தமயந்தி கவிதைகள்
போஸ்ட் மேன்
இப்போதெல்லாம் இரவு கனவில்
பள்ளிப்பருவத்து
போஸ்ட் மேன் வருகிறார்.
அவர் உருவம் சிறியது
ராலே சைக்கிளை
உந்தியே நகர்த்துவார்
கையில் இருக்கும்
கடிதக் கத்தையை
கத்தி மேல் நடப்பது போல் பிடித்தபடி
இப்போதும் அவர்
பழைய தெருவில் அலையக் கூடும்
அல்லது
மாறுதலாகி வேறொரு தெருவில்
பைக்கில் போகக் கூடும்
முதல் கதை பிரசுரத்தை
முதல் காதல் கடிதத்தை
அவர்தானே கொடுத்தார்?
வகுப்பு தேர்ச்சிக் கடிதத்தை,
முதல் மணியார்டரை கொடுத்த அவர்
முதல் காதலனன்றி
கனவில் வருவதே
சாலச் சிறந்ததன்றோ!?
நிறைவு
நிரம்பி நிரம்பி
வழிந்தாலும்
ஒரு துளிகூட
எடுத்துப்போக முடியாது
வாழ்க்கையும் கடலும்
விடுதலை
தனித்து பறக்கும்
எல்லா இறகிற்கும் தெரியும்
ஒரு பறவையின் பாரம்
தொடு
தொட்டதை விட்டுவிட்டு
தொடாததை மனசுள் குமைந்தே
வைக்கப்பட்டது பெயர்-
ஆடுதொடா வாழ்க்கை
மறை
துணி காயப்போடுவதில்
பெரிய கிழவிக்குப் புலம்பலுண்டு
பிராவ எங்கிட்டுப் போடுற?
பொருட்காட்சி அப்பளம்போல
துணிக்கடில மறைச்சுப் போடு
அவசரத்துக்கும் மகனின்
ஜட்டியைத் துவைத்ததில்லை
என்பதில் ஏகப்பெருமை அவளுக்கு
மார்பை சுமப்பதைவிட
பெரிதானது அவளுக்கு
மறைப்பதை மறைப்பது
எப்பொழுதும்
அந்நிய நதியாய் பாயுது காதல்
ஒரு எறும்புக்கடியாய் மனசுள்...
என்ன செய்ய?
காதலிக்கத் தெரிகிறது
காதல் செய்யத் தெரியவில்லை!
-என் பாதங்களில் படரும் கடல் (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு)