c சசிகலா பாபு கவிதைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

சசிகலா பாபு கவிதைகள்

எதிர்சாரியில் கடந்த
வாகனத்தை ஓட்டியது
சாட்சாத் கண்ணனேதான்
சிமிட்டிய விழிகளில்
அத்தனை தெய்வாம்சம்
மிக நிதானமாய்
பல்சரில் சென்ற ராமரின்
பின்னிருக்கையில்
அவர் மனைவி
ராமர் ரியர்வியூ கண்ணாடியில்
ஒருமுறை
ஒரேமுறை
பார்த்துவிட்டு இடப்பக்கமாய்
சென்றுவிட்டார்
மாநிறமாய் முருகனை
இன்றுதான் கண்டேன்
பேருந்தின் பின்னிருக்கையில்
இருந்து
பாசிமணி விற்கும் குறத்திகளை
ரசித்துக்கொண்டிருந்தார்
வேல் இருக்கவில்லை
லக்கேஜ் சார்ஜுக்காய்
பயந்திருப்பார் போலும்
புலித்தோல் அணிவது
சட்டப்படி குற்றம்
கான்கிரீட் வனத்தில்
பாம்புகள் கிடைப்பதில்லை
இருக்கும் சிலதும்
சினிமாப் படங்களில் நடிக்கச்
சென்றுவிட்டதால்
ஈசன் மிகத்தனியாய்
நின்றுகொண்டிருந்தார்
தேநீர் கடையில்
ஆலகால விடத்தைவிட
கஷ்டப்பட்டுத் தேநீரை
விழுங்கிக் கொண்டிருந்தார்
சாவகாசமாய்
தெருக்களில் திரிந்து
கொண்டிருந்தார் பிள்ளையார்
காலை நடைப்பயிற்சியின்
தொந்திகளை
வியந்துகொண்டே
ஐந்து ரூபாய்க்கென
கடைகளில் தும்பிக்கையை
நீட்டிக்கொண்டிருந்தவரின்
நினைவில்
காடுகள் இல்லை
மிருகங்கள் இல்லை
எலிகளேனும் இருந்தனவா
தெரியவில்லை
தெருக்களில் தெய்வங்கள்
தென்படத் துவங்குவதாய்
செய்திகள் அலறியதும்
கோயில்களில்
முன்னெப்போதையும்விட
அதிகக் கூட்டம்
கூட்டத்தினுள்ளும்
தெய்வங்கள் இருந்தன
அச்சத்தில் நடுங்கியபடி

-----------

உங்களுக்கு விடைகள்
தெரிய வாய்ப்பில்லைதான்
கடற்கரை மணலில்
கண்ணீருடன் நின்றிருந்த
அவள் சொல்ல விரும்பியதென்ன?
ஆடைவிலகி நடைபாதையில்
போதைவிலகாது கிடந்த
தகப்பனைத்
தோழிகளுடன் இருந்த
அவள் எப்படி கடந்து சென்றாள்?
ஒருகண உடல்பசிக்காய்
ஒழுக்கம் தவறியவள்
தூக்குக் கயிற்றை
எத்தனை முடிச்சுகளிட்டு
நெருக்கினாள்?
காதுகூசும் வசவுகளால்
அனைவரையும் சாடியபடியே
தெருவில் ஓடும் அவள்
எப்போது மனநிலை தவறினாள்?
பொட்டிட்டு மையிட்டு
அலங்கரித்த சிசுவைப்
பேருந்து இருக்கையில் விட்டுச்செல்ல
எந்த நொடி முடிவெடுத்தாள்?
விடைகள் தெரியாதுதானே
அவள் விடைகளுக்காய்
காத்திருப்பதில்லை
விடைகள் மட்டுமே
போதுமானதாய் இருப்பதில்லைதானே
-உயிர்மை பதிப்பகம்   வெளியிட்டுள்ள                      ‘ஓ ஹென்றியின் இறுதி இலை’ நூலிலிருந்து

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions