c பெண்களின் போராட்டக் களங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெண்களின் போராட்டக் களங்கள்

ஓவியா, தமிழ்மண் கண்ட சுயமரியாதைப்               பெண் ஆளுமைகளுள் நிகழ்காலச் சாட்சிகளில்  முக்கியமானவர்களில் ஒருவர். காத்திரமான சமூகச் செயல்பாட்டாளர். பெண்ணிய இயக்கவாதி. கல்வி, பெண்ணியம், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் சார்ந்து தொடர்ந்து தன் குரலைச் சமரசமற்றுப் பதிவு செய்து வருபவர். கருத்துருவாக்கத் தளத்தில் இவரது இடம் மிகவும் முக்கியமானது. இவரது எழுத்துக்கள் விசாலமான வெளியைக் கொண்டவை.  பல்சுவைக் காவியத்திற்காக அவரைச் சந்தித்தோம்...தீவிர திராவிட இயக்கத் தத்துவங்களை உள்வாங்கிய பெண்ணியச் செயல்பாட்டாளராக உங்களை உருவாக்கிய புள்ளியிலிருந்து தொடங்கலாமா?
ஆம்.  அது என் துவக்கப் புள்ளி மட்டுமல்ல.  நான் பிறப்பெடுத்த புள்ளியே அதுதான்.  1930களில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் எனது தாத்தாவும் பாட்டியும், (அதாவது அப்பா வழி).  அதுவும் அது ஒன்றும் காதல் திருமணமல்ல.  இந்தக் கட்சியிலிருந்ததால் (சுயமரியாதை இயக்கம்) எனது தாத்தா எடுத்த முடிவின்படி நடந்த திருமணம்தான்.  அதுமட்டுமல்ல அவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும்.  அன்றைய தேதியில் இது எவ்வளவு பெரிய விசயம் என்பதை இன்று ஒருவர் எண்ணிப் பார்ப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். எனது அப்பாவின் திருமணம் மற்றுமொரு சாதிக் கலப்பாக அமைந்தது.  அவ்வழியிலேயே எனது திருமணம் மற்றுமொரு சாதியை எனது குடும்பத்தில் இணைத்தது.  எனது மகன் திருமணமும் அவ்வாறே.  ஓர் இஸ்லாமிய மதக் குடும்பத்திலிருந்து எனது மருமகளை அழைத்து வந்தார்.  எங்கள் பயணம் இவ்வாறே தொடர்கிறது.  தொடர்ந்துசாதி மறுப்பாளர்களாக, மத எதிர்ப்பாளர்களாக தமிழ் அடையாளத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாக!

பெண்ணிய போராட்டக் களங்களில் தங்களுடைய பங்களிப்புகள் குறித்துப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இளவயது என்றில்லை, சிறுவயதிலேயே திராவிடர் கழக மேடைகளில் ஏற்றப்பட்டவள் நான்.  என்னுடைய வளர்ப்பே இந்த சமூகத்தில் ஒரு போராட்டம்தான்.  நாத்திகவாதியாகவும் பெண் விடுதலை பேசுகிறவளாகவும் வளர்வதும் வாழ்வதும் அன்றைய நாட்களில் சவாலான ஒரு விசயம்தான்.  முக்கியமாக பள்ளிக்கூடத்தில்.  பதினோறாவது அதாவது அன்றைய எஸ். எஸ். எல். சி படிக்கும்வரை காலை பள்ளிக் கூடத்திற்குப் போகும் முன்பாக எங்கள் வீதியிலுள்ள அண்ணா வாசக சாலைக்குப் போய் அனைத்து நாளிதழ்களையும் பார்த்துவிட்டு வந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறேன். இதெல்லாம் பெண்கள், சிறுமியருக்கு தடை செய்யப்பட்டவையாகும். எனது திருமணம் கொள்கைத் துணைவரான தோழர் வள்ளிநாயகத்துடன் நடைபெற்றது.  நாங்கள் திருமண அழைப்பு அனுப்பவில்லை.  அதற்குப் பதிலாக திருமண அறிவிப்புதான் அனுப்பினோம். தாலியின்றி, வேறு எவ்விதச் சடங்குமின்றி நண்பர் களுடன் கொண்டாடிய ஒரு சின்ன நிகழ்வாக அது நடைபெற்றது. எனது பாட்டியார் காந்தியம்மாள்தான் எங்கள் இருவருக்கும் மாலை எடுத்துக் கொடுத்தார். அதன்பின் வாழ்வதற்கான சராசரிப் போராட்டத்துக்குள் நீண்ட வருடங்கள் மாட்டிக்கொண்டேன்.

மீண்டும் 1988 வாக்கில் எனது பொதுவாழ்க்கை தீவிரமடைந்தது.  ‘மகளிர் விடுதலை மன்றம்’, ‘தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம்’ என்ற இயக்கங்களை ‘பெண் விடுதலையே சமூக விடுதலை’ என்ற அடிப்படையில் கட்டினோம்.  முதன்முறையாக பெண்விடுதலை இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் பாலியல் ரீதியிலான வேலைப் பிரிவினையை எதிர்ப்பது, பெண்ணை இரண்டாம் குடிமகளாக்கும் சித்தாந்தங்கள் அனைத்தையும் எதிர்ப்பது என்ற திசையில் கட்டமைத்தோம்.  தமிழின அரசியலிலிருந்து தமிழகப் பெண்கள் விலகி நிற்கக்கூடாது.  மாறாக இனத்தின் இன விடுதலைப் போராட்டங்களில் தலைமையேற்க பெண்கள் முன்வரவேண்டும் என்ற பார்வையை வலுவாக முன்வைத்தோம்.

ஆண்களின் வேலைகள் என்று ஒதுக்கப்பட்டிருந்த வேலைகளை சவாலாக எடுத்து வாழும் பெண்களைத் தேடித் தேடிச் சென்று சந்தித்தோம்.  அப்படியான எங்கள் தேடல்தான் வசந்தகுமாரி என்ற, தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பெண்ணை இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக அரசுப் பேருந்துக் கழகத்தில் இடம் பெறுவதற்கான போராட்டத்தில் எங்களை ஈடுபட வைத்தது. அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம்.  

எதிர்கால மருமகன்களுக்காக சேமியுங்கள் என்று எல்.ஐ.சி. நிறுவனம் கூட தனது பாலிசிகளை விளம்பரம் செய்துகொண்டிருந்தது.  அதனையும் வரதட்சணையை மறைமுகமாக நியாயப்படுத்தும் செயல் எனக் கூறி எதிர்த்து மாற்றினோம்.  

இந்து அறநிலையத் துறையில் அதிகாரிகளாக வருவதற்கு பெண்க ளுக்குத் தடை இருந்தது.  பெண்கள் தீட்டானவர்கள் என்ற இந்து மத நடைமுறை இதற்கு அடித்தளமாக இருந்தது.  அந்த நேரத்தில் கழிவுப் பொருட்களான மலமும், சிறுநீரும் தீட்டில்லை என்றால் கழிவு இரத்தம் மாதவிடாய் மட்டும் எப்படி தீட்டாகும் என்ற கேள்வியோடு மதுரையில் பெண்கள் ஊர்வலம் நடத்தினோம்.  தமிழகப் பெண்கள் இயக்க வரலாற்றில் முதன் முறையாக பெண்களால் இந்த முழக்கங்கள் தமிழகத்தின் தெருக்களில் முன்வைக்கப்பட்டன.  கடைசியில் இந்து அறநிலையத் துறை தனது விதியை மாற்றியது.  கும்மிடிப்பூண்டி அரசுப் பேருந்து ஓட்டுநர் பயிற்சி சாலை இருபாலருக்கும் பொது என விதியானது.  அதாவது நிறைய விளம்பரங்கள் பெண்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று தடை போடுவதை நிறுத்தத் தொடங்கின.

தமிழகமெங்கும் பல பெண்ணிய செயற்பாட்டாளர்கள் உருவாகி இன்றளவும் செயல்பட்டு வருவதற்கு எங்கள் அமைப்பு காரணமாக இருந்தது. பிரபஞ்சன் போன்ற சமூக ஆளுமைகள் எங்களுக்கு அன்றைய தினம் ஊக்கச் சக்தியாய் நின்றிருக்கிறார்கள். ‘புதியகுரல்’ என்ற சிற்றிதழை ‘பெண்ணடிமை வேரறுப்போம், மனிதநேயம் வளர்த்தெடுப்போம்’ என்ற முழக்கத்துடன் ஏழாண்டு காலம் நடத்தி வந்தோம்.    நாங்கள் பணிபுரிந்த இடத்திலும் நாங்கள் வாழ்ந்த இடத்திலும் இதன் பொருட்டு நாங்கள் சந்தித்த இன்னல்கள், இடர்கள், இழப்புகள் அதிகம்.

தந்தைப் பெரியாருடன் நல்ல பழக்கமும் உறவும் உங்கள் குடும்பத்திற்கு இருந்துள்ளது. அதில் தமக்கும் பெரியாருக்குமான பழக்கம், புரிதல் எப்படியிருந்தது?  ஒரு தலைவராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராக அவரிடம் தங்களைக் கவர்ந்த அம்சங்கள் என்ன?
அருப்புக் கோட்டை திராவிடர் கழகத்தில் எங்கள் குடும்பம் முக்கியமான பங்கினை வகித்து வந்தது.  கூட்டங்களுக்கு வரும்போது பெரியாரை எங்கள் வீட்டில் வரவேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன என்று எனது பாட்டியும் தாத்தாவும் கூற, நான் கேட்டிருக்கிறேன்.  எனக்கு சிறுவயதிலேயே பெரியார் மீதான நன்றியுணர்வினை எனது குடும்பம் எனக்கு தந்திருக்கிறது.

அது தவிர சிறுவயதினர் உட்பட அனைவரிடமும் மரியாதையுடன் பழகும் மாண்பினையும், அவரது நேர்மை நிரம்பிய துணிச்சல், தன்னல மறுப்பு வாழ்க்கை பற்றியும் என் தாத்தா நிரம்ப எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  என்னை இன்னார் வீட்டுப் பிள்ளை என்று பெரியாருக்கு நன்கு தெரியும்.  பெரியவர்களை விடுத்து நான் தனியாக முன்னதாக பெரியாரைப் பார்க்க ஓடிப் போவேன்.  அவர் பேசும் மேடைகளில் பக்கவாட்டில் போய் உட்கார்ந்துகொள்வேன்.  அப்போது அவர் என்னைப் பார்க்க நேர்ந்தால் வீட்டில் எல்லோரும் வந்திருக்கிறார்களா என்று அன்புடன் விசாரித்தது நினைவில் இருக்கிறது.  

ஒரு முறை மதுரை அம்சவள்ளி உணவு விடுதியில் இயக்க குடும்ப விழா அல்லது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதில் கூட்டம் தொடங்குமுன்பாக அங்கு இருந்தவர்கள் மத்தியில் நான் உரையாடிக்கொண்டிருந்தேன்.  அப்போது எனக்கு பத்து வயதுக்கும் குறைவேயாகும்.  ஆனால் நாத்திக வாதங்களை ஆணித்தரமாகப் பேசுவேன்.  என்னிடம் யார் பேசினாலும் என்னோடு வம்பிழுத்துக்கொண்டே இருப்பார்கள்.  அப்படியாக அங்கு ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது.  என்னை ஒரு டேபிள் மீது ஏற்றி உட்கார வைத்துக் கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள்.  அதன்பின் உரிய நேரம் வந்ததும் பெரியார் வந்துவிட்டார்.  அவரிடம் போய் கட்சிக்காரர்கள் நான் பேசிக்கொண்டிருந்தது பற்றி மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்கள்.  பெரியார் மகிழ்ச்சியுடன் என்னை அருகழைத்து கடவுள் மறுப்பு வாசகங்களைக் கூறும்படி கேட்டார்கள். அதாவது கட்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் முதலில் முழக்கமிடப்படும் வாசகங்கள் அவை.  நான் அதனைப் பிழையின்றி சொன்னேன். அதுவே பெரியாருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  அவரே அன்பாக புகைப்படக்காரரைக் கூப்பிட்டு ஒரு புகைப்படம் இலவசமாக எடுக்கச் சொன்னார்.  அப்போது அவரோடு புகைப்படம் எடுக்கவேண்டும் என்றால் ஆறு ரூபாய் நன்கொடை தர வேண்டும்.  

மற்றபடி பெரியாருடைய காலத்தில் நான் ஒரு குழந்தையாகத்தான் இருந்திருக்கிறேன்.  ஓரளவு விபரம் அறிந்தபோது அம்மா மணியம்மையார் அவர்கள் தலைமைதான்.  அம்மா என்னிடம் நல்ல அன்பு பாராட்டி யிருக்கிறார்கள்.  அடிப்படையான கல்வியை முடித்துவிட்டுக் கட்சிப் பணிக்கு வா என்று சொல்லி வந்தார்கள்.  

ஆசிரியர் அவர்கள் தலைமையேற்ற பிறகுதான் நான் முழு அளவில் கட்சியில் ஈடுபட்டேன்.  ஆசிரியருக்கு நான் செல்லப்பிள்ளை.  சென்னையில் பாலிடெக்னிக்கில் நான் சேர்வதற்கு உதவி செய்து எனக்கு லோக்கல் கார்டியனாகவும் அவர்தான் இருந்தார்.  என்னுடைய பொது வாழ்வின் தொடக்கம் என்றால் அது ஆசிரியர் காலகட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு ஒரு முன்மாதிரியாக இருப்பவர் நீங்கள். அப்போது தொடங்கி ஆணவக் கொலைகள்  இன்னமும் நடந்துவரும் இக்காலகட்டம் வரையில் சாதி மறுப்புத் திருமனம், காதல் மனம் போன்றவற்றில் உள்ள  வித்தியாசம் எப்படி உள்ளது?
அன்றைய காலகட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்வதுதான் உண்மையில் கடினமானது.  அது ஊர் புறக்கணிப்பு செய்த காலகட்டம்.  பொருளாதார ரீதியாகவும் சமுக ரீதியாகவும் அடைந்த பாதிப்புகள் பல.  இன்று சாதி மறுப்புத் திருமணம் சாதாரணமாக நடக்கின்ற காலகட்டம்.  ஆனால் விதிவிலக்காக ஒரு சில இடங்களில் அது விபரீத விளைவுகளை நோக்கிப் போய்விடுகிறது என்பதுதான் உண்மை.  இன்னும் குறிப்பாக ஒரு சில சமூகங்களுக்கிடையில் நடக்கையில் மிகுந்த கோர வடிவம் எடுத்துவிடுகின்றன.  இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட கொலைகள் நடந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் இந்த அளவு சமூக விவாதத்துக்குள்ளும் கண்டனத்துக்குள்ளும் வந்திருக்காது.  மேலும் கடந்த சில ஆண்டுகளாக சாதிய அடிப்படையில் மனிதர்களை அடையாளப்படுத்துவதும், அவர்களை வெறுப்புணர்வோடு அணுகுவதும் திட்டமிட்டப் பிரச்சாரமாகவே அதிகரித்து வருகிறது. இடைக்காலத்தில் நம் சமூகத்தில் ஏற்பட்டிருந்த வளர்ச்சி என்பதையே மாற்றி அழிவுப்பாதையில் சமூகத்தைக் கொண்டுபோகும் திட்டம் பரவலாக வெற்றி பெற்று வருகிறது. அதன் விளைவாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் பெருகி  வருகின்றன.  சாதியை வைத்துக்கொண்டு சாதி ஒற்றுமையை வளர்ப்பது இயலாத காரியம்.  எனவே சாதி ஒழிப்பில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.  நான் வருத்தத்துடன் சொல்கிறேன்.  நாங்கள் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களாக இருந்தபோது ஒருவருக்கொருவர் சாதியே கேட்டுக்கொள்ளாமல் பழகும் நிலை இருந்தது.  நான் திருமணம் செய்தவர் சாதிகூட எனக்கு அப்போது தெரியாது.  ஆனால் இன்று! சாதியை தெரியாமல் முக்கியமாக, முற்போக்கு வட்டாரத்தில் யாரும் பழகுவதில்லை.  என்ன சொல்ல, வேதனை.

அடுத்தபடியாக இதுபோன்ற கொலைகள் சாதிக் கவுரவம் என்ற பெயரில் மட்டுமல்ல குடும்பக் கவுரம் என்ற பெயரிலும்தான் நடத்தப்படுகின்றன.  ஆனால் ஏன் யாரும் குடும்ப அமைப்பைப் பற்றி பேசுவதில்லை. குடும்ப அமைப்பின் மீதான கேள்விகளை எழுப்பாமல் இங்கு நீங்கள் சாதியை ஒழித்துவிட முடியாது.

எப்படி இருப்பினும் சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.  இது விசயத்தில் நீதிமன்றங்கள் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களையே அரசு பின்பற்றலாம்.

குடும்ப அமைப்புதான் பெண் விடுதலைக்கு முட்டுக்கட்டை என்று சொல்லலாமா? இன்றைய அளவில் அக்கூற்று பொருளுடையதாக இருக்கிறதா?

கண்டிப்பாக.  ஆனால் அதே குடும்ப அமைப்புக்குள் நின்றுதான் பெரும்பான்மையான பெண்கள் இயங்க வேண்டியிருக்கிறது.  குடும்ப அமைப்புக்கு வெளியே அவர்களின் இடம் மிகவும் சவாலுக்கிழுப்பதாக இருக்கிறது.  எனவே இந்த அமைப்பின் மீதான விமர்சனங்களை ஆழப்படுத்தி அதனை படிப்படியாக மாற்றியமைத்துக்கொண்டே மாற்று வெளியையும் கட்டமைக்கவேண்டிய தேவை இருக்கிறது.  பாலினம் சார்ந்த கல்வி நமக்கு தேவைப்படுகிறது.

நிர்பயா மாதிரியான விஷயங்களைப் பார்க்கும்போது சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் இன்னும் பெண்கள் அமைப்பாக போதிய வலிமை பெறவில்லை எனச் சொல்லலாமா?

ஆமாம். பெறவில்லைதான். அதற்குக் காரணம் பெண் விடுதலை இயக்கங்கள் இன்னும் இந்த மண்ணுக்கான பெண் விடுதலைத் தத்துவத்தை எழுதவேயில்லை. அவர்கள் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கிறது.  செயல்பட வேண்டியிருக்கிறது.  இங்குள்ள மத, சாதி அமைப்பை எதிர்க்காமல் இங்குள்ள மக்களின் இனநலன்களை இணைத்து சிந்திக்காமல் ஒரு பெண் விடுதலைத் தத்துவம், ஒரு வலிமையான பெண்கள் அமைப்பை கட்டி எழுப்பிவிட முடியாது.

அரசியல் ரீதியாகக் கேட்கவில்லை. திராவிடக் கருத்துருவம் என்பது இன்றைய நவீன யுகத்தில் எந்தளவிற்குப் பொருத்தப்பாடு உடையதாக உள்ளது?

திராவிடம் என்ற கருத்துருவத்தை இன்றைய தமிழர் என்றே நாங்களெல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறோம்.  பெரியார் இயங்கி வந்த அவரது இயக்கப் பாதையை ஊன்றிப் படிப்பவருக்கு இது மிக எளிதாகப் புரியும்.  இந்தியா என்ற அரசியலமைப்பில் இந்து மதம் என்ற பிணைப்பில் நாம் வாழும் வரை திராவிடம் என்ற கருத்தியல் மட்டுமே பொருத்தப்பாடுடையதாக இருக்கும்.  வரலாற்றில் நடந்தவையும் இன்று நடப்பவையும் இதனையே எனக்கு  மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. மேலும் ஒன்று சொல்கிறேன்.  தமிழர் என்று ஒன்றுபடுவதற்கு திராவிடம் என்ற சொல்லாட்சி ஒருபோதும் தடையல்ல.  பெரியாருடைய இயக்கம் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் வேறு மாநிலத்தவர் தனது இயக்கத்தில் பங்கு பெறுவதற்கோ அல்லது அந்த இயக்கம் வேறு மாநிலங்களில் காலூன்றுவதற்கோ எந்தத் இடத்தையும் உருவாக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  சாதி உணர்வுக்குத் தமிழ் என்று பெயர் வைப்பவர்களைத் தவிர வேறு யாருக்கு என்ன பிரச்சனை என்று எனக்குப் புரியவில்லை.

பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் கிராமப்புறப் பெண்களிடம் அவ்வளவாக சென்று சேரவில்லை என்கிற கூற்று சரியா?

அவர்களிடம் ஏற்கனவே இருக்கிற பெண் ஆளுமைச் சிந்தனைகளை இங்குள்ள நகரப் பெண் விடுதலைச் சிந்தனையாளர்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதும் உண்மைதான்.  நமது வரலாற்றில் பெண் தலைமையை, பெண் வழியை ஏற்றுக்கொண்ட தடங்களை நாம் தேடிக் கண்டடைந்து அங்கிருந்தும் பலம் பெறவேண்டும்.

இயக்கத் தளத்திலிருந்து  கருத்தியல் தளத்திற்கு நகர்ந்துள்ளீர்கள். கருத்தியல் தளத்தில் பெண்களுக்கான இடம், குரலுக்கான முக்கியத்துவம் எப்படியுள்ளது?

எங்களைப் போன்றோரை பெண் விடுதலைக்கான குரலுக்கு மட்டும் தேடி வருவது என்பது இப்போது மாறி வருகிறது.  பெண் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் என்றால் பெண் விடுதலையைப் பற்றி மட்டும் கேள்வி கேட்கவேண்டும் என்பதிலிருந்து மாறி பொதுவான அரசியல் சமூகப் பார்வையை எங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஆரோக்கியமான மாற்றம்.  இருந்தபோதிலும் இந்த மாற்றம் அவ்வளவு வேகமாக இல்லை என்பதுடன், இன்னும் மிகக் குறைவானவர்களே கருத்தியல் தளத்தில் அறியப்படுகிறோம்.  தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சிகளில் அவர்களின் கட்சி நிலைப்பாடுகளை எடுத்து வைப்பவர்களாக இன்னும் ஆண்களே அதிக அளவில் நீடித்து வருகிறார்கள்.  குறிப்பாக இளம் பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.  இந்த எண்ணிக்கை பெருகவேண்டும்.  பெருகும்.

ரஷ்யா தொடங்கி இலங்கை வரை நேரடியாகவோ, மறைபொருளாகவோ சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இலக்கியவாதிகள் எதிர்வினையாற்றியுள்ளனர். தமிழகத் திலும் அப்படி ஒரு போக்கு இருந்தது. தற்போதைய தமிழகக் கலை இலக்கியம் மற்றும் இலக்கியவாதிகள் குறித்து தங்களின் கருத்தென்ன?

இன்றைய காலகட்டம் சுய வெளிப்பாடு, விளம்பரம் ஆகியவை மிகுந்து காணப்படுகிறது. இதன் தாக்கம் இலக்கியத்திலும் இருக்கிறது எனத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தச் சமூகம் என்ற பார்வை சுருங்கிப் பகுதிப் பிரச்சனைகள் முழுமையாக்கப்படுகின்றன.  கூர்மையான விமர்சனங்கள் இல்லை.  இருந்தால் தனிநபர் விமர்சனங்களாகவே இருக்கின்றன.  திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் பொது அறம் என்ற ஒன்றே தேவையில்லை என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.  உன்னுடைய வெற்றிக்காக நீ எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இளைஞர்கள் வழிநடத்தப்படுவது போல் தோன்றுகிறது.  இதைத் தாண்டி ஒரு மாற்றம் வரவேண்டும் என நம்புகிறேன்.

- நேர்காணல் : அறிவன்
ஓவியா

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions