c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்பு

2016- சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் - ஆட்சி செய்ய வாய்ப்புப் பெற்றிருக்கும் - புதிய அமைச்சரவையை முதலில் பாராட்டுகிறோம். புதிய அரசியல் சூழ்நிலை. பல கட்சிக் கூட்டணிகள். எனினும் மக்கள் உங்களின் மேல் நம்பிக்கை வைத்து உங்களை மீண்டும் ஆள அனுமதித்திருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பவர்கள், மக்கள் தங்களை ஆளத் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகள் என்பது ஜனநாயகத்தின் முதல் விதியாகும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றமைக்கு ஆட்சியாளர்களான உங்களை வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம்.
கட்சிகள் முதலில் சிந்திக்கவேண்டிய தத்துவம் ஒன்று உண்டு. வெற்றி பெற்றவர்கள், ஏன் தாங்கள் வெற்றி பெற்றோம் என்பதைச் சிந்தித்துத் தங்களுடைய எதிர்காலச் செயல்பாடுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றி வாய்ப்பை இப்போதைக்கு இழந்தவர்கள், ஏன் தாங்கள் இழந்தோம், ஏன் மக்களால் புறக்கணிக்கப்பட்டோம் என்பதைச் சிந்தித்துத் தம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
ஆட்சியில் அமர்ந்திருக்கும் பழைய மற்றும் புதிய ஆட்சியாளர்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
முதலில், மக்களாகிய தாங்கள், நேர்மையும் உண்மையும் கூடிய, மரியாதைக்குரியவர்களால் ஆளப்படுகிறோம் என்கிற மனநிறைவைப் பெறும்வகையில் உங்கள் ஆட்சிமுறை அமைந்திருக்க வேண்டும்.
உங்கள் ஆட்சிச் செயல்பாடுகள், மக்கள் புரிந்து தெரிந்துகொள்ளும் விதமாக, வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும்.
சாதி, சமயம், இனம், மொழி போன்ற உணர்ச்சிகளை மையமாகக் கொண்டதாகக் கடந்த காலத்தில் மாற்றியமைக்கப்பட்டுக் கிடக்கும் சமூக விரிசல்கள் சீர் செய்யப்பட்டு, சகல சாதியர்கள், சிறுபான்மைச் சாதியர்கள், சிறுபான்மை மதம், இன, மொழிக்காரர்கள், மற்றும் சமூகத்தின் கடைத் தரத்தில் வைக்கப்பட்ட மனிதர்கள் உள்ளிட்ட அனைவரும், ‘இது தங்கள் அரசு, இந்த அரசு தங்களுக்காகவே இருக்கிறது’ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகப் புதிய ஆட்சிமுறை இருக்கவேண்டும். மகாத்மா காந்தி, சுதந்திர தேசத்திற்கு சொன்ன, ‘எத்திட்டமும் எச்செயல்பாடும் சமூகத்தின் கடைசிப் படியில் நிறுத்தப்பட்டிருக்கும் மனிதரை நோக்கியே இருக்கவேண்டும்’ என்பதே நல்லாட்சியின் இலக்கணமாக இருக்கவேண்டும்.
தூங்கி எழுந்து தெருக் கதவைத் திறந்தால், ஐந்து கிலோ அரிசியும், காய்கறிச் செலவுக்கு நூறு ரூபாயும், கைச் செலவுக்கு இருநூறு ரூபாயும் ஒரு மூட்டையாக கட்டப்பட்டு வாசலில் கிடக்கும் என்பதுபோன்ற இலவசக் கனவுகளைத் தமிழர்கள் அவர்களின் வரலாற்றுக் காலங்களிலும், அண்மைக் காலங்களிலும் வாழ்க்கை மரபாகக் கொண்டதில்லை. உழைத்துண்பவர்கள் அவர்கள். கௌரவமாக ஜீவிக்க ஒரு வேலையும், போதுமானதாகச் சம்பளமும், வெயில், மழை படாத ஒரு கூரையுமே அவர்களின் உண்மைத் தேவைகள். அரசு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி உழைக்கத் தயாராக இருக்கும் மக்களை வேலைவாய்ப்பு தந்து நாகரிகமாக வாழும் சூழ்நிலைக்கு உட்படுத்தவேண்டும். படித்த, வேலையற்ற இளைஞர்கள் மனங்களில் வெறுப்பும் கசப்பும் கோபமும் உருவாவது, மிகப்பெரும் சமூகப் பிரச்சனையாக வெடிக்கும்.
தமிழ்நாடு (இந்தியாவும் தான்) விவசாயத்தை உயிர் வாழ்வாகக் கொண்ட நாடு. இங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது உச்சமான கொடுமையாகும். நீராதாரம் முக்கியமான பிரச்சனையாக நீடிக்கிறது. காவிரிநீர் எங்களுக்கே சொந்தம் என்கிறது ஒரு மாநிலம். கேரள மாநிலமும் நீரைப் பகிர்ந்துகொள்ள யோசிக்கிறது. மகாணங்களின் எல்லை வகுக்கப்பட்டபோது, தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றைத் தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்கிற பேச்சு எழுந்தபோது, ‘மேடாவது, குளமாவது, எல்லாம் இந்தியாவில்தானே இருக்குன்னேன்’ என்றார் காமராசர். ‘சகோதரர்களுக்குள் ஏன் சண்டை? நாம் பகுத்துண்டு வாழ்வோம்’ என்று அன்றைய பெரியோர்கள் சொன்ன சொற்களுக்கு மரியாதை வரவேண்டும். மாநிலங்களுக்குள் மோதல் போக்கை வளர்ப்பதைவிடவும், மனிதாபிமான நல்லுறவுகளைப் பேணும் நிலை உருவாகப் புதிய அரசு நட்புக்கரம் நீட்டலாம். பேச்சைத் தொடங்கலாம். உடனடியாக ஆறு, குளம், ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, கொள் அளவு அதிகரிக்கப்பட்டு, பெய்யும் ஒரு மழைத்துளி நீரும் வீண் ஆகாமல் பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு உடினடியாகத் தொடங்க வேண்டும். காட்டை அழித்தல் மிகவும் கண்காணிப்போடு நிறுத்தப்பட வேண்டும். இவை எல்லாம் ஒரு அரசு சுலபமாகச் செய்ய முடியக் கூடியவை.
பெண்ணுக்கெதிரான வன்கொடுமைக் குற்றங்கள், பெருகிவரும் ஆணவக் கொலைகள், வழிப்பறிக் கொள்ளைகள், திருட்டுகள், ஒரு சமூகத்தின் ஆணிவேரையே கொல்லக் கூடியவை என்பதைப் புரிந்து அரசு தீவிரமான நடவடிக்கைகளை ஆராயவேண்டும்.
சோறு விற்பதைக் (உணவுவிடுதி) கேவலமாகக் கருதியவர்கள் தமிழர்கள். பசித்தவர்களுக்குச் சோறுபோடப் பல அமைப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இருந்தன. பசி தீர்ப்பது தர்மம் என்று கருதுபவர்கள் தமிழ் மக்கள்.
மின்சார அரசியலுக்குள் புக நாம் விரும்பவில்லை. நம் கோரிக்கை எல்லாம், தடை இல்லாத மின்சாரம் குடும்பத்திற்கும் விவசாயத்திற்கும் கிடைக்கவேண்டும் என்பதே ஆகும்.
ரேஷன் கடைப் பொருள்கள் தடை இல்லாமலும் தரமாகவும் உரிய காலத்தில் மக்களுக்குக் கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.
அரசு என்று ஒன்று இருப்பதே தெரியாமல், ஆனால் அரசின் செயல்பாடுகள் முழுமையாக நடந்து வருவதே ஒரு நல்ல அரசின் இலக்கணம். காவல்துறை இருப்பதே தெரியாமல், மக்கள் சட்டம் ஒழுங்கை இயல்பாகக் கடைப்பிடித்து வாழ்வதே ஒரு நல்ல சமூகம். இதற்கான முன் முயற்சிகள் எடுக்கப்படுவது அவசியம்.
ஊடகங்கள், விளம்பரங்கள், கல்வி பண்பாட்டுப் புலங்களில் பெண்கள் இழிவு செய்யப்படும் படங்கள், கருத்துக்கள், எழுத்துக்கள் வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, அரசுக்கும் உண்டு.
அந்தக் காலத்தில் நடைபாதை என்று ஒன்று இருந்தது. தெருவுக்குப் பக்கத்தில் குட்டித் தெரு போல இருக்கும். வண்டி வாகனம் இல்லாத மனிதர்கள் நிம்மதியாக நடந்து போக உதவும் பாதையே அதுதான். எந்த ஒரு ஒழுங்கும் வைத்திராத வாகனக்காரர்களிடம் இருந்து உயிர்பிழைத்து வீடு சேர உதவுவது நடைபாதை.
இப்போது நடைபாதைகள் இல்லை. அது பெரும்பாலும் கடைபாதையாகி இருக்கிறது. மேலும் புதிதாகப் போடப்படும் தெருக்களுக்கு நடைபாதை என்று ஒன்று இல்லை. அரசு, இது குறித்துச் சிந்திக்கவேண்டும்.
ஆட்சியாளர்கள் எப்படி வாழவேண்டும், எப்படி ஆட்சி நடத்தவேண்டும் என்பதற்கு வள்ளுவரின் சிந்தனைகள் இங்கு பயன்படும்:
அன்பு, பாசம் காரணமாகத் தகுதி இல்லாத மனிதர்களைத் தேர்ந்தெடுத்துப் பணி வழங்கும் தலைவர்கள், எல்லாத் துன்பங்களையும் விலைகொடுத்து வாங்குபவர்களாக மாறிவிடுவார்கள். மட்டுமல்லாமல், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் விரோதிகளாவார்கள். அதனால், தகுதி உள்ளவர்களை, அதுவும் மக்கள்மேல் அன்பும் அக்கறையும் உள்ளவர்களையே தேர்ந்தெடுத்து, மக்களோடு சம்பந்தம் உடைய பணிகளை வழங்கவேண்டும்.
தலைவர்கள், தம்மிடம் குற்றம் இல்லாதவர்களாக இருந்தால்தான் குற்றம் இல்லா ஆட்சியைத் தரமுடியும். அறம் தவறாமல், குற்றம் இழைக்காமல் நடக்கும் ஆட்சியே மானமுடைய ஆட்சி என்று சொல்லப்படும். ‘ஆட்சிக்குக்கூட மானம் இருக்கிறது’ என்கிறார் வள்ளுவர். ஆட்சியாளர்கள், தலைமைப் பொறுப்பாளர்கள், மக்கள் சென்று பார்த்துப் பேசித் தம் குறைகளைச் சொல்ல வாய்ப்பு தரும் எளியவர்களாக  இருக்கவேண்டும். கடும் சொற்களை எப்போதும் பேசாதவராக இருக்கவேண்டும்.
புது அரசை, புதிய பொறுப்பாளர்களை, புது அமைச்சரவையை வரவேற்று வாழ்த்துகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் இந்திய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக வளர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கையோடு புதிய அரசை வரவேற்போம்.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions