c மண்ணும் மக்களும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணும் மக்களும்

கேதரை

சின்னராமன் ஒரு மாதிரி. ஆம்பளைன்னா தலையை ஆட்டிக்கிட்டேதான் நடக்கணும் என்று சொன்னால் அதேமாதிரி நடந்துகிட்டுத் திரிவான். அவனை மாதிரி நடக்காதவர்களை ஆம்பிளை இல்லைம்பான். அப்படி ஒரு டைப். சரியான கேதரைப் பயல் என்பார்கள் அவனை. அதனால் எங்கே போனாலும் அம்மா அவனைத் தன் கூடவே கூட்டிக்கொண்டு போவாள்.

வரகு அறுக்கப் போனாள் அம்மா, தன் காட்டுக்குத்தான். போனவள் ‘ஆட்டை நம்ம காட்டுக்கு ஓட்டியாப்பா’ என்று சின்னராமன்கிட்ட சொல்லிட்டுச் செப்பலோடவே போய்விட்டாள்.

ஆட்டை ஓட்டிக்கிட்டுப் போனவன் பக்கத்துக் காட்டுல விட்டுட்டுப் பெராக்குப் பாத்துக்கிட்டே நிக்க, காட்டுக்காரன் திட்ட, சத்தம் கேட்டு எச்சரிக்கையான அம்மா ஓடிவந்து அய்யா சாமின்னு விழுந்து கும்புட்டு ஆட்டை மீட்டாள்.

இவனை விட்டால் சரிப்படாது என, ‘நீ போய் செத்த வரவு அறுத்துப்போடு சாமி. நாஞ் செத்த நேரம் ஆட்டை மேய்ச்சிக் கட்டிப்புட்டு வர்றே’ன்னாள். ‘சரிம்மா’ன்னு போனான்.

அரிவாளை எடுத்தான். வெயிலில் கிடந்ததால் அரிவாள் அணலாய் கொதிக்க, ‘அருவாவுக்குக் காய்ச்சல் அடிக்குது’ன்னு அம்மாக்கிட்ட சொல்ல, அவளுக்குப் பெரிய மனக் கஷ்டம். ‘ஆண்டவனே எம்புள்ளைக்கு இப்படியும் ஒரு சோதனையான்னு மத்தியான சூரியன்கிட்ட கையேந்தினாள். ‘சரி சாமி நீ போய் ஊட்டுலேயே படுத்து தூங்கு’ என்று சொல்லியனுப்பிவிட்டாள். வேற என்ன செய்வாள் பாவம்.

அவனும் ஊட்டுக்கு வர்றான். வழியில் ஒரு புற்று. அதன்மேல் நிறைய துணிகளெல்லாம் கிடக்குது. பக்கத்திலிருந்த ஒரு பெருசுகிட்டே ‘ஏன் இதுல துணியிலாங் கெடக்கு’ன்னான். ‘இதுமேல இப்புடிப் போட்டா உனக்கு தேவையான பவுனு நகை நட்டெல்லாம் கெடைக்கும்’ என்றது அந்த எகனை மோகனை. இவனைப் பார்த்தால் இப்படி எடக்குமடக்கு பண்ணுவதே பலருக்கு பொழப்பு.

காட்டில் அம்மா துவைத்துக் கொடுத்தனுப்பிய  துணிக ளையும் அவன் போட்டிருந்ததையும் புற்றுக்குள் திணித்து விட்டு, அங்கேயே கொஞ்சநேரம் நின்று பார்த்தான். ஒண்ணும் கதையாகவில்லை.  கோவணத்தோடு போய்விட்டான்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்த அம்மாக்காரிக்கு ஆத்திரம். இவன் எல்லாத்தையும் சொன்னான். நாலு அறைவிட்டு போடான்ட்டா. கோபத்தில் விருட்டென்று புற்றுகிட்டே வந்து, ‘‘எந்துணிய குடு. ஒன்னாலதானெ நான் அடி வாங்கினன்’’ என்று அழுவுறான்.

ரொம்ப நேர...த்துக்கப்புறம், ‘‘சரிப்பா என்னை உடைச்சிக்கிட்டே வா. உனக்கு எல்லாம் தரேன்’’ என்று புற்று சொல்ல, கடப்பாறை மம்பட்டியோட வந்து வெட்டித் தள்ளுறான் நம்மாள். கேணயனுக்கு வேற வேலை இல்லைன்னு நக்கலடிக்குது ஊர்.

தரை வந்ததும் நட்சத்திரமாட்டம் ஏதோ மின்னியது. ‘எடுத்துக்கப்பா’ என்றது அது. எடுத்தான். களைப்பாக இருந்தது. தண்ணீர் குடிக்கணும் என்று முனகினான். உடனே தண்ணீர் வந்தது. ஆச்சரியத்தோடு குடித்தான். கொஞ்சதூரம் நடந்ததும் ‘பசிக்குது’ ன்னான். சோறு வந்தது. இப்படி சொல்லச் சொல்ல வீடு, வாசல், தோப்பு, துறவு, மனைவி என்று வந்தது. சுற்றுவட்டாரத்திலேயே பெரிய ஆளாகிவிட்டான் சின்னராமன்.

ஆயிரம் இருந்தாலும் பெத்த தாயில்லாமலா?

‘அம்மா வரணும்’னான். அம்மாவும் வந்தாள். சந்தோசமாக இருந்தது. சின்னராமன் கையில் எதையோ வைத்திருப்பதும், தானாகப் பேசுவதும் யோசிக்க வைத்தது அம்மாவை. அவன் இல்லாத நேரமாய் அதை எடுத்து ‘என் வீட்டுக்குப் போகணும்’ என்றாள், போய்விட்டாள்.

அத்தோடு சரி. இவனுக்கு எதுவும் பலிக்கவில்லை. ‘என் மகனும் வரணும்’ என்றாள் அம்மா. இவனும் போய்விட்டான். அதைப் பண்ணணும் இதைப் பண்ணணும் என்றாள். அப்பத்தான் இவனுக்கு விசயம் புரிந்தது, ஆகா நம்ம அம்மாவே நமக்கு குழிதோண்டிப்புட்டான்னு. இந்த பணமும், நகை நட்டுங்களும் அம்மாவையே இப்புடி ஆக்கிடிச்சேவென யோசித்தவன், அவள் அசந்த நேரம் பார்த்து அதை எடுத்துக்கொண்டான்.

‘இப்படியும் ஒரு அம்மாவா, பேராசக்காரி. ஒரு பாம்பு கீம்பு கடிச்சி சாவக்கூடாதா’ன்னு சொன்னான். அதுமாதிரியே அவளும் செத்தாள். ‘தாயே போயிட்டா நா மட்டும் என்னா. அதே பாம்பு என்னையும் கடிச்சா என்னவாம்’ என்றான். அவனும் செத்துப்போனான்.

கதை முடிஞ்சிப்போச்சி.

வேம்படியாள் வீடு

வயிற்றுக்குச் சோறு கிடைக்கிறதோ இல்லையோ மொச வலை கட்டிடணும் வேம்படியானுக்கு. பொழுது விடிந்து பொழுது போனா மொச வலையையும் முளைக்கானையும் தோளில் மாட்டிக்கொண்டு காடெங்கும் முயற்காலடிகளைத் தேடுவதுதான் பொழப்பு. அவன் ராசிக்கு எப்புடியும் செவ்வாழைப்பழம் சோட்டுக்கு ஒண்ணாவது மாட்டிக்கும். மொசக் கறிக்கும் அவன் பல்லுக்கும் அப்படிவொரு இணக்கம்.

அப்படி கட்டின வலையில் அன்னிக்கும் ஒரு முயல் விழுந்திருந்தது. எடுத்துக்கொண்டு போய் அறுத்து, அலசி, ஆய்ந்து பொண்டாட்டிகிட்டக் கொடுத்து தேனில் குழைத்தமாதிரி தொக்காட்டம் குழம்பு வைத்து, விதைக்கு வைத்திருந்த கேழ்வரகில் ஒரு படி எடுத்துக் களி கிண்டி எடுத்துக்கிட்டு வாடியம்மாவென்று சொல்லிவிட்டுக் காட்டுக்கு உழவுக்குப் போயிட்டான், நீராகாரம்கூட குடிக்காமல் வயிற்றை காயப்போட்டுக்கிட்டே .

உழவு போவுது சும்மா மளமளமளன்னு. புங்க மரமாட்டம் தழையுது உழவு. அவன் காட்டு வழியாக வந்த ஒரு நடுத்தர வயசாளி (வெளியூர்க்காரர்) தாகத்துக்குத் தண்ணி இருக்குமாப்பான்னு கேட்க, ‘இல்லியே பெருசு. பாவம் களைச்சிப் போய் வந்திருக்கியே. கேணி கட்டையும் ஒண்ணும் பக்கத்துல இல்லியே’ன்னு யோசிச்சி “இப்படியே போ. ரெண்டு பரலாங்குதான். ஊர் முனையில் நின்னுகிட்டு வேம்படியான் வீடுன்னு (வேப்பமரத்தடி வீடு) கேளு, சொல்லுவாங்க. எம் பொஞ்சாதி இருப்பா, நீராராம் வாங்கிக் குடுச்சிட்டுப் போ, பாவம்’’ன்னான் வேம்படியான்.

போகச் சொன்னதும் அவன் போய்விட்டான். ‘மொச கறி கொழம்பு வச்சி,  வெதை கேவுருல களி கிண்டி எடுத்தாடின்னு சொன்னான். இவளை இன்னங் காணமே’ன்னு  முனுமுனுத்துக்கிட்டே உழவோட்டுகிறான் இவன். இது அந்த வழிபோக்கி காதில் விழுந்துவிட்டது.

அவம் ஒரு கிருசல் புடிச்ச கிராக்கி.

நேராக வீட்டுக்குப் போய் ‘எம்மா எம்மா நான் ஒம் புருசனோட தூரத்துச் சொந்தம். பாத்து ரொம்ப வருசம் ஆச்சேன்னு வந்தேன். பாத்துட்டு காட்ல இருந்தவாக்குலயே போறேன்னன். இப்பதான் காட்லேர்ந்து வர்றேன்.. அட நீ வேற, நீயென்ன நாதியத்த ஆளா. நா இல்லன்னு  இருக்கச்சொல்லி, போ வீட்டுல போயி,  வேம்படியான் ஊடுன்னு கேளு . விதைகேவுருல களி கின்டி, மொசகறி குழம்பு வச்சிக்கிட்டு இருப்பா என் ஊட்டுக்காரி. வெவரத்த சொல்லிச் சாப்புட்டுட்டுப் போன்னு புடிவாதம் பண்ணாப்ல. சோறு கெடக்குது. நாம பாக்காததா. ஒரு வாய் தண்ணி மட்டும் குடும்மா, தாவமா இருக்கு, பொழுது போவுது. போயி ஆட்டுமாட்ட அவுத்து வுடுணும் ’ன்னான் இவன், கச்சிதமாக.

விதை கேவுரு வரை சொல்லவும் அவளும் நம்பி, இலைபோட்டு மொண்டு மொண்டு போட்டா. ஆளு பலாச்சுளை மாதிரி முழுங்கிட்டு ‘அப்ப நாம் பொறப்புடட்டுமா’ வென பூந்தடிச்சி போயிட்டான்.

இவளும் காட்டுக்குப் புறப்பட்டாள்.

பாதையைப் பார்த்துப் பாத்து வெறிச்சிப்போன வேம்படியான் மொசகறி ஆவலால் வேக்குவேக்குன்னு வந்து கை காலு கூட கழுவாம உட்கார்ந்துக்கிட்டு கொண்டாடீங்கறான்.

பழைய சோத்தை குண்டானோட நீட்டினாள் அவள். இவன் விசாரிக்க, அவள் விவரம் சொல்ல, செவினியிலேயே உட்டான் நாலு.

அவ போய் சேர்ந்துவிட்டாள் பொறந்த ஊட்டுக்கு. ஒரு வாரம் கழிச்சி அவளை அழைக்கப் போறான் நம்மாள். மாமனார், மாமியார்கிட்ட விவரம் பூராவையும் சொன்னான்.

“ஆமாம்மா புருஷன் சொன்னான்னு சொன்னா சரீன்னு உடுலாமா. புருசனே சொன்னாலும் என்னா ஏதுன்னு ஆராய வேண்டாமா’’ன்னு புத்திமதி சொல்லி அனுப்பிச்சதுங்க பெத்ததுக.

பெரியசாமி

பக்கத்து ஊருக்கு கூத்துப் பார்க்கப் போய்க் கொண்டிருந் தார்கள் இருவரும். இருவருமே ஒருத்தருக்கொருத்தர் ஒறமுறைங்க. அதாவது மாமம் மச்சான் உறவுமுறை. ரெண்டு பேருமே ரொம்ப தமாஷ் பேர்வழிகளும் கூட.

அதையும் இதையும் வாதம் பண்ணிக்கிட்டும் வம்படித்துக் கொண்டும் போனார்கள். கடைசியாக வாதம், ஓஞ்சாமி பெருசா ஏஞ்சாமி பெருசாங்கிறதுல வந்து நின்னது.

அப்படியே போய்க்கிட்டிருக்கப்ப மாமங்காரனுக்கு வவுத்தக் கிள்ளுது. கட்டாந்தரை பக்கமா வெளிச்சத்துல உக்காந்தார். முடிஞ்சது. சுத்தி சுத்திப் பார்க்கிறார். பொட்டுத் தண்ணிகூட காணமுடியல. கல்லுகூட உருப்படியா தென்படல.

இந்தாளு ஒரு சாமியாடி வேற. சத்தமில்லாம இப்பப் போயிட்டா நாளக்கி சாமியாடும்போது,  என்னடி சாமியாடறவ பேண்டதை கழுவாத என்று மச்சான் பேசிப்புடுவாரேங்கிற கூச்சம் ஒரு பக்கம்.

படக்குன்னு பக்கத்திலிருந்த ஆவாரந்தலையை நாலு கை உருவி சுத்தமானார். சமயத்துக்காக காத்திருந்த மச்சான் தன் லீலையைத் தொடங்கினார். அவரும் சாமியாடிதான். சாமி வந்து ஆடாத ஆட்டமா ஆடுறார். மண்ணுல விழுந்து புரளுறார். என்னய்யா காரணம்னா, ஆவாரந்தலையில்தான் மச்சானோட சாமிக்கு மாலையாகப் போடுவாங்களாம். அப்படி இப்படின்னு மன்னிப்பு கேட்கிறவை விடவில்லை மாமாவை. மாமாவுக்கு போதுன்டா சாமின்னு ஆகிவிட்டது.

அப்புறம் பழைய மாதிரி நடக்கத் தொடங்கினார்கள். இப்போது மச்சானுக்கு வவுறு கிடுமுடுங்குது. மாமாவுக்கு மச்சானை எப்படி மடக்குவது என்று யோசனை.

இருட்டாயிருக்கு, அங்க வேண்டாம், இங்க வேண்டாம்னே கூட்டிக்கொண்டு வந்து ஒரு இடத்தைக் காட்டி போ...ன்னார். இப்பவும் பிரச்சனை தண்ணிதான். மாமா அளவுக்கு யோசிக்கவில்லை மச்சான். முன்னாலிருந்த ஒரு பூண்டுச் செடியைப் புடுங்கி ஒண்ணுக்கு மூனு தடவையாக கிளீர் பன்னிட்டாரு.

கொஞ்சூண்டு நேரம்தான் ஆகியிருக்கும்.

குதிக்கிறாரு மச்சான். பேய் சொறி பிடிச்சவனாட்டம் முன்னாலேயும், பின்னாலேயும் சொறிஞ்சிக்கிறார். புரண்டு துடிக்கிறார். ஆ... ஊ...ங்குறார்.

மாமா ஒன்னுந் தெரியாதமாதிரி நின்னுக்கிட்டிருக்கார்.

என்ன மாமா விசயம்னா ‘இதாம் மச்சான் ஏஞ் சாமி. ஓஞ்சாமியாவது உன்னோட விட்டது. ஏஞ்சாமி லேசுல விடாது. ஆட்டிப்படைச்சிடும்ல’ன்னு கின்னாரம் போடுறார் மாமா.

மச்சானுக்கு மாட்டிக்கிட்டது புரிஞ்சது. யோசிச்சப் பிற்பாடுதான் விளங்குது. மாமா தந்திரமாக சுளுசுளுப்பான் செடிகிட்ட கொண்டாந்து விட்டது.

‘எல்லா சாமியும் பெரிய சாமிதான்டையா’ன்னார் மாமா. ‘பெருங்கூத்துய்யா நம்ம கதை’ ன்னான் மச்சான். சிரிச்சுக்கிட்டே போனாங்க, கூத்துப்பாக்க.-மண் மணக்கும்
செங்கான் கார்முகில்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions