c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்

பிறருக்கு உதவும் பண்பு?

சாலையில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார். அவருக்கு  நம்மால் உடனே உதவ முடியவில்லை. அடிபட்டவருக்கு ஏதேனும் நேர்ந்து அதன் விளைவாக போலீஸ், விசாரனை என்று வில்லங்கத்தில் மாட்டி அலுவலகத்துக்கு விடுப்பு, வீட்டில் படபடப்பு, உடலுக்கு அலைச்சல் என அலைக்கழிக்கப் படுவோம் என்பதால் கண்டும் காணாமல், அல்லது கண்டாலும் உச்...உச்... என்று கொண்டும் போய்விடுகிறோம். சாலையிலோ, பேருந்திலோ, பேருந்து நிறுத்தத்திலோ ஒருவர் எதேனும் உதவியென்றாலும்கூட யோசிக்கிறோம். பசி என்பவரின் பசியைக்கூட சந்தேகிக்கிறோம். எறும்புகள் உண்ண அரிசிமாவுக் கோலமிட்ட நம் சமூகமரபின் தொடர்ச்சி இந்தளவிற்கு சிதைந்துபோனதற்கு என்ன காரணம். நம் அகத்திலும், புறத்திலும் பிறருக்கு உதவும் பண்பென்பது அருகிவருவதற்கு தீர்வுதான் என்ன? என்கிற கேள்விகளுடன் இவ்விதழுக்கான இளைஞர்களைச் சந்தித்தோம்.

பரபரப்பான வாழ்க்கையே காரணம்!
சித்தாரா, தனியார் நிறுவன ஊழியர்
உயிருக்குப் போராடும் ஒருவருக்கு உதவி செய்வது குற்றம் என எந்தச் சட்டமும் கூறவில்லை. நான் ஒருமுறை அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. உடனே நானும் இன்னும் சிலரும் அடிபட்டவருக்கு முதலுதவி செய்தோம். நான் ஆம்புலன்சைத் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்தை விலாவாரியாகச் சொல்லி ஆம்புலன்சை வரவழைத்தேன். விபத்துக்கு ஆளானவரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்த பிறகு காவல்துறையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் நடந்ததை அப்படியே சொல்லிவிட்டுப் போய்விட்டேன். காவல்துறையினருக்குப் பதில் சொல்லவேண்டும், கேசுக்காக அலைய வேண்டும் என்பதெல்லாம் சப்பைக் கட்டுக் காரணங்கள். பரிதாபப்படுவது மட்டுமே மனிதநேயம் அல்ல, உதவ முன் வர வேண்டும். நமது வேலை மற்றும் வாழ்க்கை முறை எல்லாமே பரபரப்பானதாய் மாறிக்கொண்டிருப்பதால் முன்பிருந்ததைப் போல் சக மனிதர்களுடனான நல்லுறவு இன்றைக்கு குறைந்து வருகிறது என்றாலும் மனிதநேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதுதான் உண்மை.

சில சம்பவங்களே காரணம்!
அருணா, கல்லூரி மாணவி
வாகனத்தில் போய்க் கொண்டிருக்கும் போது லிஃப்ட் கேட்டு கை காட்டுகிறவருக்கு உதவும் மனப்பான்மையோடு வண்டியை நிறுத்துகிறவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை அடித்துப் பிடுங்கும் சம்பவங்களை நாம் தொடர்ச்சியாகக் கேள்விப்படுகிறோம். இதுபோன்று தவறு செய்கிறவர்களால் தான் உண்மையிலேயே உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்ய யாரும் முன் வராத சூழல் உருவாகிவிடுகிறது. சக மனிதர்கள் மீது நாம் அன்பு செலுத்தவேண்டும் என்பதைத்தான் நமது மதங்களும் மறைகளும் கூறுகின்றன. எல்லோருக்குள்ளும் மனிதாபிமானம் இருக்கிறது. சில சூழல்களால் உதவ முடியாமல் போனால் கூட உள்ளத்தில் அதற்காக வருந்துவார்கள்.

ஒட்டுமொத்தமாகச் சொல்லமுடியாது!
நாகா, ஓவியர்
ஒட்டுமொத்தமாக மனிதாபிமானமும், உதவும் மனப்பான்மையும் இன்றைக்கு இல்லாமற்போயிற்று என்று சொல்லிவிட முடியாது. டிசம்பர் மாதப் பெருமழையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். மின்சாரம், உணவு, குடிநீர் என எதுவுமில்லாமல் தவித்தபோது சமூக வலைத்தளங்களில் எத்தனையோ இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களிலிருப்பவர்களிடமிருந்து உதவிகளைக் கேட்டுப் பெற்று முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர். மெழுகுவர்த்தி 50 ரூபாய், பால் அரை லிட்டர் நூறு ரூபாய் என்று வியாபாரிகள் அந்த இக்கட்டான சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டாலும் முகம் தெரியாத எத்தனையோ பேர் தங்களால் இயன்றதைக் கொடுத்தார்கள். சக மனிதர்களுக்குப் பிரச்சனை எனும்போது அதனைக் களைய பல கரங்கள் ஒன்று கூடும் என்பதை உலகத்துக்கே உணர்த்திவிட்டோமே.
சுயநலம் பெருகிவிட்டது!


பி. மனோஜ், உதவி இயக்குநர்
எறும்புகளுக்கென அரிசி மாவுக்கோலம் இட்டது, வழிப்போக்கர்களுக்காக திண்ணை வைத்துக் கட்டியது எல்லாம் மலையேறிவிட்டது. தனக்கு என்ற எண்ணம் பெருக ஆரம்பித்துவிட்டதால் உதவி மனப்பான்மை என்பது குறைந்து சுயநலத்தின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுடன் கூட நட்பு பாராட்டாமல் அந்நியப்பட்டிருக்கிறோம். பிச்சைக் கேட்டு வருகிறவர்களில் எத்தனை பேர் சொந்தமாக உழைத்துச் சம்பாதிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்? குஜராத்தில் எப்போதோ நடந்த பூகம்பத்தைக் காரணம் காட்டி நோட்டீஸ் போட்டு இன்றைக்கு வரைக்கும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சில பேர் குடிப்பதற்காகவே பிச்சையெடுக்கின்றனர். இப்படி இருப்பவர்களால் உண்மையாக பசியில் பிச்சை கேட்பவர்களைக் கூட அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிறது. ஆனாலும் மனிதாபிமானம் அறவே அற்றுப்போகவில்லை. சில விபத்துக்களின்போது தண்ணீர் தருவது, 108 க்குத் தகவல் தருவது என பறந்து உதவுவோர்களையும் பார்க்கிறோம்.

சகல விதமான மனிதர்களும் வாழ்கிறார்கள்
கி.ச.திலீபன், ஊடகவியலாளர்
டிசம்பர் மாதம் வட இந்தியாவில் குளிர் பயங்கரமாக இருக்கும். தமிழகம் போன்ற மிதமான தட்பவெப்பநிலை கொண்ட பகுதியிலிருந்து செல்பவர்கள் அந்தக் குளிரை எதிர்கொள்வது கடினமானதுதான். கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு மாநிலங்களில் நெடும்பயணம் மேற்கொண்டேன். எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலத்திலும் அவ்வளவு புலமையில்லை. இப்படியான சூழலில் கயாவிலிருந்து  நியூ ஜல்பைகுரிக்கு ரயில் பயணம் மேற்கொண்டபோது ஆர்.ஏ.சி.யில் எனக்கு எதிரே ஒரு இந்தி வாலிபன் அமர்ந்திருந்தான். பயணத்தின்போது அவன் என்னிடம் இந்தியில் சில வார்த்தைகள் பேசினான். எனக்கு இந்தி தெரியாது என்பது தெரிந்ததும் அமைதியாகிவிட்டான். இரவு உணவை முடித்துவிட்டு தூங்கச் செல்கையில் போட்டிருந்த ஜெர்க்கினை மீறியும் கடும் குளிர் நடுக்கியது. சமாளித்துக் கொண்டு உறங்கிவிட்டேன். நள்ளிரவில் எழுந்தபோது அந்த இந்தி வாலிபன் அவனது போர்வையில் சரிபாதியை எனக்கும் போர்த்தி விட்டிருந்தான். அவன் மொழி எனக்குத் தெரியாது, என் மொழி அவனுக்குத் தெரியாது. ஆனால் என் குளிரை சகமனிதனாக அவனால் உணர முடிந்தது. யாரென்றே அறிமுகம் இல்லாத ஒருவனிடம் தூய்மையான மனிதத்தைக் கண்டேன். போர்வையைப் போர்த்தாமல் போட்டிருக்கும் ஜெர்க்கினையும் கழற்றிக்கொண்டு செல்பவர்களையும் நாம் சந்திக்க நேரிடலாம். ஆக இவ்வுலகில் எல்லா விதமான மனிதர்களும் வாழ்கிறார்கள் அவர்களில் நல்லவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே கவலைப்படத் தேவையில்லை.

லாப மனப்பான்மை துறப்போம்!
ஜாஃப்ரி, ஒளிப்பதிவாளர்
இதனால் நமக்கு என்ன லாபம்? என எல்லாவற்றிலும் கேள்வி எழுப்பும் மனநிலை இன்று அதிகரித்திருக்கிறது. இந்த இலாபநோக்கத்துக்கான இயக்கமே மனிதர்களின் உதவும் மனப்பான்மையை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. அண்மையில் பெய்த மழை வெள்ளத்தின்போது 35 ரூபாய்க்கு விற்கும் தண்ணீர் கேன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பணம் இருக்கிறவர்கள் வாங்கிக்கொள்ளலாம், பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். அன்றைய  சூழலில் இலவசமாகக்கூட  வேண்டாம், நியாயமான விலையில் பால் மற்றும் தண்ணீரை விற்பனை செய்திருந்தாலே பெரிய மனிதாபிமானம்தான் அது. தமிழகம் முழுவதுமிருந்து நிவாரணங்களை மக்கள் வாரி வழங்கினார்கள். ‘நமக்கு என்ன வந்தது, இது என் வேலையில்லை’ என கடக்கிறவர்களும் உண்டு. களத்தில் இறங்கிப் பணிபுரிகிறவர்களும் உண்டு. இந்த முரண் இயற்கையானதுதான். 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions