c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

புத்தகக் கண்காட்சி 2016

சென்னையின் அடையாளங்களில் ஒன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி. வருடா வருடம் டிசம்பர் தொடங்கி ஜனவரியில் முடியும். டிசம்பரில் பெய்த கனமழை வெள்ளத்தால் புத்தகக் கண்காட்சி தள்ளிப் போடப்பட்டு, 2016 ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை தீவுத்திடலில் நடத்தப்பட்டது.

இலக்கிய ஆர்வலர் நல்லி குப்புசாமி கண்காட்சியைத் தொடக்கிவைக்க, உலைகளன் போல் கொதித்த கோடை வெப்பத்தையும் தாண்டி வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

தாமதமாக நடைபெற்றாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஜூன் மாதம் ஆகையால் பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை, விண்ணப்பித்தல் என இருந்தபோதும் கணிசமான  மாணவர்கள் மாலையில் வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வடசென்னை மக்கள் அதிக அளவில் கலந்துகொண்டார்கள். கண்காட்சியை இந்தாண்டு தீவுத்திடலில் நடத்தியதன் நோக்கமும் இதுவே.

கடந்த வருடம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வில் நடைப்பெற்றது. இந்த வருடம் தீவுத்திடலில் நடைபெறுகிறது. ஆனாலும் இந்த இடமாற்றம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

கிட்டத்தட்ட 700 அரங்குகளில் 10 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணகான புத்தகங்கள் இடம் பெற்றன. பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களைச் சிறப்பிக்கும் வகையில் சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று தனி அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் கன்னட நூல் அரங்குகளும் இடம்பெற்றன. குழந்தை இலக்கிய, நூல்களும், சி.டி.க்களும் நிறைந்த ஸ்டால்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.

தினமும் மாலையில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கட்டுரை, ஓவியம், குறும்படப் போட்டிகளும், தினசரி குறும்படங்கள் திரையிடலும் நடைபெற்றன.

வரலாறு, கலை, இலக்கியம் சார்ந்த நூல்கள் அதிக கவனத்தைப் பெற்றன. குறிப்பாக, நொபுரு கரஷிமா, செண்பகலெட்சுமி, ஆர்.எஸ்.சர்மா, சதீஸ் சிந்திரா, ரெமீலா தாப்பர், தீபன் சந்திரா உள்ளிட்டோரின் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வு நூல்கள், பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தன. பாரதி புத்தகாலயம், எதிர் வெளியீடு, புலம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, சந்தியா பதிப்பகம்  உள்ளிட்ட சில பதிப்பகங்களில், தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய இடம்பெற்றன.

எழுத்தாளர்களுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்கள் எனச் சில புதிய நிகழ்ச்சிகளும் இந்த வருடம் புதிதாக நடைபெற்றன.

கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு வழக்கம்போல்  10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்பட்டது.

கண்காட்சியின் ஒரே குறை காற்றோட்டம் சரியாக இல்லாததுதான். தீவுத்திடல் பள்ளம் என்பதாலா, மேற்கூரை மிகவும் கீழிருந்ததாலா, மேடை அமைப்பு கடல் பார்த்து அமைக்காததாலா, எதனால் என்று தெரியவில்லை.புழுக்கம்  அதிகமாக இருந்தது. முதியோர்கள் எப்போது வெளியில் போகலாம் என புலம்பினார்கள். இதையும் தாண்டி நிறைய மின் காற்றாடிகள் போடப்பட்டிருந்ததும் மறுப்பதற்கில்லை. குடிநீர் வசதியும், தேநீர் வசதியும் போதிய அளவிற்கு இல்லை. மவுண்ட் ரோடுப் பக்கமா? வார் மெமோரியல் பக்கமா? எந்தப்பக்கம் நுழைவாயில் என்கிற குழப்பமும் பலருக்கு நேர்ந்தது. நடந்து அசந்து போனார்கள். பேருந்து வசதிகள் மிகவும் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இவை எதனாலும் வாசகர்கள் வருகை சிறிதும் தடைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions