c கலைகளைக் காப்பாற்றுபவர்கள் மக்களே!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கலைகளைக் காப்பாற்றுபவர்கள் மக்களே!

- பேராசிரியர் பாரதிபுத்திரன்

மகாகவி பாரதி பற்றி புதிய பார்வைகளையும், தரிசனங்களையும் தந்த ‘தம்பி நான் ஏது செய்வேனடா!’, தமிழகச் சுவரோவியங்கள் குறித்த ‘சித்திரமாடம்’, வி.எஸ்.அனில்குமாருடன் இணைந்து மொழிபெயர்த்த ‘மிளகுக்கொடிகள் - மலையாளக் கவிதைகள்’ என அமைதியாக இவர் செய்துவரும் தமிழ்த்தொண்டு ஏராளம். சா.பாலுசாமி என்கிற பெயரில் தற்போது கொண்டு வந்திருக்கும் ‘சித்திரக்கூடம் - திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ எனும் பெரிய நூல் பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நேர்காணலும் அந்த நூலை மைய்யப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சுவரோவியங்கள், சிற்பங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறீர்கள். தமிழகச் சுவரோவியங்கள் பற்றிய தங்களது  ‘சித்திரமாடம்’ தொகுப்பு மிகவும் முக்கியமானது சுவரோவியங்கள் பற்றிய இந்த ஆழமான தேடல் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சுவரோவியங்கள் என்றல்ல பொதுவாகவே கலைகள்மீது சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு நாட்டம் இருந்து  வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அங்குள்ள கலை அம்சங்களைப் பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் 1988ஆம் ஆண்டு தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியில் இணைந்தேன். அப்போது அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் கிஃப்ட் சிரோன்மணி, டாக்டர் தயானந்தன் மற்றும் டாக்டர் மைக்கேல் லாக்வுட் ஆகியோர் இணைந்து மாமல்லபுரத்தைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அவர்களுடன் சேர்ந்து நானும் பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் தயா அவர்களின் ஆய்வுமுறை எனக்குள் பெரிய ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அதன் பிறகு சிற்பம், கட்டடம், ஓவியம் என நுண்கலைகளில் இருந்த ஈடுபாடு காரணமாக அது சார்ந்து நிறைய நூல்களைப் படித்தேன். தென்னிந்தியா முழுவதும் கள ஆய்வுக்காகச் சென்றேன். ‘நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்’ என்கிற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றேன். மக்கள், தாவரங்கள் மற்றும் சூழலிய மையம் முன்னெடுத்த ஆய்வுத் திட்டத்திற்கு என்னை முதன்மை ஆய்வாளராக நியமித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுவரோவியங்களை எல்லாம் அத்திட்டத்தின் கீழ் ஆவணப் படுத்தினேன். அத்திட்டத்தின் சார்பிலேயே கருத்தரங்கங்கள், பயிலரங்கம், கண்காட்சி ஆகியவற்றை நடத்தியிருக்கிறேன். சுவரோவியங்களை ஆய்வுக்குட்படுத்தி நூலாக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.

சிற்ப வகைகளில் புடைப்புச் சிற்பங்கள் என்றொரு வகை உள்ளது. திருப்புடைமருதூர் எனும் ஊர்பெயருக்கு அப்படி ஏதேனும் சிறப்புக் காரணங்கள் உள்ளதா?
திருப்புடைமருதூர் என்பது திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் வீரவநல்லூரிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணிக் கரையில் இருக்கிற சிற்றூர். ஊர் முழுவதும் மருத மரங்கள் செழித்துக் காணப்படுவதால் இதற்கு திருப்புடைமருதூர் என்று காரணப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அங்கு 7ஆம் நூற்றாண்டிலிருந்து நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் எனும் பழமையான கோயில் இருந்து வருகிறது. அக்கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. கோபுரங்களின் உட்புறச் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அவை பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. அக்கோபுரத்தின் இரண்டாவது தளத்தின் உட்புறச் சுவரில் ஒரு வரலாற்றுப் போர்க் காட்சியைத் தீட்டியிருக்கிறார்கள். மிகவும் நுட்பமான முறையில் தீட்டப்பட்டிருக்கும் அந்த ஓவியங்கள் எந்தப் போரைச் சித்திரிக்கின்றன?
அந்தப்போர் யாருக்கும் யாருக்கும் நடந்தது? எந்த ஆண்டு நடந்தது? என்பதை எனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தேன்.விஜயநகரத்துக்கும் திருவிதாங்கூருக்கும் நடந்த இந்தப் போரை வரலாற்றில் ‘தாமிரபரணிப் போர்’ எனக் குறிப்பிடுகிறார்கள். விஜயநகரத்தை அச்சுததேவராயரும், திருவிதாங்கூரை பூதலவீர உதயமார்த்தாண்ட வர்மாவும் ஆட்சி செய்து வந்தனர். அச்சுத தேவராயருக்குக் கப்பம் செலுத்திக்கொண்டிருந்த பாண்டிய மன்னன்  ஐடிலவர்மன் சீவல்லபனை வென்று அவனது நாட்டைக் கைப்பற்றினார் பூதலவீர உதய மார்த்தாண்டவர்மா. தனக்குக் கப்பம் செலுத்திக்கொண்டிருந்த ஐடிலவர்மனை வெற்றி கொண்டதாலும், தனக்குக் கப்பம் கட்ட மறுத்ததாலும் சினங்கொண்ட அச்சுததேவராயர், பூதலவீர உதய மார்த்தண்ட வர்மாமீது போர் தொடுத்து வெற்றி கண்டார். ஐடிலவர்மன் சீவல்லபனுக்கே அவனது நாட்டைத் திருப்பிக் கொடுத்து அவனது மகளையும் மணமுடித்துக் கொண்டார்.
இந்தப் போர் 1532ஆம் ஆண்டு ஜனவரிக்கும் _ ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்கலாம். இந்தப் போர்க்காட்சி மிகவும் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது அரசர்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களின் படைகள் மற்றும் படை வீரர்கள் எப்படி இருந்தார்கள்? அவர்கள் போருக்கெனப் பயன்படுத்திய ஆயுதங்கள் எப்படிப்பட்டவை? என்பதையெல்லாம் விளக்கும் முழுமையான ஆவணமாக இந்த ஓவியங்கள் உள்ளன. ஒரு போர்க்காட்சி முழுமையாக ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளது இங்குதான். இதற்குப் பிற்காலத்தில் இராமநாதபுரம் அரண்மனையில் போர்க்காட்சி ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தாலும் அது இந்தளவுக்கு முழுமையானதாக இல்லை.

நமது முன்னோர்கள் கோயில்கள், குளங்கள் போன்ற பொது இடங்களில் சிற்பங்களையும் ஓவியங்களையும் பொறித்திருப்பதன் பின்னணி என்னவாக இருக்கிறது?

கோயில்கள் என்பவை சமய, பண்பாட்டுக் களஞ்சியங்களாக விளங்குகின்றன. சமயம் சார்ந்த அறிவையும், உணர்வையும் மக்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் சிற்பங்கள், ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன. கோயிலை ஒட்டி இசை, செவ்வியல் நடனம், நாட்டுப்புற நடனம் ஆகியவை வளர்ந்திருக்கின்றன. அதேபோல கட்டடக் கலையும் கோயில்களில் நல் வளர்ச்சி பெற்றிருக்கிறது. வாழ்க்கை நெறி மற்றும் ஆன்மிக நெறியை மனிதர்களுக்குப் புகட்டுவதற்காகக் கலையைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.  திருப்புடைமருதூர் கோயில் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் போர்ச்சுக்கீசியர்கள், அரேபியர்கள் குதிரை வணிகம் மேற்கொண்டது குறித்த தகவல்கள் இருக்கின்றன. ஆக கலைகள் வழியே வரலாறும் பதியப்பட்டிருக்கிறது.
ஓர் அரசு எப்படிச் செயல்பட்டது? அப்போதைய மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? என்பது போன்றவற்றைக் காலம் தாண்டியும் நமக்குக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவை ஆவணமாக இருப்பது மட்டுமல்லாமல் கலை அனுபவத்தையும் நமக்குத் தருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீட்டப்பட்டிருக்கும் நாயக்கர் கால ஓவியங்கள் தான் தனது ஓவியங்களுக்கான இன்ஸ்பிரேஷன் என்று ஒருமுறை குறிப்பிட்டார் ஓவியர் டிராட்ஸ்கி மருது. கலைகள் ஒரு கண்ணாடிபோல் எல்லாவற்றையும் நமக்குக் காட்டுகின்றன. நம் முன்னோர்களின் அழகியல் உணர்வு எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளக் கோயில்கள் தேவைப்படுகின்றன.
கலை என்பது எல்லோருக்கும் பொதுவானது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இசுலாமியம், கிறித்தவம் என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான கலைகளை நமக்கு அளித்திருக்கின்றன. அஜந்தா ஓவியங்களை அளித்தது பவுத்தம். சித்தன்னவாசல் ஓவியங்களைக் கொடுத்தது சமணம். இசுலாமியம் நமக்கு அரேபிய -_ இந்தியக் கட்டடக் கலை எனும் தனிப்பட்ட கட்டடக் கலையையே அறிமுகப் படுத்தியிருக்கிறது. கிறித்துவத்தின் சார்பாக ஐரோப்பியக் கட்டடக் கலை மற்றும் ஓவியங்கள் நமக்குக் கிடைக்கப்பெற்றன. 

திருப்புடைமருதூர் ஓவியங்களின் தனிச் சிறப்புகள் என்ன? ஏன் அவற்றை ஆவணப்படுத்தத் தீர்மானித்தீர்கள்?
நாயக்கர்களின் ஓவிய பாணி, விஜய நகர ஓவிய பாணியோடு வட்டாரப் பண்புகளையும் சேர்த்து தீட்டப்பட்டுள்ள புதிய பாணி ஓவியங்கள்தான் திருப்புடைமருதூரின் தனிச்சிறப்பு. நாயக்கர் காலத்து ஓவியங்களில் அசைவியக்கம் (அனிமேஷன்) குறைவுபட்டிருக்கும். ஆனால் இந்த ஓவியங்களில் அசைவியக்கம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. உள்ளூர் மக்களின் வாழ்க்கை, அவர்களின் ஆடை, அணிகலன்கள் எப்படி இருந்தன என்பதைப் பதிவு செய்த விதத்தில் இது ஒரு முக்கிய ஆவணமாகிறது. 15, 16, 17ஆம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலி, நாகர்கோயில், கழுகுமலை பகுதிகளில் குடியேறிய  சிற்பிகள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் பல்வேறு பகுதிகளில தங்கிக் கோயில் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட கோயில்தான் இது. அவர்களின் வம்சாவழி இன்றைக்கும் வாழ்ந்து வருகிறது. அவர்களிடமும் எனக்குத் தேவையான தகவல்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். இக்கோயிலை உருவாக்கிய கலைஞர்களின் பூர்விகம் மற்றும் பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயில் கல்வெட்டுகள் குறித்த தகவல்களையும் இந்நூலில் அளித்திருக்கிறேன்.

திருப்புடைமருதூர் ஓவியங்களை எவ்வளவு காலம் ஆய்வு செய்தீர்கள். அதில் ஏற்பட்ட அனுபவங்கள் அதாவது, சிதைந்துபோன அல்லது காணாமல் போன சிற்பங்கள், அவற்றின் முக்கியத்துவம் என்பது போன்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
வரலாற்றுச் சின்னம் என்பதெல்லாம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எளிதில் பார்க்கலாம் என்பதுபோல் பாதுகாப்பற்றுத்தான் அக்கோயில் இருந்தது. அக்கோயிலின் மகத்துவத்தை அறியாமல் கீறல், சிதைவு ஆகியவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நிறைய இடங்களில் பலர் தங்களது பெயர்களைக் கிறுக்கி வைத்திருந்தனர். அதையெல்லாம் பார்த்தபோது கலையைச் சரியாகப் பராமரிக்கத் தெரியாத, வரலாற்றுக் குருட்டுணர்வுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவானது.
கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சியை நம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவற்றைப் பாதுகாக்கும்போதும் புணரமைக்கும்போதும் எந்த மாற்றமும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே இருக்கும்படி செய்யவேண்டும். எந்த மாற்றமும் கலையின் உண்மைத் தன்மையை சிதைத்துவிடக்கூடாது. 2004- _ 2005ஆம் ஆண்டு திருப்புடைமருதூர் ஓவியங்கள் குறித்த ஆவணப்படுத்தலில் இறங்கினோம். எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களின் மகனார் சாரங்கன் அவர்கள் புகைப்படமாக அக்கோயிலின் ஓவியங்களை ஆவணப்படுத்தினார். இதற்காகப் பெரிய குழுவே இயங்கியது. கோயில் கோபுரத்தின் 5 அடுக்கு ஓவியங்களையும் முழுமையாகப் புகைப்படங்களில் ஆவணப்படுத்துவதற்கு 10 நாட்கள் ஆனது. ஆவணப்படுத்தலின்போது எங்களுக்குத் தங்குமிடம், உணவு ஆகிய வசதிகளை நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்து சமய அறநிலையத் துறையும் இந்த ஆவணப்படுத்தலுக்குப் பெரிய ஒத்துழைப்பு அளித்தது. அறநிலையத் துறையின் சார்பில் தான் பல பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன.

இயற்கை ரசனை, அரசர்களின் வீரதீரங்கள், கடவுள் வழிபாடு, ஒய்யாரச் சிங்காரிகள் போன்ற அம்சங்கள்தான் அன்றைய சிற்பம் மற்றும் ஓவியங்களில் காணமுடிகிறது. இறை சார்ந்ததாக மட்டுமல்லாமல் மனிதர்கள் சார்ந்ததாக ஏன் மாற்றம் பெறவில்லை. அப்படி ஒரு மரபு ஏற்படாததற்கு காரணம் என்ன?
இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் செவ்வியல் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என்று இரு பிரிவுகள் இருக்கும். மக்களின் துயரம், பஞ்சம் ஆகியவற்றைப் பற்றி செவ்வியல் இலக்கியத்தில் நேரடிப் பதிவுகள் இல்லை. ஆனால் நாட்டுப்புற இலக்கியத்தில் இருக்கின்றன. கோயில்களில் செவ்வியல் கலைகளே ஆதிக்கம் செலுத்தின. ஆக கோயில் கலைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து அந்தக் காலகட்டத்தைய கலைகளைப் பார்ப்பது என்பது குறுகிய பார்வையாக    இருக்கும். கோயில்களில் உள்ள கலைகள் என்பவை சமயம், இறைவன், புரவலர், அரசர்களின் புகழ் பாடுவதாக இருக்குமே தவிர மக்கள் பிரச்சனைகளைப் பேசாது. கிராமக் கோயில்களில் நடத்தப்பட்ட கூத்துகளில் மக்களின் வாழ்க்கைநிலை சொல்லப்பட்டிருக்கும், மதுரை வீரன் கதை என்றால் சாதியக்கூறுகள் மக்கள் மனதில் வேர் பரப்பியிருந்ததைச் சுட்டுவது போல். சமயம் சார்ந்த கலைகளில் இவற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

சிற்பங்கள் சொல்லும் செய்திகளை மக்கள் எந்தளவிற்கு அறிந்து வைத்துள்ளனர்? அச்சிற்பங்களைப் பாதுகாப்பதில் மக்களுக்கு உள்ள அக்கறை பற்றிச் சொல்லுங்கள்?
பல நூற்றாண்டுகளாக இவை அழியாமல் இருக்கின்றன என்பதை வைத்தே மக்கள் எந்தளவிற்கு அவற்றைப் பேணியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மதவாதச் செயல்களினால் எத்தனையோ கோயில்கள், சமணப் பள்ளிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அந்நாட்டின் கலை அடையாளங்களை அழிக்கும் செயலைப் பெரும்பாலான அரசர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.  
சமயம் சார்ந்த கலைகளை மக்கள் எளிதில் புரிந்துகொண்டார்கள். அதற்கும் படிப்பறிவுக்கும் தொடர்பே இல்லை. கூத்துகள் வழியாகத்தான் அவர்கள் புராணங்கள், இதிகாசங்களைத் தெரிந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாகச் சிற்பங்கள், ஓவியங்கள் சொல்லும் செய்திகளை அவர்களால் எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடிந்திருக்கிறது.

பொதுவாக இச்சிற்பங்களைச் செதுக்கிய கலைஞர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. உங்கள் பயணம் மற்றும் ஆய்வுகளிலும் அப்படித்தானா? அல்லது ஏதேனும் தடயங்கள் கிடைத்ததா?
கலையை வணிகப் பொருளாகப் பார்க்காத வரையிலும் கலைஞர்களின் பெயரைப் பொறிக்கவேண்டிய தேவை இல்லாமல் இருந்திருக்கிறது. வரலாற்றில் நினைக்கப்பட வேண்டியவர்கள் எனும் காரணத்தினால் நிறைய இடங்களில் கலைஞர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மாமல்லபுரத்தில் பூஞ்சேரி எனும் கிராமத்தில் இருக்கும் பாறைகளில் மாமல்லபுரச் சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகளின் பெயர்கள் இருக்கின்றன.
பெருவுடையார் கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பிக்கு ராஜராஜப் பெருந்தச்சன் எனத் தன் பெயரிலேயே பட்டம் கொடுத்திருக்கிறார் ராஜராஜ சோழன். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருக்கும் ஓவியங்களில் அதனை வரைந்தவரான சிங்காதனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மதுசூதனப் பெருமாள் கோயில் கல்வெட்டில் அக்கோயிலில் சிற்ப வேலைகள் மேற்கொண்ட சிற்பக் கலைஞர்களுக்கு ‘சிற்ப புரந்தரன்’ எனும் பட்டம் வழங்கப்பட்டு, தானம் கொடுக்கப்பட்ட செய்தி இருக்கிறது.

இவ்வளவு காத்திரமாக வரலாற்றைப் பேசும் இச்சிற்பங்களை நமது கலைப் பண்பாட்டுத் துறையோ, சுற்றுலாத் துறையோ போதிய அளவிற்குப் பாதுகாத்து வருகின்றனவா?
அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினர் இயன்ற அளவுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள். இவற்றையெல்லாம்விட இன்னமும் சிறப்பாக செய்யலாம். ஓவியங்களைப் பற்றிய குறிப்புகளைப் பொதுமக்கள் பார்வைக்கு விவரப் பலகைகள் மூலம் கொடுக்கலாம். வரலாற்றுப் புரிந்துணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் வரலாறு மற்றும் கலைச் சின்னங்களையும் அவற்றின் சிறப்புகளையும் பொது மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக, பள்ளிக் கல்லூரிப் பாடப் புத்தகங்களில் இவற்றின் முக்கியத்துவம் குறித்த பாடங்கள் இடம்பெறச் செய்யலாம். வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளும் போதுதான் இப்போது நாம் வாழ்கிற வாழ்க்கைக்கான ஆதாரத்தை நம்மால் உணரமுடியும்.

அடுத்தக் கட்ட வேலைத் திட்டங்கள் என்ன?

மாமல்லபுரத்தில் உள்ள திறந்தவெளி புடைப்புச் சிற்பமான  ‘அர்ஜுனன் தபசு’ பற்றிய எனது ஆய்வு நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருது, எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயத்தின் கலாயோகி ஆனந்தகுமாரசாமி விருது ஆகியவற்றைப் பெற்றது. மாமல்லபுரத்தில்  உள்ள சாலுவன்குப்பத்தில் இருக்கும் ஒரு குகையை புலிக்குகை என்றும் யாழி குகை என்றும் அழைப்பர். அது குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியை ‘புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்’ எனும் நூலாகக் கொண்டு வந்தேன். திருப்புடை மருதூர் ஓவியங்கள் குறித்த ‘சித்திரக்கூடம்’ நூலுக்கு அடுத்தபடியாக மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய நாயக்கர் காலத்து ஓவியச் செயல்பாடுகளைப் பற்றி  நூல் ஒன்றினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions