c நாடகம் சமூகத்தை மாற்றும்!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாடகம் சமூகத்தை மாற்றும்!

சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்ட, பிரளயன் தமிழ் நாடகத்தளத்தில் முக்கியமானவர்களில் ஒருவர். வீதி நாடக இயக்கம், சென்னைக் கலைக்குழு, திரைத்துறை என பல விதங்களில் பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஆனாலும் அவரது ஜீவன் நாடகத்தில்தான் உறைந்துள்ளது. தமிழின் தொன்மமான வரலாற்றுப் பதிவுகளைச் சமகால அரசியலோடு ஒப்பிட்டுப் பேசும் ஆழமான அரசியல் பார்வை அவருடையது. பல்சுவை காவியத்திற்காக அவருடன் பேசினோம்!

25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட சென்னைக் கலைக்குழுவை எந்த நோக்கத்தில் தொடங்கினீர்கள்?
சென்னைக் கலைக்குழு தொடங்கப்பட்ட 80களின் தொடக்கக் காலகட்டத்தில் ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ போன்ற அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிக்கிற அல்லது கேள்வி எழுப்புகிற நாடகக் குழுக்கள் பலவையும் தடை செய்யப்பட்டன. நாடகக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். உலகப் புகழ்பெற்ற கலைஞர் சந்திரலேகாமீது கூட தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தார்கள்.  அரசியல் சூழலுக்கு எதிராகத் தன் கலையின் வாயிலாக குரல் கொடுக்கிற உரிமை ஒரு கலைஞனுக்கு இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை கொண்ட நாட்டில் நாடகக் குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானதாக இருந்தன. அப்போக்குக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்கிற பிரதான நோக்கத்தில் எனது அரசியல் பார்வை மற்றும்  நம்பிக்கைகளைப் புரிந்துகொண்ட நண்பர்களுடன் இணைந்து சென்னைக் கலைக்குழுவைத் தொடங்கினேன். எங்களுக்கென ஒரு குழுவை உருவாக்கினோம். அக்குழுவில் மொத்தம் 19 பேர்கள் இருந்தோம். மேலும் நாடகத்துக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்த இசை மற்றும் ஒப்பனைக்கு தொழில் முறைக் கலைஞர்களைப் பயன்படுத்தினோம்.

உங்களுடைய பிரதான செயல்பாடாக கவிதையே இருந்தது எனச் சொல்லியிருக்கிறீர்கள். வீதி நாடகம் மற்றும் திரைப்பட இயக்கமும் நடத்தியுள்ளீர்கள். எதை உங்களது அடையாளமாகக் கொள்வது?
ஒவ்வொன்றும் அதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் செய்த பணிகள்தான். மேற்சொன்ன எல்லாமும்தான் எனது அடையாளம். அன்றையச் சூழலில் வேற்று மொழியில் வெளிவந்த நல்லதொரு கலைப் படைப்பை நம் மக்களிடம் கொண்டு போய்ச் செலுத்துவதற்காக  திரைப்பட இயக்கம் தேவைப்பட்டது. இன்றைக்கான காலச் சூழல் மாற்றத்தில் அது தன் தேவையை இழந்து விட்டது. இணையப் பயன்பாடு பெருகிய பிறகு எந்த மொழிப்படங்களையும் எளிதில் தரவிறக்கிப் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்த பிற்பாடு அது குறித்த அறிவு பலரிடம் வளரத் தொடங்கியிருக்கிறது. இப்போது திரையிடலை முன்னெடுத்துச் செல்வதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. நான் இன்றைக்கு நல்ல திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கிறேன். மற்ற எல்லாவற்றையும்விட நாடகத்துறையில்தான் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கான அடையாளம் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், நாடகம்தான்.

எழுத்து, ஓவியம் அளவுக்கு நாடகம் மக்களைச் சென்றடைந்துள்ளதா?
நாடகம் என்பது மிகப்பெரும் வரவேற்பு பெற்ற பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. மக்களுக்கு மிகவும் நெருக்கமான கலை வடிவம் அது. வட மாவட்டங்களில் நடக்கிற கூத்தும், தென் மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் இசை நாடகங்களும் இன்றைக்கும் செல்வாக்குடனும் உயிர்ப்புடனும்தான் இருக்கின்றன. இருந்தாலும் முந்தைய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அப்போது நாடகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு அபரிதமானது.  

சினிமா என்பது தனியான ஒரு கலைவடிவம். ஆனால் இந்தியாவில் சினிமா என்பது நாடகத்தின் அடுத்த கட்டமாகத்தானே பார்க்கப்பட்டிருக்கிறது?
உண்மையில் இது சினிமாவுக்கான பலகீனம்தான். நாடகம், சினிமா என  இரண்டுமே தனித்தனியான கலைவடிவங்கள். இரண்டுக்கும் சில ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன. நாடகங்களைக் காட்டிலும் சினிமாவில்தான் பொருளாதார ரீதியிலான வாழ்க்கை உத்திரவாதம் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும். நாடகங்களில் நடிக்கிற நடிகனால் சினிமாவிலும் நடிக்க முடியும். சிறந்த முறையில் நாடகத்தை இயக்கும் இயக்குநரால் நல்ல சினிமாவையும் இயக்க முடியும். ஆனால் அதற்கு இந்த இரண்டு கலை வடிவங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை ஆழமாக உணரவேண்டும். அந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு அந்தந்த கலை வடிவங்களுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்பவர்கள் இரண்டு துறையிலும் சாதிப்பார்கள்.

கிராமப்புறங்களில் நாடகத்தைக் கொண்டு சென்றுள்ளீர்களா? மற்ற கலை அம்சங்களை விட அப்பாவி ஜனங்கள் வரை சகல தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் காட்சி ஊடகமல்லவா நாடகம்?
அறிவொளி இயக்கத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களுக்கு எங்களது நாடகங்களைக் கொண்டு செலுத்தியிருக்கிறோம். மக்கள் மத்தியில் அதற்கென நல்ல வரவேற்பு இருந்தது. நாடகங்களை விட சினிமாதான் மக்களை எளிதில் சென்றடையக் கூடிய காட்சி ஊடகமாக இருக்கிறது. இன்றைக்கு சினிமா என்பது நம் மக்களின் வாழ்வியலோடு கலந்த அம்சமாகிவிட்டது.

தமிழ் நாடகவெளியில் உங்களது பாணி என்ன? உங்கள் நுழைவுக்குப் பிறகு அத்துறையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிக் கூற முடியுமா?
எனது வருகைக்குப் பின்னர் நாடகத்துறையில் நிகழ்ந்த மாற்றத்தை நான் சொல்வது சரியாக இருக்காது. நாடக விமர்சகர்கள் ஆய்வு செய்து அதனைச் சொல்லும்போதுதான் அது உகந்ததாக இருக்கும். மேடை நாடகங்களே பெரிதும் அரங்கேற்றப்பட்ட காலகட்டத்தில் திறந்தவெளி நாடகங்களைப் பரவலாகக் கொண்டு சென்றிருக்கிறேன். பொலிடிகல் தியேட்டர் எனும் வரையறைக்குள் ‘அரசியல் அரங்கம்’ என்கிற பெயரில் மேடை மற்றும் திறந்து வெளி நாடகங்களை இயக்கி வருகிறேன். நாடகத்தின் வாயிலாக மக்களை ஒன்று திரட்டுகிற செயல்பாட்டை அரசியல் செயல்பாடாகப் பார்க்கிறோம். நாம் வாழும் வாழ்க்கையைக் கலையுடன் பொருத்திப் பார்க்கிறோம். அரசியலைப் பேசும் நாடகங்கள்  பிரச்சாரமாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. இன்றைக்கு நாட்டின் தலையாயப் பிரச்சனையாக இருப்பது சாதி அரசியல். மக்கள், சாதியை ஏன் தேடிப்போகிறார்கள் என்பதை ஆராய்வது, மதம் என்கிற அடையாளம்தான் மனிதனின் பிரதான அடையாளமா எனக் கேள்வியெழுப்புவது என்பதெல்லாம் ஒரு போதும் பிரச்சாரமாகாது. அரசியல் கேள்விகளுக்கும், சமூகக் கேள்விகளுக்கும் முகம் கொடுப்பதே அரசியல் அரங்கத்தின் பிரதான பணியாக இருக்கிறது.  

வீதி நாடகங்கள் இப்போது அருகிவிட்டன என்கிற கூற்று சரியா?
பொதுவான பார்வையில் வீதி நாடகங்கள் அருகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. நாடகங்களிலேயே பல வகைகள் இருக்கின்றன. அரசின் செயல்திட்டங்கள் மற்றும் டெங்கு, மலேரியா, எய்ட்ஸ், குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீதி நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இவை விழிப்புணர்வு நாடகம் என்கிற வகை. மக்களுடைய துயரங்கள், அதிருப்தி, விமர்சனங்களுக்கு வடிவம் கொடுக்கக்கூடிய கலாப்பூர்வமான நாடகங்கள் திறந்தவெளியில் நிகழ்த்தப்படுவது இன்று அருகிவிட்டது என்று சொல்லலாம்.

உங்களது நாடகங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
பெரிய அளவில் செல்வாக்கு பெற்ற நாடகங்களை தென் இந்தியா முழுவதும் நடத்தியிருக்கிறோம். மலேசியா, இலங்கை, நார்வே என்று வெளிநாடுகளிலிருந்தும் என்னை அழைத்திருக்கிறார்கள். பல்கலைக் கழகங்கள், மற்றும் தேசிய நாடக ஆணையம் என்னை நாடகப் பயிற்சி வழங்குவதற்காக அழைக்கிறது. இவையெல்லாமே எனக்கான அங்கீகாரங்கள்தான்.  

பாவனை நாடகம் மற்றும் வசன நாடகம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
வசன நாடகத்தையும், பாவனை நாடகத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. நாடகத்தில் இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். பாவனை நாடகம் மேற்கத்திய நாடுகளில் உருவானது. வசனங்கள் ஏதுமில்லாமல் பாவனைகளைக் கொண்டே காட்சியை உணர்த்துவது. அப்படியாக நம்மிடம் இருக்கும் பாவனை வடிவம் என்றால் அது பரதநாட்டியம்தான். வசனங்கள் வாயிலாக நிகழ்த்தப்படும் நாடகங்களுக்கு உடல்மொழி அவசியமானது.

நாடக மேதை இராமானுஜத்துடனான உங்களது உறவு பற்றிச் சொல்லுங்கள்?
எனது பல ஆசிரியர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தின் மிக முக்கியமான நாடகத் திறனாய்வாளர். அவரிடம் பயின்ற நான் பயிற்சியாளராக அவருடன் இணைந்து செயலாற்றியிருக்கிறேன். தமிழின் நவீன நாடகச் செயல்பாடுகளின் முன்னத்தி ஏர் என்று இராமனுஜத்தைக் குறிப்பிடலாம்.

பாதல் சார்க்கரிடம் பயின்றவர்களில் தாங்களும் ஒருவர். அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? அவரது பாணிக்கும் நம்முடைய பாணிக்குமுள்ள வேறுபாடு என்ன?
பாதல் சார்க்கரிடம் நான் நேரடியாகப் பயிலவில்லை. கர்நாடகாவைச் சேர்ந்த பிரசன்னா, கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் கிரமுள் ஆகியோர்தான் பாதல் சர்க்கரின் மாணவர்கள். நான் இவர்களிடம் பயின்றவன். மனதளவில் அவரை எனது ஆசானாக  ஏற்றுக்கொண்டேன். பாதல் சர்க்காரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் இடையிலான அனுபவங்கள் என்று எதுவுமில்லை. திறந்தவெளியில் நாடகங்களைக் கொண்டு சென்ற அவரது பாணியின் மீது இன்ஸ்பயர் ஆகி அதனை நானும் பின் தொடர்ந்தேன். ஆனால் அவர் திறந்தவெளி நாடகங்கள் மட்டும்தான் நாடகங்கள் என அதனை மற்ற நாடகங்களுக்கு எதிராக நிறுத்தினார். அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாவிதமான நாடகங்களுக்குமான தேவை இருக்கிறது. திறந்தவெளி நாடகம் என்பது நாடக வகைகளில் ஒன்று என்பதே எனது நிலைப்பாடு.

ஒரு காலத்தில் குறிப்பாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடகங்கள் பெரும் சமூக மாற்றத்தையே ஏற்படுத்தின. இப்போதுள்ள நாடகக் குழுக்களின் செயல்பாடுகள் பற்றி?
சமூக மாற்றத்தைப் பிரதிபலிப்பவையே நாடகங்கள். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கதர் உடை உடுத்தவேண்டும் என்கிற பிரச்சாரம், உப்பு சத்தியாகிரகப் போராட்டம் ஆகிய சமூக மாற்றத்தை அப்போதைய நாடகங்கள் பிரதிபலித்தன. இன்றைக்கும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சாதியப் படுகொலை, மதப்பிரிவினை ஆகிய சமூகத்தின் மையப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கிற நாடகங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாடகங்கள் இன்றைக்குச் சமூகத்தின் மையமான கலைச் செயல்பாடாக இல்லை. இன்றைக்கு தீவிரத் தன்மையோடு நாடகங்கள் இயக்கப்பட்டு வந்தாலும் அது வெளியே தெரிவதில்லை. அன்றைக்கு நாடகங்கள் பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்டன. பொழுதுபோக்காக மட்டுமே நாடகத்தை நாம் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் மற்ற பொழுதுபோக்குகளுக்கு முன்னால் நாடகம் தோற்றுப் போய்விடும். நேரடியாக நம் கண் முன்னே இன்னொரு வாழ்க்கை அனுபவத்தைத் தான் நாம் நாடகங்களின் வாயிலாகக் கண்டடைகிறோம். அந்தப் புரிதலோடு நாடகத்தை அணுகும்போதுதான் அதனை நாம் உணரமுடியும்.

பள்ளிகள் மற்றும் கலைப் பயிற்றுக் கூடங்களில் நாடகம் கற்றுத் தரப்படுகிறதா? எந்தளவுக்கு அதன் காத்திரத்தன்மை இருக்கிறது?
கல்விக் கூடங்களில் நாடகங்கள் கற்றுத்தரப்படுவது என்பது வேறு. கல்வியியல் நாடகம் என்பது வேறு. மாணவனுக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்து நடிகனாக்குவது கல்வியியல் நாடகமல்ல. ஆளுமைத் திறன் உட்பட பல திறன்களை வளர்த்துக்கொள்வதற்கானச் சூழலை உருவாக்கித் தருவது, குழுவாக இணைந்து செயல்படுதல் மற்றும் தனி நபர் உறவுகளைப் பேணுவதற்கும், சொந்த கண்ணோட்டத்தில் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கான புரிதலை உருவாக்கித் தருவதும்தான் கல்வியியல் நாடகம். சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஓவியம், புகைப்படக் கலை போன்று நாடகமும் தனிப் பாடமாகவே இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் நாடகம் கற்றுத்தருவதற்கான ஆசிரியர்கள்தான் இல்லை.

இளைய தலைமுறை எந்தளவுக்கு நாடகக் கலையைப் புரிந்துள்ளனர். நாடகம் நோக்கி அவர்களின் வருகை எப்படியுள்ளது?
எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல் திறந்த மனதோடு நாடகத்தைப் பார்க்கிறார்கள். பிடித்தால் கொண்டாடுகிறார்கள். அதனுள் இருந்து விமர்சனத்தை வைக்கிறார்கள். திருப்பத்தூரில் 11 நாட்கள் நாடகப் பயிலரங்கம் ஒன்றை சமீபத்தில் நடத்தினோம். அப்பயிலரங்கில் கலந்துகொண்ட 90 பேரும் கல்லூரி மாணவர்கள்தான். நாடகம் கற்க ஆர்வப்படுபவர்கள் தமிழ் போன்ற கலைப் படிப்புகளைப் படிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற பொதுவான எண்ணம் இருக்கிறது. ஆனால் அப்பயிலரங்கில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் அறிவியல் பிரிவு மாணவர்கள்.

இன்றைய இளைஞர்கள் நாடகத் துறை மீது கொண்டிருக்கும் நாட்டம்,  நாடகத்துறையின் எதிர்காலத்துக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குமா?
அப்படி உறுதியாகச் சொல்லி விட முடியாது. நாடகத்தின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி என்பது நாடகத்துறை சார்ந்தவர்களால் மட்டுமே சாத்தியப்படுவதல்ல. சமூக அளவில் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். புத்தகத் திருவிழா மேடையில் தினசரி எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடக்கின்றன. ஆனால் நாடகம் நடத்தப்படுவது கிடையாது. சகல அறிவையும் பெற விரும்புகிறவர்கள் வந்து செல்லும் புத்தகக் கண்காட்சியில் நாடகத்தை தாரளமாக அரங்கேற்றலாம். ஆனால் நடைமுறையில் அது இல்லை. ஆக சமூக மாறுதல் மட்டுமே நாடகத்துக்கான எதிர்காலத்தை வளமாக்கும்.

நேர்காணல்: அறிவன்
- பிரளயன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions