம் எடுத்தவர்கள். மாந்தோப்புகளிலும் கூட இப்படித்தான்.நெல் அறுத்த நிலத்தில் நெல் பொறுக்கியும், மணிலாக் கொட்டை பிடுங்கிய பூமியில் மணிலா பொறுக்கி வந்தும்கூட சீவனம் செய்த மனிதர்கள் அன்று இருந்தார்கள். அவர்களுக்காகக் கவலைப்படும் மக்களும் இருந்தார்கள்.

முன்பெல்லாம் ஊரில் இருக்கும் முஸ்லீம்கள், பீடித் தொழிலாளர்கள், ‘பாக்தமாஷா’ என்று சொல்லப்படும் மலை ஏற்றம் நிகழ்த்துவார்கள். அப்போது உணவுக்கு என்று தேவையானதை எடுத்துச் செல்வார்கள்.

சீத்தாப் பழங்கள் விளைந்த காடுகள், கள்ளச் சாராயம் காய்ச்சும் இடமாகி விட்டன. இப்போது சீத்தாப் பழங்கள் அழிந்தன. பாக்தமாஷாவுக்கும் யாரும் போவதில்லை. காட்டு மிருகங்கள் ஊருக்குள் வருவது பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. உண்மை என்னவென்றால் காட்டு மிருகங்களின் இடத்தை நாம் அபகரித்துவிட்டோம். அல்லது அந்நிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம். அவைகளின் தடம் மாறும்போது, அவை நிலை குலைந்து போகின்றன. பிரச்சனையே அதுதான். நாம், விலங்கின் மேல் பழி போடுகிறோம்.

இன்னும் நிறைய, நிறைய ஊர், ஊரின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, மனித உறவுகள் பற்றி எல்லாம் ஏராளமான தகவல்கள், மிகுந்த நேசத்தோடு மக்களையும் மண்ணையும் எழுதுகிறார் அழகிய பெரியவன். வாசித்து நேசிக்கவும் வேண்டிய  நூல் தேநீர் மேசை.

நூல்: தேநீர் மேசை
ஆசிரியர் : அழகிய பெரியவன்
வெளியீடு : நற்றினை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்ப தெரு, சென்னை - 5
பக்கங்கள் : 80 விலை ரூ : 70/-

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions