c நாமிருக்கும் நாடு-28
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-28

பெண் குலத்தின் ஒளிவிளக்கு  முத்துலெட்சுமி ரெட்டி நினைவலைகள்...

இருபதாம் நூற்றாண்டு விழிக்காத நேரம். இந்தியா, இருளில் ஆழ்ந்திருந்தது. குறிப்பாகப் பெண்களின் இருப்பும் வாழ்க்கையும் விடியுமா என்று சமூகச் சிந்தனையாளர்களும் கவிஞனும் கவலைகளை வெளிப்படுத்திய நேரம். பெண்கள் படிப்பதும் சட்டங்கள் செய்வதும் எக்காலம் என்று பாரதி கேள்வி கேட்ட காலம்.

இதோ நான் இருக்கிறேன் என்று பெண்மணி ஒருவர், தமிழ்நாட்டில் தோன்றினார். அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்திய சட்ட, சமூக, மருத்துவ உலகில் பலப்பல சாதனைகள் புரிந்த இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பெண்மணி அவர். ஓரளவு வசதியான குடும்பம்.

புதுக்கோட்டையில் 1886ஆம் ஆண்டு பிறந்தார் முத்துலட்சுமி. நான்காம் வயதில் புதுக்கோட்டையில் ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சேர்க்கும்போது அவரது தந்தை, “இவளுக்குப் பால் கணக்கு, வண்ணான் கணக்கு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்தால் போதும்’’ என்று வாத்தியாரிடம் சொன்னார். இதில் கவனிக்கத்தக்க விஷயம், அந்த அப்பா, புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் முதல்வர். அம்மா அந்தக் காலத்து மனுஷி. பெண்ணை எட்டு வயதில் கல்யாணம் செய்துகொடுத்துவிட வேண்டும் என்ற ‘ஞானம்’ உள்ளவர். இந்த அம்மா மகளுக்குப் போட்ட தடை எண்ணற்றவை. அத்தனையையும் உடைத்தார் முத்துலட்சுமி.

1902ஆம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். கல்லூரிக்கு வெளியூர் செல்ல முடியாத நிலையில் புதுக்கோட்டை ஆண்கள் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பம் புறக்கணிக்கப்பட்டது. அவரது அப்பா புதுக்கோட்டை மகாராஜாவிடம் இது பற்றிப் பேசினார். பெண்களால் இதில் படிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. மகாராஜா மூன்று மாதம் ‘டைம்’ கொடுத்தார். அந்த மூன்று மாத காலத்தில் முத்துலட்சுமி மாணவராக இருக்கத் தகுதியானவர் என்பதை நிரூபிக்கவேண்டும். நிரூபித்தார் அவர்.

அவர் கல்வி ஐந்தாண்டு மருத்துவப் படிப்பிலும்,      பிறகு மேல் படிப்புக்காக லண்டன் வரையும் தொடர்ந்தது.

சென்னையில் டாக்டர் நஞ்சுண்ட ராவ் குடும்பத் தோடு பரிச்சயம் ஏற்பட்டது அவருக்கு. ராவ், ஒரு தேசியவாதி. மிகப்பெரிய செல்வந்தரும் கூட. ராவ் வீட்டில் முத்துலட்சுமி, பாரதியைச் சந்தித்தார்.  தேசியக் கவி சரோஜினி நாயுடுவின் அறிமுகம் பெற்றார். கோகலேவின் பொதுக் கூட்டப் பேச்சைக் கேட்டார். டாக்டர் அன்னி பெசன்ட் பேச்சையும்கேட்டு வியந்தார். முத்துலட்சுமியின் மனதில் ‘தேசியம்’ வளரத் தொடங்கியது. தேசியம் என்பது அரசியல் மட்டும் அல்ல. பெண் உரிமை, சமூக முன்னேற்றம் எல்லாமும்.

1912ஆம் ஆண்டு, முத்துலட்சுமி மருத்துவர் பட்டம் பெற்றார். அது அக்காலத்தில் மிகப் பெரும் சாதனை. 1913ஆம் ஆண்டு அறுவை  சிகிச்சை நிபுணர் சுந்தர்ரெட்டியைச் சந்தித்தார். ரெட்டி, முத்துலட்சுமியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ‘என்னைச் சமமாக எப்போதும் நினைக்கவேண்டும். என் விருப்பங்களில் எப்போதும் குறுக்கிடக் கூடாது’ என்றார் காதலி. காதலர் ஒப்புக் கொண்டார்.

முத்துலட்சுமி ரெட்டியை மனத்தளவில் மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி. அவர் சகோதரி சுந்தரம்மாள். புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இப்போது புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது. அப்போது சிரமம். ஆகவே சகோதரி மறைந்தார்.

முத்துலட்சுமி, பெண்கள் மற்றும் குழந்தை களைப் பாதிக்கும் நோய்கள் பற்றி மேலும் படிக்க, மேல்படிப்புக்கு, லண்டன் சென்றார். திரும்பியபோது சென்னை மாகாணச் சட்ட மன்ற உறுப்பினராக, இந்திய மாதர் சங்கம் அவரைத் தேர்ந்தெடுத்தது. சட்டமன்றத்தில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் கல்வி மற்றும் சுகாதாரம் பற்றி நிறைய விவாதம் செய்து அரசுக்கு அது பற்றிய உத்வேகத்தை உருவாக்கினார்.

குழந்தைத் திருமணம், கோயில்களில் தேவ தாசிமுறை ஆகியவற்றை ஒழிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல் தொடரும் பாலியல் பலாத்காரத்தை ஒழிக்கவும் பலப்பல மசோதாக்கள் கொண்டு வந்தார். அரசு, சுறுசுறுப்பாகச் செயல்படவில்லை என்று கருதினார் அவர். ஆகவே நாடு முழுக்கச் சென்று பொதுக்கூட்டங்களில் தன் கருத்தை எடுத்துரைத்தார்.

அச்சமயம் தமிழகம் வந்த காந்தியைச் சந்தித்த முத்துலட்சுமி, தன் குறிக்கோளை எடுத்துரைத்தார். காந்தி முழுமையாக முத்து

லட்சுமியால் கவரப்பட்டார் அவரு டைய அனைத்துத் திட்டங்களுக்கும் தன் முழு ஆதரவை வழங்கினார். அது மட்டு மல்லாமல், தன் பயணம் முழுவதிலும், முத்துலட்சுமியின் திட்டங்களை ஆதரிப் பதாகப் பல கூட்டங்களில் பேசினார். அதோடு அவருடைய பத்திரிகையிலும் பாராட்டி எழுதினார்.

அந்த ஆண்டே முதல் முதலாக இந்தியா விலேயே சட்டமன்ற துணைத் தலைவராக முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட இரண்டாம் நாளே, சபையை நடத்தும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது.

இன்று பெண்களுக்கான, குழந்தைகளுக்கான முன்னேற்றகரமான சட்டங்களும் பயன்களும் பெரும்பான்மை முத்துலட்சுமியால் கிடைத்தன.

சட்டமன்றத்தில் பெரும்பாலான நேரம் அவர், குழந்தைகளுக்கான தனி மருத்துவ மனை, பெண்களுக்காகப் பள்ளியில் மருத்துவ சோதனை, மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்களை நியமிப்பது, காவல் துறையில் பெண்களை நியமித்தல் முதலான விஷயங்களைச் சொல்வதற்காக எடுத்துக் கொண்டார்.

முத்துலட்சுமியின் மிக முக்கியமான சமூகச் சீர்திருத்தப் பங்களிப்புகள் பலப்பல என்றாலும் குழந்தைப் பருவத் திருமணத் தடைச் சட்டம் கொணர அவர் அரும்பாடுபட்டார். 1928இல் சாரதா என்பவர் கொணர்ந்த மசோதாவை சட்டமாக்கப் பெரும் கிளர்ச்சி செய்தார் முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் கிளர்ச்சியை எழுத்துக்கு எழுத்து ஆதரித்தார் காந்தி.

முத்துலட்சுமி இன்றும் பேசப்படும் போதெல்லாம் அவரது தேவதாசித் தடைச் சட்டம் குறிப்பிடப்படும். மிகப்பெரிய உரையாடலை அது உருவாக்கியது. தேவதாசித் தடைச் சட்ட மசோதாவைக் கெண்டு வந்தவர் முத்துலட்சுமி ஆவார். காங்கிரசின் பெரிய தலைவர்கள் எல்லாம் அதை ஆதரித்தார்கள்.

முத்துலட்சுமியின் கல்வி சார்ந்த கருத்துக் களை ஏற்றுப் போற்றிய தலைவர்களில் சிலர், அவரது சீர்திருத்தப் பிரச்சாரத்தையும், சமூக முற்போக்குக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களையும் எதிர்த்துப் போராடினார் அவர்.

இளம் பெண்கள் எட்டு, பத்து வயதில் கோயிலுக்குப் பொட்டு (தாலி) கட்டி விடப்படுவதும், அவர்கள் கலை என்ற பெயரால் விபசாரத்துக்கு உட்படுத்தப்படுவதும் பெரிய சமூக ஊனம் என்று முத்துலட்சுமி உணர்ந்து, இந்தப் போராட்டத்தை எடுத்தார். ராஜாஜி போன்ற மிதவாதக் காங்கிரஸ் தலைவர்கள் முத்துலட்சுமிக்கு ஆதரவு தர மறுத்தார்கள். இதை அவரே அவரது வரலாற்று நூலில் எழுதி இருக்கிறார்.

1929ஆம் ஆண்டு தொடங்கிப் பேசப்பட்ட இச்சட்டம் 1947ஆம் ஆண்டுதான் முழுமை அடைந்தது.

1930ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த அவ்வை இல்லம், நூற்றுக்கணக்கான பெண்கள் ஆசிரியை ஆவதற்கும், செவிலியர் ஆவதற்கும், தாதிகள் ஆவதற்கும், சுகாதாரப் பணியாளர்கள், கிராம சேவகர்கள் ஆவதற்கும் பயிற்சி அளித்தது. வீடற்ற, ஆதரவற்ற பெண்களுக்கு வாழிடம் தருகிறது. சாதி, சமய, குல வேறுபாடு இன்றி இது நடக்கிறது.

அதே போல அபய இல்லம்.

குழந்தைகள், பெண்கள் இவர்களைக் கொண்டு பிழைப்பு நடத்துவதை ஒழித்தது, முத்துலட்சுமி கொண்டு வந்த மிக முக்கியமான இன்னுமொரு சம்பவம். நாட்டில் பல இடங்களில், பெண்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்லும் காரியங்களும், தொழிலும் நடந்துகொண்டிருந்தன. அந்த இடங்களில் இருந்து பெண்களைக் காப்பாற்றி வந்து தங்க வைத்து, வாழ்க்கைக்கு வழிகாட்டும் அமைப்பே அபய இல்லம்.

தன் 24 வயது சகோதரி புற்றுநோயால் செத்துக்கொண்டிருந்த சோகத்தைக் கண்டு அப்போதே புற்று நோய்க்கான மருத்துவமனை ஒன்றைத் தொடங்கவேண்டும் என்று நினைத்தார் முத்துலட்சுமி.

நேரு, 1952ஆம் ஆண்டு புற்றுநோய் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாகப் புற்றுநோய் மருத்துவமனை, இன்று அடையாறில் இருந்துகொண்டு முத்துலட்சுமி ரெட்டியின் புகழைப் பேசிக்கொண்டிருக்கிறது.

டாக்டர் ரெட்டி 1968 ஜூலை 22ஆம் நாள் மறைந்தார். உலகமே அவர் மறைவுக்கு மரியாதை செலுத்தியது.

இன்றைய புற்றுநோய் நிறுவனத் தலைவர் டாக்டர் வி. சாந்தா இப்படிச் சொல்கிறார்:

“அறியாமையும் நலிவும் நிறைந்த மரபில் பிறந்து, சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கி, கடலிலிருந்து புறப்படும் சூரியன் போலத் தோன்றி உதவியற்ற பெண்களின் ஆத்மாவுக்கும் உடலுக்கும் அவர் ஒளியூட்டினார்’’.

- போராட்டம் தொடரும்...
சா.வைத்தியநாதன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions