c கண்டதைச் சொல்கிறோம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்டதைச் சொல்கிறோம்

கைவிடப்பட்ட குழந்தைகள்

இரண்டு சிறுவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டும் அழுதுகொண்டும் பிச்சை கேட்கிறார்கள். நகரின் எல்லா சாலையோரங்களிலும், ஜன நடமாட்டம் நிறைந்த பகுதிகளிலும் இக்காட்சிகளைக் காணலாம்.

பிச்சை போட விரும்பிய அந்த நபர் அச்சிறுவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறார். பதில் சொன்னால் நிச்சயம் காசு கிடைக்கும் என அவர்களும் பேசுகிறார்கள். அப்பா ஒரு குடிகாரர் என்றும், அம்மா இல்லையென்றும், தினமும் அப்பாவின் கொடூரங்கள் தாங்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். சாப்பாடுகூட சரிவரப் போடமாட்டார் என்றும், அதனால் வீட்டைவிட்டு வந்து பிறகு பிச்சையெடுக்கத் தொடங்கியதாகவும் கூறுகிறார்கள்.

பேச்சுக் கொடுத்தபடியே அந்த நபர் இம்மாதிரியான குழந்கைகளை மீட்கும் குழுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார். மிகக் குறுகிய நேரத்தில் வந்த அந்தக் குழு அந்த இரு சிறுவர்களையும் மீட்டு அழைத்துச் சென்று பாதுகாப்பை வழங்கியது.

சில வாரங்களுக்கு முன்னால் முகநூல் வலைதளத்தில் நாம் கண்ட இச்செய்தி (பதிவிட்டவர் பெயர் நினைவில்லை) அதிர்ச்சியளிக்கவே மேற்கொண்டு சென்னை நகரில் திரியும் குழந்தைகளைக் கவனிக்கத் தொடங்கினோம்.

கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தின. “கடத்தப்படுதல், பிச்சையெடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், குழந்தையில்லாதவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்தல், போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தல், கொத்தடிமை வேலைகளுக்கு அனுப்புதல், திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துதல், உடல் உறுப்புகளுக்காக, மருத்துவப் பரிசோதனைக்காக எனப் பலவிதமான முறைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனுதினமும் இந்த நிர்கதியான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்’’ என்கிறார் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு அரசு உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கும் ‘ஸ்கோப் இந்தியா’ அமைப்பின் டாக்டர் சத்தியபாபு.

குழந்தைகள் நிர்கதிக்கு உள்ளாவதில் முக்கியமானது குழந்தை கடத்தல்தான் என்கிறார்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக  இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். கடந்த 3 மாதங்களில் 271 குழந்தைகளும், கடந்த ஆண்டில் மட்டும் 656 குழந்தைகளும், கடத்தப்பட்டுள்ளார்கள். இதில் பாதிக்கு மேல் பெண்கள், (தகவல்: தளவாய் சுந்தரம் கட்டுரை).

பெற்றோர்களிடம் முரண்பாடு, சித்திகளின் கொடுமை, படிக்கப் பிடிக்காமல் போதல், ஊதாரித்தனமான குடும்பமுறை போன்றவற்றால் வீதிக்கு வந்து நிர்கதியாய் நிற்கும் குழந்தைகளை முதலில் நோட்டம் விடுவதில் தொடங்கி, இனிமையாகப் பேசி காசு, சோறு என ஆசைக்காட்டி அழைத்துச் செல்கிறார்கள். பிறகு அவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் என கடத்தப்பட்டு மேற்சொன்ன காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறார்கள். வெளிநாட்டிற்கும் அனுப்பப்படுகிறார்கள். அதற்காக அச்சிறுவர்களைப் பழக்கும் முறை மிகவும் கொடூரமானது.

சமீபத்தில் வந்த ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் ஒரு காட்சி!

கதாநாயகனின் ஒரே மகன் கௌதம் மெரினா பீச் கூட்டத்தில் காணாமல் போகிறான். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன் போனால் அலட்சியம் காட்டுகிறார்கள் (பணக்காரக் குழந்தை எனில் உடனே நடவடிக்கை). மறுநாள் விசாரணையை போலீசார் தொடங்கும்போது குழந்தை மாநிலம் தாண்டி கைமாறிவிடுகிறது. போலீஸை நம்பாமல் நாயகன் தீவிரமாகத் தேட, கடைசியில் கல்கத்தாவில் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுக்கும் கும்பலிடையே மகனைக் காண்கிறார். முகம், கண், பல் எனச் சரளமாகச் சிதைக்கப்பட்டு அடையாளமே தெரியாத நிலையில் இருக்கிறான் கௌதம்.

இப்படிப்பட்ட குழந்தைகள் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறார்கள். சாட்டை, எகனைமொகனையான கல், பழுக்கக் காய்ச்சிய கம்பிகள் முதலியவற்றால் தாக்கப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள்.

கடத்தப்படும் குழந்தைகளின் நிலை இப்படி எனில், தன்னியல்பாக ஓடிவிடும் குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். எதுவும் புரியாத நிலையில், வீதிவீதியாக அலைந்து பிச்சை கேட்கவும் தெரியாமல், பசியடக்கவும் இயலாமல், நெடுந்தூரம் வந்துவிட்டபடியால் திரும்பிச் செல்லவும் முடியாமல், கடைசியில் நேரடியாகவோ, அல்லது கடத்தல் கும்பல்கள் மூலமாகவோ மேற்சொன்ன இக்கட்டில் வந்து விழுந்துவிடுகிறார்கள். 80 விழுக்காட்டு குழந்தைகள் மீட்கப்படுவதில்லை. காவல் துறையாலும் இயலவில்லை. காரணம் அதன் பின்னுள்ள நெட்வொர்க்கும், குழந்தைகள் இடம்பெயர்ந்து அடையாளம் தெரியாமல் போவதும் ஆகும்.

“நிர்கதியான, கைவிடப்பட்ட, கடத்தப்பட்ட குழந்தைகளைக் காக்கவும், கடத்தலைத் தடுக்கவும் 2000ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற அளவில் கண்காணிப்புக் குழுவை அமலாக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அந்த அமைப்பும் செயலிழந்துவிட்டது. சமூகத்திலும், பெற்றோர்களிடத்திலும் குழந்தைகள் காணாமல் போவது குறித்து போதுமான விழிப்புணர்வும் இல்லை. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிறப்பு சிறார் காவலர் ஒருவர் உண்டு. அவருக்கும் விழிப்புணர்வு இல்லை. ஆகவே இவற்றைத் தடுப்பது மிகவும் சிக்கலாக உள்ளது. மேலும், பெற்றோர்களின் தவறான அணுகுமுறையின் காரணமாகத்தான் பெரும்பாலான பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காமல் டார்ச்சர் கொடுப்பது, இல்லீகல் காண்டேக்ட் வைத்துக்கொண்டு பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துவது, குடித்துவிட்டு வந்து வீட்டில் அப்பா _ அம்மா சண்டை போட்டுக்கொள்வது எனப் பல்வேறு காரணங்களால் குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடுகிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அன்பும் அரவணைப்பும் கொண்டவர்களாக இருக்கவேண்டும். குழந்தைகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும். குழந்தைகள் தனிமையில் இருந்தால் கவனித்து அவர்களுடன் பேசவேண்டும். 1098 என்கிற சைல்ட் லைன் குறித்து குழந்தைகளுக்கும் விளக்கவேண்டும். இந்தியா முழுக்க இப்படிப்பட்ட குழந்தைகளைக் கண்காணிக்க இந்த எண் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் டாக்டர் சத்தியபாபு (தகவல்: தளவாய் சுந்தரம் கட்டுரை).

திரையரங்க வாசல், திருவிழாக் கூட்டம், பிளாட்பாரத்தில் தூங்குதல், பீச், சுற்றுலாத்தளம், பெரும் வியாபாரக் கூடைகள், அரசு பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள்மீது மட்டுமே இருக்கட்டும்!பொது இடங்களில் உங்கள் பிள்ளைகள் விளையாடும்போது ஒரு கண் அவர்கள் மீது இருக்கட்டும்!

பள்ளிக்குப் போனாலும், நண்பன் வீட்டிற்கு விளையாடப் போனாலும் கையோடு அழைத்துக்கொண்டு போய் விடுவதிலும், கையோடு அழைத்து வருவதிலும் பெற்றோர்கள் அலட்சியம் காட்டல் கூடாது!

வளர வேண்டிய கொழுந்துகளைக் காப்போம்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions