c நன்றொன்று சொல்வேன்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நன்றொன்று சொல்வேன்

தமிழ்க் கதாநாயகிகளும் நவீன பெண்ணுலகத்தின் சிதைவுகளும்

சமீபத்திய தமிழ்த் திரைப்படங்கள் மிகமிக வித்தியாசமான கதைக் களங்களை உள்ளடக்கியதாக இருந்தன. குடும்பம் என்ற கட்டமைப்பை விட்டுவிட்டு அல்லது அந்த கட்டமைப்பை மீறி இத்திரைப்படங்கள் இருந்தன. 24, காதலும் கடந்துபோகும், மனிதன், தெறி போன்ற திரைப்படங்கள் குடும்பம் என்ற கட்டமைப்பை முன்னிலையாகக் கொண்டு அமையப்பெறாத திரைக்கதைகளைக் கொண்டவை.
இன்றைய சமூகத் தளத்தில் குடும்பம் என்ற கட்டமைப்பின் வேர்கள் பெரும்பாலும் தனிமனித அடையாளத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. நம் அம்மாக்கள் காலத்தில் வரும் விருந்தினருக்கு தண்ணீர் கொடுக்கவும், அவர்கள் வயிறாறச் சாப்பிட்டு நெஞ்சார ஏப்பம் விடவும் வடிவமைக்கப்பட்ட பெண்ணே குடும்பத் தலைவி என அறியப்பட்டாள். இத்தகைய பிறழ் மனநிலை ஒரு சமூகத்தின் கொடிய நோயாக மாறியதில் ஆச்சர்யம் ஏது. அதன் நீட்சியே காலம் காலமாகப் பெண்கள் குடும்பத்தில் இரண்டாம் கட்ட அங்கீகாரம் பெறுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதன் எதிரொலியே தமிழ் சினிமாக்களின் கதாநாயகன் பார்த்ததும் காலில் கோலம் போடும் கதாநாயகிகள் மற்றும் திருமணமானாலும் முதலிரவு நடைபெறும் முன்னே கணவனை இழந்து பின்னர் கதாநாயகனைக் கைப்பிடிக்கும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்குப் பின்னிருக்கும் பேருண்மை.
நவீனகாலப் பெண்களின் வாழ்க்கை இந்த சமூகச் சட்டங்களுக்குள் சிக்காதவையாகவே இருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் பொருளாதார, சமூகப் பாலியல் சிக்கல்களுக்குள் ஒரு கரும்பு மிஷினுக்குள் செலுத்தப்பட்ட சீவிய கரும்பைப்போல ஒரு நாளின் முடிவில் வந்து விழுகிறாள். பெண் வீட்டுக்குள் இருக்கும் சிறு உலகம் பரந்துபடும்பொழுது திடீரென அந்தப் பார்வையில் விழும் ஒற்றை வானம் எத்தனை மிரட்சியைத் தரக்கூடும். அவளுக்கு இந்த நவீனப் பெண்ணின் சாட்சியாக நிகழ்காலத் தமிழ்த் திரைப்பட கதாநாயகிகள் உலவருகிறார்களா என்ன. இதில் வேறுபட்டு இருக்கும் ஒரே கதாப்பாத்திரம் ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தில் வரும் கதாநாயகியின் கதாப்பாத்திரம் மட்டுமே. ஐ.டி வேலையின் மேலிருக்கும் நவீன யுகத்து மோகம், நகரத்துப் பெண்ணின் அலட்டிக்கொள்ளாத போதை, நிறைவேறாத காதலைக் கடந்து போகும் மனபாகம் அல்லது பக்குவம், உடலின் மேதமை கதவுகளை அடைத்துவிட்டு ஏதார்த்த தேடல்களோடு உடல் அரசியலை அனுகுவது (மகிழினி சொல்லும் எக்ஸிமோ கதை) - இதுவே காதலும் கடந்து போகும் நாயகியின் பிம்பங்கள். சட்டென ஜன்னலைத் திறந்து எதிர்வீட்டு நகரத்து பெண்ணின் சாயலைப் பார்த்தது போல் இருக்கிறது இந்த கதாப்பாத்திரம். “என்ன இது இப்படியெல்லாமா பெண்கள் இருப்பாங்க’’  என்று அலுத்துக்கொள்ளும் போன தலைமுறையின் புலம்பல்களில் ரசிப்புத்தன்மை இல்லாமலில்லை.  
மனிதன் பட கதாநாயகி ஹன்சிகாவோ   சரோஜாதேவி காலத்து பழமையும் அதற்கு அடுத்த தலைமுறையின் நாகரிகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டது. மாமன் மகன், அவன் மேலிருக்கும் காதல்,  அதற்காகவே மாங்கு மாங்குவென உழைப்பது, அவன் தோல்வியுறும்போது பொங்கி எழு மனோகரா என்று ஊக்கப்படுத்துவது, கடைசிக் காட்சியில் மாமன்மகன் எல்லா சூழ்ச்சிகளையும் வெல்வதுபோல் பேசும்பொழுது கைத்தட்டி சிரிப்பது என்று தமிழ்ப்பட கதாநாயகிகளின் இத்தனைக்கால இலக்கணங்களை மீறுவதுபோல் மீறி, பின்பு  மீறாமல்போவது ஒருபோதும் நவீன நகரத்து, கிராமத்துப் பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பது ஆகாது.
தொலைக்காட்சி தொகுப்பாளராய் வரும் ஐஸ்வர்யா பெரும் மாற்றத்துக்கான எந்த முஸ்தீப்பையும் முன்னெடுக்கவில்லை.அதன் ஆறுதலான விஷயம் ஐஸ்வர்யா. நல்ல வேளை நாயகனை ஒருதலையாய் காதலிக்காதது தான்.
தெறி படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒன்று காதலித்து கல்யாணம் செய்து பிள்ளை பெற்று பாத்திரம் கழுவும் போது ‘நான் யாரு உன் அம்மாவா’ என்று நாயகனிடம் கேட்டுச் செத்துப்போகும் சமந்தா, மகளுக்கான டீச்சராக அறிமுகமாகி பின் காதலியாக உருமாறும் எமி ஜாக்சன் என்று இரண்டு கதாபாத்திரங்கள். இவை திரைக்கதையில் என்ன பங்கு வகிக்கின்றன? காதல் பாடல்கள் படத்தில் ஒலிப்பதற்கு வழி வகுக்கும் வழிமுறைகளாகவே அவை உள்ளன.
பெண்ணுலகத்தின் நவீன வாழ்வின் சிக்கல்கள் பிரதிபலிக்கிற மாதிரியான திரைப்படங்கள் ஏன் வருவதில்லை என்ற கேள்வியைவிட ஏன் பெண்ணின் பிரச்சனையை முன்னிறுத்தும் திரைக் கதைகள் விற்பனையாவதில்லை என்று கேட்கலாம். நம் சமூகம் அப்படி அவதியுறும் பெண்களின் மேல் அக்கறை செலுத்துவதில்லை. நம் திரைமொழியிலும் நடைமுறை சிக்கல்களையே காணுவதில் பொதுபுத்திக்கு ஒரு அலுப்பு இருக்கக் கூடும்.
இந்த மனநிலையிலிருந்து மீண்டு வருவது அத்தனை எளிதானதில்லை. அதுவரை ஏன் நுட்பமான யதார்த்த பெண் சித்திரங்களைத்  தமிழ்த் திரைமொழியில் காண இயலவில்லையென நாம் எதிர்பார்க்காமல் இருப்பதே நலம். அந்த நுண்மாற்றம் மிகத் தந்திரமாக க.க.போ மகிழினியின் கதாபாத்திரம் போலத்தான் திணிக்கப்பட வேண்டும். அத்தகைய மாற்றங்கள் அடிக்கடி நிகழவேண்டும் என்பதை வேண்டுமானால் நாம் ஆசைப்படலாம்.
ஜீவா, நிர்பயாவின் கதைகளை நாம் திரை வழியே பார்க்கும் காலம் சீக்கிரமே நிகழும். வணிக சினிமா என்பது வாழ்விலிருந்து வெகு தூரத்திற்கு அந்நியப்பட்டு இருக்கும் சூழலில் வாழ்வும் அதன் பிம்பமான திரைமொழிக்குமான இடைவெளியை குறைப்பதற்கான நுட்பங்களை அறிந்துகொள்ளும் இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்கு அதிகமாக வரவேண்டும்.
‘அவள் அப்படித்தான்’ மஞ்சு எப்படி இன்னமும் இன்றைய நவீனப் பெண்ணோடு தொடர்புள்ளவளாக இருக்கிறாள். எப்படி அதை ருத்ரையாவால் காலத்திற்கும் பொருந்தும் ஒரு விஷயமாக மாற்ற முடிந்தது?
பெண்களின் உடல் பற்றிய புரிதலின் முதல்புள்ளி அது. அவளது இருப்பை அங்கீகரிப்பதன் அடையாளம் அது. அந்த இருப்பை மதிப்பின் கண்களோடே பார்க்கும் ஒளிக்கருவியை இயக்கும் இயக்குநர்களே இன்றைய தேவை. பேய்க்கதை கொடி கட்டிக் கல்லா நிரப்பும் காலகட்டத்தில் இப்படியொரு விண்ணப்பத்தை வைப்பது முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் அதுவே அத்தியாவசியமானது.


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions