c நன்றொன்று சொல்வேன்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நன்றொன்று சொல்வேன்

நினைப்பதும் நடப்பதும்!
சினிமா என்பதை நான் விரும்பாத, சமூகத்திற்குத் தேவை யில்லாத தொங்கு சதையாக நினைத்துக் கொண்டிருந்தேன். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை. அதையெல்லாம் மறக்கடிக் கவே சினிமா பயன்படுகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன் ஆனால், தியாகு என்னை விட்டபாடில்லை. இடையறாமல் என்னைச் சந்திப்பதையும் பாட்டெழுத அழைப்பதையும் வழக்கமாக்கினார். தான் இயக்குநர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருப்பதாகவும் என்னைச் சந்திக்க லிங்குசாமி விரும்புவதாகவும் சொன்னார். எனக்கு விருப்பமில்லாததால் நாலைந்துமுறை தவிர்த்தேன். அவர் விடுவதுமாதிரித் தெரிய வில்லை. ஒரு மழை நாளில் வலுக்கட்டாயமாக அழைத்துப் போனார்.

பழக்கமில்லாத துறைக்குப் பயணப்பட எனக்கிருந்த தயக்கத்தை எல்லாம் போக்கி என்னை நம்பிக்கையுடையவனாக மாற்றியதில் செழியனுக்கும் தியாகுவுக்கும் பங்கிருக்கிறது.

என் கவிதைத் தொகுப்புகள் அவருக்குப் பிடித்திருந்தன. ‘மனப்பத்தாயம்’ தொகுப்பை அடுத்து என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான பஞ்சாரமும் அப்போது வெளிவந்திருந்தது. இரண்டு தொகுப்பையும் வாசித்திருந்த லிங்குசாமி, நீங்கள் ஏன் திரைப்பாடல் எழுதத் தயங்குகிறீர்கள் என்றார். எனக்குப் பாடல் எழுதுவதற்கான பயிற்சி யில்லையே என்றேன். காதலிப்பவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டா காதலிக்க முடியும் என்றார். இல்லை, தயக்கமாக இருக்கிறது என்றேன்.

பாடலுக்கான சூழல் இதுதான். காதலன் தந்துவிட்டுப் போகிற ஒரு ரூபாயைக் காதலின் ஞாபகமாக காதலி வைத்திருக்கிறாள். வேறு வேறு சந்தர்ப்பங்களில் ஒரு ரூபாயைப் பார்க்கும் காதலனுக்குக் காதலியின் ஞாபகம் வருகிறது.

ஒரு ரூபாயின் மேன்மையை அந்த ரூபாயின் வாயிலாகக் காதலின் மதிப்பைச் சொல்லவேண்டும், அவ்வளவுதான் என்றார். அவர் அவ்வளவு தான் என்றாலும் எனக்கு அச்சூழல் அவ்வளவு எளிதானதாகப் பட வில்லை. சொந்தமாகச் சிந்திப்பது வேறு. ஒருவர் சொல்லிய சிந்தனைக்காகச் சிந்திப்பது வேறு இல்லையா?

எங்கு தொடங்குவது, எப்படித் தொடங்குவது என்று ஒன்றுமே புரியவில்லை. ஒரு ரூபாய் என்று சொன்னால் அதை எதை வைத்து உருவகப்படுத்துவது. காதலைக் காசோடு இணைத்துக் கூறுவது எப்படி, மூளையில் பெரிய முடிச்சு விழுந்தது.

‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம். புல்லாங்குழலில் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ என்று ஒருவாறாக இரண்டு நாள் கழித்து எழுதிக்கொண்டு போனேன். ஒற்றை நாணயம் என்பதற்கும் ஒரு ரூபாய்க்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது என்றாலும், என்னால் அதற்கு மேல் எதுவுமே சிந்திக்க முடியவில்லை. லிங்குசாமி எதிர்பார்ப்பது  இதைத்தானா என்றும் தெரியவில்லை. சரி, ஒருவழியாகப் போய் நம்முடைய இயலாமையை ஒத்துக்கொண்டு திரும்புவோம் என்று கிளம்பினேன்.

வட்டமாக உதவியாளர்கள் அமர்ந்திருக்க நடுநாயகமாக லிங்குசாமி அமர்ந்திருந்தார். எழுதியதை வாசிக்கச் சொன்னார்கள். வாசித்து முடித்ததும் உதவியாளர்களில் ஒவ்வொருவராக அறையிலிருந்து வெளியேறினார்கள். புகை பிடிக்கக் கிளம்புவது போலவும், தொலைபேசி வந்திருப்பது போலவும் அவர்கள் கிளம்பக் கிளம்ப எனக்குப் பதற்றம் தொற்றிற்று. அவர்கள் எதிர்பார்த்தது இது இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். தியாகுவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஈயாடவில்லை. இதற்கா உன்னை அறிமுகப்படுத்தினேன் என்பது போலிருந்தது.

நாமே நம்முடைய தோல்விக்குச் சமாதானம் சொல்லிக் கொள்வது போன்ற துயரத்திற்கு மனம் தயாரானது. லிங்குசாமியும் தன் எதிர்பார்ப்பு இதில்லை என்பதை மிக நாகரிகமாக வெளிப்படுத்தினார். முடிந்தால் வேறு மாதிரி எழுதிப் பாருங்களேன் என்றார்.

இனிமேல் சினிமா பக்கமே தலைவைக்கக் கூடாது என்றிருந்த நிலையில் மூன்று மாதம் கடந்துவிட்டது. என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான பஞ்சாரமும் தமிழக அரசின் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்ட ஒற்றை மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் விசேஷமில்லை.

அலுவலகத்தில் எனக்கு உதவியாக இருந்த தம்பி முருகன்தான் அந்தச் செய்தியைச் சொன்னான். அண்ணே, ‘லிங்குசாமி ஆபிஸி லிருந்து போன் வந்தது. தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்’ என்றான். இதோ தொலைபேசி எண் என்று தந்தான்.

அவனே எண்ணைச் சுழற்றினான். எதிர் முனையில் தியாகு இருக்கிறாரா, கேள் என்றேன்.

தியாகு, ‘நண்பா சந்தோசமான செய்தி. உங்க பாட்ட ட்யூன் பண்ணியாச்சி. டைரக்டர் உங்கள பார்க்கணுமின்னு பிரியப்படறார். வரமுடியுமா’ என்றார். யாருக்குமே பிடிக்காத ஒரு பாடலை எப்படி மெட்டமைத்தார்கள் என்றேன். அதுவா, நேரில் வாங்க சொல்றேன், என்றார். மழை விட்டபாடில்லை. லேசான சந்தோசம்.

என்ன நண்பா, பாட்டு பிடிக்கலேன்னு... என்று ஆரம்பித்தேன். உண்மைதான் நண்பா, கம்போசிங்கிற்காக எல்லோரும் ஏற்காட்டுக்குக் கிளம்பும்போது ஏனைய பாடல்களை எல்லாம் எடுத்துவைக்கச் சொன்னார்கள். பிற பாடல் களையெல்லாம் எடுத்துவைத்த நான் அதனோடு உங்கள் பாடலையும் பெட்டியில் வைத்திருந்தேன். மற்ற பாடல்களை எல்லாம் மெட்டமைத்த இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார், ஒரு ரூபாய் சூழலுக்கு ஏதாவது எழுதித் தந்தால் தேவலாம் என்றிருக்கிறார். அப்போது பார்த்து உங்கள் பாடல் கையில் சிக்கவே இதுவே அருமையாயிருக்கிறது என்றிருக்கிறார். சொன்னதோடு நில்லாமல் மெட்டமைத்தும் காட்டியிருக்கிறார். அந்த மெட்டு அனைவருக்கும் பிடித்துவிட்டது என்றார்.

இயக்குநரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். பாடலில் சரணப் பகுதியில் வரவேண்டிய செய்திகளை லிங்குசாமி சொல்வதற்கு முன்பாக சரணப் பகுதி மெட்டில் திருத்தம் இருக்கிறது. திருத்தம் செய்து எழுதத் தருகிறேன் என்றார்.  சரி, என்று சொல்லிவிட்டு அலுவலகம் திரும்ப, என்னிடம் இருந்த சைக்கிள் சாவியை வாங்க தம்பி முருகன் காத்திருப்பதாகச் சொன்னான்.

இடையில் எந்தத் திருத்தமும் மெட்டில் செய்யப்படவில்லை. அதுவே சிறப்பாக வரும் என்று எஸ்.ஏ. ராஜ்குமார் சொல்ல, மெட்டை என்னிடம் தரத் தேடியபோது நான் பொங்கலுக்காக ஊருக்கு வந்துவிட்டேன். பொங்கல் முடிந்து இரண்டாவது தினம். வீட்டில் நான் மட்டும் இருந்தேன். அம்மா வயலுக்குப் போய்விட்டார்கள். வீட்டில் இருந்து பதிமூனாவது கிலோமீட்டரில் வயல் இருக்கிறது. அப்பா வழக்கம்போல் பொது வேலை நிமித்தம் காலையிலேயே கிளம்பிவிட்டார். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் தொலைபேசி வசதி. அந்த எண்ணை, தம்பி முருகனிடம் தந்துவிட்டு வந்திருந்தேன்.

அந்த எண்ணுக்கு தியாகு காலை பத்து பதினோரு மணிவாக்கில் தொலைபேசி, உடனே சென்னை வரவேண்டும் என்றார். நாளை பாடல் பதிவு இருப்பதால் சரணத்தை எழுதித் தரவேண்டும் என்றார். அம்மா, மாலைதான் வயலில் இருந்து வருவார்கள். பிறகுதான் கிளம்ப முடியும் என்றேன். இல்லை நண்பா, எப்படியவாது வந்துவிடுங்கள் என்றார். இப்போது கிளம்பினால் மாலைக்குள் வந்துவிடலாம். இரவே எழுதினால் நாளை தந்துவிடலாமே என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். கிளம்பவேண்டும். ஆனாலும் அம்மாவிடம் சொல்லாமல் எப்படிக் கிளம்புவது? திடுதிப் பென்று கிளம்ப வேண்டுமானால் பணம் வேண்டுமே. என்ன செய்வதென்றே புரியாத மனநிலை. அங்கங்கே கிழிந்து தொங்கும் பழைய ஒயர்ச் சேரில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்து யாரோ கதவு தட்டும் ஓசை. போய்ப் பார்த்தால அம்மா, என்னம்மா வயலுக்குப் போகலையா?

இல்லப்பா பஸ்ஸாண்டுல நின்னுக்கிட் டிருந்தேன். என்னமோ மாதிரி இருந்துச்சி. நாளைக்குப் போயிக்கலாமுன்னு திரும்பி வந்துட்டேன் என்றார். ஏம்மா, உடம்புக்கு ஏதாவது நோவுதா என்றேன். இல்லப்பா என்னவோ தெரியல. நல்லதாப் போச்சும்மா. இப்பத்தான் பக்கத்து வீட்டக்கா வீட்டுக்குப் போன் வந்துச்சி. நான் உடனே பாட்டு எழுத வரணுங்கிறாங்க. நாளை ரிக்கார்டிங்காம் என்றேன். அம்மாவுக்கு கையும் ஓட வில்லை. காலும் ஓட வில்லை. நேரே சாமி மாடத்திற்குப் போய் கைநிறைய திருநீறை அள்ளிவந்து நெற்றியில் பூசிவிட்டு, ‘கிளம்புப்பா’ என்றார். வேக வேகமாகக் கிளம்பினேன். என்னை வந்து வழியனுப்ப அம்மாவும் என்னமோ மாதிரி இருந்த அதே பேருந்து நிலையத்திற்கு வந்தார். என்னைப் பேருந்தில் அமர வைத்துவிட்டு ஓடிப்போய் தள்ளுவண்டியில் விற்ற ஆப்பிளை வாங்கி நறுக்கிக்கொண்டு வந்து கையில் திணித்தார். எதைப்பற்றியும் பதற்றமில்லாமல் போயிட்டு வாப்பா, போனதும் பக்கத்து அக்கா வீட்டுக்கு போன் பண்ணிடு. அதை இதை யோசிச்சிக்கிட்டு மனச கொழப்பிக்காத. ஒனக்கு நல்லதுதான் நடக்கும். சாப்பிடாட்டியும் பரவாயில்ல. இந்த ஆப்பிளையாவது சாப்பிடு. ட்ரை பண்ணு. ரிஸ்க் எடுக்காதே. இந்த வாய்ப்பு இல்லேன்னா இன்னொன்னு வரும். வீணா பதட்டப்படாத.

ஏழுமணி வாக்கில் சென்னைக்கு வந்து, நேரே அலுவலகம் போய் மெட்டை வாங்கிக்கொண்டேன். தியாகு இறுக என் கைகளைப் பற்றி வாழ்த்தினார். நிச்சயம் நடக்கும் நண்பா, தைரியமா எழுதுங்க என்றார். இரவு முழுக்க தூக்கம் பிடிக்காமல் மெட்டுக்கே எழுதிப் பழக்கமில்லாததால் எப்படி எழுதுவது என திணறினேன். மெட்டைப் பாடிப் பாடி நானாக ஒருவாறு புரிந்துகொண்டு எழுதினேன். எழுதினேன். பொழுது விடிந்துவிட்டது. காலையில் தியாகு நேரே என்  அறைக்கு வந்து ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்துப் போனார். எழுதிய பாடலை படத்தின் இணை இயக்குநர் மோனா.பழனிச்சாமிதான் முதலில் வாசித்தார். வாசித்துவிட்டு அவர் சொன்னது, ‘ரொம்பப் பிரமாதம், இந்த வருடத்தோட ஹிட் சாங் இதுதான் பாருங்க’.

கவிதை எழுதுவது ஒன்றே பாடல் எழுதுவதற்கான தகுதி என நானும் எண்ணிக்கொண்டிருந்தேன். உண்மையில் பாடல் எழுதுவதற்கு குறைந்தபட்ச பயிற்சியாவது தேவை. சத்தத்திற்கு வார்த்தைகளை இட்டு நிரப்புவது அல்ல பாடல் புனைவது, காட்சியை உள்வாங்கிக்கொண்டு கதாபாத்திரத்தின் மன நிலைக்கு ஏற்பவும், பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்பவும் வார்த்தைகளை பொருத்த வேண்டும். பார்க்க எளிய வேலைபோல தோன்றும். ஆனால் எழுதிப் பார்ப்பவர்க்குத்தான் அதன் சிக்கல் தெரியும்.

உன்னிமேனனும் ஹரிணியும் பாடலைப் பாட வாய்ஸ் ரூமிற்குள் நுழைந்தார்கள். ஏ.வி.எம். ரிக்கார்டிங் தியேட்டரின் ஒரு ஓரத்தில் நின்று என்னால் எழுதப்பட்ட பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலை நானே ரசிக்கத் துவங்கினேன்.

உலகத்தின் அத்தனை மூலையிலும் இன்னும் சில நாள்களில் இந்தப் பாடலை எல்லோரும் கேட்கப் போகிறார்கள் என்ற பெருமிதம் உள்ளூர பிரவாகமெடுத்தது. எந்த வயல் வரப்பில் நடந்துகொண்டே அம்மா, நீ ஒரு பாட்டாவது சினிமாவுல எழுதணும்பா என்றாரோ, அதே வயல் வரப்பில் இருந்தபடி இந்தப் பாடலை டிரான்ஸிஸ்டரில் அம்மாவைக் கேட்க வைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். நினைத்தது போலவே நடந்தது.

நினைப்பதுதான் நடக்கும். அது நம்முடைய நினைப்பாக இருக்கலாம். நமக்காக நம் மீது அன்பு கொண்டவர்களின் நினைப்பாகவும் இருக்கலாம்.

-‘நடைவண்டி நாள்கள்’ நூலிலிருந்து...
- யுகபாரதி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions