c புதுக்கவிதை: வேரும் விழுதும் - 15
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 15

வானம்பாடியில் நான்

1971 அக்டோபர் 9இல் ஆர்வத்தின் ஆவி பறக்க ‘வானம்பாடி’ முதல் இதழ் வெளிவருவதற்கு முன்னரே, அதன் தோற்றத்திற்குக் காரணமான விவாதங்களில் நான் கலந்துகொண்டேன். ஓர் கவிதை இதழ் வரவேண்டுமென முல்லைஆதவன் விரும்பி ஆலோசித்த முதல் கூட்டத்தில் நான் இல்லை. தொடர்ந்து என்.டி.சி. வளாகத்தில் ‘வானம்பாடி’ பெயர் சூட்டு வைபவத்திலும்  ‘மானுடம் பாடும்’ என்று அதற்கு உடைமொழி தந்த நிகழ்வுகளிலும் நான் முக்கியப் பங்கு வகித்தேன். அதனுடன் தொப்புள்கொடி உறவு எனக்கு. அதன் கடைசி இதழ் 1983 செப்டம்பரில் (22ஆம் இதழ்) வெளிவரும் வரை அதனுடன் மண்ணில் தாவியும் வானில் பறந்தும் திரிந்தேன்.

என்னைப் பட்டை தீட்டிய களம் ‘வானம்பாடி’. அதன் ஒவ்வொரு அசைவிலும் துயரிலும் நான் இருந்திருக்கிறேன். அதில் எழுதிய கவிஞர்களின் சொல்லும், தொடரும் இன்னும் என்னால் அசைபோடப்படுகின்றன. முல்லைஆதவனின் ‘துருவ யுகச் சூனியம்’, கங்கைகொண்டானின் ‘எந்தக் கண்ணன் இங்குப் பிறந்தால்’, நித்திலனின் ‘அந்திமம் வேய்ந்த பந்தற் கால்கள்’, ரகுமானின் ‘தீபமரத்தின் தீக்கனி’, தமிழன்பனின் ‘எரிமலையின் உள்ளே நாம்’, பரணனின் ‘வெந்துயர் முள்மன வேலிகள்’, தேனரசனின் ‘உப்புக் காட்டின் அலைப் புதர்’ என்பன போன்ற சொற்றொடர்கள் எனக்குள் இன்றும் வந்து வந்துபோகும்.

வானம்பாடியில்தான் நான் முற்றி முதிர்ந்து மெருகேறினேன். பத்தொன்பது கவிதைகளையும், பதினொரு மொழிபெயர்ப்புக் கவிதைகளையும், சில தலையங்கம் முதலிய குறிப்புகளையும் எழுதினேன். வயலார், அய்யப்பப் பணிக்கர், சச்சிதானந்தன், வைலோப்பிள்ளி, செம்மனம் சாக்கோ, கடம்மனிட்ட ஆகிய மலையாளக் கவிஞர்களின் கவிதைகள் சில மொழிபெயர்ப்பில் அடங்கும்.

என் சொந்தப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை என நான் மதிப்பவை : மதுரைவீரன், துணை, சாக்கடைகளும்தான் இன்னும் வற்றிவிடவில்லை, ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா? சர்ப்பயாகம், நாய்க்குடை, முள்...முள்...முள், ரோஷம், மனிதம், இது எங்கள் கிராமம்.

இருபதாம் இதழில் வெளிவந்த ‘இது எங்கள் கிராமம்’ எங்கள் ஊரைச்சுற்றி ஓடும் ஆழியாற்றை அறிமுகம் செய்துகொண்டு தொடங்குகிறது.

“வலம்புரியாய்
வளைந்து வளைந்து
ஊரைச் சுற்றி வலம் வரும்
ஒரு நீலக் குதூகலம்
எங்கள் கிராமத்து நதி”


இந்த நதியின் பிள்ளையான கிராமத்து மண்ணும் மக்களும்  இந்நெடுங் கவிதையில் ஒரு சாளரப் பார்வையில் காட்சி தருகின்றனர். இந்தக் கவிதையின் முக்கியத்துவம் என்னவென்றால் எனக்கு சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றுத் தந்த ‘ஒரு கிராமத்து நதி’ உருவாகக் காரணமான தாய்க்கவிதை என்பதாகும்.

வானம்பாடி முதல் இதழில் ‘மதுரைவீரன்’ வெளிவந்தது. மதுரைவீரன் சிலையைப் பார்த்த ஒரு படைப்புக் கலைஞன் களிமண்ணால் தானும் ஒரு சிலை வடிக்க முற்படுகிறான். ஆனால் செய்யப்பட்ட அழகிய சிலை மழையில் கரைந்து கூழாகிவிடுகிறது. இச்செய்தியைச் சொல்லும் கவிதை,

“அனுபவத்துத் தனி நெருப்பில்
ஒற்றைப் பொழுதில்
ஒரு கணம் நான் வெந்திருந்தால்”

என்று நினைத்துக் களிமண் முனகுவதாக, நோவதாகப் பேசுகிறது. கவிதையின் முடிவில்,

“எனக்கந்தப்
பொம்மி நினைவு வரப்
பொருமி அழுதுவிட்டேன்”

என்ற கவிக்கூற்று முத்திரை பதிக்கும்.

அனுபவம் என்ற நெருப்பில் வேகாத படைப்புகள் நிலைபெறா என்பதைச் சொல்கிறது கவிதை. பொம்மி - கலையின் ரசிகனாக உருவகம் செய்யப்படுகிறது. படைப்புக் கலையின் மர்மத்தைப் படிமமாகப் பேசும் கவிதை அன்று போதுமான அளவு விளங்கிக்கொள்ளப்படவில்லை.

‘துணை’ என்ற கவிதை நிராசையின் பிம்பங்களாக தவித்துக்கிடக்கும் படகு, தனித்துக்கிடக்கும் தாழம்பூ, பசித்துக்கிடக்கும் கடல் பறவை ஆகியவைகளை வர்ணித்த பின்,

அங்கே
நானொரு படகோட்டி
மடலுக்கும் பறவைக்கும் துணையாக
கடலுக்கும் மீனுக்கும் நினைவாக


எனக் கவிதை நிறைவடையும். துணையற்றவர்களுக்குத் துணையென்று சொல்பவனும் செயலற்ற துணையாக இருப்பதைச் சொல்லாமல் சொல்வது இக்கவிதை. அமைதியில் பூத்த அவலமாக இக்கவிதையை எழுதினேன். இது இரண்டாம் இதழில் வந்தது.

‘வானம்பாடி’ நான்காம் இதழில், ‘சாக்கடைகளும் தான் இன்னும் வற்றிவிடவில்லை’ என்ற கவிதையை எழுதினேன். ‘கங்கை இன்னும் வற்றிவிடவில்லை’ என்ற நா.பா. கதைத் தலைப்பைப் பகடி செய்த தலைப்பு இது. வங்கதேச விடுதலைப் போர்ப் பின்புலத்தில்  அமைந்த கவிதை, ஓர் அகதிப் பெண் விலைமகளான சூழலைப் பேசுகின்றது. அவளை நாடிவரும் இளைஞனின் காமம் அவள் மார்பகங்களில் ஒன்று அறுத்தெறியப்பட்ட பசுந் தழும்போடு இருந்ததைப் பார்த்துத் திடுக்கிடுகிறது. போரின் கொடுமையால் சீரழிந்த பெண்களின் அவலத்தை இக்கவிதை பேசுகிறது. கதைக் கவிதைகள் பலவற்றை நான் எழுதவும், ஒரு விலைமகளின் வாழ்வைச் சிறுகாவியமாக ‘மவுன மயக்கங்கள்’ என்று படைக்கவும் முன்னோடியானது இக்கவிதை.

‘ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?’ ஐந்தாம் இதழில் வெளிவந்தது. வேதபுரம் எனப் பாரதி உருவகம் செய்தது போலத் தமிழகத்தை ஞானபுரம் என உருவகித்தேன். நேற்றும் இன்றும் இதனைப் பாழ்படுத்தும் அரசியல், சமுதாய, இலக்கியத் தீமைகளை நினைவூட்ட இக்கவிதையை எழுதினேன். ஞானபுரத்தில்,

சூரியனுக்கு நடுவில்
நீச்சல் குளம் அமைப்பவர்கள்
பசும்பாலிலிருந்து
வைக்கோல் தயாரிக்கிறவர்கள்
குருட்டு வழிக்கு
இரும்பைக் காய்ச்சி வடித்துக்
கண்மருந்து செய்கிறவர்கள்


இன்னும் பாண்டியன் நெடுமாறன் குதிரைக்கும் பற்கள் பதினாறா, பதினெட்டா என ஆராய்கிறவர்களெல்லாம் நிறைந்துவிட்டதால், ‘மூடிய ஞானபுரத்தின் மூன்றாவது கண்ணே இமை திற’ என்று தூண்டுகிறது இக்கவிதை.

பிற்காலத்தில் ஒரு தொகுதிக்குப் பெயராய் அமைந்த ‘சர்ப்ப யாகம்’ கவிதை ஒன்பதாம் இதழில் வெளிவந்தது.

பரமபத சோபான படம்
எங்கள் தேசம்; இதில்
கட்டங்கள் தோறும்
நச்சுப் பாம்புகள்
காத்துக் கிடக்கின்றன


என்று தொடங்கும் கவிதை, தடுக்கும் பாம்புகளை அழிக்கச் சர்ப்பயாகம் செய்யவேண்டும் எனக் கூறுகிறது. பாரத சர்ப்பயாகம்  ஜனமே ஜயன் காலத்தில் நடந்தது. இப்போதும் ‘ஜனமே’ ஜயிக்கும் யுகம்தான்; ஜெயிக்கலாம் சர்ப்பயாகம் என்று கொந்தளிப்புடன் கூறும் கவிதை பலராலும் வரவேற்கப்பட்டது.

அணுகுண்டுச் சோதனைகளின் அவலத்தைக் கூறும் ‘நாய்க்குடை’யும் வானம்பாடியில்தான் வந்தது.

விரிகிறது இன்னும்
விரிகிறது இன்னும்
ராட்சத நாய்க்குடைக் காளான்


என அணு வெடிப்புச் சோதனைகளைக் குறித்து வேதனைபொங்க எழுதப்பட்ட கவிதை. சர்வதேச சமாதானக் கவுன்சிலின் (நார்வே) இதழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. தேசியக் கவி சம்மேளத்துக்காத் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லியில் நான் இதனைப் படித்தபோது தி.ஜானகிராமன் என்னைப் பாராட்டினார்.

‘முள்...முள்...முள்’ ‘வானம்பாடி’ பன்னிரண்டாம் இதழில் வந்த கவிதை. வாழ்வின் பற்பல முகங்களிலும் தைத்துத்தொலைக்கும் கூரிய முட்களைப் பேசுகிற படைப்பு இது. ஒன்பது கணுக்களால் ஆன இக்கவிதை வகைவகையாகத் தைக்கும் முட்களை எடுத்துக் கூறியது. வேடிக்கை, ஆதங்கம், தத்துவம், போராட்டம் என உணர்வுகளின் உச்சமாக ‘முள்’ அமைந்தது. ஓர் எடுத்துக்காட்டு:

அவன்
முல்லைக் கொடிக்குத்
தேர் நல்கி நடக்கையில்
சுருக்கென்று தைத்த
நெருஞ்சி முள் கேட்டது:
‘எனக்கு?’

பதின்மூன்றாம் இதழில் ‘ரோஷம்’ இடம் பெற்றது. சராசரி வாழ்வின் அவலங்களில் அலைமோதும் ஓர் அலுவலக ஊழியன் எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொள்கிறான். சோர்வுடன் வீடு திரும்பும் அவனை எட்டு வயது மகள் ஆனந்தமாய் வரவேற்கிறாள்.

எட்டு வயதுச் சுட்டி
கவிதாக் குட்டி
சிலேட்டும் கையுமாய் ஓடி
‘அப்போவ்... கணக்கிலே
எனக்குத் தொண்ணூறு மார்க்’
என்று
கொட்டி அளந்த
கொள்ளைச் சிரிப்புக்கு
முதுகு பழுக்க ஒரு பதில்
‘பளார்.. பளார்... பளார்’

கவிதை ‘நம்ம ரங்கசாமி ரோஷக்காரன் தான்’ என்று முடியும். கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான போது அமைதி காத்தவனுக்குக் கிடைத்த வடிகால் இப்படியானது என்று வருந்துகிறது கவிதை.

‘மனிதம்’ பதினேழாம் இதழின் பதிவு. விஞ்ஞானம் மனித உறவுகளின் சிக்கல்களுக்கு விடிவாகாது என்பது கவிதையின் பொருள். விஞ்ஞானி விவேகன் ‘ரோபோ’வைச் சமைக்கிறான். அந்த மனித இயந்திரம் நொடிப் பொழுதில் ஆணைகளை நிறைவேற்றுகிறது. எதிர்பாரா  விதமாக விஞ்ஞானியின் குழந்தை தானியங்கி வாசல் கதவில் சிக்கி இறந்துவிடும் செய்தி கிடைக்கிறது. பேரவலத்தில் கதறும் அவன் முன் ‘அடுத்த கட்டளை, அடுத்த கட்டளை’ என்று மனித இயந்திரம் வந்து நிற்கிறது.

விஞ்ஞானி அலறினான்;

‘ம்... பிசாசே
அழு... அழு
போ... போ’
ஓய்ந்து போய்
ஒன்றும் விளங்காமல்
நின்றது
அழத் தெரியாத
இயந்திர மனிதன்!


மனிதம் தொலையும் நவீன தொழில்நுட்ப யுகத்தை ஒரு சராசரிப் பார்வையில் இக்கவிதை சித்திரித்தது.

எனது கவிதைகள் இன்னொரு காலத்தில் மதிப்பிடப்பட்டுத் தெரிவு செய்ய நேர்ந்தால் வானம்பாடியில் நான் எழுதிய ஒன்றோ இரண்டோ கவிதைகள் அதில் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு ‘வானம்பாடி’ எனக்கு ஆடி விளையாடவும் ஓடி மகிழவும் அன்று களம் அமைத்துத் தந்தது.

‘வானம்பாடி’யில் பல மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் நான் மலையாளத்திலிருந்து தமிழாக்கித் தந்தேன். கடம்மனிட்ட இராம. கிருஷ்ணனின் ‘குறத்தி’, செம்மனம் சாக்கோவின் ‘பால் கமிஷன்’, வைலோப்பிள்ளியின் ‘கணபதி ஹோமம்’, ‘லாடம்’, அய்யப்பப் பணிக்கரின் ‘ஹுக்ளி’, சச்சிதானந்தனின் ‘மழையின் அர்த்தங்கள்’,  வயலாரின் சில திரைப்பாடல்கள் ஆகியன வானம்பாடியில் வெளிவந்தன.

பின்னாளில் எம்.டி, லலிதாம்பிகா அந்தர்ஜனம், பெரும்படவம் ஸ்ரீதரன், மாங்காடு ஆகியோரின் நாவல்களை மொழிபெயர்க்கவும், கே.ஜி. சங்கரப்பிள்ளை, ஒ.என்.வி. குறுப், சச்சிதானந்தன் தொகுப்புகளைத் தமிழில் தரவும் எனக்கு ‘வானம்பாடி’ மொழிபெயர்ப்புப் பரிசோதனைகள் தூண்டுதலாயின. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெறவும் இந்தப் பயிற்சி எனக்கு அரிய வாய்ப்பை நல்கியது.

‘வானம்பாடி’ தானும் சிறகடித்து உயர்ந்தது. என்னையும் உயர்த்தியது. வானம்பாடி இலக்கியத் தோழர்களைப் பெற்றுத் தந்து உறவுகளை அளித்தது. கவிதையை நேசிக்கும் வாசக அன்பர்களைப் போலவே வானம்பாடி என் உயிரில் கலந்த உறவு. என்னை  அடையாளப்படுத்தும் அழியா நினைவு.

- தொடரும்

கவிஞர் சிற்பி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions